
ஆதிக்குயவனின் வேலை
உடலுக்குத் தேவையான
தலையைத் தேர்ந்தெடுப்பது
ஒன்றுக்கும் உதவாதது என்று
அந்தப் புத்தகங்களை
தீயிட்டு எரித்தாலும்
எனது மூளை மடிப்புகளில்
படிந்திருக்கின்றன அதன் வரிகள்
எனது கசப்பான
துன்ப விதையிலிருந்து
இனிப்பான மகிழ்ச்சிக்கனி
கிடைக்கட்டும்
துயரத்தின் ரேகை படியாத
உங்களது கரங்களால்
அக்கனிகளைத் தொடுங்கள்
எனது பூக்களைக் கண்டு
பூரிப்படையும் நீங்கள்
எனது வேர்களுக்கு
நன்றி சொல்வதில்லை
வெற்றி ஒரு போதை
அதுவரை உனக்கு சிறகிருக்காது
இப்போதோ பறந்து கொண்டிருப்பாய்
தோல்வி விஷம்
ஆனால் நீ உயிர்த்தெழுவாய்
பகலில் மனிதர்களாகவும்
இரவில் பேய்களாகவும் தான் அலைகிறார்கள்
இரவுகளின் கூத்து
பகலின் அட்டூழியங்களைப்
பொறுத்துக்கொள்ள வைக்கிறது
எனது சிறுவயதில்
நீண்டதொரு இலக்கு
எனக்கு இருந்தது
வாலிபத்தில் கம்யூனிச
சித்தாந்தம் என்னை ஈர்த்தது
மத்திம வயதில்
விட்டால் போதும் பெருமாளே
என்று இருக்கிறது…
*
நினைவின் ஆழத்திலிருந்து
எழும் அலைகள்
என்னை நிலைகுலைய வைத்துவிடுகின்றன
என் கைகள் சூம்பிப்போனவை அல்ல
எனது முகம் விகாரமானது அல்ல
இருந்தாலும் என்னை
இப்படித்தான் பிரதிபலிக்கின்றது
என் வீட்டு நிலைக்கண்ணாடி
அலுவலக ஏசி அறையை
திறந்தவுடன்
விதவிதமான பர்ஃபூம் வாசனை
என்னை போதையில்
மிதக்கச் செய்கிறது
பிணத்தின் நிலைகுத்திய கண்கள்
என்னை பீதி அடையச் செய்கின்றன
பகல் சுதந்திரத்தைப் பறிக்கின்றது
இரவு துன்பத்தைப் போக்குகின்றது
உலகை மறக்கச் செய்கிறது
முகவரி இல்லாமல்
எழுதப்படும் கடிதங்கள்
விலாசம் இல்லாத
என்னை வந்தடைகின்றன
பிச்சைக்காரர்களைக்
காணும்போதெல்லாம்
என் கையில் திருவோடு
முளைத்துவிடுகிறது
உடைகள் அழுக்கடைந்துவிடுகின்றன
நான் பைத்தியமாகி விடுகிறேன்
தண்ணீரில் உப்புக்கல்லை
இடுங்கள்
அதுதான் துயரத்தின் மது
மதிப்பில்லாத பூஜ்யங்கள்தான்
ஒற்றை இலக்கத்துக்கு
வெகுமதிகள் வழங்குகின்றன.
*
ஒரு வார்த்தைக்கும்
மற்றொரு வார்த்தைக்கும் இடையே
எத்தனை இடைவெளி
அவளுடைய கண்களை
பார்த்து பேசப்பழகி
கண்ணியத்துடன் நடந்துகொள்வதாக
பாசாங்கு செய்கிறேன் நான்
எனக்கான இடமென்பது
அவ்வளவு எளிதாக
மற்றவர்களால் நிரம்பிவிடக்
கூடியதல்ல
எவ்வளவு காலம்
கவனம் பெறாமல்
இருந்துவிட்டேன் ஆனாலும்
எங்கேனும் முட்டிமுட்டி
முளைத்துவிடுகிறது ஒருவிதை
வாழ்க்கையின் வேர்கள்
கசப்பாகவும் கனிகள்
இனிப்பாகவும் இருக்கிறது
தனிமையின் வலி
எவ்வளவு கொடுமை என்றாலும்
நீ இல்லாத போது
நினைவுநதியில் மிதக்க
ஆரம்பித்துவிடுகிறேன்
வாய்ப்புகள் மற்றொரு
சந்தர்ப்பத்தை நமக்கு வழங்கலாம்
மரணம் அழகான ஒருகவிதையை
முடித்துவைத்து விடுகிறது
நிலம் விழுங்கிய
ஒரு துளியிலிருந்துதான்
விதை எழுகிறது
அவளது கொலுசின் ஒலியைக்
கேட்டவுடன்
எனது சோஷலிசமும், சித்தாந்தமும்
காணாமல் போய்விடுகின்றன
எனது மூங்கில்கள்
தவம் செய்கின்றன
புல்லாங்குழலாக
வசந்தகாலத்துக்காக ஏங்கும் மரங்கள்
இலை உதிர்க்கின்றன துளிர் விடுவதற்கு
மலர்களுக்குத் தெரியாது
தான் கல்லறை மேலே பூத்திருப்பது.
*



