
இரண்டாவது குழந்தை பிறந்து நான்கு நாள்கள்தான் ஆகியிருந்தன. கொஞ்சம்கூட தூக்கம் இல்லை. கடைசியாகக் கண்ணாடியில் எப்பொழுது முகம் பார்த்தேன் என்ற ஞாபகம்கூட இல்லை. வீரத் தமிழச்சி மாதிரி குழந்தையின் துணிகளைக் கையிலேயே துவைத்து இரண்டு முறை ஜன்னி கண்டுவிட்டது. அதற்குப் பிறகு குழந்தையின் துணிகளை மட்டும் தனியாக வாஷிங் மெஷினில் போட்டுவிட உத்தரவிட்டிருந்தார் என் கணவர். ஒரு தடவை குழந்தையைக் காலில் போட்டுக் குளிப்பாட்ட முற்பட்டபோது அவரிடம் டோஸ் வாங்கியதுதான் மிச்சம்.
வீடெங்கும் போட்ட பொருள்கள் போட்ட மாதிரி அப்படியே கிடந்தன. மூத்தவள் தேவிக்கு வெறும் மூன்று வயதுதான் ஆகிறது. பார்க்கப்போனால் அவளும் ஒரு குழந்தைதான். அவளைப் போய் என்னவென்று வீட்டு வேலைகள் செய்யச் சொல்வது? என் கணவர் முடிந்தவரை செய்வார். எப்படிச் சுத்தப்படுத்தினாலும், வீடே தேவியின் விளையாட்டு மைதானமாகத்தான் மாறிப்போகும். குழந்தைகள் குடியிருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் இது வழக்கமான நாடகம்தானே!
‘க்ளிங் க்ளிங்’
வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டு வெளியே சென்று பார்த்தேன். 30 நாள்களுக்குப் பிரசவத்திற்குப் பிறகு எனக்கு மசாஜ் செய்து, குழந்தையைக் குளிப்பாட்டி, உணவு சமைத்துக் கொடுக்கும்படி பேறுகாலப் பராமரிப்பாளர் ஒருவரை நியமித்திருந்தேன். அவர்தான் வாசலில் நின்றிருந்தார்.
மருத்துவமனையிலிருந்து அதற்கு முதல் நாள்தான் பெயர் வெட்டி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். வீடு வரும்பொழுது மாலை 6-க்கு மேல் ஆகிவிட்டது. ஆகையால், என் கணவரை வெள்ளை சோறு ஆக்கச் சொல்லிவிட்டு சாப்பாட்டுக் கடையில் ரசம் மட்டும் வாங்கிக்கொண்டேன். என் தோழி ஒருத்தி கருத்துரைத்தபடி, ஆன்லைன்னில் ஏற்கனவே பூண்டு பொரியல் வாங்கி வைத்திருந்தேன். அதைக் கலந்து உண்டு, நேற்றுடைய முதல் நாளின் உணவை முடித்துக்கொண்டேன்.
உள்ளே நுழைந்ததும் அவர் பாட்டுக்கு நான் குளிப்பதற்கு மூலிகை இலைகள் நிறைந்த நீர்க் கலவையைத் தயார் செய்தார். எனக்கு முதலில் மசாஜ் செய்தார். ஏழு தோள் அடுக்குகளை வெட்டி செய்த சி-செக்க்ஷேன் அறுவை சிகிச்சையின் வலி ஒரு பக்கம், தூக்கமும் இல்லாமல் ஓய்வும் இல்லாமல் சக்கரமெனச் சுழலும் உடல் அசதி ஒரு பக்கம் என்று துவண்டு போயிருந்த எனக்கு அவர் செய்த மசாஜ் தொட்டியில் போட்டுத் தாலாட்டியது போலிருந்தது. ஒரு சில நிமிடங்களில் கொஞ்சம் உறங்கித்தான் போயிருந்தேன். மசாஜ் முடிந்ததும் அவரே எழுப்பி என்னைக் குளிக்கச் சொன்னார். வாட்டர் ஹீட்டரில் இன்னும் கொஞ்சம் வெந்நீர் அந்த நீர்க் கலவையில் கலந்து அலுப்பு பறந்தோடும் வரை அலறத் தலை குளித்தேன்.
அதற்குள் வீட்டிலிருந்த இன்னொரு குளியலறையில் அவர் குழந்தையையும் குளிப்பாட்டி முடித்துவிட்டு பால் கலக்கிக்கொண்டிருந்தார். கொஞ்சம் தாய்ப்பால், கொஞ்சம் பவுடர் பால் என்று கலந்து கொடுக்கத் தொடங்கிவிட்டேன். முழுநேரமும் தாய்ப்பால் கொடுப்பதற்கு என் உடலில் தெம்பு இல்லை.
வெளியே தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்த தேவி, அருகில் வந்து என்னை அணைத்தாள். அவளுக்குப் பசி எடுத்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டேன். அவளின் வயிற்றுப் பசியை நீக்கி அவளைத் தாலாட்டித் தூங்க வைத்தேன்.
பராமரிப்பாளர் சமைத்து எடுத்து வந்த பத்திய உணவு சூடு ஆறிப்போவதற்குச் சாப்பிட வேண்டும். சுடச்சுடச் சாதம், ஆரஞ்சுப் பழம், ஜெனாஹாக் மீன் பொரியல், கொஞ்சம் மிளகு, கேரட், கடுகுக் கீரை போட்டு சூப் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தன. அந்த உணவைப் பார்த்ததும் என் புருவங்கள் சுருங்கின.
தமிழர்கள் வழக்கப்படி கடுகுக் கீரை, ஆரஞ்சுப் பழம் போன்றவற்றைப் பிரசவித்த ஒரு பெண் எத்தனையோ நாள்களுக்குச் சாப்பிடக்கூடாது என்று ஆறு மாதங்களுக்கு முன்பு பிரசவித்த என் தோழி சொல்லியிருக்கிறாள்.
“சாயா போலெஹ் மாக்கான் காஹ் இனி செமுவா?”
“போலெஹ்.. இனி மேமாங் மக்கானான் பாந்தாங்.. பூவாஹ் ஓரன் அட பாய்பெர்.. இத்து சாவி பாகூஸ் உந்துக் காசி பாஞா க் யு புஞா சுசு ஜுகா”
அதற்கு மேல் நானும் எதுவும் கேட்கவில்லை. ஒருவேளை மலாய்க்காரர்கள் வழக்கம் இதுவென அமைதியாய் இருந்துவிட்டேன். எல்லாவற்றையும் தாண்டிப் பசி வேறு வயிற்றைத் துளைத்தது.
மதிய ஓய்வு நேரம் ஆதலால், என் கணவரும் வெளியில் உணவு வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். அவர் உள்ளே நுழைவதற்கும் பராமரிப்பாளர் தன் வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு வெளியேறுவதற்குச் சரியாக இருந்தது.
குழந்தை மாலினியின் அருகில் நானும் இளைப்பாறலாம் என்று படுக்கையறையில் நுழைந்து படுத்துக்கொண்டேன். அறைக்கதவு மூடப்படாததால் வரவேற்பறையில் அவர் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எந்த நொடியில் கண்ணயர்ந்து போனேன் என்று எனக்கே தெரியாது.
“கவ்சல்யா!!!.. கவ்சல்யா!!!..”
தலையில் இடி விழுவதுபோல என் தோள்களைக் குலுக்கினார்.
‘இவருக்கு இப்பொழுது என்னதான் வேண்டும்? எதுவானாலும் நான் விழித்தபின் சொல்லக்கூடாதா. மதிய உணவுக்கு வந்தவர் சாப்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்ப வேண்டியதுதானே?’
எனக்குள் நானே முனகிக்கொண்டேன். ஏற்கனவே பிரசவத்திற்குப் பிறகு தூக்கம் பற்றாக்குறையால் வீட்டு வேலைகளைச் செய்வதில் இருவருக்கும் அடிக்கடி ஒருசில சலசலப்புகள் இருந்துதான் வருகின்றன. இந்த மாதிரி சமயங்களில் யாராவது ஒருத்தர் முடிந்தவரை வாயை மூடிக்கொண்டால் உறவு முறிவு ஏற்படாமல் சுமுகமாக இருக்கும் அல்லவா! கண்ணைக் கசக்கித் தெளிவாக்கி என்ன என்று புருவங்களைத் தூக்கினேன்.
“உனக்கு நிறைய ஆண்களுடன் ச்சேட் பண்ண ரொம்ப புடிச்சிருந்ததா?”
எனக்குக் காதுகள் அடைத்து ரத்தம் சூடேறி இதயத் துடிப்பு மேலோங்கி கண்கள் மயங்கின. எந்த விஷயம் அவருக்குத் தெரியவே கூடாது என்று நினைத்தேனோ அது இன்று தெரிந்துவிட்டது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயானதற்குப் பிறகு! தாம்பத்திய வாழ்க்கை நன்றாக நகர்ந்துகொண்டிருக்கிறது என்று சந்தோஷப்படும் தருணத்தில்! என்னுடைய பழைய வாழ்க்கை..
“உனக்கும் எனக்கும் நூலளவுகூட ரகசியம் இருக்கக்கூடாது” என்று காதலிக்கும்போது அவர் சொன்ன போதெல்லாம், எந்த ரகசியம் சாகும்வரை அவரிடமிருந்து மறைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேனோ அதைப்பற்றிக் கேட்டுத்தான் என் கணவர் என் கண்முன் நின்றுகொண்டிருந்தார்.
வேகமாக ஓடி அடுப்பறையில் பெரிய கத்தி ஒன்றை எடுத்து என்னைக் காயப்படுத்திக்கொள்ள முற்பட்டேன். நான் என்ன செய்கிறேன் என்று புரியவில்லை. உடனே செத்துவிட வேண்டும் என்று தோன்றியது. என்னைப் பின்புறத்திலிருந்து பிடித்துத் தடுத்த வண்ணம் கையில் இருந்த கத்தியைத் தூக்கிப் போட்டார்.
“ட்ராமா பண்ணாதே. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு”
அழுதேன். வார்த்தை வரவில்லை. தலை குனிந்துகொண்டேன். ‘மன்னிச்சிடுங்க’ என்றுகூடச் சொல்ல முடியவில்லை. வார்த்தை தொண்டையில் சிக்கி வெளிவராமல் தவித்தது.
“இல்லங்க… நான் பண்ணது தப்பு… அந்த டைம்ல என்னோட எக்ஸ் பாய்பிரெண்ட்.. அகிலன்.. பிரேக் அப் பண்ணிட்டான் என்னை.. அவனிடம் பழகிய நாட்களில்தான் சுய இன்பம் அப்படினா என்னானு எனக்குத் தெரியும்.. திடீர்னு அவன் பிரேக் அப் பண்ணதும், கொஞ்ச நாளுக்கு அப்புறம் அந்தப் பழக்கம் ஒரு வழக்கமா மாறிப் போனதை உணர்ந்தேன்.. அப்படிப் பண்ணாதா தூங்க முடிஞ்சது..”
பளீர் என ஓர் அறை என் கன்னத்தில் விழுந்தது. என் கணவர் என்னை அடித்த முதல் அடி அது. அதற்காகச் சந்தோஷப்படுவதா வருத்தப்படுவதா என்று தெரியவில்லை.
நான் பச்சை உடம்புக்காரி என்பதை மறந்துவிட்டார் போலும். அவர் இடத்தில் எந்தவொரு ஆணாக இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பான். நான் செய்திருந்த காரியம் அப்படி. நாளிதழில் பார்ப்பதுபோல் என்னைத் துண்டுத் துண்டாக வெட்டிக்கொள்ளாமல் விட்டு வைத்திருக்கிறாரே, அதுவே பெரிய விஷயம்.
சற்று நிமிடம் கழித்து அவரேதான் திரும்பக் கேட்டார்.
“சரி.. அப்ப எப்படி இத்தனை பேரோட ச்சேட் பண்ணிருக்கே?”
அவரின் திறன்பேசியில் காட்டியது என்னுடைய முகநூல் ச்சேட்கள்.
எனக்கெல்லாம் எங்கே கல்யாணம் ஆகப்போவது என்ற எண்ணத்தில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்றிருந்த காலம் அது. யாருக்குத் தெரியும், என்னையும் உண்மையாக நேசிக்க ஒருத்தர் வருவார் என்று! என் உடல் முழுவதும் கரப்பான் பூச்சிகள் அங்கும் இங்கும் ஓடுவது போலிருந்தது. வெளியில் இருக்கும் குப்பைத்தொட்டிக்குச் சமம் நான் இப்பொழுது.
‘ஒருத்தனுக்கு ஒருத்தி’ என்பதுதான் சமுதாய கட்டமைப்பு. ஆனால், நான் இங்கு ஒரு வேசியாக நிற்கிறேன். யாரால் இப்பொழுது எனக்கு உதவ முடியும்? யாரிடம் சொல்வேன்? என் அம்மா அப்பாவிடமா? வெட்டிக் கொன்றுவிடுவார்களே! நண்பர்களிடமா? ‘ச்சீ!!’ என்று காரி துப்பிவிடுவார்கள்.
அவர் கால்களில் விழுந்தேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. கல்யாணத்திற்கு முன்பே சொல்லியிருக்க வேண்டும். அதற்குப் பிறகு என்னை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவர் விருப்பம். ஆனால், நான் சொல்லியிருக்க வேண்டும்.
“எத்தனை முறை ஒன்னா இருக்கும்போது கேட்டிருப்பேன், உனக்கு என்னன்னா மாதிரி நடந்துக்கிட்டா புடிக்கும்னு? என்கிட்டே எதையும் சொல்லாமே இப்படி அடுத்தவனுங்ககிட்ட சொல்லிருக்கே. இது எல்லாம் நான் உன்னைக் காதலிப்பதற்கு முன்பு நடந்திருந்தாலும் எல்லாம் முடிந்துவிட்டது என்று என்னால் பேசாமல் இருக்க முடியாது. நானும் சராசரி மனுஷன்தான். அதுசரி.. இவனுங்க எல்லாம் யாரு?”
“நியூ ரிக்குவெஸ்ட் வரும்.. யாருனு தெரியாது..”
“உனக்குப் பயமா இருந்ததில்லையா?”
“எனக்கு அவனுங்கள தெரியாது.. அதுனாலதான்.. என்னை ஞாயபடுத்தல.. ஆனால், அந்த நேரத்துல…. நான் அப்படி.. நடந்துக்கிட்டேன்..”
“உனக்குப் பெயர் என்ன தெரியுமா?”
வாயடைத்துப் போனேன்.
மாலினி எழுந்து அழத் தொடங்கிவிட்டாள். வேறு வழியில்லாமல் அவளைத் தூக்கி அவளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்தேன் ஒரு தாயாக… என் கணவருக்கு நான்தான் முதல் காதல்… ஆனால், நான்?
மலாய்க்காரர்கள் சொல்வார்கள், ஒரு பெண் படும் பிரசவ வலியின்போது, அவள் செய்த பாவங்கள் எல்லாம் கழிந்து போகும் என்று. அதே மாதிரி, நான் செய்த பாவமும் கழிந்து போகாதா என்று நான் வேண்டாத நாள் இல்லை.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர் ரொம்பவும் மாறிப்போனார். வெளியில் பார்ப்பவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. அலுவலகத்திற்குச் செல்வார். குழந்தைகளுடன் சில சமயங்களில் சிரித்துப் பேசுவார்; பல சமயங்களில் வெறுப்பைக் கக்குவார். குழந்தைகள் அவருக்குத்தான் பிறந்தவர்களா என்று சந்தேகம்கூட அவருக்கு வந்துவிட்டதோ என்று நானே யூகித்துக்கொள்வேன். ஆனால் இரவு நேரங்களில் மட்டும் அவர் கண்களில் இருந்த அமைதியின்மையை என்னால் பார்க்க முடிந்தது. பல நாட்கள் அவர் சரியாகத் தூங்கவில்லை.
நள்ளிரவில் திடீரென எழுந்து தண்ணீர் குடிப்பார். சில சமயங்களில் வரவேற்பறையில் தனியாக அமர்ந்து வெறுமனே சுவரைப் பார்த்துக்கொண்டிருப்பார். நான் அருகில் சென்றால் எதுவும் நடக்காததுபோல படுத்துக்கொள்வார். ஒருமுறை எங்களுக்குள் நடந்த விவாதத்தில் அந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி வாய்விட்டு அழுதார். தன் அம்மாவின் இறப்புக்குக்கூடக் கண்ணீர் சிந்தாதவர் அவர். அவர் அழுததை முதல் முறையாகப் பார்த்தேன்.
இன்னொரு நாள் என்னிடம் எதுவும் சொல்லாமல் மலாக்காவிலிருந்து பினாங்கு வரை தனியாக மோட்டார் சைக்கிளில் சென்று சும்மாவே பினாங்கை ஒரு சுற்று சுற்றி, அதேநாளே மலாக்காவிற்கு வீடு திரும்பினார். அந்த நாள் என் எண்களைப் பிளாக் செய்திருந்தார். ஆனால், என்னுடைய கிரெடிட் கார்டு பயன்படுத்தித்தான் தன்னுடைய மோட்டார் சைக்கிளுக்குப் பெட்ரோல் போட்டிருந்தார். அப்பொழுது எனக்கு மெசேஜ் வரும். அதை வைத்துத்தான் அவர் எங்கு இருக்கிறார் என்னும் விவரங்களை நான் அறிந்துகொண்டேன்.
ஒருநாள் அலுவலகத்தில் இருந்தபோது அவருக்கு நெஞ்சு படபடப்பு ஏற்பட்டிருக்கிறது. மூச்சு வாங்கச் சிரமப்பட்டதால் சக ஊழியர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். பரிசோதனைகளெல்லாம் செய்த பிறகு மருத்துவர் சொன்ன பதில் எளிமையானது.
“உடலுக்குப் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. அதிகமான மன அழுத்தம்.”
அந்த வார்த்தை என்னைக் கத்தியால் குத்தியதுபோல இருந்தது. அவருடைய மன அழுத்தத்திற்குக் காரணம் நான்தான். அவருடைய முதல் காதலும் நான்தான். அவருடைய மனைவியும் நான்தான். அவருடைய குழந்தைகளின் தாயும் நான்தான். ஆனால், அவருடைய நினைவுகளில் நான் மட்டும் அவருக்குச் சொந்தமானவளாக இல்லை என்ற எண்ணமே அவரை உள்ளுக்குள் தின்றுகொண்டிருந்தது.
“நான் கேக்குறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க.. நீங்க திருமணத்திற்கு முன்பு…. சாரி.. நான் கேட்டுத்தான் அவனும்.. அவர் சொன்னது உண்மையா அப்படினு செக் பண்றதுக்காகத்தான்… நீங்க ஒரு ப்ளெய்கெல் ஆ…?”
கண்ணீர் சிந்தினேன். தலையை மேலும் கீழும் அசைத்தேன். மருத்துவர் தலை குனிந்தார். அவருக்குத் தூக்கம் தேவை என்று சொல்லி அதற்கான மருந்துகளை எழுதிக் கொடுத்தார். ஒரு மன நோயாளி போன்று பல சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
காலம் நகர்ந்தது. குழந்தைகள் வளர்ந்தார்கள். ஆனால் என் குற்றவுணர்வு மட்டும் வளர்வதை நிறுத்தவில்லை. சில நேரங்களில் மாலினியின் தலைமுடியை வாரிக்கொண்டிருக்கும்போது திடீரென்று நினைவு வரும்.
“அந்த நாளில் நான் அந்தச் சேட்டை ஆரம்பிக்காமலிருந்திருந்தால்?”
தேவி பள்ளியிலிருந்து ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடிக்கும்போது நினைப்பேன்,
“என் வாழ்க்கையை இவ்வளவு அழகாக மாற்றப்போகும் மனிதரைச் சந்திக்கப் போகிறேன் என்று தெரிந்திருந்தால் நான் அப்படி வாழ்ந்திருப்பேனா?”
பதில் எப்போதும் ‘இல்லை’ என்பதுதான். இளமை வயதில் தனிமை, நிராகரிப்பு, உடைந்த காதல், புரியாத ஆசைகள்—அவற்றைச் சுதந்திரம் என்று தவறாக நினைத்தேன். யாருக்கும் தீங்கு செய்யவில்லை என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு செயலுக்கும் அதன் நிழல் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. அந்த நிழல் என் திருமணத்திற்குப் பிறகும் என்னைப் பின்தொடரும் என்று தெரிந்திருக்கவில்லை.
சில நேரங்களில் கண்ணாடி முன் நிற்கும்போது என்னையே பார்த்துக் கேட்பேன்,
“அந்தப் பெண் நான்தானா?”
இப்போது நான் ஒரு தாய். ஒரு மனைவி. இரண்டு குழந்தைகளின் உலகம். ஆனால் அந்தப் பழைய தவறுகளின் நினைவுகள் மட்டும் சில இரவுகளில் கதவைத் தட்டிவிட்டுப் போய்விடும். அப்போது நான் இறைவனிடம் ஒரு வேண்டுதல் மட்டும் செய்வேன்.
“கடந்த காலத்தை மாற்ற முடியாது. ஆனால் நான் இன்று வாழும் வாழ்க்கையைக் காப்பாற்றிவிடு.” ஏனென்றால், மன்னிப்பைப் பெறுவதைக் காட்டிலும், அந்த மன்னிப்பிற்குத் தகுதியானவளாக வாழ்வதுதான் மிகவும் கடினம்.
சில நேரங்களில், ‘நானும் பல பெண்களுடன் போய் படுக்கப் போகிறேன்’ என்பார். அவர் சொன்ன மாதிரி இதுவரை செய்ததில்லை. அது என் அதிர்ஷ்டம்.
இதைப்பற்றிய சண்டைகள் மாதத்திற்கு ஒருமுறை, பின்பு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, அடுத்து வருடத்திற்கு ஒருமுறை என்று மாறிவிட்டன.
அவர் ஓரளவு மறந்துவிட்டார். அந்தக் கெட்ட கனவையா அல்லது என்னையா என்றுதான் தெரியவில்லை.
ஒருநாள் இரவு குழந்தைகள் தூங்கிய பிறகு, நான் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்தேன். பின்னால் வந்து நின்றார்.
“ஒரு விஷயம் புரிஞ்சிக்கிட்டேன்,” என்றார்.
நான் திரும்பிப் பார்க்கவில்லை.
“நீ செய்ததை என்னால் சரின்னு சொல்ல முடியாது. அது இன்னைக்கும் வலிக்குது. ஆனா அந்தத் தப்பை நீ தினமும் தண்டனையா அனுபவிச்சிட்டு இருக்கிறதைப் பார்த்து எனக்குக் கஷ்டமா இருக்கு.”
என் கைகள் நடுங்கின.
“நான் காதலிச்சது இப்போ இருக்கிற உன்னைத்தான். இருபது வயசுல இருந்த உன்ன இல்ல. இரண்டு குழந்தைகளுக்காக இரவு முழுக்க தூங்காம இருக்கிற உன்னை; எல்லாருக்காகவும் ஓடுற உன்னை. அந்தப் பழைய பெண்ணும் இந்தப் பெண்ணும் ஒன்னு இல்ல.”
அந்த நிமிடம் நான் உடைந்து அழுதேன். பல வருடங்களாக என் மார்புக்குள் கிடந்த கல் கொஞ்சம் நகர்ந்தது. அவர் என்னை முழுமையாக மன்னித்துவிட்டார் என்று சொல்ல முடியாது. சில காயங்கள் மறைந்தாலும் வடுக்கள் இருக்கும். ஆனால் அந்த நாளுக்குப் பிறகு அவர் என்னைத் தண்டிப்பதை நிறுத்திவிட்டார். நாங்கள் அந்த விஷயத்தை மறக்கவில்லை. ஆனால் அதற்குள் வாழக் கற்றுக்கொண்டோம்.
கல்யாணத்திற்குப் பிறகு சுற்றியுள்ளவர்கள் ‘மலடி’ என்று பட்டம் சூட்டி விடக்கூடாது என்பதற்காக இரண்டு குழந்தைகளை மட்டும் பெற்றெடுத்துவிட்டேன். அவர்களுக்கான கடமையை மட்டும் சரிவரச் செய்துகொண்டிருக்கிறேன். இன்னொரு ஜென்மம் என்று ஒன்று இருந்தால், என் கணவருக்குப் பரிசுத்தமான என்னைப் பரிசளிக்க வேண்டும், கன்னி களையாமல்.



