
இயல்பற்றவளின் தனிமை
யாருமற்ற தனிமை
நிர்வாண உறுப்புகளில்
ஏதோ ஒருவிதமான கூச்சம்
சட்டென நிகழ்த்திவிட்டுச் செல்கிறது
என் மூச்சுக் காற்று
உடல் சிலிர்க்கிறது
உணர்வுகள் உயிர்ப்பித்து எழுகின்றன
காற்று புகா சன்னல்
நீராவியை அள்ளிக்கொண்ட கண்ணாடி
மேனியை நழுவிச் செல்லும் நீரலை
திடீரென விழும் மின்வெட்டு
தடம் மாறும் நீரோடை
கழுத்தை நிறைக்கிறது ஒரு தடவல்
விரல்களின் பிடியில் சதைகளின் உரசல்
ஒருசேர நிகழும் மாயை
சுற்றும் முற்றும் பார்க்கிறேன்
உயிரற்ற பிம்பங்கள்
அமைதி கொள்கின்றன
முகத்தில் நீரைத் தெளித்து
புதுப்பொழிவை உருவாக்குகிறேன்
குளியலறையில் வழிந்தோடும்
திரவியங்களைப் பார்க்கிறேன்
இரு வெவ்வேறானவை
தடையில்லாமல் மறைந்துபோனதை விட
கெட்டியாக நகராமல் இருப்பது
என்னைப் பார்த்து
ஏளனமாகச் சிரிப்பதைக் கவனிக்கிறேன்
மௌனத்தின் பேரிச்சலில்
சுரண்டப்படுகிறது
என் அந்தரங்கம்
எங்கோ கண்காணிக்கப்படுகிறேன்.
*
மாயா
அவளது ஓவியங்களில்
அரை மனிதர்கள் பலர்
படம்பிடித்துக் கொள்கிறார்கள்
பல மணி நேரங்கள் முற்றத்தைப் பார்த்தபடியே
நகர்கிறாள்
அவள் முன் எவரும் நிற்பதில்லை
சதைகளின் உரசல்களை
அவள் விரும்புவதில்லை
கானகம் தேடி ஓடுகிறாள்
பச்சை வேலியிட்டுப் பாதுகாப்பாய் உணர்கிறாள்
மறுக்கும் உறவுகளை
மறக்கப் போராடித் தீர்க்கிறாள்
அவள் இணைக்கும் புள்ளிகளில்
ஆண்களின் இடுப்புக்குக் கீழ்
கோடுகள் எழுவதில்லை
கைத்தடி நெஞ்சைப் பிளந்திருக்கும்
விரல்கள் அழுகி துண்டிக்கப்படடிருக்கும்
பெண்களின் கண்கள் குருடாயிருக்கும்
எதிர்விணையாற்றாத கண்ணாடியில்
எதிர்கொண்டு நிற்கிறாள்
பின்னழகை மறைக்கயியலாத
உள்ளங்கைகளை
நகத்தால் கீறி
ஆசுவாசமாகிறாள்
முழுநிர்வாணத்தைக்
கூர்மையான பொருளொன்றால்
தூரிகையாக்கி மறைக்கிறாள்.
*



