
ஹொய்சாளக் கட்டிடக்கலை – ஓர் அறிமுகம்
இந்தியக் கட்டிடக்கலை மரபுகளில் ஹொய்சாளர்களின் மரபு ‘வேசர பாணி’ என்ற கட்டிடக்கலை மரபின் கீழ் வருவது. மற்றவை நாமறிந்த தென்னாட்டு கட்டடக்கலை மரபான ‘திராவிட பாணி’ மற்றும் நமது நாட்டின் வடக்குப்பகுதியில் காணப்படும் ‘நாகர பாணி’ ஆகியவை. தமிழகத்தின் பெரும்பாலான பண்டைய ஆலயங்களும் கணிசமான அளவில் ஆந்திர மற்றும் கர்நாடகப் பகுதிகளிலுள்ள ஆலயங்களும் திராவிட பாணியைச் சார்ந்தவை. நாகர பாணி வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுவது, ஆந்திரத்தின் வடக்குப்பகுதி வரை இதன் செல்வாக்கு உண்டு. இக்கலைமரபுகளில் மேலும் பல உட்பிரிவுகள் உண்டு என்பார் ஆசிரியர் ஜெயக்குமார், விமானத்தின் ‘சிகர’ அமைப்பைக் கொண்டு அதை அழகாக விளக்கவும் செய்வார். ஆனால் அது இவ்வறிமுகத்திற்கு அப்பாற்பட்டது.
வேசர பாணி என்பது தெற்கின் திராவிட மரபுக்கும் வடக்கின் நாகர மரபிற்கும் இடையேயான ஒரு நடுநிலைக் கலைமரபு எனச்சொல்லலாம். ‘வேசர’ என்ற சொல் ‘விஷ்ர’ என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்ததாக ஊகிக்கப்படுகிறது. அதற்கு ஒன்றிணைதல் அல்லது ஒன்று மற்றொன்றாக மாற்றமடைதல் (transition) என்று பொருள் கூறப்படுகிறது. ஆகவே ‘வேசர பாணி’ என்பது மற்ற இரு கலை மரபுகளின் ஒன்றிணைவு என்றோ அல்லது நாகர பாணியின் தாக்கத்தால் திராவிட பாணி மற்றொன்றாக உருமாற்றம் கொண்டதென்றோ சொல்லலாம்.
இந்த ‘வேசர கலை மரபு’ என்பது ஹொய்சாளர்களின் கலை மரபு மட்டுமல்ல, பாதாமி (வாதாபி) சாளுக்கியர்கள், ராஷ்டரகூடர்கள் மற்றும் மேலைச் (கல்யாணி) சாளுக்கியர்களின் பல ஆலயங்களும் வேசர பாணி ஆலயங்களே (எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒற்றைக் கற்றளியான எல்லோரா கைலாசநாதர் கோவிலில் கூட வேசர பாணியின் அம்சங்களைக் காணலாம்). நிலவியல் அடிப்படையில் கர்நாடகத்தின் வடபகுதி என்பது இவ்விரு கலை மரபுகளும் சந்திக்கும் இடமாதலால் இயல்பாகவே இவ்விணைவு சிற்பிகளின் ஊடாக நடந்திருக்கக்கூடும். வெவ்வேறு கலை மரபுக்களுக்கிடையேயான நுணுக்கங்களை அறியாத நம் கண்களுக்கு சதுர வடிவ அடித்தளத்தின் மீதமைந்த இந்த முற்கால வேசர பாணி ஆலயங்களைக் காணும்போது அவை திராவிட பாணி ஆலயங்கள் என்றே தோன்றுமளவுக்கு திராவிட பாணியின் சாயல் அதிகம் கொண்டவை. பாதாமி சாளுக்கியர்களில் தொடங்கி ராஷ்டிரகூடர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இக்கலை மரபானது மேலைச் சாளுக்கியர்களின் வழியாக ஹொய்சாளர்களை வந்து சேர்கிறது. அதனை மேலும் வளர்த்தெடுத்து கலைச்சாத்தியங்களின் உச்சத்தைத் தொட்டதே ஹொய்சாளர்களின் தனிச்சிறப்பு.
இந்திய சிற்பக்கலையானது மண் மற்றும் மரச்சிற்பங்கள், மர ஆலயங்கள் எனத்தொடங்கி செங்கல் கட்டுமானங்கள் வழியாக வளர்ந்து பின்னர் கல்லில் கலைவண்ணம் காண முற்பட்டு புடைப்புச் சிற்பம், குடைவரை, ஒற்றைக் கற்றளி மற்றும் பெரும் கற்றளிகள் என மேன்மேலும் வளர்ச்சியுற்று ஏறக்குறைய 10ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் அது (திராவிட, நாகர மற்றும் வேசர என அனைத்து பாணிகளிலும்) ஒரு உச்சத்தைத் தொடுகிறது. ஆயிரம் ஆண்டுகள் கழித்து இன்றும் உலகுக்குமுன் நமது கலைச்சாதனைகளாக நாம் மார்தட்டிக்கொள்ளும் அளவிற்கு காலம்கடந்து வானுயர்ந்து நிலைத்து நிற்பதற்கான காரணம், கட்டிடக்கலையின் வளச்சிப்போக்கில் அவை கற்றளிகளாக மாறியதுதான். இனியும் அவை ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிமிர்ந்து நின்று நம்மரபின் பெருமையை பறைசாற்றும் என்பதிலும் ஐயமில்லை.
ஆனால் மரச்சிற்பங்களிலிருந்து கல்லுக்கு மாறியபோது மரத்தில் எய்தப்பட்ட எல்லாச் சாத்தியங்களையும் கல்லுக்கு மாற்ற இயன்றதா என்றால், இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் அது சாத்தியமில்லை என்பதால்தான். மரத்தில் உளி விளையாட மரம் அனுமதிப்பது போல கல்லில் விளையாட கல் அனுமதிப்பதில்லை. ஆகவே கல் அளவிட்டு அனுமதித்து அருளியது எவ்வளவோ அதுவே அப்படைப்புகளின் எல்லைகளைத் தீர்மானித்தது. ஆனால் 11ஆம் நூற்றாண்டில் அளவின்றி அருளும் கலையன்னையின் அட்சயபாத்திரம் ஒன்று மேலைச் சாளுக்கியர்களின் வழியாக ஹொய்சாளர்களின் கைக்கு கிடைக்கப்பெறுகிறது. அதுதான் ‘soap stone’ எனப்படும் மாவுக்கல். இது Schist (cleave/split எனப் பொருள்படும், தமிழில் பிளவு எனலாம்) எனக் கூறப்படும் பாறை வகையைச் சார்ந்தது. கனிமங்கள் அடர்ந்து பல அடுக்குகளாக உருவாகும் பாறை இது. மென்மையான இக்கல்லை நீரில் ஊறவைக்கும்போது மேலும் மென்மையாகிறது. பின்னர் நமக்கு வேண்டிய வகையில் அது எளிதில் பிளவுறவும் செய்கிறது. அக்கல் சிற்பியின் உளி போன போக்கிலெல்லாம் தன்னை வழங்கிக்கொடுக்கவும் செய்யும். உலர்ந்தபின் மீண்டும் இறுகிவிடும். ஆகவே அது தன் மென்மையால் மரத்தைப்போல நுணுக்கமான வேலைப்பாடுகளை அனுமதித்தது, அதேநேரம் தன் உறுதியால் ஆயிரம் ஆண்டுகளாக நிலைகொள்ளவும் செய்தது. மேலும் தன் உள்ளொளியால் மரத்தைவிட பல மடங்கு மிளிரவும் செய்கிறது. இம்மாவுக்கல்லே இந்திய கட்டடக்கலையின் உச்சங்களில் ஒன்றைச் சாத்தியமாக்கியது.
அச்சிற்பங்களை உற்று நோக்கினால் ஒன்றை அறியலாம், இவ்வகைக் கற்சிற்பங்களில் உள்ள வேலைப்பாடுகள் மரவேலைப்பாட்டைவிட சற்றே விஞ்சியன என்று. இம்மாவுக்கல்லின் ஒரு அங்குலத்திலேயே கூட ஒரு முழுமையான சிற்பம் சாத்தியம். அச்சிற்பத்திற்கும் அணிகலன்கள் பூட்டி அழகு பார்த்திருக்கிறார்கள் சிற்பிகள். இத்தகைய நுண்ணிய அணிகலன்களை மரத்தில் உருவாக்குவதுகூட கடினம்தான். அவ்வாறே உருவாக்கினாலும்கூட அது கண்ணுக்கு புலப்படுவது அரிது, ஆனால் இந்த மிளிரும் கற்கள் தம் எல்லா நுணுக்கங்களையும் தெளிவாக வெளிப்படுத்தவும் செய்கின்றன. ஒருவேளை விஷ்ணுபுரத்தின் ஞான சபையில் சிற்பிகள் கூடியிருப்பின் ராஜராஜ பெருந்தச்சன் ‘உளியைத் தாங்கும் கல்லே சிற்பமாகும்’ எனக்கூற, அதனை போசள நாட்டு மலித்தம்மனோ ‘ஊசிநுனி தாங்கும் கல்லையும்கூட சிற்பமாக்குவேன்’ என்று வாதில் வென்றிருப்பாரோ!.
ஹொய்சாளக் கட்டிடக்கலையின் தனித்தன்மைகள்
1. ஒட்டு மொத்த ஆலய அமைப்புமே நட்சத்திர வடிவிலானது.
2. ‘ஜெகதி’ என்று கூறப்படும் ஆலயத்தின் ‘உபபீடம் (அடித்தளத்திற்குக் கீழே உள்ள பகுதி)’ தொட்டே இந்த நட்சத்திர அமைப்பு தொடங்கி விடுகிறது.
3. ‘ஜெகதி/ உபபீடம்’ நன்கு உயரமானதாகவும் ஆலயத்தின் வெளிப்புறம் நோக்கி நீண்டு அகலமானதாகவும் காணப்படுகிறது. ஆகவே அதன்மீது ஏறி வலம் வந்து நம்மால் ஆலயச் சிற்பங்களைக் கண்டு ரசிக்க இயலும்.
4. இந்த உபபீடத்தின் மீது ‘அதிஷ்டானம்’ என்னும் அடித்தளப் பகுதி அமைந்துள்ளது. இது பல வரி/ பட்டைகளாக பிரிக்கப்பட்டு அவற்றில் ஒவ்வொன்றிலும் நுண்மையான வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவ்வரிகளை ‘பட்டிகைகள்’ என்றும் அழைக்கிறார்கள்.
5. அதிஷ்டானத்தின் கடைசி அடுக்கு ‘கக்ஷாசனம்’ எனப்படுகிறது. இது கேரள வீடுகளில் வெளித்திண்ணையில் நமது கைகளின் கச்சப்பகுதியை வைத்துக்கொண்டு அமர ஏதுவாக வெளிப்புறம் நீட்டி அமைக்கப்பட்டிருக்கும் மரவேலைப்பாடு போன்றது. இருப்பினும் இந்த கக்ஷாசனங்களில் நாம் யாரும் சென்று அமர்ந்து கொள்ள இயலாது!. கலையழகிற்காக அமைக்கப்பட்டவை. பெரும்பாலும் அவை மிகச் சிறியவை.
6. இந்த அடித்தளத்தின் மீதுதான் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. ‘கருவறை (கர்ப க்ருஹம்)’யை ஒட்டி ‘அந்தராளம் (‘சுகநாசி அல்லது கபிலி’ என்றும் அழைக்கிறார்கள்)’ எனப்படும் பகுதியும் அமைந்துள்ளது. இந்த சுகநாசியானது கருவறையையும் அதன் முன்பிலுள்ள மண்டபத்தையும் இணைக்கிறது.
7. சுகநாசியை ஒட்டியுள்ள இந்த மண்டபத்தை நமது அர்த்தமண்டபத்திற்கு இணையாகக் கொள்ளலாம். இதனை ‘நவரங்கா’ என்று அழைக்கிறார்கள். நவரங்கத்தின் நடுவில் தரையில் வட்ட வடிவிலான ஓர் ஆடல் மேடையும் காணப்படுகிறது.
8. நவரங்க மண்டபத்தின் விதானங்களில் (கூரைகளில்) அவற்றைக் குடைந்து செய்யப்பட்டது போன்ற பல அடுக்குகளினாலான நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய குவைமாட அமைப் பு காணப்படுகின்றது.
9. நவரங்க மண்டபத்திற்கு முன்புறமாக மற்றொரு மண்டபம் காணப்படுகிறது, அதற்கு ‘முகமண்டபம் / ரங்க மண்டபம்’ என்று பெயர்.
10. இம்மண்டபங்களில் தூண்கள் காணப்படுகின்றன. இத்தூண்கள் வட்ட வடிவிலானவை. பல்வேறு அளவிலான வளையங்களை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைத்தாற் போல் அமைக்கப்பட்டு பல நுணுக்கமான வேலைப்பாடுகளையும் கொண்டுள்ளன. இவற்றை ‘ஸ்ரீகாரத் தூண்கள்’ என்றும் அழைக்கிறார்கள்.
11. முகமண்டபத்தின் சுவர்ப்பகுதிகள் (பாத வர்க்கம்/ பித்தி என்றும் அழைப்பர்) பெரும்பாலும் பல அடுக்குகளிலான காற்றோட்டத் துளைகளைக் கொண்டு காணப்படுகின்றன. இவற்றை சாளரம் என்ற பொருளில் ‘ஜலந்தரா’ என்கிறார்கள். சில ஆலயங்களில் சுவர்களின்றி இம்மண்டபம் திறந்த வெளியாகவும் இருப்பது உண்டு.
12. கருவறை, சுகநாசி மற்றும் நவரங்கப் பகுதிகளில் சுவர்களின் வெளிப்புறத்தில் சைவ, வைணவ மற்றும் சாக்த தெய்வங்களின் சிற்பங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இப்பகுதிகளின் சுவர்கள் நட்சத்திர வடிவில் மடிந்து மடிந்து செல்லக்கூடியனவாக உள்ளன.
14. கருவறைக்கு மேலேயுள்ள விமானமும் நட்சத்திர வடிவில் பல அடுக்குகளாக மையம் நோக்கிச் சென்று கலசத்தில் முடிகின்றது.
15. ஹொய்சாளக் கலையின் மற்றொரு சிறப்பான தனியம்சம் என்பது சாலபஞ்சிகா/ சிலாபாலிகா/ மதனிகா எனப்படும் சிற்பங்கள். இவை கூரையையும் தூண் அல்லது சுவர் பகுதியையும் இணைக்குமாறு 45 டிகிரி சரிவில் பொருத்தப்பட்டிருப்பவை. இவை பெரும்பாலும் பெண் சிற்பங்கள். இவற்றின் வேலைப்பாடுகளும் அழகும் அமைக்கப்பட்டிருக்கும் விதமும் வியக்க வைப்பவை.
16. இவ்வாலயங்களின் மற்றொரு தனிச்சிறப்பு கருவறை எப்பொழுதும் ஒற்றைக் கருவறையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது. ஒன்று முதல் ஐந்து வரையிலான கருவறைகளைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. எல்லாக் கருவறைகளும் அவற்றின் சுகநாசி/அந்தராளம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ நவரங்க மண்டபத்துடன் இணைகின்றன. கருவறையின் எண்ணிக்கையைப் பொறுத்து இக்கோவில்களை பின்வருமாறு வகைபிரித்தும் அழைக்கலாம்.
அ. 1 கருவறை- ஏககூட
ஆ. 2 கருவறைகள்- த்விகூட
இ. 3 கருவறைகள்- திரிகூட
ஈ. 4 கருவறைகள்- சதுஷ்கூட
உ. 5 கருவறைகள்- பஞ்சகூட
********************************************************************
தலக்காடு

‘கங்கைபாடியும் தடிகைபாடியும் நுளம்பபாடியும் குடமலைநாடும்’
எங்களின் முதல்நாள் பயணம் ‘தலக்காடு’ என்னும் தலத்தை நோக்கித் தொடங்கியது. தலக்காடு வரலாற்றில் பல முக்கியமான நிகழ்வுகளையும் தொன்மங்களையும் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் அரிதான கலைச்செல்வங்களின் புதையல் (புதையுண்ட) நகரமுமாகும். ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தியில் கூறப்படும் கர்நாடகவெற்றிகளில் ஒன்றான கங்கைபாடி நாட்டின் தலைநகரம்தான் தலக்காடு. இது பொ.யு நான்காம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை கர்நாடகத்தின் தென்பகுதியை ஆண்டு வந்த மேற்கு கங்கர்களின் தலைநகராக விளங்கியது (இவர்களின் தொடக்ககாலத் தலைநகர் ‘குவளாலபுரா’ என்றழைக்கப்பட்ட இன்றைய கோலார் நகரம்; தங்க வயலின் முதல் சொந்தக்காரர்கள்!). சங்கம் மருவிய காலகட்டத்தில் தமிழகத்தை ஆண்ட களப்பிரர்கள் இவர்களாக இருக்கக்கூடும் என்ற கருதுகோளும் உண்டு. பொயு 1004 வாக்கில் ராஜராஜ சோழன் இவர்களை வென்று கங்கைபாடியை சோழப்பேரரசின் ஒரு பகுதியாக ஆக்கினான். பின்னர் ஹொய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தனன் 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழர்களை வென்று இப்பகுதியை தனது ஆளுகைக்குக்கீழ் கொண்டு வருகிறான்.
இன்று பல்வேறு ஆலயங்களைக் கொண்டுள்ள இந்நகரத்திற்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்தால் இவற்றில் பெரும்பாலானவற்றை கண்டிருக்க முடியாது. ஏனெனில் 1500 ஆண்டுகளுக்கும்மேல் பழமை வாய்ந்த பல பேரரசுகளைக் கண்ட இந்நகரம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு மெல்ல மெல்ல மணல்குன்றுகளால் முழுதும் மூடப்பட்டது. இதன் பின்னணியில் பல தொன்மங்கள் உள்ளன. மிகவும் பிரசித்தி பெற்றது ‘ராணி அலமேலம்மா’வின் கதை. விஜயநகர அரசின் கீழ் இருந்த சிற்றரசன் ஒருவனின் மனைவியான அலமேலம்மா காவிரியாற்றைக் கடக்கும் ஒரு தருணத்தில் அவளிடமிருந்த நகைகளைக் கொள்ளையடிக்கும் பொருட்டு மைசூர் மன்னன் முயன்றதாகவும் அதைத் தவிர்க்க அலமேலம்மா காவிரியாற்றில் குதித்து மறைந்ததாகவும், அவள் இறக்கும்போது ‘இந்த நகரம் மண்மூடி போகட்டும் மைசூர் அரசருக்கு வாரிசு இல்லாமல் ஆகட்டும்’ என சபித்துவிட்டு இறந்ததாகவும் கூறுகிறது அத்தொன்மம்.
வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது இந்நகரை மணல் மூடியதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆய்வாளர்கள் முன்வைக்கும் கருதுகோளானது விஜயநகர அரசின் காலத்தில் இந்நகரின் வடக்குபுறமாக காவிரியாற்றின் குறுக்கே கட்டிய ஒரு அணையால் காவிரியாற்றின் மணல் உலர்ந்தது என்றும், பின்னர் அது காற்றில் அடித்துச்செல்லப்பட்டு, மெல்ல மெல்ல சுமார் 200 ஆண்டுகாலமாக இந்நகரின் மீது படிந்து முழுமையாக மூடியிருக்கலாம் என்பதும். இக்காரணத்தால் மக்களும் இந்நகரை கைவிட்டு வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து இருக்கக்கூடும் என்கிறார்கள். 1991 ஆம் ஆண்டு முதல் இந்நகரம் அகழந்தெடுக்கப்பட்டது. ஆறாம் நூற்றாண்டு தொடங்கி 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகாலங்களில் கட்டப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நெடுங்காலம் தலைநகராய் வளர்ந்துயர்ந்து பின்னர் மணற்காடாய் பூத்துலைந்து இன்று தன் கணுக்களில் மெல்ல சிலிர்த்து ஒரு சிற்றூராய் முளைவிட்டுக் கொண்டிருந்தது தலக்காடு. நாம் காணவிருப்பன அத்தலத்தின் இரு முதன்மையான ஆலயங்களான வைத்தியநாதேஸ்வரா மற்றும் கீர்த்தி நாராயணா ஆலய ங்களை.
முதலில் வைத்தியநாதேஸ்வரா கோவிலுக்குச் சென்றோம். இவ்வாலயம் காலத்தால் பழமையானது, மேலும் இது மணற்குன்றுகளால் முழுமையாக மூடப்படாமல் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தும் வந்தது. இவ்வாலயம் கங்கர்கள், சோழர்கள் மற்றும் ஹொய்சாளர்கள் ஆகியோரின் மூன்று கலைமரபுகளையும் உள்ளடக்கிய ஒரு அரிய பொக்கிஷம் எனலாம். கோவிலுக்குள் நுழையும்போதே நமக்கு ஒரு தமிழகக்கோயிலில் நுழைவதுபோன்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இதன் பெரும்பகுதி சோழர்களால் கட்டப்பட்ட கிரானைட் கட்டுமானம். முகப்பில் நின்ற இரண்டு துவாரபாலகர் சிற்பங்கள் பிரம்மாண்டமானவை. துவாரபாலகர்களின் வயிறு காளையின் முகத்தைப் போன்ற அமைப்பில் வடித்திருந்தது தனிச்சிறப்பு.

கோயிலினுள்ளே மகாமண்டபமும் தூண்களும் தமிழகத்தின் திராவிடபாணி கட்டிடக்கலையின் அமைப்பிலேயே காணப்பட்டன. கருவறையில் சிவலிங்கத்திற்கு பின்புறமாக உலோகத்தால் செய்யப்பட்ட சிவனின் கழுத்து வரையிலான உருவம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அக்கோவிலின் அர்ச்சகர் திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்டவர். தீபாராதனைக்குப் பிறகு தலபுராணத்தையும் இதன் மற்றொரு பெயரான கஜாரண்யம் என்பதற்கான புராணக்கதையையும் கூறினார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு நடைபெறும் பஞ்சலிங்க வழிபாடு குறித்தும், அந்நாளில் இங்கு கூடும் லட்சக்கணக்கான பக்தர் கூட்டத்தைப் பற்றியும் விவரித்தார். கருவறையில் ஒரு புற்று இருப்பதாகவும் அங்கு தினம் சேரும் புற்றுமண்ணை வைத்தீஸ்வரனின் மருந்துபிரசாதமாக அதிகாலையில் வரும் பக்தர்களுக்கு அளிப்பதாகவும் கூறினார்.

பிறகு ஆலயத்தை வலம்வரத் தொடங்கியபோதுதான் இக்கோவிலின் கட்டிடக்கலை அமைப்பு மாறத்தொடங்குவதை உணரமுடிந்தது. வெளிப்புறம் ஏறக்குறைய ஹொய்சாளக் கலை அமைப்பின் சாயல் கொண்டதாகவே இருந்தது. உபபீடம் அதிஷ்டானம் என அனைத்தும் நட்சத்திர வடிவில் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இதனை முழுமையான ஹொய்சாளக் கலையமைப்பு என்றும் கூறிவிடவும் இயலாது. அங்குள்ள உபபீடம் ஹொய்சாள ஆலயங்களில் காணப்படுவதைப்போல உயரமானதாகவும் அகன்றதாகவும் இல்லை. அதிஷ்டானத்தில் கஜவரி போன்ற வேலைப்பாடுகள் எதுவுமில்லை. பாதவர்க்கப் (பித்தி/ சுவர்) பகுதியில் நுணுக்கமான வேலைப்பாடுகள் இருப்பினும் ஹொய்சாளக் கோவில்களில் உள்ளது போலலலாமல் இப்பகுதியில் சிற்பங்கள் குறைவாகவே காணப்பட்டன. மேலும் பிரஸ்தாரத்தின் (கூரை) கபோதங்கள் திராவிடபாணி அமைப்பையே கொண்டிருந்தன. கபோதத்திலிருந்து வெளிநீட்டியவாறு ஒரு நாகத்தின் உருவமும் அதிலிருந்து இருவளையங்களாலான சங்கிலி ஒன்றும் கல்லில் வடிக்கப்பட்டிருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. திராவிடபாணி கட்டிடக்கலையிலிருந்து ஹொய்சாளர்களின் வேசரபாணி கட்டிடக்கலை வளர்ந்து வரும் விதத்தை அல்லது அவை இரண்டும் முயங்கி ஒருசேர அமைந்திருக்கும் அழகையும் இக்கோவிலில் காணலாம். ஹொய்சாளக் கலைவெளிக்குள் கண்ணைக்கட்டி திடீரென காட்டில் விட்டது போலல்லாமல் அக்கலைக்கு நம்கண்களை மெல்லமெல்ல பழக்கி கொண்டுச்செல்வதற்கு நாம் தொடங்க வேண்டிய முதல் ஆலயம் இதுவென்றே தோன்றியது. இதனை நன்கு திட்டமிட்ட ஆசிரியர் ஜெயக்குமாருக்கு நன்றி!.

அடுத்ததாக வைத்தியநாதேஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே உள்ள கீர்த்தி நாராயணர் ஆலயத்திற்குச் சென்றோம். விஷ்ணுவர்தனன் சோழர்களின் மீதான தலக்காடு வெற்றியின் சின்னமாக அவன் வென்ற இடத்திலேயே நிறுவிய ஆலயம்தான் இது. இவ்வெற்றியின் அடையாளமாக மேலும் 4 ஆலயங்களை நிறுவியுள்ளான். பேலூரில் விஜய நாராயணா ஆலயம் (இப்பொழுது சென்னகேசவ ஆலயம் எனப்படுகிறது), மேல்கோட்டையில் செலுவ நாராயணா ஆலயம், கடாக்கில் வீர நாராயணா ஆலயம் மற்றும் தொண்டனூரில் நம்பி நாராயணா ஆலயம் ஆகியவை மற்றவை. மணல் மூடியிருந்த இவ்வாலயம் அகழ்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இந்தியத் தொல்லியல் துறையால் மறுசீரமைப்பு செய்து மீட்டுக் கட்டப்பட்டுள்ளது.

இதில் ஹொய்சாளர்களின் கலையழகு மேலும் துலங்கி வருவதைக் காணலாம். உபபீடம் நன்றாக உயர்ந்தும் அகலமானதாகவும் உள்ளது. மகாமண்டபத்தில் உள்ள தூண்கள் ஹொய்சாளக் கலையமைதியில் ஸ்ரீகாரத் தூண்களாக உள்ளன. இவற்றில் கன்னடம் மற்றும் தமிழ் (சோழர்கால எழுத்தமைதி) கல்வெட்டுகளைக் காணமுடிந்தது. ஆனால் இக்கோவிலை ஹொய்சாளர்களின் தொடக்ககால முயற்சியாகவே கொள்ள முடியும். அதிஷ்டானப் பகுதியில் வேலைப்பாடுகள் மிகவும் குறைவாகவே இருந்தன. விதானத்திலும் பொதுவாக ஹொய்சாளக் கோயில்களில் காணப்படுவது போன்ற நுணுக்கமான வேலைப்பாடுகள் பெரிதுமின்றி காணப்பட்டது. ஆனால் அவர்களின் கலைமரபு அடுத்த படிநிலையைத் தொட்டதற்கான சான்றாக இக்கோவிலைக் கொள்ளலாம். எனவே இயல்பாகவே இரண்டாவதாகக் காணவேண்டிய கோவிலும் இதுவே என்று தோன்றியது.

இக்கோவிலைச் சுற்றி ஒரு சிறுகாடு எனச் சொல்லத்தக்க அளவுக்கு குன்றுகளும் பெருமரங்களும் நின்றிருந்தன. காவிரிக்கரையோரம் அமைந்த இந்த மருதநிலத்தின் நடுவே ஒரு துண்டு குறிஞ்சி நிலம் நின்றது போல இருந்தது. அம்மரங்களின் வேர்கள் அலையாத்திக்காடுகளில் உள்ளது போல தெள்ளத்தெளிவாக வெளிப்புறம் காணுமாறு இருந்தன. ஏனெனில் அவை நின்றிருப்பது மண் மீதல்ல, மணல்குவைகளின்மீது. இன்னும் அகழ்ந்தெடுக்கப்படாத மணற்குன்றுகளா?. இவற்றுக்கடியில் உறையும் கலைச்செல்வங்கள் எத்தனையோ?, கோவில்கள் மட்டுமல்ல சமண பசதிகளும் தீர்த்தங்கரர்களும் கூட இருக்கலாம் (சரவணபெளகொளாவில் வானளாவி நிற்கும் கோமதீஸ்வரரை நிறுவிய கங்கர்கள், தமது தலைநகரில் என்னென்ன வைத்திருப்பார்களோ?).

ஆயிரம் ஆண்டுகால பரபரப்புக்கும்
முந்நூறு ஆண்டுகால நீள்உறக்கத்திற்கும் பிறகு
மெல்ல சோம்பல் முறித்துத் துயில் கலைகிறாய்
உனது தடித்த மணற்போர்வையிலிருந்து
வெளிநீட்டிய சிறுவிரல்கள் புனைந்த
அணிகள்தானோ இவ்வாலயங்கள்?
பையத் துயிலெழுக தலைமகனே
அவசரமொன்றுமில்லை
உனது மணற்கடிகையில் மட்டும்
நாழிகை ஒவ்வொன்றும்
ஒரு நூற்றாண்டு!.
படங்கள் உதவி; சேதுராமன் சீனிவாசன்



