ஏதோ ஓர் வாசனை
துரத்துகிறது
சாலையில் செல்லும் வாகனங்களை
அவசரமாகச் செல்லவேண்டுமென நினைக்கும்
மனதின் வெப்பம்
எதற்காக வாழ்கிறோம்
என்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும்
அந்த மனம் பிறழ்ந்தவனின்
அழுக்கு
மரங்களின் மீதமர்ந்து எச்சமிடும் காகங்கள்
எங்கோ பழுத்திருக்கும் இலுப்பைப் பழத்தின் வாசனை
ஓடி உழைத்துவிட்டு வீடு திரும்புவோரின் வியர்வை
என் இதயம் வேறு எதையோ தேடுகிறது
சட்டென்று ஓர் நினைவு
அந்தச் சாலையில்
என் கண்ணெதிரில் நிகழ்ந்த மரணத்தில்
சிதைந்து அழுத இதயத்தின்
வாழும் ஆசையின் வாசனையாகவும்
இருக்கலாம்.
******
ஜன்னலோர இருக்கை
சுள்ளென்று வீசும் வெய்யில்
திறந்திருக்கும் கண்ணாடி வழியே முகத்தை எரிக்கின்றது
சாலையோரச் சமையல்கள்
குழந்தைகளின்
குதூகலக் குளியல்கள்
தெருவோரத்து இட்லிக் கடையில்
தட்டைப் பிடித்துக்கொண்டே உண்ணும்
நட்புக் கூட்டங்கள்
வெளியெங்கும் செல்லும் மனிதர்கள்
உதிர்ந்த இலைகள்
நசுங்கும் பூக்கள்
பேசிச் சிரிக்கும்
சண்டையிட்டு அழும்
ஒலிகள் அனைத்தையும்
எனக்குள் பத்திரப்படுத்திக்கொள்கிறேன்
மழைக்காலம் வருகையில் இவையெல்லாம்
எனக்கு கிடைக்காது
அழுக்கு நீரில் மிதக்கும் சாலைகளைத் தவிர.
******
மிக அருமையாக உள்ளது தோழர்