
நாம் அறியாத, நாம் புழங்காத எத்தனையோ வார்த்தைகள் நம்மிடையே நடமாடிக்கொண்டுதான் இருக்கின்றன. சாதிவாரியாகவோ, வட்டாரவாரியாகவோ, ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்குமாய்கூட சொற்கள் புதிதாய் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. சிலர் பேசுவதைப் புரிந்துகொள்ளவே கடினமாக இருக்கும். வட்டார வழக்கில் வேகமாகப் பேசுகையில் அந்தப் பகுதியைச் சாராதவர்களுக்கு விளங்கிக்கொள்ளச் சிரமம்தான். சில கதைகளை வாசிக்கையில் இப்படி ஒரு சொல் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டதுண்டு. அப்படியான, கேள்விப்பட்டிராத ஒரு புதிய சொல்தான் மண்டாடி. மீன்பிடிப் படகின் தலைமை ஏற்கும் நபரை மண்டாடி என்பார்கள் என்று தேடி அறிய முடிந்தது. பொதுவாகவே விளையாட்டுகள் குறித்த படங்கள் நமக்குள் ஆர்வத்தைத் தூண்டி வெற்றி பெற்றுவிடும். ரேக்ளா ரேஸ், கோகோ, ஹாக்கி, கிரிக்கெட், குத்துச்சண்டை, கபடி வரிசையில் படகுப் போட்டி – மண்டாடி.
கொஞ்சம் காதல், நிறையப் போட்டி, சூரி கதாநாயகன் என்பதைத் தாண்டி கடல் சார்ந்த கதை என்பது இன்னொரு ஈர்ப்பு. சினிமா துறையில் பெரிதாகக் கடல் வாழ்க்கை பேசப்படாத நிலையில், படகு போட்டியை மையப்படுத்திய மண்டாடி, வேகத்துடன் இருந்தது. மீன் பிடித்தல், விற்பனை, ஏலம், கருவாடு போன்ற கடற்கரை வாழ்வு சார்ந்த விடயங்கள் பெரிதாகக் காண்பிக்கப்படவில்லை. மீன் பிடித்தல்கூட பெரிதாகப் பதிவாக்கப்படவில்லைதான். படம் பேசுவது என்னவோ படகுப் போட்டியும் அதனைச் சார்ந்த மரியாதை, அதன் நிமித்தம் கிட்டும் தொழில், அதனால் உண்டாகும் வாழ்க்கை மாற்றம் என்பதாகத்தான் இருந்தது. நடிகர் தேர்வு எதுவுமே குறை சொல்ல வாய்ப்பற்று அருமையாக இருந்தது. புதுமுக நடிகர்கள் உட்பட எல்லோரும் சிறப்பாகச் செய்திருக்கின்றார்கள். கதையின் நாயகனாக வரும் சூரியும், வில்லனாக வரும் சுஹாஸும் பாத்திரத்தோடு ஒன்றி நன்றாக நடித்திருக்கிறார்கள். சாட்டை புலியாக வரும் சுஹாஸ் வில்லனுக்கான – கடல்புரத்து வில்லனுக்கான – பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். அவரின் தோற்றம் மட்டுமல்லாது, குரல், நடிப்பு, சாண்டைக் காட்சிகள், பயம் கலந்த வன்மத்தோடு சூரியைப் பார்ப்பது எல்லாமே சிறப்பு. தமிழில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கட்டும். அவருக்கு மட்டுமல்லாது சூரியின் திரைப்பயணத்திற்கும் இப்படம் மைல்கல்லாக அமைந்திருக்கிறது. எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும் தோரணையில் டீசண்டாக வந்து போகிறார் சத்யராஜ்.
மீனவர்கள் வாழ்க்கை எத்தனை போராட்டம் மிகுந்தவை, சிக்கல்கள் நிறைந்தவை என்று நாம் அறிவோம். கடல் எத்தனைக்கெத்தனை அழகானதோ அத்தனைக்கு ஆபத்தானதும்கூட. கடலுக்குச் சென்றால் மீண்டும் கரைக்கு வந்தால்தான் உண்டு. நிச்சயமற்ற வாழ்க்கைதான். சத்யராஜ் கூறுவது போல, கடல் அன்னை தன் பிள்ளைகளைக் கைவிடாமல் காக்கிறாள். கரையில் வாழும் உயிரினங்களைக் காட்டிலும் வித்தியாசமான பல உயிரினங்கள் கடலுக்குள் வசிக்கின்றன. கடல் சுழி, சூறாவளிக் காற்று, சுனாமி என்று இயற்கையின் அழிவுகளும் அதிகம்தான். இதையெல்லாம் கடந்துதான் மீனவர்களின் வாழ்க்கை அமைகிறது. கப்பல்களின் கேப்டன் போல மீன்பிடிப் படகுகளுக்கு மண்டாடி இருக்கிறார்.
மண்டாடியாக சூரியின் பங்கை இன்னும் அதிகமாய் காண்பித்து இருக்கலாம். சூழ்நிலை காரணமாகத் தன் சுயம் மறைத்து சூரி நீச்சல்குளத்தில் வேலை செய்பவராய் அறிமுகமாகிறார். பாட்ஷா படத்தில் வரும் பிளாஷ்பேக் போல அதன்பின்னரே அவரது வாழ்க்கை வரலாறு வருகிறது. கதாநாயகனுக்கு என்று பெரிதான அலட்டல் இல்லாமல் இயல்பாகக் காண்பித்து இருப்பது அழகு. கொஞ்சம் தன்னை மீறிய காட்சிகளாக அமைந்துவிட்ட நங்கூரச் சண்டை மட்டுமே சிறுமிகை. அத்தனை கணம் கூடிய இரும்பை தூக்கிச் சுழற்ற இயலுமா என்று தெரியவில்லை. இருபது வருடங்கள் கடலைக் காணாமல் குற்றவுணர்வோடு வாழ்கிறார். ஊருக்குத் திரும்பி மாரிக்காக நிற்கும் காளி மிளிர்கிறார். பழைய காதலியை, நண்பனின் மனைவியைக் காணும் இடத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார். படகுப் போட்டிக்குச் செல்ல யோசிப்பவர்க்கு ஏஞ்சலின் வார்த்தைகள் ஊக்கமாய் அமைகிறது. சமயத்தில் உன்னால் முடியும் என்ற நம்பிக்கை தரும் சொற்கள்தான் நமக்குத் தேவையாய் இருக்கின்றன. காதல் காட்சிகள், பாடல்கள், வட்டார வழக்கு ஆகியவற்றில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ‘உசுரே நீதான் புள்ள’ பாடல் மென்மை.
என்னதான் பூசல்களைப் பரப்பிவிட்டாலும் சில ஊர்களில் இசுலாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் உள்ள பந்தம் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடும். ஊர்ப்பஞ்சாயத்தில் ஒருவர் சொல்வதை மற்றவர் அனுசரிப்பார்கள். நோம்புக் கஞ்சியும் பொங்கல் குழம்பும் பகிர்ந்துண்ணப்படும். எங்கள் பக்கம் பள்ளிவாசலில் சீர் தட்ட, தண்ணீர் எறிய என்று எல்லா மதத்தினரும் செல்வார்கள். பாத்திமா பள்ளிவாசல், ஆத்தங்கரை பள்ளிவாசல் எல்லோருக்குமானது. ஆடு, மாடு காணாமல் போனால் பாத்திமா பள்ளிவாசலில் நேர்ச்சை வைப்பார்கள். என் கணவரின் வீட்டில் பரம்பரை பரம்பரையாக நட்பு பாராட்டும் இசுலாமியக் குடும்பம் இல்லாமல் எந்தக் காரியங்களும் நடப்பதில்லை. எனக்கு மிகுந்த ஆச்சரியமளித்த விடயம், மாமனார் காலம் தாண்டி பிள்ளைகளும் அந்தப் பந்தத்தை மதித்துக்கொண்டு செல்வதுதான். என் பிள்ளைகளுக்கும் அதைத்தான் கற்றுத்தர வேண்டும். ராமநாதபுர மாவட்டத்தில் நிஜத்தில் இசுலாமிய மூத்த பெண்ணின் வார்த்தைகளில் பஞ்சாயத்து நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் காண்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. வெட்டிக்கொள்ளும் அளவில் பகைமை பாராட்டி நின்றாலும் தர்காவிற்கான மரியாதை, அம்மூதாட்டியின் சொல்லை மதித்து நிற்கிறார்கள். முக்கியமாக ஒரு பெண் சொல்வதைக் கேட்டு ஒரு கூட்டம் நடப்பது ரசிக்க வைத்தது.
நல்ல நண்பர்களாய் இருப்பவர்களே ஆகக்கொடிய பகையாய் மாறுகிறார்கள் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு இப்படம். சூரி தன் மெருகேறிய உடலாலும் மனதாலும் பாய்மரமேற்றிய படகாய் சுழலை மீறி திரையில் ஜொலிக்கிறார். ஒரு மனிதனின் விடாமுயற்சியும் நம்பிக்கையும் உழைப்பும் வீண் போவதில்லை. சூரியின் பரிமாணம் எல்லோருக்குமான ஊக்கம். மிகச்சிறப்பாகப் பொருந்தியிருக்கிறார்; நடித்தும் இருக்கிறார். பழைய லுங்கியைக் கட்டி இயல்பாக நடித்த சூரி, பனியனை மாற்ற மறந்துவிட்டார். கொஞ்சம் அதிகப்படியான நோட்டம்தான் இருந்தாலும் நாயகியின் உடை, மற்றவர்களின் உடை நடை, ஏன் ஜெர்ஸியில் உபயம் பெயர் வரை கவனம் செலுத்தி இத்தனை மெனக்கெட்டவர்கள் ஒரு பழைய பனியனை மாட்டிவிட்டிருக்கலாம்தானே. புது பனியன் வாங்கமாட்டார்களா என்று நினைக்கலாம். ஆனால் அதைக் கடலுக்குப் பயன்படுத்த மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
கூடவே இருந்தும் நண்பனின் தீய குணத்தை அறியாமல் அவனுக்காக நிற்கிறார், கர்ணன் நட்பிற்காய் நின்ற எடுத்துக்காட்டு போலவே. அப்படியே தோழமைக்காக விருப்பம் இல்லாவிட்டாலும் படகு போட்டியில் அவனுடன் நிற்கிறார். விளையாட்டு ஒன்றுதான் சாதி பார்ப்பதில்லை என்பார்கள். நாம் சிறு வயதில் தெருவில் விளையாடுகையில் சாதி பார்த்ததில்லை. ஆனால் வளர்ந்த பிள்ளைகள் இடையே சாதி எப்படியோ புகுந்துவிடுகிறது. ஒரு காட்சியில் தந்தையின் உதாசீனத்தைப் புறந்தள்ளி, “என் முன்னாடியே என் நண்பன பேசறீங்களா” என்று கேட்பது ஆறுதல்.
கதாநாயகியும் இளமையில் காதலோடும், நடைமுறையில் இயல்பாகவும் நன்றாக நடித்திருக்கிறார். நீல நிலவே – ஆர் டி எக்ஸ் படப்பாட்டில் பார்த்த பெண்தானா என்று ஆச்சரியமாக இருந்தது. அத்தனை வருடங்கள் கழித்தும் என்ன உண்மை என்று அறியாமல் சூரியை பழித்தலைவது மட்டுமே நெருடல். கணவரோ, வேறு யாருமோ அதை விளக்க முற்படவே இல்லையா. கோபத்தில் தட்டை விசிறி கத்தும் சிங்காரத்திடம் ஒருவேளை காளியைக் குறித்து அவள் பேசியிருக்கவில்லையோ என்னவோ. தாயின் காதலை அறிந்த மாரியை ஏஞ்சல் -அவன் அம்மா- கையாளும் விதமும் பதில் கூறிப் புரிய வைக்கும் விதமும் அருமை. காதலித்தவனை எத்தனை பெண்கள் கைப்பிடிக்கிறார்கள் என்பது எல்லாக் காலக்கட்டத்திற்குமான கேள்வி. ஒருமுறை பூக்கும் ரோஜா போன்ற வசனங்கள் நடைமுறைக்கு ஒவ்வாததென அறிந்துபட்ட காலத்தில்தானே வாழ்கிறோம். ஒருவருக்கு நேர்மையாய் இருப்பதுதானே வாழ்க்கை – காதல். தான் காதலித்தாலும்கூட, அப்பாவின் காதலை அறியும்போது வராத திடுக்கிடல், அம்மாவின் காதலை அறிகையில் வருகிறது. அதனை எடுத்துக்கொள்ளாத மனநிலையே இன்னும் இருக்கிறது. ஆனால் காளி, ஏஞ்சல் காதலைக் கண்ணால் கண்டிருந்தும்கூட புரிதலோடு அழகாய் குடும்பம் நடத்தும் சிங்காரம் கதாபாத்திரம் அருமை. அதற்கும் காளியுடன் ஒப்புக் கேட்டதை மனைவியிடம் கூறுகையில் மிளிர்கிறார், மன்னிப்பு கேட்கையில் காளி உயர்ந்து நிற்பதைப் போலவே. என்னை ஏமாற்றிவிட்டு இன்னொருத்தனைக் கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறாயே என்று சாடாமல் அவளின் மன்னிப்பு ஒன்றே இந்த ஜென்மத்திற்குப் போதும் என்று நினைக்கிறார். சாட்டைப் புலியின் குரலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுபோல சிங்காரத்தின் குரலுக்கும் மெனக்கெட்டிருக்கலாம். ஊரின் பாஷையில் பேசக் கொஞ்சம் வீட்டுப்பாடம் தேவைதானே.
சுழலில் சிக்கித் தப்பும் காட்சி சினிமாத்தனமாக இருந்தாலும் ரசிக்க முடிந்தது. இப்படிக் கற்பனைக்கும் எதார்த்தத்திற்கும் அப்பாற்பட்ட காட்சிகளை ‘பாகுபலி’ வகைப் படங்களில் ரசிக்கத்தானே செய்தோம். கதையோடு ஒன்றிக் காண்கையில் அத்தனை தனியாகத் தெரியவில்லை. மாரியை ஏஞ்சல் என்ற பச்சை குத்திய கை கொண்டு காளி பிடிக்கும் காட்சியும் அழகு. அப்படிப்பட்ட கடற்சுழியோடு என்னதான் பெயரெடுக்க, பகை தீர்க்க என்று இருந்தாலும் இளைஞர்களின் உயிரைப் பணயம் வைத்து அருகே செல்வது கூட்டுத் தற்கொலைக்குச் சமானம்தானே. அப்படி ஆகப்பட்ட செயலைக் கதைநாயகன் சூரி செய்வதும், பின்னர் காற்றின் உதவியோடும், கற்றுக்கொடுத்தவரின் குரல் பி.ஜி.எம்மோடு தப்புவதும் ஆகச்சிறந்த யோகம் என்று மட்டுமே கொள்ள முடியும். ஜெயித்தால் மண்டாடிகள் தொடர்ந்து தலைமைதாங்கிப் போட்டியிடலாம் என்ற கவுரவம் கிட்டினாலும் இழந்தால் ஆறு பேரின் உயிரல்லவா என்று நினையாமல் இருக்க முடியவில்லை. மேலும் போட்டியின் சட்டமென ஓர் அறிவிப்பைச் செய்தபின் அதை மீறி ஆபத்து நிறைந்த வழியைத் தேர்ந்தெடுத்துச் சென்றால் போட்டியிலிருந்து விலக்கப்படமாட்டாரா? சதி செய்து போட்டியிடும் சாட்டை புலி முதலாவதாக வந்தாலும் எப்படி ஒத்துக்கொள்ளப்படுவார்? என்னருகே இருந்த தோழியின் எட்டு வயதுக் குழந்தை, படத்தைக் குறித்து உரையாடியவண்ணமிருந்தான். அவனிடமும் அதையேதான் கூறினேன். ஜெயிக்க உயிரைப் பணயம் வைத்து இவ்வளவு மெனக்கெட வேண்டாம். வெற்றி தோல்வி வாழ்வில் சகஜம்தான். ஒரு கட்டத்தில் எதையும் தாங்கும் மனநிலை வேண்டுமென்றேன். சரிதான் என்று ஒப்புக்கொண்டான்.
சாட்டை புலி வீட்டு உற்சவத்தில் அவர் மகனை ஒற்றை ஆளாய் மாரி குத்த வருவதும் அபத்தமாகத்தான் பட்டது. கதை தேர்வு, கதாபாத்திரத் தேர்வு, அவர்களிடமிருந்து அருமையான நடிப்பைக் கொண்டு வந்த இயக்குநர் மதிமாறன், கேமராமேன் எல்லாமே இப்படத்தின் வெற்றிக்குக் காரணம். புதிய இயக்குநர் என்று சொல்வதற்கு வழியில்லாமல் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் மதிமாறன். விடுதலை 1இல் பணியாற்றியபோதே சூரியைக் கவனித்திருப்பார் போலும்.
நண்பனா, குருவா என்று சூரி அல்லாடும் காட்சிகள், வழியில்லாமல் போட்டிக்கு ஒத்துக்கொள்ளும் நிலை, அதனை மேல் முறையீடு செய்து தடுக்கும் வாத்தியார் சத்யராஜ், திருமணம் செய்துகொள்ளாமல் குற்றவுணர்வோடு நடமாடும் சூரியின் காதல், பிராயச்சித்தமென மாரியைக் காப்பாற்ற ஊருக்கு வருவது என்று நல்ல கோர்வையாய் செல்கிறது கதை. முளைப்பாரி, ஒயிலாட்டம் என்று கிராம பாணியிலான விழாவைக் காண்பித்திருப்பதும் அழகு. அழிந்து வரும் கலைகளை, பழக்கவழக்கங்களை இப்படி படத்தில் காண்கையில் அதனை ஒரு வரலாற்று, கலாச்சாரப் பதிவாகவே பார்க்கிறேன்.
சாட்டைப் புலியின் கழுத்தில் கயிறு சுற்று போடும்போது சூரி பழைய நட்பில் தண்ணீரில் பாய்வாரோ என்று நான் மட்டுமே யோசித்துத் தொலைத்தேன் போல. அத்தனை உயிரைப் பணயம் வைத்த போட்டி இல்லையா, ஆகையால் ஜெயிப்பதே பிரதானம் என்பதை என் தலையில் குட்டு வைத்துப் புரிந்துகொள்கிறேன்.
மொத்தத்தில் சமீபகாலங்களில் வந்த படங்களில் ரசித்துப் பார்க்க வைத்த நல்ல படம் மண்டாடி. கடல் சார்ந்த வட்டார வழக்கை, வாழ்க்கை முறையைப் பதிவு செய்திருக்கலாம்தான். ஆனாலும் குறை சொல்லப் பெரிதாக ஒன்றுமில்லாமல் பல விதங்களில் சிறப்பாக அமைந்த நல்ல படம். தியேட்டரில் காண்பது சிறப்பு, முக்கியமாய் கடல் காட்சிகளுக்காக. குழந்தைகளுடன் தைரியமாகப் பார்க்கக்கூடிய நல்ல திரைக்கதை கொண்ட படம் மண்டாடி. இயக்குநர் மதிமாறன், சூரி, சுஹாஸ் மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த வெற்றி தொடரட்டும். நல்ல படங்களுக்கான தேவையும் அவசியமும் எப்பொழுதும் இருக்கிறது. நன்றி!



