இணைய இதழ் 105கட்டுரைகள்

சிறார் கதைகள்: கேட்டல், வாசித்தல், பார்த்தல் – ஷாராஜ்

கட்டுரை | வாசகசாலை

மனித குலம் முழுதுமே கதை கேட்டு வளர்ந்தவர்கள், வளர்பவர்கள்தாம். 2 – 3 வயது முதல் தாய், தாத்தா – பாட்டிகள், ஆசிரிய – ஆசிரியைகளிடம் கதைகள் கேட்க பெரும்பாலானவர்களுக்கும் வாய்க்கும். முற்காலங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில், பொதுவெளியில் கதை சொல்வதற்கான கதைசொல்லிகளும் இருந்தனர். கல்வியறிவுள்ளோர் கதைகள், நாவல்கள் வாசிக்கவும் செய்வர். கல்வியறிவு உள்ளோரும் அல்லாதோரும் கதைகளை கூத்து, நாடகம், திரைப்படம், தொ.கா. தொடர், குறும்படம், காணொளி ஆகிய வடிவங்களில் காண்பர். சிறுகதைகள், நாவல்களை ஒலிப் புத்தகங்களாக வாசிக்கவோ, கதையாகச் சொல்வவோ செய்கிற முறைகளில் கேட்பதும் தற்கால நடைமுறையாக உள்ளது. ஆக, ஒன்றிற்கொன்று மாறுபட்ட கலை வடிவங்களில் கதைகளைக் கேட்பது, வாசிப்பது, பார்ப்பது மூன்றுமே தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இதில் கதை நிகழ்த்தும் கலைகளாக உள்ள கூத்து, நாடகம், திரைப்படம், தொ.கா. தொடர், குறும்படம் ஆகியவற்றை ஒரு பிரிவாகப் பகுக்கலாம். அவை பார்ப்பதற்கானவை. அவற்றின் கதைகள் அந்தக் கலைகளுக்காகவே, நடிப்பு அடிப்படையில் உருவாக்கப்படுபவை.

மரபுக் கதைகள், நாட்டார் கதைகள் ஆகியவை நீண்ட காலமாக வாய்மொழிக் கதைகளாக மட்டுமே இருந்து வந்தவை. சமீப நூற்றாண்டுகளில்தான் அவை எழுத்து வடிவம் பெற்றுள்ளன. ஆயினும் அவை எழுத்துக் கலையிலான கதை வடிவத்தை ஒத்தவை அல்ல. வாய்மொழிக் கதை சொல்லலுக்கே உரிய தன்மைகள் கொண்டவை. அவற்றைக் கதை சொல்லிகள் சொல்லக் கேட்பதே சிறந்தது. அதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், எழுத்து வடிவில் வாசிப்பதும் ஏற்புடையதே. வாய்மொழிக் கதைகள் அழிந்துபோய்விடாமல் காக்க அவை எழுத்தாக்கம் பெறுவது அவசியமும் கூட.

தற்காலத்தில் இணையப் புழக்கம் பரவியுள்ளதால் ஒலிப் புத்தகங்கள், காணொளிகளில் கதை வாசிப்பு, கதை சொல்லல்கள் கணிசமான அளவு கிடைக்கின்றன. யூ ட்யூபில் கதைசொல்லிகள் சிலர் உருவாகியுள்ளனர். இலக்கியம் தொடர்பான சில தளங்களில் கதை சொல்லல் போட்டி கூட நடத்தப்படுகிறது. வழக்கொழிந்து போன கதை சொல்லல் மரபு மீண்டும் புத்துயிர் பெற்றுவிட்டதோ என்ற எண்ணம் கூட எழலாம். ஆனால், இதில் சில முக்கிய மாறுபாடுகள் உள்ளன.

முந்தைய காலத்தில் கதைசொல்லிகளால் வாய்மொழிக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், புராண – இதிகாசக் கதைகள், புத்த ஜாதகம், விக்கிரமாதித்யன், தெனாலி ராமன், பீர்பால் உள்ளிட்ட மரபுக் கதைகள் ஆகியவைகளே பெரிதும் சொல்லப்பட்டு வந்தன. அவை கதை சொல்லலுக்கே உரித்தானவை. கதைசொல்லிகள் திறனாளிகளாக உள்ளபட்சத்தில் அதில் குறைகளோ, இழப்புகளோ ஏற்படாது.

மரபார்ந்த கதைசொல்லிகள் கதை சொல்லக் கேட்பது அலாதியான அனுபவம். அவர்கள் வெறுமனே கதையைச் சொல்ல மட்டும் செய்வதில்லை. சந்தர்ப்பங்களுக்குத் தக்க உணர்ச்சியோடும், ஏற்ற இறக்கங்களோடும் கதை சொல்வார்கள். சிலர் பாத்திரங்களின் செயல்களை நடித்துக் காண்பிக்கவும், முகத்தில் பாவனைகளை வெளிப்படுத்தவும் செய்வார்கள். குரல் மாற்றத் தெரிந்தவர்கள் பாத்திரங்களின் பேச்சுகளுக்கு குரலை மாற்றி மாற்றி (மோனோ ஆக்ட் போல) பாவிப்பார்கள். இப்படியாகக் கதை கேட்கையில் அந்தக் கதை நிகழ்வையும், பாத்திரங்களையும் நாம் நேரில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும்.

தற்போது யூ ட்யூபில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிலரது கதை சொல்லல்களையும், சிறுகதை மற்றும் நாவல் வாசிப்புகளையும் கேட்டிருக்கிறேன். சிலர் சிறுகதைகள், நாவல்களைக் கதையாகச் சொல்வதும் உண்டு. மேலே கூறியுள்ள காரணங்களால் மரபுக் கதைகள், நாட்டார் கதைகள், புராணக் கதைகள் முதலானவற்றைக் கதையாகக் கேட்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் சிறுகதை, நாவல், குறுநாவல்களைக் கதைகளாகக் கேட்பதில் உடன்பாடு இல்லை.

அது கூடாது என்றல்ல. அவ்வாறு சொல்வதும், அவற்றைக் கேட்பதும் அவரவர் விருப்பம். ஆனால், அவற்றில் சாராம்சமான கதை மட்டுமே இருக்கும். அந்தந்தக் கதாசிரியருக்கே உரிய எழுத்து நடை, அந்தந்தப் படைப்புகளில் உள்ள சொற்சுவைகள், பிற இலக்கிய நயங்கள் யாவும் இழக்கப்பட்டுவிடும். தட்டையான முறையில் எழுதப்படுகிற ஜனரஞ்சக பொழுதுபோக்கு, கேளிக்கைக் கதைகள் எனில் பாதகம் இல்லை. ஆனால், இலக்கிய நயங்களுக்கும், கலை நுட்பங்களுக்கும் முக்கியத்துவம் தருகிற இலக்கியப் படைப்புகள் எனில் அந்த சிறப்பம்சங்கள் யாவும் கதை சொல்லலில் இல்லாமல் போய்விடும். ஆகவே, நான் சிறுகதைகள், நாவல்களின் கதை சொல்லல்களைக் கேட்பதில்லை. அப்படைப்புகளின் முழுமையான நுகர்வை அனுபவப்பட வேண்டுமெனில் நேரடியாக வாசிப்பதோ, அல்லது அவற்றை வாசிக்கக் கேட்பதோதான் சரியானது; சிறந்தது. அந்த முறைகளையே நான் கடைபிடிப்பேன்.

*******

          எனது சிறார் கதைகளைப் பொறுத்தவரை சொந்தமாக எழுதிய கதைகள் மிக சொற்பம். அவை சுமார் ரகமானவைதானே தவிர, சிறந்த படைப்புகள் அல்ல. சிறார் கதைகளிலும் சிறந்த சுய படைப்புகளை எழுத முடியும் என்றாலும், எனக்கு அது நோக்கமல்ல. வழக்கமான நீதிபோதனை, கேளிக்கை வகை சிறுவர் கதைகளாக மட்டும் அல்லாமல், பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளை சிறார்களுக்கு வழங்க வேண்டும் என்பதே நோக்கம். அதற்காக உலக நாட்டுப்புறக் கதைகள் மற்றும் சிறார் கதைகளில் சிறந்தவற்றைத் தேடி, தேர்ந்தெடுத்து, அவற்றை மறுகூறல் முறையிலான மறுஆக்கம் செய்துள்ளேன். அதுவே எனக்குப் பிடித்தமானது. சில சமயம் இவற்றில் சில கதைகளைத் தழுவலாக எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்கிறபோது அதையும் செய்வேன்.

மறுஆக்கமாயினும் தழுவலாயினும் அவற்றில் இயன்றவரை இலக்கிய நயத்தைச் சேர்த்துகிறேன். சிறார்களின் ரசனையையும், மொழி அறிவையும் சற்றேனும் மேம்படுத்துவதற்கான சிறு முயற்சி இது.

 நான் சிறார் கதைஞன் அல்லன். ஆகவே, சாதாரணமான சிறார் கதைகளை மட்டுமே எழுத மாட்டேன். அதற்கு நான் வேண்டியதில்லை. சிறார் கதைகள் எழுதுவதை 25 ஆண்டு காலக் கனவாகவும், லட்சியமாகவும் கொண்டிருந்து, சிறார் கதைகளில் தனித்துவமான சில காரியங்களைச் செய்ய வேண்டும், அதன் மூலம் அவற்றை வாசிக்கும் சிறார்களுக்கு சிறு மேம்பாடுகளாவது ஏற்பட வேண்டும் என்ற நோக்கில்தான் கடுமையாக உழைத்து இக் கதைகளை எழுதுகிறேன். எழுதிய சிறார் கதைகள் ஒவ்வொன்றும் எனது லட்சியப்படியானவையல்ல. சாதாரணமானவையும், சுமாரானவையும் இருக்கவே செய்யும். ஆனால், முதன்மைக் கதைகள் என வகைப்படுத்தக் கூடியவை யாவற்றிலும், எனது நோக்கப்படியான சில பல சிறப்பம்சங்கள் இருக்கும்.

இலக்கியவாதிகளும், சீரிய படைப்பாளிகளும் சிறார் கதை எழுத்துக்கு வரும்போது, அவரவருக்கான தனித்தன்மையை வகுத்துக்கொண்டு, இது போன்ற ஏதேனும் நோக்கங்களோடு எழுதினால், சிறுவர் கதைகளில் அடுத்த கட்டத்தை அடையலாம்.

இது ஊர் கூடித் தேர் இழுக்கிற காரியம். ஒருவர் மட்டும் முயன்றால் நடவாது. என்னைப் பொறுத்தவரை, அணில் சேவையாக என்னால் இயன்றதைச் செய்திருக்கிறேன். வாய்க்கும்போது இனியும் செய்ய முற்படுவேன்.

*******

சிறார் கதைகள் மட்டுமே எழுதுகிறவர்கள், நாட்டுப்புறக் கதைசொல்லிகளிடம் கதைகளைக் கேட்டு அப்படியே எழுதுகிறவர்கள் ஆகியோரால் எழுதப்படுகிற சிறார் கதைகளுக்கும், பெரியவர்களுக்கான கதாசிரியர்களால் எழுதப்படுகிற சிறார் கதைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்க முடியும். சிறுகதைஞர்கள், நாவலாசிரியர்கள், கவிஞர்கள் சிறார் கதைகள் எழுதினால் அவற்றில் தரம் கூட நிறையவே வாய்ப்பு. அதோடு அவர்கள் கவனம் கொண்டால் கலைநயங்களையும் இடம்பெறச் செய்யலாம்.

மரபுக் கதைகள், வாய்மொழிக் கதைகள், நாட்டார் கதைகளில் நேர்த்தியின்மை, தர்க்கமின்மை, உணர்ச்சிக் குறைவு உள்ளிட்ட பற்பல குறைபாடுகளும், பற்றாக்குறைகளும் இருக்கும். இவற்றைச் சரிப்படுத்தலாம். தேவைப்படுகிற இடங்களில் மேம்பாடுகளையும் செய்யலாம்.

எனது மறு கூறல் கதைகள், தழுவல் கதைகளில் இவ்வாறு செய்துதான் அவற்றின் மூலக் கதைகளிலிருந்து மேம்பட்டவையாக அவற்றைப் படைத்துள்ளேன். பெரியவர்களுக்கான கதைகளை எழுதக் கூடிய கதைஞர்கள் யாராயினும் இவற்றை எளிதாகச் செய்ய முடியும்.

*******

குழந்தைகளின் அறிவு வியக்கத் தக்கது. அதிலும் இரண்டுஇரண்டரை வயது முதல் ஏழு வயது வரையிலான குழந்தைகள், பெரியவர்களை அசர வைக்கும்படியாகப் பேசக் கூடியவர்கள். அதனால் எனது விடலைக் காலம் முதலாகவே குழந்தைகளுடன் பேசும்போது அவர்களின் அறிவைச் சந்தேகிக்கவே மாட்டேன். பெரியவர்களுடன் பேசுவது போலவே இடக்கு மடக்காகப் பேசவும், குதர்க்கக் கேள்விகள் கேட்கவும் செய்வேன்.

ஒரு சிலர் இதைக் கேட்கையில், குழந்தைகளுடன் பேசுகிற மாதிரி பேசு என்பார்கள். ஆனால், எனது இடக்குப் பேச்சுகளுக்கும், குதர்க்கக் கேள்விகளுக்கும் குழந்தைகளிடமிருந்து வருகிற பதிலையும், பதிலடியையும் கேட்டால் அவர்களும் அசருவார்கள்; நானும் அசந்துவிடுவேன்.

தொண்ணூகளிலிருந்தே இப்படி சில குழந்தைகளிடம் பேசி, அவர்கள் சொன்ன பதில்கள் இன்னமும் ஞாபகம். அந்தக் காலத்திலேயே அப்படி. இந்த ஆண்ட்ராய்ட் காலத்தில் சொல்லவா வேண்டும்! ஒவ்வொரு குழந்தைகளின் சுட்டிப் பேச்சுகளையும் பதிவு செய்துகொண்டே வந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் தனியாக ஒரு நூலே எழுதலாம்.

குழந்தைகள், சிறார்களின் ரசனையையும் சந்தேகிக்கக் கூடாது. இவர்களுக்கு இவ்வளவுதான் இருக்கும் என நாம் நினைப்பதைவிட அதிகமாகவே ரசனை கொண்டிருப்பார்கள். புதிதாக ஒன்றை அறிய நேர்ந்தால் விரைந்து கிரகித்துக்கொள்கிற ஆற்றலும், ஏற்கிற தன்மையும் அவர்களுக்கு உண்டு. பெரியவர்கள்தான் அவர்களுக்குள் ஏற்கனவே உள்ள ரசனையைத் தாண்டிச் செல்ல விரும்பாமலும், இயலாமலும் தேங்கிக் கிடப்பார்கள். ஆகவே, எனது சிறார் கதைகள் பலவற்றிலும் சிறார் கதைகள் என்பதை மீறி பல வித அழகியல் அம்சங்களையும், கதை எழுத்து நுட்பங்களையும் பயன்படுத்தியிருப்பேன். வழக்கமாக சிறுவர் கதைகளில் பயன்படுத்தப்படாத சொற்களையும் ஆங்காங்கே பயன்படுத்துவேன். அவற்றுக்குப் பொருள் தெரியாவிடில் அவர்கள் பெற்றோர்களிடமோ, ஆசிரியர்களிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அல்லது இணையத்திலோ, தமிழ் அகராதிகளிலோ பார்த்துத் தெரிந்துகொள்ள முடியும். நான்கு, ஐந்து வயதுக் குழந்தைகள் சர்வ சாதாரணமாக யூ ட்யூபையும், புலனத்தையும் பயன்படுத்துகிற காலம் இது.

அதே போல, உலக நாட்டுப்புறக் கதைகளில், அந்தந்தக் கதைகளுக்கு ஏற்ப, அவை தொடர்பான தகவல்களையும் இயன்றவரை கொடுப்பேன். இது சிறார்களுக்குக் கூடுதல் பயனளிக்கும்.

50 – 100 பிரதிகள் மட்டுமே விற்பனையாகிற, பிரபலமற்ற எழுத்தாளனான என்னால் பெரிய தாக்கங்கள் எதையும் நிகழ்த்த முடியாது. ஆயினும், எனது சிறார் கதை நூல்களை வாசிப்பவர்களுக்கு, உலகளாவிய சிறந்த படைப்புகளைக் கொடுக்கிறேன் என்ற திருப்தி எனக்கு உண்டு. அச்சிறார்கள் கதைகளுக்கு அப்பாற்பட்டு சில விஷயங்களை அறிமுகம் கொண்டவர்களாகவும், ரசனையில் சற்று மேம்பட்டவர்களாகவும், உலக நாட்டுப்புறக் கதைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் ஆக வேண்டும் என எதிர்பார்க்கிறேன். நடக்கிறதோ இல்லையோ, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் நல்லதல்லவா!

*******

          பொதுவான முறையில் எழுதப்பட்ட சிறார் கதைகள் யாவும் கதைசொல்லல் முறையில் சொல்லத் தக்கதே! எனது சிறார் கதைகளில் அப்படியான கதைகளும் உள்ளன. அவற்றை யார் வேண்டுமாயினும் கதைகளாகச் சொல்லலாம். ‘ஓர் அங்குலச் சிறுவன்’ கதையை வாசித்துவிட்டு, ஏழாவதோ எட்டாவதோ படிக்கக் கூடிய ஒரு சிறுமி, கதை சொன்ன காணொளி ஒன்றையும், ‘வாழ்வின் நோக்கம்’ என்ற கதையை வாசித்துவிட்டு (பெரியவர்) ஒருவர் கதையாகச் சொன்ன காணொளியையும் யூ ட்யூபில் காண நேர்ந்தது. இத்தகைய கதை சொல்லல்கள் அவசியம்.

          எனது சிறார் கதைகள் பலவும் மறுகூறல் முறையில் எழுதப்பட்டவையே என்பதால் அவற்றை மற்றவர்கள் மறுகூறலாகச் சொல்வது ஏற்புடையதே. எனினும், கலைச் சிறப்புகள் கொண்ட கதைகளைக் கதையாகச் சொல்வதைவிட, ஒலிக் கதைகளாக வாசிப்பதும் கேட்பதுமே சிறந்தது. அதைவிட சிறார்கள் நேரடியாக அக்கதைகளையும் நூல்களையும் வாசிப்பது சாலச் சிறந்தது.

-shahrajscape@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button