இணைய இதழ்இணைய இதழ் 93சிறுகதைகள்

இளன் – பெருமாள்முருகன்

சிறுகதை | வாசகசாலை

பூனையைக் கவனித்துக்கொள்ளும் வேலை கபிலனுக்குப் புதிது. தயக்கமாய் இருந்தாலும் கூடுதலாகப் பணம் கிடைக்கும் என்பதால் ஒத்துக்கொண்டான். பத்து நாட்கள் அக்குடும்பம் வெளியூர் செல்கிறது. யாருமற்ற வீட்டுக்கு இரவுக் காவல் என்றால் அவனுக்குப் பழக்கமானது. இந்த வீட்டிலோ பூனையையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கபிலன் தன் ஊரிலிருந்து நூறு கிலோ மீட்டருக்கு மேல் தொலைவு கொண்ட அரசு கலைக்கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியம் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தான். நகரத்திலிருந்து தள்ளி கிராமத்துப் பொட்டல் வெளியில் அக்கல்லூரி இருந்தது. அதன் வளாகத்தை ஒட்டிய அரசு நல விடுதியில் தங்கல். விடுதியறை மாணவர்களால் நிரம்பி வழியும். சற்றே வெளியே போனால் ஆசுவாசமாகத் தோன்றும். மாலையானதும் கல்லூரி வளாகம் ஆளரவமற்றுப் போகும். அங்கிருக்கும் மின்விளக்குக் கம்பத்தின் அடியில் விடுதி மாணவர்கள் உட்கார்ந்து படிப்பார்கள். 

அப்படிப் படிப்பதாகப் பேர் பண்ணிக்கொண்டு கபிலனும் முன்னிரவு நேரத்தில் அங்கே செல்வான். அப்போது வளாகத்தில் உலாத்திக் கொண்டிருக்கும் இரவுக் காவலரோடு பழக்கம் ஏற்பட்டது. பெரும்பரப்பில் இருந்த கல்லூரிக்கு ஒரே ஒரு இரவுக் காவலர். அவருக்கும் ஏனோ அவனைப் பிடித்திருந்தது. வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அவன் படிக்கும் இடத்திற்கு வந்து தடத்தில் உட்கார்ந்து தன் போசியைத் திறந்து இரவுச் சாப்பாட்டை உண்பார். ஏதேனும் பலகாரம் கொண்டு வந்தால் அவன் மறுத்தாலும் கையில் திணிப்பார். அடிக்கடி தன் கஷ்டங்கள் பற்றிப் புலம்புவார்.

இரவுக் காவலருக்கு இன்னும் இரண்டு காலியிடங்கள் இருந்தும் அரசு ஆள் போடவில்லை. அதனால் விடுப்பு எடுக்கவும் முடியாமல் ஒருவரே தொடர்ந்து பணியாற்ற வேண்டியிருக்கிறது. உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு கேட்கப் போனால், ‘ஒரு மாத்திரயப் போட்டுக்கிட்டு வந்து தூங்குய்யா. இராத்திரி என்ன வெட்டி முறிக்கறியா? தூங்கத்தான வர்ற?’ என்று கல்லூரி முதல்வர் எரிந்து விழுகிறார். ஏதேனும் விசேஷத்திற்குப் போக வேண்டும் என்றால் அலுவலக உதவியாளர் பணியில் இருக்கும் ஒருவரைக் கெஞ்சிக் கேட்டு ஏற்பாடு செய்ய வேண்டும். உதவியாளர் மறுத்தால் ஒன்றும் செய்ய முடியாது. ‘உஞ் சொந்தக்காரன் எவனயாச்சும் கூட்டியாந்து உட்டுட்டுப் போய்யா. அதுகூட உனக்குச் சொல்லோணுமா?’ என்கிறார் முதல்வர். 

இப்படி அவர் கதைகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஒருநாளில், ‘எதுனா வேலக்கிப் போறயா?’ என்று கேட்டார். 

‘அப்பப்ப கல்யாணம் காதுகுத்துன்னு சர்வீசுக்குக் கூப்புடுவாங்க. அதுக்குப் போறதுதாண்ணா. வேறெதாச்சும் வேல இருந்தாச் சொல்லுண்ணா’ என்றான் கபிலன். 

‘செக்யூரிட்டி வேலைன்னாப் போவியா?’ என்றார் அவர். 

அவனுக்குப் புரியவில்லை. தனிவீடுகளில் குடியிருப்போர் வெளியூர் செல்ல நேரும்போது வீட்டுக் காவலுக்கென இரவு மட்டும் போய்த் தங்க வேண்டும். ஒருநாள் முதல் மாதம் வரைக்கும்கூட ஒரே வீட்டைக் காவல் காக்க வேண்டியிருக்கும். நம்பகமான ஆள் தேவை. இரவுக் காவலருக்கு அவன் மேல் நம்பிக்கை வந்திருந்தது. இரவில் போய்ப் படுத்துத் தூங்கிவிட்டுக் காலையில் எழுந்து வர வேண்டியதுதான். ஒருநாளுக்கு இருநூறு ரூபாய். மாலை ஆறு, ஆறரை மணிக்குப் போனால் போதும். காலையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வந்துவிடலாம். அவர் மூலம் கடந்த இரண்டாண்டுகளில் பல வீடுகளைக் காவல் காத்திருந்தான். 

இப்போது இந்தப் புதிய வீடு. பூனையைப் பார்த்துக் கொள்வதற்காகத் தினம் நூறு ரூபாய் கூடுதல் ஊதியம். காவலரண்ணன் தைரியம் சொன்னார்.

‘பூனைக்கிச் சோறு போட்டு வெக்கறது ஒருவேலையா, போ.’

அதுதானே, செய்ய முடியாதா என்று தோன்றியது. வேலை தொடங்குவதற்கு ஒருவாரம் முன்பே ஆளைப் பார்க்க வேண்டும் என்று அந்த வீட்டார் அழைத்திருந்தார்கள். ஒரு மாலை நேரத்தில் போனான். புறநகர்ப் பகுதிக் குடியிருப்பில் வீடு. பெருமளவு வீடுகள் இருந்தன. சில காலிமனைகளும் தெரிந்தன. அந்த வீடு கொஞ்சம் பெரியது. வீட்டம்மா ஒருவர் மட்டுமே இருந்தார். வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். அவனை வரவேற்பறைக்கு அழைத்து சோபாவில் உட்காரச் சொன்னார். தயங்கி உள்ளே நுழைந்தபோது பூனையின் மெல்லிய கத்தல் சத்தம் கேட்டது. அதைப் பின்தொடர்ந்த போது ஓர் அறைக்குள் வேகமாக நுழைந்தோடும் பூனையின் வெள்ளை வாலை மட்டும் கண்டான்.

எந்த வீட்டின் வரவேற்பறைக்குள்ளும் அவன் நுழைந்ததில்லை. வெளியே நிறுத்திப் பேசுவார்கள். வெளியிலிருக்கும் விளக்குகளைப் போட ஸ்விட்சுகளைக் காட்டுவார்கள். முற்றத்தில் அல்லது கார் நிறுத்துமிடத்தில் படுத்துக்கொள்ளப் பாயோ பழைய நாடாக் கட்டிலோ போட்டிருப்பார்கள். மின்விசிறி இருப்பது அபூர்வம். பரிதாபப்பட்டுச் சிலர் மேசை மின்விசிறி கொடுப்பதுண்டு. எதுவும் இல்லையென்றால் கொசுக்கடிக்குப் பயந்து போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்ள வேண்டியதுதான். சில வீடுகளில் வெளியில் இருக்கும் கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்ளச் சொல்வார்கள். இல்லை என்றால் இரவில் சிறுநீர் கழிக்கத் தெருவோரத்தைத்தான் நாட வேண்டும். 

இந்த வீட்டு வரவேற்பு புதிதாக இருந்தது. குடிக்கத் தண்ணீரும் கொரிக்கக் காராச்சேவும் கொண்டு வந்து வைத்த அம்மா எதிரில் உட்கார்ந்து அவனைப் பற்றி விவரமாக விசாரித்தார். கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட எல்லாம் கேட்பாரோ என்று அவனுக்குச் சந்தேகம் வந்தது. கேட்காமல் உள்ளே போய்த் தேநீர் போட்டுக் கொண்டு வந்தார். கெட்டிப்பாலில் குறைவாகத் தூள் போட்ட தேநீர். வெறும் பாலைக் குடிப்பது போலவே இருந்தது. அவன் குடித்து முடிக்கட்டும் என்று காத்திருந்த அம்மா ‘வாப்பா’ என்றார். பூனை நுழைந்த அறைக்குள் கூட்டிப்போனவர் பரண் மேல் ஓர் அட்டைப்பெட்டிக்குள் படுத்துத் தன் தலையை மட்டும் மேலே வைத்திருந்த பூனையைக் காட்டினார். கண்களில் பயம் மின்ன அது ஒருமாதிரி அவலக்குரல் எழுப்பியது. 

‘இளா… பயப்படாத. இந்த அண்ணந்தான் பத்து நாளுக்கு உன்னயப் பாத்துக்குவாரு. நேரத்துக்குச் சாப்புட்டுக்கோணும். அவரு உன்னய ஒன்னும் பண்ண மாட்டாரு. உன்னயப் பாத்துக்கத்தான் வர்றாரு… செரியா… தொந்தரவு பண்ணாத இருந்துக்கோணும். பத்து நாளுத்தான். அம்மா வந்திருவன்’ என்று பூனையைப் பார்த்து ஏதேதோ சொன்னார். அதுவும் இடையிடையில் பதில் குரல் எழுப்பிக் கொண்டிருந்தது. ஆமோதிக்கிறதா மறுக்கிறதா என்று தெரியவில்லை. வாலையும் தலையையும் பார்த்ததில் தூவெள்ளைப் பூனை என்று அதன் உருவத்தைக் கற்பனை செய்ய முடிந்தது. 

‘இளன் புதுசா ஒருத்தரப் பாத்தாப் பயந்துக்கிட்டு ஓடி ஒளிஞ்சுக்குவான். ரண்டு நாளுப் பழகிட்டாச் செரியாயிருவான்’ என்று அம்மா விளக்கம் சொன்னார். 

தான் ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக ‘வாவா… புஸ்…புஸ்’ என்று அதைப் பார்த்து விரல் சொடுக்கி அழைத்தான். அவன் வீட்டில் பூனை வளர்த்ததில்லை. ஊரில் பூனை வளர்ப்போர் ‘புஸ்புஸ்’ என்று பொதுவாகக் கூப்பிடுவதைக் கேட்டிருக்கிறான். அம்மா சிரித்தார். 

‘அப்படிக் கூப்பிட்டா வர மாட்டான் தம்பி. இளா… இளான்னு கூப்படோணும். அவம் பேரு இளன்’ என்று சொன்னார். அதன் பிறகு அவனும் ‘இளா… இளா’ என்று கிட்டத்தட்டப் பத்து முறை அழைத்த பிறகு ‘மியாவ்’ என்று ஒருமுறை பதில் கொடுத்தான். அம்மா முகம் ஒளிர்ந்தது. ‘உங்கிட்டப் பழகிக்குவான். ஒன்னும் பிரச்சின இல்ல’ என்றார். பூனையின் பெயர் அவனுக்குப் பிடித்திருந்தது.

‘இளன்னு நல்ல தமிழ்ப் பேரு வெச்சிருக்கறீங்க?’ என்றான். 

‘அதென்னமோ எம்பொண்ணுதான் வெச்சா. எளான்னு கூப்புட்டாச் சண்டைக்கு வந்திருவா. இளான்னுதான் கூப்படோணும்’ என்று சிரித்தார் அம்மா.

வரவேற்பறையின் ஒரு ஓரத்தில் இளன் சாப்பிடுவதற்கான வட்டத் தட்டுக்கள் இரண்டிருந்தன. ஒன்றில் ட்ரைபுட் போட வேண்டும். இன்னொன்றில் வெட்புட். தண்ணீருக்குச் சிறுகுண்டான். வீட்டில் மூன்று படுக்கையறைகள் இருந்தன. இரண்டு அறைகள் பூட்டப்பட்டிருக்கும். திறந்திருக்கும் ஓரறையிலும் சமையலறையிலும் வரவேற்பறையிலும் இளனுக்கான இடங்கள் இருந்தன. சமையலறையை ஒட்டியிருந்த கழிப்பறை ஓரம் இளன் ஆய் போவதற்கான செவ்வக வடிவத்தில் நீள்டப்பாக்கள். அவற்றில் தவிடு போன்ற ஏதோ கொட்டப்பட்டிருந்தது. அவன் ஆய் போனதும் அந்தத் தவிடு அதில் ஒட்டித் திரண்டுவிடும். அதைச் சிறுமுறத்தில் அள்ளிக் கழிப்பறை வாங்கியில் போட்டு நன்றாகத் தண்ணீர் ஊற்றிவிட வேண்டும். வரவேற்பறையில் பாய் போட்டுக் கபிலன் படுத்துக் கொள்ளலாம். காலை எட்டு மணி வரைக்கும் கபிலன் தங்க வேண்டும். ஏழரை மணிவாக்கில் தான் இளன் ஆய் போவான். அதை அள்ளிப் போட்ட பிறகு உணவு வைத்துவிட்டுக் கிளம்பலாம். 

ஆய் அள்ள வேண்டும் என்பதுதான் அவனுக்கு ஒருமாதிரி இருந்தது. அவன் முகச்சுழிப்பைக் கவனித்த அம்மா, ‘அதென்னப்பா… கொழந்த ஆயி போனா அள்ளறதில்ல? அது மாதிரிதான். இளன் பூங்கொழந்த மாதிரிதான்’ என்றார். அவன் வெறுமனே சிரித்து வைத்தான். மாலையில் ஆறு மணிக்கெல்லாம் வந்துவிட வேண்டும். காலையில் எட்டுமணி வரைக்கும் அவன் இருக்க வேண்டும் என்பதால் சமையலறையில் தேநீர் மட்டும் போட்டுக் கொள்ளலாம். அதற்கெனப் பாத்திரங்கள் தனியாக இருக்கும். அவற்றைக் கழுவிக் கழுவிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இளனின் பாத்திரங்களையும் தினம் ஒருமுறை கழுவ வேண்டும். கழுவுதொட்டியைச் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். தினமும் கால் லிட்டர் பால் அவன் வரும்போது வாங்கி வரலாம். அதற்கு அவர்கள் பணம் கொடுத்துவிடுவார்கள். பச்சைப்பாலில் இரண்டு தேக்கரண்டி அளவு இளனுக்கு ஊற்றினால் குடிப்பான். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்துக் கேட்டான். 

‘ராத்திரிச் சாப்பாடும்மா?’

அந்தம்மா யோசித்தார். 

‘ராத்திரி எட்டு மணிக்கின்னா ஹாஸ்டல்ல சாப்பிட்டுட்டு வந்திருவம்மா. ஆறு மணிக்கு வரச் சொல்றீங்களே?’ 

‘அப்படியா? செரி. ராத்திரி டிபனுக்கு ஐம்பது ரூவா குடுத்தர்றன். வர்றப்பா வாங்கிக்கிட்டு வந்து சாப்புட்டுக்கோ. இளன உட்டுட்டு இப்பத்தான் மொதத்தடவ வெளிய போறம். அவன மட்டும் பத்தரமாப் பாத்துக்கோணும். வெளியில மட்டும் போக உட்றவே கூடாது’ என்று அம்மா வலியுறுத்திச் சொன்னார். 

அந்தம்மா ஒவ்வொன்றையும் நிதானமாகச் சொல்லி இடத்தைக் காட்டியதை எல்லாம் அவன் திரும்பும்போது நினைவுபடுத்திப் பார்த்தான். சில விஷயங்கள் நன்றாகப் பதிந்திருந்தன. சில மறந்து போயிருந்தன. அவர்கள் புறப்படுவதற்கு இரண்டு நாள் முன்னர் மீண்டும் வர வேண்டும் என்று சொன்னார். அதே தெருவில் இரண்டு வீடு தள்ளியிருந்த வீட்டில் சாவி கொடுத்திருப்பார்கள். தினமும் மாலையில் வந்து அவர்களிடம் வாங்கிக் கொண்டு காலையில் கிளம்பும்போது அங்கேயே கொடுத்துவிட வேண்டும். அந்த வீட்டை அறிமுகப்படுத்துவதோடு இளனைப் பராமரிக்கும் வேலைகளைப் பற்றி இன்னொரு முறை சொல்வதாகவும் அவற்றை ஒருதாளில் எழுதித் தருவதாகவும் சொல்லியிருந்தார் அம்மா. 

அன்றைக்குப் போனதற்காக ஐம்பது ரூபாய் பணமும் கிடைத்தது. ‘பஸ் பாஸ் இருக்குதும்மா’ என்று சொன்னான். ‘பரவால்ல… வெச்சுக்கப்பா’ என்று கைகளில் திணித்தார். எல்லாம் இளனால் கிடைத்தது. ‘இளா… நீ வாழ்கடா’ என்று சொல்லிக் கொண்டான். அந்தம்மா மீண்டும் மீண்டும் சொன்ன ஒரே விஷயம் இளனைத் தப்பித் தவறிக்கூட வெளியில் விட்டுவிடக் கூடாது என்பதுதான். இளன் வெளியில் போனதேயில்லை. வெளியே விட்டால் திரும்பி வர வழி தெரியாமல் போய்விடலாம். தெருநாய்களிடம் சிக்கிவிடலாம். கதவுகளை எப்படி மூட வேண்டும், திறக்க வேண்டும் என்றெல்லாம் விவரமாகச் சொல்லியிருந்தார். அதில் இன்னும் அவனுக்குக் குழப்பம் இருந்தது. ஓரிரு நாள் தங்கினால் தெளிவாகிவிடும் என்று தோன்றியது. 

கூகுளில் பூனை வளர்ப்பு பற்றி அவ்வப்போது பார்த்தான். நாய்களைப் போலவே பூனைகளிலும் விதவிதமான வகைகள் இருந்தன. அவற்றுக்கான உணவுகள், பராமரிப்பு முறைகள், பழக்க வழக்கங்கள் என்று அது தனியுலகமாக விரிந்தது. புகைப்படங்களைப் பார்க்க ஆசையாக இருந்தது. சுவாரசியமான ரீல்ஸ்கள் சில வந்து விழுந்தன. எல்லாம் வெளிநாட்டுப் பூனைகள். அவற்றுக்கு ஏகப்பட்ட கவனிப்பு தேவைப்பட்டது. இளன் நாட்டுப்பூனை. ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியிருக்காது. 

பத்து நாள் ஒரு பூனைக்குச் சோறும் தண்ணீரும் வைப்பதற்கு இத்தனை விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமா என்னும் சோர்வு தோன்ற தேடலைத் தவிர்த்தான். இரண்டாம் முறை போனபோதும் அந்தம்மா மட்டுமே இருந்தார். முதல்முறை போலவே நல்ல கவனிப்பு. மீண்டும் அதே விளக்கம். வெளியில் விட்டுவிடக் கூடாது என்று வலியுறுத்தல். இளனின் தரிசனம் ஓரளவு கிடைத்தது. செலவுக்கென ஐம்பது ரூபாய். தினமும் பாலும் இரவுணவும் வாங்க ஆயிரம் ரூபாய் கொடுத்தார். எல்லாம் திருப்தி. 

கொஞ்சம் பதற்றத்தோடுதான் முதல்நாள் போனான். கிட்டத்தட்ட ஏழு மணியாகியும் இருட்டவில்லை. வெயில் காலப் பகல் நீளமானது என்பது தெரிந்தது. விடுதிச் சமையல்காரர் வேலையை முடித்துவிட்டுச் சீக்கிரமே கிளம்பிவிடுவார் என்பதால் இரவுணவுக்குப் பிரச்சினை இல்லை. சிறுபோசியில் போட்டு எடுத்துக்கொண்டு வந்திருந்தான். பக்கத்து வீட்டில் சாவியை வாங்கிச் சுற்றுச்சுவரில் இருந்த இரும்புக் கதவைத் திறந்து உள்ளே பூட்டினான். மூன்று படியேறி கிரில் கதவைத் திறந்ததும் சிறுமுற்றம். அதையும் உடனே சாத்திப் பூட்டினான். பக்கவாட்டில் இருந்த மாடிக்குச் செல்லும் கதவு தாழிட்டிருக்கிறதா என்பதைப் பரிசோதித்துக் கொண்டான். நேராக இருந்த பெரிய தேக்குக் கதவைத் திறந்து உள்ளே தாழிட்டான். நான்கு கதவுகள்; மூன்று சாவிகள். இதெல்லாம் அந்தம்மா எடுத்திருந்த பாடம். 

திரை மூடிய ஜன்னல்களுடன் இருந்த பெரிய வரவேற்பறை அச்சுறுத்தியது. திரைகளை நீக்கி ஜன்னல் கதவுகளைத் திறந்துவிட்டான். இரண்டு மின்விசிறிகள் இருந்தன. ஒன்றைப் போட்டுவிட்டுச் சோபாவில் சற்றே உட்கார்ந்தான். இளன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. இளைப்பாறலுக்குப் பிறகு ‘இளா… டேய் இளா…’ என்று கூப்பிட்டபடி உள்ளே போனான். கடைசியறைப் பீரோவின் மேலிருந்த அட்டைப்பெட்டி தெரிந்தது. இளன் தெரியவில்லை. உள்ளே படுத்திருப்பானோ? சமையலறைக்குள் போனான். அதன் சிறுஜன்னலை ஒட்டியிருந்த அலமாரியின் மேல்தட்டில் இளன் படுத்திருந்தான். கபிலன் உள்ளே நுழைந்ததும் சட்டென்று அச்சத்தோடு உடலைச் சிலிர்த்துக்கொண்டு எழுந்து கத்தினான். அது ஆபத்துக் காலத்தில் உதவி வேண்டி அழைக்கும் குரல். அவனருகில் போகாமல் நுழைவாயில் அருகிலேயே கபிலன் நின்றுகொண்டான். 

‘இளா… உன்னய ஒன்னும் பண்ண வல்லீடா… பயப்படாத… பயப்படாத…’ என்று சொல்லியபடி சற்றே நின்றான். அப்போதும் இளனின் அபயக்குரல் நிற்கவில்லை. ‘சரி சரி’ என்று கபிலன் பின்னகர்ந்தான். அப்போது இளன் வெளியே ஓடிவந்து கடைசியறைக்குள் நுழைந்தான். என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக அவ்வறை வாசலில் கபிலன் போய் நின்றான். அங்கிருந்த சிறுகட்டிலுக்கு ஏறி ஒரே தாவலில் பீரோ மேல் நின்றான். அட்டைப் பெட்டிக்குள் புகுந்து தன் தலையை மட்டும் உயர்த்தினான். மீண்டும் அதே கத்தல். இளன் ஆய் போகும் டப்பாவைப் பார்த்தான். ஆய் போன மாதிரி தெரியவில்லை. அவனது சாப்பாட்டு டப்பா ஒன்றில் ட்ரைபுட் நிறைந்திருந்தது. வெட்புட் டப்பா காலியாக இருந்தது. குண்டானில் தண்ணீர் இருந்தது. எதுவும் செய்ய வேண்டியதில்லை. அந்தம்மா எல்லாவற்றையும் செய்துவிட்டுப் போயிருக்கிறார். நாளைக் காலைதான் அவனுக்கு வேலை. 

கீழே வைத்திருந்த பாயோடு கிடந்த தலையணையை எடுத்துச் சோபாவில் வைத்து உடலை நீட்டிக்கொண்டு செல்பேசியை நோண்ட ஆரம்பித்தான். செல்பேசி நெஞ்சில் விழ ஏதோ நேரத்தில் அப்படியே தூங்கிப் போயிருந்தான். இளனின் ‘மியாவ்’ கத்தல் கேட்டுத்தான் விழிப்பு வந்தது. வரவேற்பறைக்குள் வந்து நின்று கத்தினான். தான் புழங்கும் வெளிக்குள் புதிதாக ஒருவன் வந்திருக்கிறான் என்னும் கோபமும் தயக்கமும் அந்தக் கத்தலில் இருக்கிறதோ? அதன் அர்த்தத்தைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அசைந்து எழுந்தால் ஓடிவிடுவானோ என்று கண்மூடி அப்படியே படுத்திருந்தான். அதற்குப் பிறகு சத்தமில்லை. மீண்டும் உள்ளே போய்விட்டானோ? படுத்தபடியே கண் திறந்து அறைக்குள் சுழற்றினான். அவன் தலைக்குப் பின்னாலிருந்த பெரிய ஜன்னல் பக்கம் இளனுக்கெனப் போட்டிருந்த ஸ்டூலில் பின்னங்கால்களை வைத்துக்கொண்டு கொசுவலை அடித்திருந்த அடிக்கட்டையில் முன்னங்கால்களைப் பதித்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். கபிலன் தன்னுடலை அப்படியே கிடத்திக் கொண்டான். 

கொஞ்ச நேரம் கழித்துக் கண்ணைப் பின்புறம் திருப்பினான். இளனைக் காணவில்லை. வேடிக்கை முடிந்து உள்ளே போய்விட்டான் போல. சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். அவன் எழும் அரவம் கேட்டதும் சோபாவுக்கு அடியிலிருந்து இளன் வேகமாக உள்ளே ஓடினான். அடடா… இங்கிருப்பதைக் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாக இருந்தது. வரவேற்பறைக் கடிகாரம் எட்டே முக்கால் மணி காட்டியது. கை கழுவிக் கொண்டு வந்து சாப்பிடலாம் என்று நினைத்துச் சமையலறைக்குள் போனான். கழுவுதொட்டியில் கையை நீட்டிய போது பின்னிருந்து இளன் கத்தினான். மீண்டும் சமையலறை ஜன்னலுக்கு வந்துவிட்டான் போல. இரண்டு ஜன்னல்களில் அவன் வெளியுலகம் அடங்கிப் போயிருக்கிறது. இளனைப் பார்த்து லேசாகச் சிரித்தபடி கை கழுவிக் கொண்டு வந்தான். 

இளன் தன் உணவில் கொஞ்சம் தின்றிருப்பது தெரிந்தது. அவன் மட்டும் இல்லை என்றால் இந்த வீட்டுக்குள் தனித்திருப்பது பெரும் அச்சத்தைக் கொடுத்திருக்கும் என்று தோன்றியது. உண்டு முடித்ததும் சற்றே வெளியில் நடந்துவிட்டு வரலாம் என்று கிளம்பினான். தேக்குக் கதவைப் பூட்டி, கிரிலையும் திறந்து பூட்டினான். சுற்றுச்சுவர் இரும்புக்கதவைத் திறந்து வெறுமனே சாத்திவிட்டு நடக்கத் தொடங்கினான். ஆள் நடமாட்டம் இல்லை. தெருவோரங்களில் அங்கங்கே கார்கள் நின்றன. இந்த வீட்டில் பூனை இருப்பது போல வேறு சில வீடுகளிலும் பூனையோ நாயோ இருக்கலாம். அவையும் மனிதர்களைப் போலவே வீட்டுக்குள் முடங்கிவிட்டன. இரண்டு மூன்று தெருக்களைச் சுற்றிவிட்டுத் திரும்பி வந்தான். பழையபடி திறப்பும் பூட்டலும். 

வரவேற்பறைக்குள் அவன் நுழைந்ததும் ஜன்னலோர ஸ்டூலில் படுத்தபடி வெளியே பார்த்துக் கொண்டிருந்த இளன் கத்தினான். ஆனால், எழுந்தோடவில்லை. கபிலனும் மெல்ல நடந்து சோபாவில் உட்கார்ந்தான். செல்பேசியில் ஏதாவது படம் பார்க்கலாமா என்று நினைத்தான். அந்தச் சத்தம் இளனை விரட்டிவிடக் கூடும். வாட்ஸப்பில் வந்திருக்கும் எதையாவது படிக்கலாம் என்று தொடங்கினான். இன்னும் ஒருமாதத்திற்குள் பல்கலைக்கழகத் தேர்வு வந்துவிடும். படிக்கலாம் என்று இரண்டு புத்தகங்களை எடுத்து வைத்திருந்தான். அதில் ஒன்றை எடுத்துப் பிரித்தான். கொஞ்ச நேரம் கண்ணோட்டியதில் கொட்டாவி வந்தது. பாயை எடுத்துப் போட்டுப் படுக்க எழுந்தான். இளன் சட்டென்று தாவி உள்ளே ஓடிப் போனான். 

இன்றைக்கே இளனுக்கு ஓரளவு அச்சம் நீங்கிவிட்டது. ஓரிரு நாளில் நன்றாகவே பழகிவிடுவான் என்று நம்பிக்கை வந்தது. விடிவிளக்கைப் போட்டுக்கொண்டு படுத்தவன் ஆழ்ந்து தூங்கிப் போனான். இளனின் நடமாட்டம் பற்றி அவனுக்கு எதுவும் தெரியவில்லை. காலையில் எழும்போது ஏழு மணியாகிவிட்டது. உள்ளே போய்ப் பார்த்தான். இளனின் ஆய் டப்பாவிலிருந்து நாற்றம் எழும்பி மூக்கை அடைத்தது. அவன் உணவுத் தட்டு காலியாகியிருந்தது. இரவிலேயே உணவைத் தின்று முடித்திருப்பான். காலையில் ஆய் போகும் வேலையையும் முடித்துவிட்டான். கைக்குட்டையை எடுத்து மூக்கைக் கட்டிக்கொண்டு தவிட்டுத் துகள்களில் சுருண்டிருந்த ஆயைச் சிறுமுறத்தால் அள்ளிக் கழிப்பறையில் போட்டுத் தண்ணீர் ஊற்றினான். பயந்தது போல அந்த வேலை அத்தனை ஆசூயையாக இல்லை. இளனின் இரண்டு தட்டுக்களிலும் உணவைப் போட்டு வைத்தான். இளன் அட்டைப்பெட்டிக்குள் இருக்கிறான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு கிளம்பினான். 

ஆள் தனித்திருக்கவே அச்சமூட்டும் அத்தனை பெரிய வீட்டில் இளன் மட்டும் பகலெல்லாம் ஒற்றையாக இருப்பான் என்று நினைக்கவே பாவமாக இருந்தது. வைத்த உணவு போதுமா, மதியத்தில் பசித்துக் கிடப்பானோ என்று யோசனை ஓடியது. அந்தம்மா சொன்ன அளவுதான் வைத்திருந்தான். என்றாலும் மனதில் ஒரு சந்தேகம் அரிக்கவே மாலையில் சீக்கிரம் கிளம்பி ஐந்தரை மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போய்விட்டான். சாவி கொடுத்த வீட்டுக்காரம்மா ‘என்னப்பா, இன்னக்கிச் சீக்கிரம் வந்துட்ட’ என்றார். அவர் குரலில் சந்தேக தொனி இருந்தது. ‘ஒருவேலையா டவுனுக்கு வந்தன். அப்படியே இங்க வந்திட்டன். ஆறுமணிக்கு வரணும்னு சொல்லியிருக்கறாங்க’ என்று சொல்லிச் சமாளித்தான். 

இளன் தின்றது போக உணவு இன்னும் மிச்சமிருந்தது. கபிலனின் நடமாட்டச் சத்தம் கேட்டதும் சமையலறைக்குள் இருந்து இளனின் கத்தல் வந்தது. தட்டுக்களைக் கழுவக் கொண்டு போனான். கழுவுதொட்டிக்குப் பின்பக்கமிருந்த ஜன்னலை ஒட்டிப் படுத்திருந்த இளன் எழுந்தோடவில்லை. அவனை ரொம்பவும் அருகில் பார்க்க முடிந்தது. மல்லிகைப் பந்தைச் சற்றே கலைத்துப் போட்ட மாதிரி தெரிந்தான். கண்களின் கூர்மை துளைத்தது. அருகில் போய்த் தலையைத் தடவிக் கொடுக்க ஆசையாயிருந்தது. இப்போதுதான் பயம் தெளிந்திருக்கிறது. அதீத உரிமை எடுத்துக்கொண்டால் மீண்டும் ஓடிப் போய்விடலாம். இதற்கு முன்னும் இப்படி யாராவது வந்து இருந்திருப்பார்கள். அதனால்தான் ஒரே நாளில் அவனுக்குப் பயம் தெளிந்துவிட்டது. 

வாங்கி வந்திருந்த பால் பாக்கெட்டைக் கத்தரித்து கொஞ்சமாக ஒரு தட்டில் ஊற்றி அவனுக்கு முன்னால் நீட்டினான். கத்திப் பின்வாங்கினான். ‘ஒன்னுமில்ல… பாலுதான்’ என்றான். பாலில் வாய் வைக்காத பூனையும் உண்டோ? தயங்கி மெல்லத் தலையை நீட்டி நாக்கால் பாலைத் தொட்டான். பழுத்த இலை போல நாக்கு வெளிவந்து போயிற்று. மீண்டும் கொஞ்சம் ஊற்றி வைத்தான். அதைச் சீண்டவில்லை. தட்டுகள் காய்ந்த பிறகு உணவு போட்டு வைக்கலாம் என்று நினைத்து வரவேற்பறைக்குப் போய் உட்கார்ந்தான். தன் பையில் வைத்திருந்த குறிப்பேட்டை எடுத்து அதில் ‘இளன்’ என்று தலைப்பிட்டு அவன் தொடர்பான சொற்களை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதிப் பட்டியல் போட்டான். 

தமிழ் இலக்கியம் சேர்ந்து வகுப்புக்குப் போனதும் முதலில் வந்த பேராசிரியர் சு.துரை தனித்தமிழிலேயே பேசினார். ஒருமணி நேரமும் அவர் வாயிலிருந்து ஆங்கிலச் சொல் ஒன்றுகூட வரவில்லை. அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. சாதாரணமாகவே அவர் அப்படித்தான் பேசுவார் என்று மூத்த மாணவர்கள் சொன்னார்கள். தனித்தமிழ் அவரைத் தேடிப் போக வைத்தது. அவர் சொல்லித்தான் இப்படி ஒரு குறிப்பேட்டை எப்போதும் கையில் வைத்துக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டது. புதிதாகக் காதில் விழும் சொற்களை எழுதி வைத்து அதைப் பற்றி யோசிக்கும் பழக்கம். பிறமொழிச் சொல்லாக இருந்தால் அதற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேடிப் பார்க்க வேண்டும் என்றும் ஆசிரியர் சொல்வார். இளன், வட்டில், தட்டு, டப்பா, தவிடு எனப் பட்டியலிட்டுக் கொண்டே வந்தான். ட்ரைபுட், வெட்புட் இரண்டும் ஆங்கிலச் சொற்கள். அவற்றைத் தமிழ்ப்படுத்த முடியுமா என்று யோசித்தான். 

வரவேற்பறையில் மின்விசிறி ஓடினாலும் தணலுக்குள் இருப்பது போலிருந்தது. கதவைத் திறந்து முற்றத்திற்கு வந்தான். அங்கே இரும்பு நாற்காலி ஒன்று கிடந்தது. சிறுமின்விசிறி ஒன்றும் இருந்தது. அதைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான். வெளிக்காற்றை வாங்கி மின்விசிறி சுழன்றதால் இதமான காற்று வந்து தழுவியது. கண் மூடிக் காற்றை உடலில் வாங்கிச் சுகித்தான். ட்ரைபுட் என்பதை வறண்ட உணவு என்று சொல்லலாமா? வெட்புட் – ஈர உணவு. இது மிகப் பொருத்தமாகத் தோன்றியது. வறண்ட உணவுக்குப் பதிலாக வேறு சொல் அமைந்தால் பரவாயில்லை. சிறுமின்விசிறியின் வேகச்சுழலுக்கு இடையே இளனின் கத்தல் வருவது போலிருந்தது. விசிறியை நிறுத்திவிட்டுக் கேட்டான். கதவுக்குப் பின்னாலிருந்து இளன் கத்துவது கேட்டது. கதவைத் திறந்து அவனையும் கொஞ்ச நேரம் முற்றத்தில் விடலாமா என யோசனை வந்தது.

கிரில் கதவில் (கிரிலுக்குத் தமிழில் என்ன?) பெருக்கல் குறிகளுக்கு நடுவிலிருந்த இடைவெளியில் நுழைந்து இளன் ஓடிவிடுவானோ? மாடிக்குச் செல்லும் மரக்கதவு தாழிட்டிருந்தது. விட்டுப் பார்க்கலாம் என்று நினைத்துத் தேக்குக் கதவைத் திறந்தான். கதவையொட்டி நின்றிருந்த இளன் மெல்லத் தலையை நீட்டிப் பார்த்தான். ‘இளா… வாடா…’ என்று அழைத்தான். அவன் தயங்கி வெளியே வந்தான். கிரில் பக்கம் கவனத்தை வைத்துக் கொண்டான். இளன் முற்றத்தின் கைப்பிடிச் சுவர் மீது ஏறி அங்கிருந்த கம்பிகளின் வழியாக வெளியே பார்த்தான். சுவர் மீது நடந்தான். அங்கே போட்டிருந்த பழைய அட்டைப்பெட்டியை மோந்து பார்த்தான். நக்கியும் கடித்தும் வைத்தான். பெட்டிக்குள் இறங்கி நின்றான். கிரிலுக்குள் நுழைய முடியாது என்பது ஏற்கனவே அவனுக்குத் தெரிந்திருக்கக் கூடும்.

நாற்காலியில் உட்கார்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் கபிலன். தெருவில் நாய் குரைத்தது. உடனே காதைத் தூக்கி உடலைச் சிலிர்த்தபடி அங்கே பார்த்துக் கத்தினான். இளனுக்கு இரண்டு வயதிருக்குமா? அதிகமாக இருக்குமோ? வேகத்தைப் பார்த்தால் நல்ல இளமைப் பருவம் என்றுதான் தோன்றியது. ‘இளா… வாடா இங்க’ என்று அருகில் போய் மெல்ல உடலைப் பற்றி அணைத்தெடுத்து நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான். அவன் துள்ளினான். இன்னும் கொஞ்சம் இறுக அணைக்கவும் நகத்தால் சட்டெனக் கீறித் தன்னை விடுவித்துக்கொண்டு உள்ளே ஓடிப் போனான். புறங்கையில் எரிச்சல். திருப்பிப் பார்த்தான். ஒரு வளைகோடு போல இரத்தம் துளிர்த்துத் தெரிந்தது. கொஞ்சம் அதிகமாக அழுத்திவிட்டோமோ? அதற்காக இப்படியா நகத்தைப் பதிப்பான். ஒரு குழந்தை தன்னை விடச்சொல்லித் துள்ளுவது போலத்தான் தெரிந்தது. நொடி நேரத்தில் காயப்படுத்தி விட்டானே. பூனைக்கு இருப்பது வெறும் நகமல்ல; ஆயுதம். 

அவன் வெளியே வராமல் இருக்கத் தேக்குக் கதவை வெளியே தாழிட்டுவிட்டுக் கிரிலைத் திறந்து இறங்கினான். தெருவிளக்கு வெளிச்சத்தில் ஓரத்தில் தேடினான். தாத்தாத்தழை ஓரிடத்தில் சோர்ந்து படர்ந்திருந்தது. ஐந்தாறு இலைகளைக் கிள்ளியெடுத்துக் கொண்டு வந்து வெளிக்குழாயில் கழுவிக் கசக்கிச் சாறுபடும்படி புறங்கையில் வைத்தான். எரிச்சல் மாறிக் குளிர்ச்சி ஏறியது. ‘இந்த நாயிடம்… இல்லையில்லை… பூனையிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று நினைத்துச் சிரித்துக்கொண்டே உள்ளே போனான். இந்தத் தழை வைத்தியம் போதுமா, ஊசி போட வேண்டுமா என்று குழப்பமாக இருந்தது. 

அடுத்தடுத்த நாட்களில் கபிலனோடு இளன் இயல்பாகிவிட்டான். வரவேற்பறைக்கு வந்து அவனருகில் படுத்துக் கொள்வதும் கதவருகில் போய் நின்று அதைக் காலால் தட்டித் திறக்கச் சொல்வதும் எனச் செல்லம் கொஞ்சும் அளவு நெருக்கம் வளர்ந்துவிட்டது. தினமும் முற்றத்திற்குப் போய் அரைமணி நேரமாவது உலாத்த வேண்டும். இல்லையென்றால் கத்தித் தொலைத்துவிடுவான். அவனை அங்கே விட்டுவிட்டு புத்தகத்தை விரித்து வைத்துக்கொள்வான். அவனுக்கே போதுமென்று தோன்றி உள்ளே போக அழைக்கும்போது கதவைத் திறந்துவிட்டால் போதும். இரவில் கபிலனுக்கருகில் வந்து படுத்துக் கொள்வான். கத்தி எழுப்புவான். உறங்கிவிட்டால் எழும் வழக்கம் கபிலனுக்கில்லை. இடைவிடாமல் அவனைச் சுற்றிக் கத்திக் கத்தி எழுப்பிவிடுவான். உலருணவு பாதிகூடத் தீர்ந்திருக்காது. எதற்குத்தான் எழுப்புகிறான் என்று தெரியாது. கொஞ்ச நேரம் விளையாடினால் திருப்தியாவான். 

ஐந்து நாட்கள் இப்படிப் போயின. அதற்குள் நெடுநாள் உடனிருந்து பழகியவன் போலானான். அவனோடு விளையாட்டும் பேச்சுமாய் இரவு கழிந்தது. மடியில் ஏறிப் படுத்துக் ‘கொர்..கொர்’ என்று சத்தம் எழுப்பியபடி தூங்கினான். கபிலனைப் பார்த்துச் சிறிதும் அச்சமில்லை. வரவேற்பறை சோபாவில் கால்களைப் பரத்தியபடியும் மல்லாந்தும் கிடந்தான். பார்ப்பதற்கு ஒரு குழந்தை போலத் தெரிந்தான். ஓடி விளையாடுவதும் ஒளிந்து கொள்வதும் அவனுக்கு விருப்பமானவை என்பது தெரிந்தது. சிறுசிறு இடங்களில் அவனால் ஒளிந்துகொள்ள முடிந்தது. கண்டுபிடிக்கக் கபிலன் தடுமாறினால் ஒருகட்டத்தில் தானாகக் குரல் கொடுத்து அழைத்தான். என்ன அறிவு, என்ன அறிவு என்று தலை தடவிக் கட்டியணைத்தான். மாலையில் கபிலன் வந்து வெளிக்கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும் உள்ளிருந்து கத்தி வரவேற்பு கொடுக்கும் அளவுக்கு இளனுக்கு எதிர்பார்ப்பு வந்துவிட்டது. பாதுகாவலுக்குச் செல்லும் ஒவ்வொரு வீட்டிலும் இப்படி ஒரு ஜீவன் இருந்துவிட்டால் பொழுது போவதும் தெரியாது. பயமும் இருக்காது. 

குழந்தை என்றால் சேட்டை இல்லாமல் இருக்காதே. ஆறாம் நாள் அப்படி ஒரு சேட்டையை இளன் தொடங்கினான். முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தவன் திடுமென மாடிப்படிக் கதவுப்பக்கம் போய் நின்றுகொண்டு அதைத் திறக்கச் சொல்லிக் காலால் தட்டித் தட்டிக் கத்தினான். மாடிப்படிக் கதவு எப்போதும் தாழிட்டிருக்க வேண்டும் என்பது கபிலனுக்கு அம்மா போட்டிருந்த கட்டளை. இளனை ஏற்கனவே மாடிக்குக் கூட்டிச் சென்றிருப்பார்களா? அப்புறம் அவனுக்கு எப்படி வழி தெரியும்? அங்கே கூட்டிப் போகலாமா வேண்டாமா? கபிலனுக்குக் குழப்பமாக இருந்தது. மாடிக்குப் போய் ஒருமுறை பார்த்துவிட்டு முடிவு செய்யலாம் என்று நினைத்தான். அங்கே போனது தெரிந்தால் ஏதாவது பிரச்சினை ஆகுமா என்னும் பயமும் உள்ளோடியது. கதவருகில் நின்றுகொண்டு இளன் கத்துவதைப் பார்க்கப் பாவமாக இருந்தது. 

இளனை உள்ளே விட்டுத் தேக்குக் கதவைச் சாத்திவிட்டு மாடிக்குப் போனான். கொஞ்சம் படியேறி ஒரு வளைவு. அதன்பின் சில படிகள். ஒரு அறைக்கதவு. அது பூட்டியிருந்தது. உள்ளே ஒரு அறையா இரண்டா என்று தெரியவில்லை. மாடியின் பாதியளவில் அந்த அறை. இன்னொரு பாதி மொட்டை மாடி. அதற்குச் செல்ல ஒருகதவு. அறையின் மேலிருக்கும் மொட்டை மாடிக்குச் செல்ல இன்னும் கொஞ்சம் படிகள் ஏறிச் சென்ற பிறகு ஒருகதவு. இதில் இளனை எங்கே விடுவது? முதல் மொட்டை மாடியை விட இரண்டாம் மொட்டை மாடி பாதுகாப்புப் போலப் பட்டது. அங்கிருந்து ஓட வாய்ப்பில்லை. நல்ல உயரம் அது. கைப்பிடிச் சுவரும் கொஞ்சம் உயரம் போலத் தெரிந்தது. அங்கிருந்து குதித்தோட வாய்ப்பில்லை. இளனின் ஏக்கக் குரல் அவனை இளக்கியது. 

கீழே போய் இளனை அழைத்து மாடிக்கதவைத் திறந்துவிட்டான். பாய்ந்து படியேறியவன் வளைவில் இருந்த அரைவட்டத்தில் படுத்துப் புரண்டான். உடலை மலர்த்தியும் சுருட்டியும் அவன் புரள்வதைப் பார்த்தபடி கபிலன் கீழ்ப்படியில் நின்றான். ஒவ்வொரு படியாக மோந்து பார்த்துக்கொண்டே மெல்ல ஏறினான். பின்தொடர்ந்து கபிலனும் போனான். அங்கங்கே நிற்பதும் பார்ப்பதும் புரள்வதுமாக இளன் முன்னேறினான். கதவைக் கண்டால் அதன்முன் நின்று கத்தினான். அங்கே வழி இருக்கிறது என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. படிப்படியாக ஏறி மேல் மொட்டைமாடிக் கதவுக்குச் செல்லக் கால்மணி நேரமாயிற்று. அதன்முன் நின்று காலால் தட்டியும் கத்தியும் திரும்பிக் கபிலனைப் பார்த்தும் திறக்கும்படி சொன்னான். 

அதைத் திறக்கலாமா வேண்டாமா எனக் கபிலனுக்குக் குழப்பமாக இருந்தது. வீட்டுக்காரம்மாவின் சொற்கள் மனதில் சுழன்று பின்னிழுத்தன. எதிரில் இளனின் வேட்கைக் குரல் நெகிழ்த்தியது. முன்னும் பின்னும் உழன்ற மனம் இடைவிடாத இளனின் அழைப்பில் இளகி ஒருகட்டத்தில், ‘சரி, எங்க போயிருவான்? பாத்துக்கலாம்’ எனத் தைரியம் கொண்டு கதவைத் திறந்தான். இரட்டைக் கதவு அது. இரண்டிலும் மேலும் கீழும் தாழ்கள். நடுவில் ஒருதாழ். அதற்கு மேல் இரும்புப் பட்டை ஒன்று குறுக்காக ஓடிற்று. அதன் நுனியில் இருந்த செவ்வக வடிவ ஓட்டையை நிலவில் வைத்திருந்த திருகாணியில் நுழைத்து தாழாக்கியிருந்தார்கள். ஒருகதவுக்கு எத்தனை தாழ்கள். நகரத்தில், பெரிய பெரிய வீடுகள் கொண்ட இத்தெருவில் வசிக்க இவ்வளவு பாதுகாப்பு தேவைப்படுகிறதே என்றெல்லாம் யோசித்துக்கொண்டே ஒவ்வொன்றாகத் திறந்தான்.

ஒற்றைக் கதவைத் திறந்ததும் இளன் சட்டெனப் பாய்ந்து வெளியே ஓடினான். மின்விளக்குகளின் வெளிச்சம் மங்கி நிலவொளி துலங்கித் தெரிந்த பரந்த வானம். வேப்பம்பூ மணத்தை வாரிக் கொண்டு வந்து காற்று தழுவி அணைத்தது. பற்றி இறுக அழுத்திய கைகளில் இருந்து பிதுங்கி வெளியே விழுந்ததைப் போலிருந்தது. செவ்வக வடிவில் பெரிய தொட்டி போலிருந்த அம்மாடியில் கதவுக்கு மேல்பகுதியில் தண்ணீர்த் தொட்டியும் அதற்குச் செல்ல இரும்பு ஏணியும் இருந்தன. கைப்பிடிச் சுவர் ஓரமாக இளன் நடந்தான். அங்கங்கே படுத்துப் புரண்டான். கபிலனைப் பார்த்து அவ்வப்போது மகிழ்ச்சியாகக் கத்தினான். சுவர் சற்றே உயரமாக இருந்தது. குழந்தைகள் விளையாடப் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று இப்படிக் கட்டியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டான். 

நல்ல பையனாய் அங்கே சுற்றித் திரிந்த இளன் திடுமென இரும்பு ஏணியில் கால் வைத்து ஏறித் தண்ணீர்த் தொட்டிக்கு மேலே போய் நின்றான். கொஞ்சம் பதற்றமாக இருந்தாலும் எப்படியும் இறங்கி வந்துதானே ஆக வேண்டும் எனத் தணிந்து பார்த்துக் கொண்டு நின்றான். மேலிருந்து சுற்றிலும் நோட்டம் விட்ட இளன் சில நொடிகளில் அங்கிருந்து கைப்பிடிச் சுவருக்குக் குதித்தான். ஒரு பந்து வந்து அடித்து எகிறி நிலைகொள்வது போல அக்காட்சி தோன்றியது. என்ன செய்வது என்று கபிலன் யோசிப்பதற்குள் சுவரிலிருந்து ஜன்னல் ஷேடு மேல் குதித்து மதிலுக்குத் தாவினான். கபிலன் எட்டிப் பார்த்தபோது இளன் பூனையாகத் தெரிந்தான். மதில் மேல் பூனை. உள்ளே குதிக்குமா எதிர்வீட்டில் இறங்குமா பூனை?

வேகமாகப் படியிறங்கி ஓடினான். மதில் மேல் நடந்து கொண்டிருந்தது பூனை. முன்பக்கம் தெரு. இருபுறமும் வீடுகள். பின்பக்கம் காலி மனைகள். எந்தப் பக்கம் போகும்? ‘இளா… இளா… வாடா… போதும் வாடா…’ என்றெல்லாம் அழைத்தான். தன் குரலில் பதற்றத்தைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றான். வீட்டுக்கும் மதிலுக்கும் இருந்த இடைவெளிக்குள் நுழைந்து பூனை நின்ற இடத்தை அடைய முயன்றான். பூனை ஓரிடத்தில் நிற்கவில்லை. நடந்து கொண்டேயிருந்தது. இளன் என்னும் பெயரை மறந்துவிட்ட மாதிரி தெரிந்தது. ஓரிடத்தில் பூனையைப் பிடிக்கக் கபிலன் கைகளை நீட்டி எகிறிய போது அது கத்திக்கொண்டே நடந்தோடிப் பின்பக்கச் சுவருக்குப் போயிற்று. 

வீட்டுக்குப் பின்னால் கபிலன் போனதேயில்லை. ஓடி நின்றபோது அவன் கண்ணெதிரிலேயே சிறுமரங்களும் புதர்களுமாய் அடர்ந்திருந்த மனைக்குள் ஒரு பூச்சரம் நழுவி விழுவதைப் போலப் பூனை குதித்தது. துணி துவைக்கும் கல் மேல் ஏறி நின்று மனையைப் பார்த்தான் கபிலன். புல்பூண்டுகள் எல்லாம் அசைவற்றுச் சமைந்துவிட்ட மாதிரி தெரிந்தது. அவனுக்கு வேர்த்து வடிந்தது. ‘இளா… இளா…’ என்று அழைத்தான். அவன் அழைப்பு அவனுக்கே எதிரொலித்தது. சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்துவிடுவார்களோ என்று பயமாகவும் இருந்தது. 

வந்து கேட்டால் என்ன சொல்வது? பூனை காணாமல் போய்விட்டது என்று சொன்னால் உடனே வீட்டுக்காரம்மாவுக்குத் தகவல் போய்விடும். என்ன சொல்வார்கள்? பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பி வருவார்களா? என்ன பதில் சொல்வது? அண்டை வீடுகளைப் பார்த்தான். எந்தச் சலனமும் இல்லை. ஜன்னல் கதவுகளைச் சாத்திய குளிர்சாதன அறைக்குள் எந்தச் சத்தமும் கேட்காது என்பது நினைவுக்கு வந்தது. ‘இளா… இளா…’ என்று அழைக்கும் குரல் அவனுக்கு மட்டுமே கேட்கிற மாதிரி இருந்தது. 

புதருக்குள் இறங்கிப் பார்க்க வாய்ப்பே இல்லை. ஒன்றன் பின் ஒன்றாய் இரண்டு மனைகள். பக்கவாட்டு மனைகளும் காலிதான். அடுத்த தெருவின் எதிர்ப்புறத்தில் ஒன்றிரண்டு வீடுகள். இப்போது பார்க்க வீடுகள் குறைவாகவும் காலி மனைகள் மிகுந்தும் தெரிந்தது. ஒருவனத்திற்குள் நுழைந்து பூனை காணாமல் போய்விட்டது. எப்படித் தேடுவது? நெஞ்சடிப்பு கடிகார ஒலி போலக் கேட்டது. வேர்வையில் சட்டையும் டவுசரும் நனைந்தன. முன்பக்கம் ஓடி வந்து முற்றத்தில் வைத்திருந்த செல்பேசியை எடுத்தோடி மனைக்குள் விளக்கை அடித்துப் பார்த்தான். நிலவொளியில் தெரியாத பூனை செல்பேசி விளக்கொளியில் தெரியலாம். அந்த அகண்ட வெளியில் வெளிச்சம் கரைந்து மின்மினி ஆயிற்று. புதருக்குள் சரசரப்புச் சத்தம், செடிகொடிகளில் சலனம் என எதுவுமே இல்லை. 

‘இளா…’ என்று எப்படிச் சத்தம் கொடுத்தாலும் எதிர்வினை வரவில்லை. அவன் குரலில் தோய்ந்த அழுகையை உணர்ந்தான். அதற்கும் மேல் குரல் எழவில்லை. நெஞ்சைத் தடவிக் கொண்டு முற்றத்திற்கு வந்து தண்ணீர் குடித்தான். மின்விசிறியைப் போட்டு உட்கார்ந்தான். இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன. அதற்குள் பூனையைக் கண்டுபிடித்துவிட்டால் போதும். பகலில் இங்கேயே தங்கிக் காலி மனைகளுக்குள் தேடித் திரிய வேண்டியதுதான். யாரிடமும் சொல்லக் கூடாது. சாவி கொடுத்து வாங்கும் வீட்டில் என்ன சொல்வது? தேர்வுக்குப் படிப்பதால் பகலிலும் இங்கேயே தங்குவதாகச் சொல்லலாமா? ஒத்துக் கொள்வார்களா? பூனை ஓடிப் போனது அவர்களுக்குத் தெரிந்துவிடுமா? யோசனைகள் ஓட அப்படியே கீழே படுத்தவன் சோர்வில் கண்களை மூடிக் கொண்டான். 

பூனை கத்துவது போலச் சத்தம் கேட்டு விழித்தான். காதைக் கூர்மைப்படுத்தினான். மெல்லிய குரலில் பூனை கத்தியது. சட்டென்று எழுந்து மதில் பக்கம் போனான். முன்விளக்குகள் எரிந்தன. பக்கவாட்டு விளக்குகளுக்கு ஸ்விட்ச் எங்கிருக்கிறதென்று தெரியவில்லை. நிலவொளிக்குக் கண் பழகியதும் ‘இளா… இளா…’ என்று அழைத்தான். மதிலுக்கும் வீட்டுச் சுவருக்கும் இடையில் பூனை படுத்திருப்பது தெரிந்தது. ஆவலோடு ஓடினான். அவன் வருகை இத்தனை வேகமாக இருக்கும் என்று பூனை எதிர்பார்க்கவில்லை. அது எழுந்து ஓடுவதற்குள் பாய்ந்து பிடித்துக் கட்டிக்கொண்டான். அது தன் நகங்களால் கீற முயன்றது. ஆவேசத்தோடு இறுக்கிக் கொண்டவன் தன் பிடியை விடவில்லை. அவன் கையைக் கடிக்கப் பார்த்தது. அவனுக்கும் பூனைக்கும் சிறுபோர். நான்கு கால்களையும் அசைக்க முடியாதபடி இருகைகளாலும் அழுத்தியிருந்தான். தன் ரப்பர் உடலை உருவிக் கொள்ள பூனை முயன்றது. நகங்களை எடுக்க முடியவில்லை என்றதும் கடித்தது. திறந்திருந்த முற்றத்துக் கிரில், தேக்குக் கதவு எல்லாம் கடந்து உள்ளே போய்த்தான் பிடியை விட்டான். சட்டென்று தேக்குக் கதவையும் மூடித் தாழிட்டான். 

கீழே குதித்த பூனை வரவேற்பறையில் அப்படியே கீழே படுத்து கெஸ்கெஸ் என்று மூச்சு வாங்கிற்று. அவன் இடக்கையில் வலி தெரிந்தது. மடக்கிப் பார்த்தான். முன்கையில் இரத்தம் மூடிச் சொட்டியது. சமையலறைக்கு ஓடி பாத்திரம் கழுவும் தொட்டியில் கையைக் கழுவினான். நீருடன் கலந்து போகப் போக மேலும் இரத்தம் வந்து கொண்டேயிருந்தது. களிம்பு ஏதும் இருக்குமா என்று சமையலறை அலமாரிகளைக் கண்களால் தேடினான். அடுப்பை ஒட்டியிருந்த அலமாரித் தட்டில் வெண்ணிறத்தில் களிம்பு ட்யூப் ஒன்று தெரிந்தது. தாவி எடுத்துப் பிதுக்கிக் காயத்தில் வைத்தான். நன்கு தடவி இரத்தத்தை நிறுத்திய பிறகே அது என்ன களிம்பு என்று பார்த்தான். பெயர் அவனுக்குப் பரிச்சயமில்லை என்றாலும் காயத்திற்குத் தடவுவதுதான் என்பது தெரிந்தது. 

தடவியபடி வந்து வரவேற்பறை சோபாவில் அமர்ந்தான். நகக் கீறல்கள் அங்கங்கே இலை நரம்புகள் போலத் தெரிந்தன. அவற்றுக்கும் களிம்பு தடவினான். பல் பட்ட காயம் எத்தனை ஆழம் என்று தெரியவில்லை. ரொம்ப ஆழமிருந்தால் இரத்தம் நின்றிருக்காது என்று தோன்றியது. நிமிர்ந்தபோது எதிரே தொலைக்காட்சிப் பெட்டிக்கருகே இளன் படுத்தபடி இவனையே பார்த்துக் கொண்டிருந்தான். இவன் பார்ப்பது தெரிந்ததும் ‘என்ன?’ என்பது போல் குரல் கொடுத்தான். பிறகு எதுவுமே நடக்காதது போல மெல்ல நடந்து வந்து கபிலனின் மடிமேல் ஏறிச் சுருண்டு கொண்டான். இளனுக்கு மூச்சிரைப்பது நன்றாகக் கேட்டது. 

*********

murugutcd@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button