இணைய இதழ் 128கவிதைகள்

ரேகா வசந்த் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

உயர்திணை

சிறகுகளின் நீளத்தை 

ஒப்பிட்டுப் பார்க்கின்றன

ஒரே கூட்டில் பிறந்த பறவைகள்.

ஒற்றைப் புற்றை ஆட்கொள்ள 

விஷம் கக்குகின்றன

ஒன்பது அரவங்கள்.

சிறுதுளித் தேனுக்காக

மலர்களைச் சிதைக்கின்றன

தேனீக்கள்.

வரிசையில் முந்திச் செல்ல

முண்டியடிக்கின்றன

எறும்புகள்.

கிளையில் அமர்வதற்காக 

ஒன்றையொன்று கீழே தள்ளுகின்றன 

குரங்குகள்.

தம் பலத்தின் செருக்கில்

பிற உயிர்களை மிதிக்கின்றன

யானைகள்.

திடுக்கிட்டு விழித்தேன்.

எல்லாம் கனவுதான்.

நல்ல வேளை,

உயர்திணையின் கீழ்க்குணங்கள்

அஃறிணைக்கு

இன்னும் தொற்றிவிடவில்லை.

***

அவரவர் விடிவெள்ளிகள் 

நிறங்களற்ற பெருவெளியில் 

ஆறுதலின் நுண்கீற்றாய்

கை நரம்புகளில்

நிறமற்ற திரவமொன்றை 

ஏற்றிக்கொள்கிறாள் ஒருத்தி!

நிறங்களை ஒதுக்கி 

மரத்து அலைகிறாள் அவள்.

ஆறாத காயங்களின் உதிர வார்ப்பாய்

சிவப்புப் புடவை உடுத்திச்

சண்டையிட்டுத் தீர்க்கிறாள் 

இன்னொருத்தி!

நிறங்களை இறுகப்பற்றிப்

பின்தொடர்கிறாள் இவள்.

நிறங்களின் ஆழத்தில் 

தன்னைத் தொலைத்தலும் 

நிறங்களே வேண்டாமெனத் 

தன்னைத் துறத்தலும்

இருவேறு பயணங்கள். 

மாறுபட்ட அனுபவங்களின்

அடிவானம் திறக்கும்வரை,

விழிமுனையில் மின்னி

விரலிடுக்கில் நழுவுகின்றன

அவரவருக்கான விடிவெள்ளிகள்.

***

அறுபடல்

காலத்தின் கசிவில்

மெல்ல மெல்ல

நைந்துகொண்டிருந்தன

அவள் அணிந்திருந்த 

பிரியமென்னும் இழைகள்.

வெகு கவனமாய்

ஒவ்வோர் இழையையும்

முடிச்சிட்டுப் பாதுகாத்தாள்.

தீரா சிடுக்குகளின் சரடு

காற்றின் போக்கில்

ஊசலாடிக்கொண்டிருந்தது.

ஒவ்வொரு முறையும்

ஏதோவொரு இழை

அறுந்துகொண்டிருந்தது.

அவளோ

அறுந்த இடங்களை

முடிச்சுகளால்

மறைத்துக்கொண்டிருந்தாள்.

ஒருநாள்

இழைகளைத் தேடியபோதுதான்

உறைத்தது.

எஞ்சிக் கிடந்தவை

முடிச்சுகள் மட்டுமே. 

உதிர்வது கூடத் தெரியாமல்

உதிர்ந்து போகும்

இலையைப் போல,

ஓசையின்றித்தான் அரங்கேறுகிறது

அறுபடல் என்னும் நிகழ்வு.

***

பிம்பம் சுமந்தவன்

உன்  மனவெளியில்

பீடமேற்றப்பட்டிருந்த நான்,

ஒருநாள்

‘சாதாரணன்’

என இறக்கி வைக்கப்பட்டேன்.

வருத்தமா? ஏமாற்றமா?

உடைந்த பிம்பத்தின்

கூர்முனைகள் யாரைக் கீறின?

யாருக்கு யார் 

தைரியம் சொல்வது?

என் மீதான உன் பிம்பம்

நொறுங்கியதற்காக

நிலைதடுமாறும் உனக்கா?

நீ வார்த்தெடுத்த அச்சில் 

பொருந்த மறுத்த எனக்கா?

சிதறிக் கிடக்கும் 

பிம்பச்சில்லுகளில் 

யாருடைய முகம் 

யாரைப் பிரதிபலித்துக்கிடக்கிறது?

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button