சிகரெட்டு முதல் பேனா வரை
எனது அறையில் இருந்தபடியே
அலுவல்கோப்புகளைச் சரி பார்த்துத் திருத்தியவாறு
நடுவீட்டின் மேற்பரப்பில்
சமரன்குட்டி பறக்கவிட்டிருந்த
பொம்மை உலங்கூர்தியைப் பார்த்திருந்தேன்
எதிர்பாராத விதமாக
அது தன் கட்டுப்பாட்டை இழந்து
செய்தித்தாள் வாசித்தவாறு
நாற்காலியில் அமர்ந்திருந்த தாத்தாவின்
சிகரெட்டுப் பெட்டி மீது விழுந்து நொறுங்கியது
தரையில் சிதறி உருண்டோடிய
சிகரெட்டுகளைப் பொறுமையாக
ஒவ்வொன்றாகப் பெட்டியிலடைக்கும்
நேர்த்தியைக் கவனித்த
தாத்தாவின் கைகளுக்கு
அதனைச் சேர்த்த பின்
‘தாத்தா..! அப்பா மட்டும்
இந்த ரெண்டுவெரல்ல பேனாப் புடிக்குராங்க,
நீங்க மட்டு ஏங்தாத்தா சிகரெட்டுப் புடிக்கறீங்க?’ என்றான்.
***
வட்ட நிலவு
நேற்று வானில் பார்த்த நிலவை
கையில் அள்ளிவந்து
வீட்டுத் தண்ணீர்த் தொட்டியில் விட்டு
நிலவைப் பிடித்துவிட்ட ஆனந்தத்தில்
என்னை அழைக்கிறான் ஆதிரன்குட்டி
நான் தொட்டியை அடைந்த வேளையில்
நீராடிய நிலா பிரகாசமாக ஒளிரத் துவங்கியது
அவ்வழகிய வட்ட நிலவை
அடைத்து வைக்க விரும்பாதவன்
மீண்டும் கைகளில் அள்ளிக்கொண்டு
தன் குட்டிச் சைக்கிளை எடுக்கச் சொல்லி
‘அப்பா வாங்கப்பா நிலாவ
அந்தக் கொளத்திலேயே விட்டுடலாம்’
என்றழைக்கிறான்
நிலா இன்னும் கூடுதலாய் ஒளிர்கிறது.
***
தெய்வத்தின் புன்னகை
உறக்கத்தின் நடுவில்
திடீரென
அடிக்கடி மெல்லப் புன்னகைக்கும்
தீரனைப் பார்த்து
‘சாமி சிரிப்புக் காட்டுதுமா’
என்றேன்
தொட்டிலை எட்டிப் பார்த்த பின்
மனைவி சொன்னாள்
‘சாமி சிரிக்குதுங்க’.
***
மழை
வழக்கமான மழை
இந்தமுறை
என் வறுமையை நனைக்கிறது.
***