
பார்ப்பதற்கும்
வியப்பதற்கும்
விஷயங்கள்
ஏதுமற்ற ஒரு
ஸ்திதியில்
உன் அருகாமை
நிகழ்கிறது
பார்ப்பதும்
வியப்பதும்
திளைப்பதுமாய்
நீண்டு கொண்டிருக்கிறது
என் கணங்கள்.
நெடுங்காலமாய் புரட்டாத பக்கங்களின்
இடுக்கில் ஒளிந்திருக்கின்றன
காய்ந்த,
நரம்போடிப்போன மலராய்
உன் ஞாபகங்கள்
திறக்கப்பட்ட தாளின்
நெடி மூச்சை துளைத்துப்
புரையேறுகிறது உள்வரை
எங்கோ உனக்கும்
புரையேறி,
உன் உடன் இருப்பவர்கள்
சொல்லக்கூடும்
”உன்னை யாரோ நினைக்கிறார்கள்” என
அது நான் என
நீ எண்ணுவாயா?
வானம் பார்த்த
பூமியான வாழ்வில்
சில தூறல்களாய்
உன் நினைவுகள்
வெம்மையின் தகிப்பில்
சட்டென மறைகின்றன
தூறலின் சுவடுகள்
மிஞ்சியிருப்பதெல்லாம்
மண்வாசம் கிளர்த்தும்
உன் மரகத மந்தகாசமும்
ஈரம் காயா முத்தமும்
அடை மழைக்கு வாய்ப்பில்லை
எனத் தெரிந்தும் ஏங்கும்
இந்தப் பச்சை மண்ணை
என்ன செய்ய?
நீ தந்த காயங்களை
நான் இசை கொண்டு ஆற்றியதுபோல
நான் தந்த காயங்களை
நீ எது கொண்டு ஆற்றினாய்?
அறிய ஆவலாய் இருக்கிறேன்
இசைத்து அனுப்பு
மேலும் ஒரு பாடலை
உன் கணக்கில் சேர்த்துக்கொள்கிறேன்.
காதல் கல்யாணம்
என்பதால்,
முழுதாய் என்னை
ஏற்றுக்கொள்ளாத வீட்டில்
முதல் முதலாய்
ஜோடியாய் செல்லும்
கல்யாணமொன்றின் கூட்டத்தில்
உன் சொந்தங்களுடன்
பரபரப்பாக நீ
உன் முகத்தில்
உன் சொந்தங்களைக் கண்ட
திருப்தி
அலை கொண்டு வந்து
கரை சேர்த்த ஒற்றை செருப்பாய்
ஓர் ஓரமாக
அமர்ந்திருக்கிறேன் நான்
கடக்கும் போதெல்லாம்
விழியோரமாய்
என்னை விசாரிக்கிறாய்
மென்று தின்று
செரிக்கப்பட்ட காதல் நமது.



