
மராத்தியிலிருந்து தமிழில்; ரா.தீபா
எப்போது உன் உருவத்தைக் காண்கிறேனோ?
கண்கள் பொங்கி வருகின்றன.
இல்லை!
அதைக் காண்பதற்காகவே
திரள்கிறது கண்ணீர்!
மிருதுவான கரங்களால்
அதை யாரோ துடைப்பது தெரிகிறது.
*
எப்போதாவது மனம் சோர்வடையும்
மெதுமெதுவாகக் கண்கள் அதை அறிந்துகொண்டு விடும்
தன்னறியாமல் கண்ணீர்
வெளியே சிந்தும்
அப்போது என்னுடைய யாரோ ஒருவர்
தொலைவிலிருந்தபடியே அதைக் கண்டிருப்பார்.
*
எனக்குத் தோன்றுகிறது
நான் கோபித்துக் கொண்டதும்
நீ அதைப் புரிந்து,
மென்னுணர்வோடு அணுக வேண்டும் என்று.
என் கன்னத்துக்குழியை
உன் உதடுகளால் மறைத்து
மூடிவிட வேண்டும் என்று!
*
தவிப்பின் உச்ச வலி என்ன தெரியுமா?
நீ வந்து சென்றதை அறிவது
அதாவது,
நீ வந்திருந்த செய்தியை
நீ சென்ற பிறகு பெறுவது!
*
சில உறவுகள்
எப்போதுமே முறிவதில்லை!
அவை அறியாமலேயே
நம்முள் அமிழ்ந்துவிடுகின்றன.
எப்படியென்றால்
வண்ணத்துப்பூச்சி,
விரல்களில் வண்ணத்தை
வைத்துவிட்டு,
கையிலிருந்து
விடுபட்டுச் செல்வது போல!
*
எல்லாமும் எங்கே உண்மையாக இருக்கிறது?
அவற்றை நாம்
உண்மை என்று நம்பி ஏற்கிறோம்.
இன்னும் எத்தனை முறைதான்
நாம் நம் குடங்களை
நீரின்றி நிரப்பப் போகிறோம்?
*
கட்டுக்கடங்காமல்
எழுந்து வரும் காலையும்
தளர்ந்து போன இரவும்
பாரிஜாத மலரின் மைக்கூட்டில்
நனைந்த உடல்கள்.
*
ஆசிரியர் குறிப்பு:
சந்திரசேகர் கோகலே ஒரு புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். இவர் சாரோளி எனப்படும் நான்கு வரி மராத்தியப் பாரம்பரியக் கவிதை வடிவத்தைப் பின்பற்றி எழுதுபவர். இவர் மென் உணர்வுகளால் மனதைத் தொடும் கவிதைகள் மற்றும் சிறுகதைகளுக்காக அறியப்படுகிறார்.
இவருடைய எழுத்துக்கள் காதல், அன்பு ஏக்கம், தனிமை மற்றும் உறவுச் சிக்கல்களையும் அன்றாடங்களின் யதார்த்தங்களையும் பற்றிப் பேசுகின்றன.
மராத்தி மூலத்திலிருந்து மொழிபெயர்ப்பு ரா.தீபா.
இவர் தமிழ் இலக்கியத்திலும் – குறிப்பாக – கவிதைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தாய் மொழியான மராத்தியில் கவிதைகள் வாசிக்கத் தொடங்கி, தம்மைக் கவர்ந்த கவிதைகளை மொழிபெயர்த்தும் வருகிறார். இவருடைய மொழிபெயர்ப்புகள் கவிதைகள், நீலி, காலச்சுவடு இதழ்களில் வெளி வந்துள்ளன.
இவர் இசையில் முதுகலைப் பட்டமும்(M.A), TTC(Technical Teachers Training in Music) எனப்படும், இசை கற்பிக்கும் ஆசிரியர் பயிற்சியும் பெற்றவர்.
– deepadev.2005@gmail.com



