இணைய இதழ்இணைய இதழ் 88சிறுகதைகள்

சினிங் சினிங் ஆசை – மீ.மணிகண்டன்

சிறுகதை | வாசகசாலை

நேற்று திருவிழாக்கடைவீதி சென்று வீடு திரும்பியபோது அம்மாவின் மீது ஏற்பட்ட கோபம் இன்னும் சிட்டுவை ஆட்கொண்டிருந்தது. ஆசை நிறைவேறாமல் உறங்கச்சென்றவளின் ஏக்கம் காலைச்சூரியன் கண் விழித்தும், காக்கைக்கூட்டம் கூடுதாண்டிப் பறந்தும் இன்னும் தீரவில்லை. அம்மாவிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை, கண்விழித்து எழுந்து தன் வேலைகளைச்செய்து பள்ளிக்கூடம் புறப்பட்டாள். அம்மாவும் அவளின் அன்றாட வேலைகளில் மும்முரமாக இருந்தாளேயன்றி சிட்டுவின் கோபத்தைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.

கூடு தாண்டிய பறவைகள் உணவு கண்ட இடத்தில் மகிழ்ச்சியுடன் ஒன்றுகூடுவது போல பல திசைகளிலிருந்து புறப்பட்டு அறிவுப் பசியுடன் பள்ளிக்கூடத்தை நாடி நடந்து வந்துகொண்டிருந்தனர் மாணவமணிகள். அவர்களில் சிட்டுவும் ஒருத்தியாக இருந்தாள் ஆனால், அவளின் கண்களில் மகிழ்ச்சிக்கு பதில் கவலையின் மிச்சம் ஒட்டிக்கொண்டிருந்தது. வகுப்பறையில் தோழி செல்வி தன் இரண்டு கரங்களிலும் அவ்வாறு கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்ததைக் கண்ட சிட்டுவின் விழிகள், திடீரென மழையில் பூத்த சிறு வெள்ளைக் காளான்களாய் விரிந்தன, “ஏ புள்ள செல்வி எப்படி வாங்கின வளவி? சொல்லவே இல்ல.” என்று ரகசியமாகக் கேட்பதாக எண்ணிக்கொண்டு உற்சாகத்தில் சற்று பெரிய குரலில் கேட்டுவிட்டாள்.

“யாரது அங்க சத்தம்? வகுப்பை கவனிங்க”, என்றார் முப்பத்தாறு மாணவிகளுக்கு வகுப்பெடுத்துக் கரும்பலகையில் கணக்கெழுதிக் கொண்டிருந்த வசந்தா டீச்சர்.

“நேத்து திருவிழாக் கடையில.” என்று விசும்பலாக ரகசியக் குரலில் பதிலளித்த செல்வி தொடர்ந்து, “பேசாத அப்பறமா பேசலாம்” என்று சிட்டுவிற்கு சைகை காட்டினாள்.

செல்வியின் சைகைகளைப் புரிந்துகொண்ட சிட்டு, வசந்தா டீச்சர் கரும்பலகையில் எழுதும் கணக்கினை கவனித்தாள், எனினும் சிட்டுவின் விழிகளோ மேல் கீழ் இடம் வலம் என்று காந்தம் ஈர்த்த இரும்புத்துண்டாக வசந்தா டீச்சர் கணக்கெழுதும் வலது கரத்தில் அணிந்திருந்த இரண்டு கண்ணாடி வளையல்களையே பின்தொடர்ந்துகொண்டிருந்தன. டீச்சர் எழுதிய கணக்கின் விடையைப் புரிந்துகொள்ள மறந்த சிட்டுவின் மனதில் கண்ணாடி வளையல்கள் இரண்டு என்ற எண்ணிக்கை மட்டும் ஆழமாகப் பதிந்தது. மாணவிகளின் கவனம் தான் கரும்பலகையில் எழுதும் கணக்கில் இருக்கிறதா என்று சோதிக்க எண்ணிய வசந்தா டீச்சர் மாணவிகளின் பக்கம் திரும்பினார், பொதுவாக ஒருவரை அழைக்க எண்ணிய டீச்சரின் பார்வையில் சிட்டு தென்பட்டாள். கணக்கிற்கு என்ன விடை வரும் என்று கேட்டார், டீச்சரின் கைகளிலிருந்த இரண்டு வளையல்களைத் தாண்டி மாற்றுச்சிந்தனையின்றி இருந்த சிட்டு, “இரண்டு” எனப் பதிலளித்தாள். அது கணக்கிற்கான விடை அல்ல என்று வகுப்பில் பெரும்பகுதி மாணவிகள் அறிந்துவைத்திருந்ததால் ‘கொல்’ எனச் சிரித்துவிட்டனர். 

ஆசை எனும் அரக்கனின் பிடியில் சிந்தை இருக்கும்போது அந்நிய நிகழ்வுகளை அது மதிப்பதில்லை. ஒருவேளை மதித்தால் அது சராசரி மனிதனுக்கான இலக்கணம் இல்லை. ஆசையெனும் சராசரி இழைகளால் பின்னப்பட்ட சிறுமிதானே சிட்டு. நேற்றைய வளையல் வாங்க முடியாத கோபம் இன்னும் அவளைவிட்டு அகலவில்லையே. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத்தெரியாத மழலை உளறிவிட்டாள் டீச்சரின் வளையல் எண்ணிக்கையை கணக்கிற்கான விடையென்று. 

கண்ணாடி வளையல்கள் அணிந்துகொள்ள வேண்டும் என்று சிட்டுவிற்குக் கொள்ளை ஆசை. ஆனால், அவளைப் பெற்றவள் அதற்கு அனுமதிப்பதில்லை. சிட்டு கண்ணாடி வளையல் வாங்கித்தரச்சொல்லிக் கேட்கும்பொழுதெல்லாம், “நீ என்னடி சமைஞ்ச குமரியா? இல்ல எங்கயும் சதிராடப் போறியா? சலசலன்னு கலக்குறதுக்கு” என்று ஏதேதோ காரணம் சொல்லி மகளுக்கு ரப்பர் வளையல்களையே வாங்கிக்கொடுத்து வந்தாள். ரப்பர் வளையல்கள் ‘சினிங் சினிங்’ என்று பளிங்கு உராய்சும் சத்தம் எழுப்புவதில்லை என்று குறைபட்டுக்கொள்வாள் சிட்டு. “வேணும்னா அலுமினியத்துல வாங்கிக்க” என்பாள் அம்மா, “ஐய, அது கொஞ்ச நாளுல கலர் மங்கிப்போகும், வளைஞ்சு நெளிஞ்சு போகும், கண்ணாடி வளவிதான் எப்பவும் பளப்பளன்னு இருக்கும் அழுக்குப் பட்டா கழுவிப் போட்டுக்கலாம்,” என்று தன் பக்கத்து நியாயத்தை எடுத்துரைப்பாள் சிட்டு. எத்தனை காரணங்கள் உரைத்தாலும் சிட்டுவின் விளக்கங்கள் அவள் அம்மாவிடம் எடுபடாது. ஆனால், விடப்போவதில்லை இன்று மாலை வீட்டிற்குச் சென்றதும் அம்மாவிடம் அடம்பிடித்து திருவிழாக்கடைக்கு அழைத்துச் சென்று கண்ணாடி வளையல்கள் வாங்கிவிடவேண்டும் என்று மனதிற்குள் தீர்மானம் செய்துகொண்டாள் சிட்டு.

சுமார் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் தோட்டத்து மணலில் தன் சக தோழியொருத்தியுடன் கற்களை அடுக்கி வீடு கட்டி விளையாடிக்கொண்டிருந்தாள் சிட்டு. விளையாட்டில் அடுக்கிய கற்கள் தவறுதலாகச் சரிந்து விழ, ஒரு கல் சரியாக சிட்டுவின் வலது கை மணிக்கட்டின் மீது விழுந்து அவள் அணிந்திருந்த கண்ணாடி வளையலை உடைக்க, உடைந்த வளையல் சிட்டுவின் வலது மணிக்கட்டை ஆழமாகக் கிழித்தது, காயத்தால் ரத்தம் பீறிட்டு எழ வலி தாங்க இயலாமல் அழுதாள் சிட்டு, மகளின் கையும் கண்ணீரும் அம்மாவின் மனதை அதிகம் பாதித்தது கண்கள் கசிந்தன. சிட்டுவைவிட அதிகமாக அந்த வலியை உணர்ந்தவள் அம்மா. அன்று அந்தக் காயம் சிட்டுவிற்கு ஏற்பட்டது மணிக்கட்டில், ஆனால், அம்மாவிற்கு ஆழ் மனதில். பின்னொருநாள் சிட்டுவின் கரத்தில் காயம் ஆறிவிட்டது ஆனால், அன்னை மனம் இன்னும் அதை வடுவாகச் சுமந்துகொண்டிருக்கின்றது. அன்று தான் விபரம் அறியாக் குழந்தை இன்று தான் வளர்ந்து ஆறாம் வகுப்பு பயிலும் பெரிய மனுஷி என்பது சிட்டுவின் எண்ணம். சிறகு முளைத்தாலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது அன்னையின் உள்ளம். 

வகுப்புகள் நிறைவடைந்து காளியம்மன் கோயில் வீதி வழியாக வீட்டிற்கு நடந்துசென்றுகொண்டிருந்தார்கள் சிட்டு, செல்வி உள்ளிட்ட தோழிகள். “ஏம்புள்ள கணக்கு டீச்சர் கேட்டதுக்கு ஏண்டி அப்படி பதில் சொன்னே?” என்றாள் செல்வி. “அட போ புள்ள, அவுக போட்டிருந்த வளவிதான் என் மனசில நின்னுது. கணக்கை யாரு பார்த்தா…” என்று பதிலளித்துவிட்டுத் தொடர்ந்து, “ஏ செல்வி எப்பவும் பள்ளிக்கூடத்துக்கு போகேல ஒண்ணு ரெண்டு வளவிதானே போடுவ, இன்னைக்கு என்ன அஞ்சாறு வளவி போட்டிருக்க?” என்று வகுப்பில் விட்டுப்போன வளையல் பேச்சை மீண்டும் தொடங்கினாள் சிட்டு. “ம்க்கும், ஏதாவது திருநாள் பெரிய நாள்னாத்தேன் இத்தனை வளவி போட்டுக்க சம்மதிக்கும் எங்க ஆத்தா, ஆனா, இது புதுசா வாங்கின வளவி எனக்கு ஆசையா இருக்குன்னு, இன்னைக்கி ஒருநாள் மட்டும் போட்டுக்க என்ன செரமப்பட்டு சம்மதம் வாங்கினேன்னு எனக்குதானே தெரியும்” என்று இழுத்துச் சொல்லிய செல்வி, ஒருமுறை தன் வலது கரத்தை தூக்கிக்காட்டி இங்கும் அங்கும் அசைத்தாள். சிட்டுவின் காதுகளில் ‘சினிங் சினிங்…’ என்று செல்வியின் கர வளையல்கள் ரீங்காரம் பாடியது.

“நீ கைய இங்கிட்டு அங்கிட்டு ஆட்டும்போது சலசலன்னு கேட்குற பளிங்குச் சத்தம் நல்லாருக்குடி, நான் எங்க ஆத்தாகிட்ட கண்ணாடி வளவின்னு பேச்செடுத்தாலே காட்டுக்கத்து கத்தும்” என்று தன் இயலாமையை சோகமாகச் சொன்னாள் சிட்டு.

காளியம்மன் கோவிலைக் கடக்கும் முன் சில நிமிடங்கள் நின்று காளியைத் தரிசித்தனர் தோழிகள். காளிக்கு மட்டுமே சன்னதி அமைத்து சிறிய கோபுரம் எழுப்பப்பட்ட கோயில் அது. கோவிலைச்சுற்றி வெள்ளைப்பூச்சு, எனினும் பல ஆண்டுகள் வெள்ளை அடிக்கவில்லை என்பதை திட்டுத்திட்டாக உதிர்ந்த சுண்ணாம்பும் பழுப்பு நிறமும் உணர்த்திக்கொண்டிருந்தது. சுற்றுச்சுவற்றில் ஆங்காங்கே எழுத்தளவு சிறிதும் பெரிதுமாக கரித்துண்டுகளாலும் வண்ணக் கலவைகளாலும் ‘ஓம் சக்தி’, ‘அன்னையின் அருள்’ என்று சின்னச்சின்ன வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். அந்த வாசகங்கள் ஒன்றிரண்டில் எழுத்துப் பிழைகளும் இருக்கும். சிட்டு மற்றும் செல்வி போன்றோர் வளரும் நாட்களில் அந்த வாசகங்கள் எழுத்துப் பிழைகளின்றி அர்த்தமுள்ளதாக மிளிரக்கூடும்.

அந்தக் கோவிலில் ஒருவர் மட்டுமே சன்னதிக்குள் செல்ல இடமிருக்கும், எனவே, பூசாரி மட்டுமே உள்ளே சென்று காளிக்கு அபிடேகங்கள் அலங்காரங்கள் பூசைகள் செய்வது வழக்கம். விழிகள் இரண்டும் பளபளக்கும் வெள்ளி பதித்து, முகம் நிறைய மஞ்சள் பூசி, நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டு, பச்சைக் கரையில் சிவப்பு அங்கம் கொண்ட பருத்திப் புடவையை அணிந்து, மல்லிகை, கனகாம்பரம் மேலும் மரிக்கொழுந்து கலந்து கட்டிய கதம்ப மாலை அணிந்து காளி காட்சிகொடுத்துக் கொண்டிருந்தாள். கோவிலுக்கு எதிரில் வானம் பார்த்த வெளியில் ஊன்றிவைக்கப்பட்டிருந்த சூலம் ‘ஊருக்கு நான் காவல்’ என்று நிமிர்ந்து நின்றது. மூன்று கூரிய முனைகளும் வானத்தை நோக்கி வாழ்த்துப் பாடிக்கொண்டிருந்தன. முதல் முனையின் அடிப்பாகத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தாள் சிட்டு. விழிகளில் ஏக்கம் நிறைந்திருந்தது. மேற்குச்சூரியனின் ஒளியை உறிய முற்பட்டு முடியாமல் வாங்கிய ஒளியை தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தது அந்தக் கூர்முனையின் அடிப்பாகத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த கண்ணாடி வளையல்கள். தன் உயரத்திற்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த வளையல்கள் சிதறவிட்ட சூரிய ஒளி சிட்டுவின் பார்வைக்கு வளையல்களின் பச்சை நீலம் மஞ்சள் நிறங்களை மறைத்தது. தலையை நிமிர்த்தி ஒளிமின்னும் வளையல்களை அண்ணாந்து பார்த்துத் தன் இரு கரங்களையும் கூப்பி நின்றுகொண்டிருந்தாள் சிட்டு.

“என்ன புள்ள சூலத்தையே வச்ச கண்ணு வாங்காம பாத்துக்கிட்டு நிக்கிற, வா நேரமாகுது, ஆத்தா தேடப்போகுது”, என்று சிட்டுவின் கவனத்தைத் திசைதிருப்பினாள் செல்வி. செல்வியின் வார்த்தைகள் காதில் விழுந்தது. வளையல்கள் மீதான பார்வையை மாற்றிக் காளியின் மீது செலுத்தினாள் சிட்டு. பின்னர் கண்கள் இரண்டையும் ஓரிரு நொடிகள் மூடிக் காளியை மனதுக்குள் நிறுத்தித் தன் இரு கரங்களைக் கூப்பி வணங்கிவிட்டு நகர்ந்தாள் சிட்டு. நடையைத் தொடர்ந்தார்கள் தோழிகள்.

“அந்த சூலத்துல பாத்தியா புள்ள அடுக்கா கண்ணாடி வளவி கட்டி வச்சிருந்தாக”, என்று தான் வியந்த காட்சியைக் கூறினாள் சிட்டு.

“அதுவா, முந்தாநாள் வானதி அக்காவுக்கு வளைகாப்பு நடத்துனாக இல்ல, அன்னைக்கி காலையில இங்க வந்து காளிக்கு பூசை போட்டு கும்பிட்டுட்டுப் போனாக, அப்ப காளிக்கு வச்ச வளவியத்தான் அடுக்கா சூலாயுதத்துல தொங்கவிட்டிருக்காக” என்று விளக்கமளித்தாள் செல்வி.

“வளைகாப்புக்கு நீ போனியா?” என்று கேள்வி தொடுத்தாள் சிட்டு.

“போயிருந்தேன், எவ்வளவு வளவி தெரியுமா? அம்புட்டும் கண்ணாடி வளவி, நான் கொஞ்ச நேரம் எண்ணிக்கிட்டிருந்தேன் அப்பறம் எண்ண முடியல, வானதி அக்காவுக்கு ரெண்டு கையும் கொள்ளல, அப்பறம் என்ன? வாரவுக அத்தனை பேரும் போட்டுவிட்டா கைகொள்ளாமத்தானே இருக்கும்”, என்று மேல்மூச்சு வாங்கித் தான் ரசித்த வளைகாப்பு நிகழ்ச்சியை ஆச்சரியமாக விவரித்துச்சொன்னாள் செல்வி.

“ஆத்தி… கேக்கும்போதே இனிக்குதே, கைகொள்ளாம கண்ணாடி வளவி… ஆ…” என்று வியந்தவண்ணம் தொடர்ந்தாள் சிட்டு, “ஏ செல்வி, நான் அத்தனை கண்ணாடி வளவியும் போட்டுக்கிட்டு ஊருக்குள்ள கைய ஆட்டி ஆட்டி சலசலன்னு சத்தம் கூட்டி நடந்து வந்தா எப்படி இருக்கும்?” 

“ம்… அப்புடியே நெத்தி நெறைய குங்குமப் பொட்டும் வச்சுக்கிட்டு வா காளி நடந்து வாரான்னு ஊரே உன்னைக் கையெடுத்துக் கும்பிடும்” என்று சொல்லிவிட்டு கலகலவெனச் சிரித்தாள் செல்வி.

சற்றுநேரம் நடந்து புளியமரத்தைக் கடந்துபோகும் வேளையில் மரத்தைச் சுற்றியிருந்த திண்ணைமேல் பார்வையைச் செலுத்தினாள் செல்வி, மரத்தின் பின்புறம் திண்ணையில் இருவர் அமர்ந்து அன்றைய செய்தித்தாள் செய்திகளை விவாதித்துக்கொண்டிருந்தனர். கைலி உடுத்திக்கொண்டு மேல்துண்டு போட்டிருந்தவர் மரத்தின் இடப்புறம் இயற்கைக் காற்றை சுகித்தவண்ணம் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். அவர்களிடமிருந்து கடந்த செல்வியின் பார்வை மரத்திலிருந்து பழுத்து அங்கொன்றும் இங்கொன்றுமாக உதிர்ந்து கிடந்த புளியம்பழங்களின் மேல் பதிந்தது, பழம் நன்றாகக் கனிந்திருக்கவேண்டும் என்பதை மாநிறமாய் இருந்த பழத்தின் கனமான ஓடு (தோல்) உணர்த்தியது. திண்ணையில் கிடந்த பழங்களில் ஒரு நீளமான பழத்தைக் கையில் எடுத்தாள் செல்வி. “ஏய், என்ன செய்யுற”, என்று செல்வியின் கைகளைக் கண்டாள் சிட்டு. செல்வி கரத்தில் இருந்த பழத்தின் ஓடு உடைந்து முனையில் சற்று நொறுங்கியிருந்தது. கனிந்த பழமாதலால் மீதமுள்ள ஓட்டை உடைத்து காம்பைப் பிடித்து சுளையாகப் பழத்தை சேதாரமில்லாமல் உருவி எடுப்பது எளிதாக இருந்தது செல்விக்கு. தோலுரித்த புளியம்பழம் கருப்பாகவும் இல்லாமல் சிவப்பாகவும் இல்லாமல் இரண்டிற்கும் ஊடாக கருஞ்சிவப்பாக நார்கள் பிணைப்பில் விதைகளைத் தாங்கி மிகுந்த சதைப்பிடிப்புடன் இருந்தது. சிட்டுவின் பார்வை இன்னும் செல்வியின் கைகளின் மீதே இருந்தது. பழத்தின் காம்பைப் பிடித்து லேசாக நாவில் ருசிபார்த்த செல்வி கண்கள் இரண்டையும் இறுக்கமாக மூடித்திறந்து “ப்பா..” என்றாள் புன்னகையுடன். “வேணுமா சிட்டு, நல்லா ருசியா இருக்கு” என்றாள். விழி நகர்த்தாமல் செல்வியின் கரங்களையே கவனித்துக்கொண்டிருந்த சிட்டு, “வேண்டாம் செல்வி, ஒரு வளவியோட மறு வளவி பட்டு சிணுங்கும்போது அந்த சத்தம் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு” என்று கூறினாள் மிகவும் அமைதியாக. “அடிப்பாவி இவ்வளவு நேரம் புளியம்பழத்தைப் பார்த்தேன்னு நெனச்சா என் கை வளவிகளத்தான் பார்த்துக்கிட்டிருந்தியா?” என்று வியந்தாள் செல்வி.

சிட்டுவின் வீட்டை அடைந்ததும் தோழிகள் ஒருவரிடம் ஒருவர் விடைபெற்றனர். வீட்டினுள் வேகமாக நுழைந்த சிட்டு காலணிகளை முகப்பில் கழற்றிவிட்டு வேகமாக உள்ளறையில் பைக்கட்டை வைத்துவிட்டு சமையலறை நோக்கி அம்மாவிடம் ஓடினாள். தன் இரண்டு கரங்களையும் நீட்டி, “ஆத்தா பாரு இந்த ரப்பர் வளவியில எவ்வளவு கோடு விழுந்திருக்கு. இன்னிக்கும் திருவிழாக் கடைக்கு போவோமா? கண்ணாடி வளவி வாங்கித்தருவியா? செல்வி போட்டிருக்கா நல்லா இருக்கு.” என்று தன் ஆவலைக் கெஞ்சலாக வெளிப்படுத்தினாள் சிட்டு.

“அதெல்லாம் வேண்டாம், கண்ணாடி வளவிய போட்டுக்கிட்டு கைய அங்கிட்டு இங்கிட்டு ஆட்டி வேலை பார்த்து ஒடஞ்சு போனா அன்னைக்கி கையக் குத்திக் கிழிச்சுவிட்ட மாதிரி கிழிச்சு விட்டிரும். நாளைக்கி விடிய அத்தை வாராக ஆறாம்நாள் திருவிழா பாக்க. அவுகளோட நாளைக்கு திருவிழா கடைக்குப் போவோம், வேற உனக்கு புடிச்சத வாங்குவோம் கண்ணாடி வளவி வேண்டாம்”, என்று மகளைச் சமாதானம் செய்தாள் அம்மா. “என்னைக்கோ நடந்ததை வச்சிக்கிட்டு இன்னும் ஏந்த்தா படுத்தற”, என்று அலுத்துக்கொண்டுவிட்டு, நாளை வரும் விருந்தினருக்கு உணவு தயாரிக்க இட்டலிக்கு மாவு அரைத்துக்கொண்டிருந்த அம்மாவை மேலும் கேள்விகள் கேட்டுத் துன்புறுத்தாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் சிட்டு.

நாளைக்கு அத்தை வருகிறார்கள் என்ற செய்தி சிட்டுவிற்கு புது நம்பிக்கையைக் கொடுத்தது. அத்தைகிட்ட கேட்டா மாட்டேன்னு சொல்லாம வாங்கிக்கொடுப்பாக அதுனால அத்தைகிட்ட கேட்டு வாங்கிக்கலாம் என்று யோசித்தாள், அடுத்த கணமே ‘ச்சே, அது தப்பு நம்ம வீட்டுக்கு வாரவுக கிட்ட எதுவும் கேட்கக்கூடாது’ன்னு ஆத்தா முன்னாடியே சொல்லியிருக்கு அப்படிக் கேட்டா வந்தவுக நம்மள தப்பாப் புரிஞ்சுக்குவாக என்று, முதல் கணம் தோன்றிய எண்ணத்தை மறுகணமே மாற்றிக்கொண்டு முகம் கால் கழுவிச் சுத்தம் செய்ய குளியலறை நாடினாள் சிட்டு.

பொழுது புலர்வதும் சாய்வதும் இயற்கையின் நீதி. ஆசைகள் அலையென எழுவதும் அமைதியை நாடுவதும் அவ்வாறே. இந்த இரவும் கண்ணாடி வளையலின் சிந்தனையிலேயே உறங்கிப்போனாள் சிட்டு. திறந்தும் திறக்காத விழிபோல விடியலின் அரை வெளிச்சத்தில் அத்தை குடும்பத்தார் கதவு தட்டும் ஓசை கேட்டு புழக்கடையில் நின்றிருந்த சிட்டுவின் அம்மா வாசலுக்கு விரைந்தாள். சிட்டு உள்ளறையில் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள். உறங்கிக்கொண்டிருந்த சிட்டுவின் கனவில், காளி கதம்ப மாலை அணிந்து வந்து அவளருகில் அமர்ந்து சூலத்தில் தொங்கிக்கொண்டிருந்த வளையல்களை சிட்டுவின் கரங்களில் ஒவ்வொன்றாகக் கோர்த்துக்கொண்டிருந்தாள். சிட்டு செய்வதறியாது சிரித்து மகிழ்ந்துகொண்டிருந்தாள். 

அத்தை குடும்பத்தாரை வரவேற்று இருக்கைகளில் அமரச்சொல்லிவிட்டு, “கொஞ்சம் இருங்க காபி கொண்டாரேன் குடிச்சிட்டு பிறகு குளிக்கப் போலாம். தோட்டத்தில தண்ணி காயவெச்சிருக்கேன். ஒவ்வொருத்தராக் குளிக்கலாம்” என்று முகமலர்ச்சியுடன் அனைவரையும் வரவேற்று உபசரித்தாள் சிட்டுவின் அம்மா.

“இருக்கட்டும் அண்ணி, நம்ம வீடு இது. நானும் வாரென். காபி போடுவோம். வாங்க.. சரி, சிட்டு எங்க இன்னும் தூங்குறாளா?” என்று கேட்ட அத்தைக்கு, “ஆமா” என்று பதிலளித்துவிட்டு, சிட்டு உறங்கும் அறையைக் கைகாட்டினாள் சிட்டுவின் அம்மா. 

சற்று நேரத்தில் திரும்பி வரும்பொழுது உள்ளறையில் உறங்கிக்கொண்டிருந்த சிட்டுவின் அருகில் அத்தை செய்த செயலைக்கண்டு அதிர்ந்தாள் சிட்டுவின் அம்மா, “ஆத்தி… என்ன இது?” என்று வேகமாக அருகில் வந்தாள்.

“ஷ்… சத்தம் போடாதீங்க, சிட்டு முழிச்சுக்கப்போறா, அவ தூங்கி எழுந்ததும் இந்த அதிசயத்தை பார்த்து ஆனந்தப்படுவா, போன முறை நீங்க எங்க ஊருக்கு வந்திருந்தப்ப கடைத்தெருவுல பார்த்து வாங்கித்தரச் சொல்லி அழுதா, நீங்க பிடிவாதமா வேண்டாம்னு சொல்லிட்டீங்க நானும் உங்கள வற்புறுத்தாம இருந்துட்டேன். ஆனா, பின்னாடி அதை நினைக்கும்போது எனக்கே சங்கடமா இருந்துச்சு சின்னப்புள்ள மனசு கெட்டுருமில்ல, அதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வாங்கி வச்சிருந்தேன். இப்ப வரும்போது எடுத்தாந்தேன்.” என்று கூறி தான் வாங்கி வந்திருந்த கண்ணாடி வளையல்கள் பன்னிரண்டையும் கைக்கு ஆறாக சிட்டுவின் கைகளில் கோர்த்துக்கொண்டிருந்தாள் அத்தை. 

*******

-nam.manikandan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button