இணைய இதழ் 127சிறுகதைகள்

ஆதி – ஆர் சீனிவாசன்

சிறுகதைகள் | வாசகசாலை

கருஞ்சூழ் வெறுமையின் நிழல் வெளுத்த ஆவி மண்டலம். அங்குச் சஞ்சரிக்கும் ஆதிகாலம், தெய்வம். மௌனம் அவற்றின் அடையாளம். ஒன்றின் நிழல் இன்னொன்று தெய்வம் ஆதிகாலத்திடம் மர்ம மொழியில் தன் விருப்பத்தையும், அதை நிறைவேற்றாவிட்டால் அதற்கான சாபத்தையும் சொன்னது. தூய ஆவியிலிருந்து ஊன் தோன்றினால் சதையின் இன்பங்களில் தூய்மை மறந்துவிடும் என்று ஆதிகாலம் கூறியது. அதை மறுத்த தெய்வம், ஆதிகாலத்தைச் சிந்தைக்கு எட்டாத பொருளாக்கி, தன்னை மட்டும் துதிக்கக் கூட்டம் தேடி பகடையை உருட்டியது. புறம்தள்ளப்பட்ட ஆதிகாலம் தானே தெய்வமாகும் சூழ்ச்சியில் இறங்கி, தன் பிரதியை ஆற்றலுக்குள் மறைத்தது. சூழ்ச்சியை அறிந்து சினம் கொண்ட தெய்வம், ஆதிகாலத்தைப் பணையக் கைதியாகி அதன் பிரதியான காலத்தை ஒவ்வொரு க்ஷணமும் தோன்றி மறையச் செய்வதோடு நிற்காமல், ஆதிகாலத்தோடு மீண்டும் சேர முடியாமல் காலத்தை ஒரு திசையில் மட்டும் ஓடச் செய்தது. ஆதியும் அதன் பிரதியும் நித்தியத்தில்தான் சேர முடியும்.

பகடையை வீசிக் காத்திருந்த திரு, எண்ணுக்கடங்காத சிதறிய சில்களில் விரத்தியை மட்டுமே கண்டது. ஆதிகாலம் தன்னோடு இல்லாமல் போனதனால், எண்ணற்ற சாத்தியக்கூறுகளில் முதல் வீச்சில் தாயம் விழ நுண்ணிலும் நுண்ணான வாய்ப்பே மீதம். முதல் வீச்சில் ஒருமையிலிருந்து, நித்திய ஆற்றலுடன் வெடித்து உருவானது காலம். தன் இச்சைக்குச் செவிசாய்க்காத தெய்வத்தை வஞ்சம் தீர்க்க, மர்மமான ஊடுருவலுடன் சாதுரியத்தோடு இன்றும் செய்வினையின் கணக்கைத் தீர்த்துக்கொண்டு, ஆக விரைவில் சூனியத்திற்குத் திரும்பக் காத்திருக்கிறது.

வெடித்துச் சிதறிய எண்ணுக்கடங்காத சில்களில் வெப்பம் தணிந்து உலோகம் பிறந்து, அதிலிருந்து முறையில்லா ஞாலம் உருவானது. உயிர் பிறக்காது என எதிர்பார்த்த காலத்திற்கு நிராசையைத் தந்தது புவி எனும் கல். இப்போது காலம் தொடர வேண்டிய கட்டாயம். அந்தக் கல் நினைவு தாங்கும் வரை காலம் இருந்தாக வேண்டும்; ஆற்றல் இழந்து மீண்டும் பூமி கரும் புதைகுழி ஆகும் வரை காத்திருக்க வேண்டும். முதல் உயிர்களைப் பார்த்த காலத்திற்கு நம்பிக்கை, ‘சிந்திக்கத் தெரியா ஊர்துகள் நிச்சயம் தலை வணங்காது’ என்றது. கடும் வெப்பத்தையும், குளிரையும், சூறாவளியையும் கடந்து ஒரு நுண்ணுயிர் வளர்ந்து மனித வடிவம் எடுத்து, இயற்கைக்குப் பின் உள்ள பொருளைத் தேட ஆரம்பித்ததும் காலத்திற்குக் கடும் நிராசையும் சினமும் ஏற்பட்டது. ‘இவன் அடங்கான்’ எனச் சபித்து, சூழ்ச்சி செய்ய ஆரம்பித்தது.

புவியின் அனைத்துச் செயல்பாடுகளிலும், சமன்பாடுகளிலும், ஒளி-ஒலியின் மர்மங்களிலும் மௌனமாகத் தன்னைப் பிணைத்துக்கொண்டு, புவியின் தலைப் பிராணியான மனிதனின் விதியாக, இதிகாசமாக, செய்வினையாக வேடம் தரித்து உலகை அழிவை நோக்கிப் பயணித்தது. சீர்மையிலிருந்து ஒழுங்கீனம், ஆக்கத்திலிருந்து அழிவு, அர்த்தத்திலிருந்து குழப்பம் எனத் திசைகாட்டியது. மனிதன் சிந்திக்க ஆரம்பித்த நாளிலிருந்து இதைப்பற்றி யோசித்தான். தர்க்கத்தினால் கண்டறிய முடியாத, புலன்களுக்குப் புலப்படாத, ஆயினும் எங்கும் வியாபித்திருக்கும் தெய்வமெனும் மர்மத்தைத் தேடியபோது காலம் பெரும் சினம் கொண்டது.

காலம் மனித சிந்தனையில் ஊடுருவித் தோற்ற மயக்கங்களை உருவாக்கி, நிலையற்ற எண்ணங்களைத் தோற்றுவிக்கும். குறை, குழப்பங்களுடன் தன்னையே முதலில் அறியாமல், ஞாலத்தை தன் வசப்படுத்த நினைக்கும் மனிதனின் சேஷ்டைகளை மேலிருந்து பொம்மலாட்டம் போல் நடத்திச் செல்வதில்தான் காலத்திற்கு எத்தனை உவமை! அன்று விடியலை மெல்லிய சிகப்பு நிறமாகத் தோற்றுவித்து, காட்சிப் பிழையோ எனப் பார்ப்பவருக்கு எண்ணம் தோன்றும்போதெல்லாம் நிறத்தை மாற்றிக்கொண்டே போனது.

நாள் முழுவதும் காத்திருக்கும் அவலங்களை மௌனமாய், செயலிழந்து, சிந்தை மரத்து, ஒவ்வொரு நொடியும் உணர்வால் செத்து மடியப்போவதை அறிந்தும், அந்த காட்சிப் பிழையை நோக்கி ஒரு கணம் மனதில் நம்பிக்கை கொண்டாள் அவள். இன்று புதிய விடியல் என நினைத்தாள். தனக்கொரு விமோசனம் உண்டு என நினைத்தாள்; ஏனெனில் வழக்கத்திற்கு மாறாக அன்று அவளைத் தேடி வருபவர் ஒரு பெண், இல்லை, அவளைப் போல அல்ல, ஆனால் பெண். காலம் சிரித்தது; மெல்லிய சிகப்பு கீழ் வானத்திலிருந்து உக்கிர ஞாயிற்றைத் தோற்றுவித்து அந்தச் சிறு உவமையை அழித்தது.

நிறங்களுக்கும் ஆளுமை உண்டு. வெள்ளை ஏன் தூய்மையையும், கருப்பு ஏன் மாசையும் குறிக்க வேண்டும்? பொருளின்மேல் பொன்னிற ஒளி விழும்போது ஒரு நிறத்தை மட்டும் எதிரொலித்து மற்றதை உள் கிரகித்துக்கொள்ளும் உண்மை எல்லோருக்கும் தெரியுமா? அதை உணர்ந்தவர்கள் சொன்னால்தான் மந்தைக்குப் புரியுமா? காலம் மீண்டும் சிரித்தது. நிகழ்வுகளின் பின்விளைவெனத் தன்னைத் தர்க்கம் செய்யும் மனிதனின் சிந்தைக்குள் புகுவது சுலபம்.

மாறிக்கொண்டே போகும் வானத்தின் நிறம் ஒரு கணம் அவள் அறையின் நிறத்தோடு ஒத்துப்போகையில் நம்பிக்கை இழந்தாள். புறத்தைப் போன்றதுதான் அகமும். அவள் அகத்தை விடப் புறத்தை அதிகம் கண்டவள். கருஞ்சிவப்பு நிற அறையின் சுவர்கள் ஆண்களின் கறுத்த நெஞ்சம், அவளுடைய குருதியோடு கலக்கும்போது பிறக்கும் அதே நிறம். காமச் சதிராட்டத்தின் உச்சியில் மட்டுமே வெள்ளை நிற வெளிப்பாய்ச்சல்; அதுவரை கருப்பு கலந்த சிகப்புதான். அந்த விதிக்கு விலக்கே இருந்ததில்லை. இன்று வேறு என நினைத்தது தவறுதான் என உணர்ந்த அக்கணம் தாழ் திறந்து அவள் வந்தாள். அவளைப் பார்த்த உடனேயே அறிந்தாள், அவள் இவள் அல்ல.

பொய் சொல்லும் கண்கள், போலி இரக்கம், செயற்கை பேச்சு.

கையில் பேனாவுடன், கதர் உடுத்தி, பெண்ணியம் பேசினாள். அவள் மட்டுமே பேசினாள், இவளைப் பேச விடவில்லை. சில புகைப்படங்கள் எடுத்தாள், விடியல் வரும் என்றாள். பெண்ணுக்கு பெண்ணே சத்ரு என்பது புளித்துப்போன சத்ய வசனம். அவளிடம் என்ன சொல்வது? ஆறு வயதில் முதல் ஆடவனை அம்மணமாகப் பார்த்தாயா? பொசித்தகையே பொசுக்கியத்தையா? இதையெல்லாம் சொல்லித்தான் பயனுண்டா? கேட்ட கேள்விகளுக்குச் சிந்தை மரத்து ஏதோ பதில் சொன்னாள். விடை பெறுகையில் அவள் இவளை அணைத்துக்கொண்டாள். அந்த அணைப்பு, அவர்கள் இருவருக்கு வெவ்வேறு உணர்ச்சியைத் தந்தது. ஒருத்திக்கு வெற்றியின் புன்முறுவல், இன்னொருத்திக்கு அச்சம். ஆனால் அணைப்பினால் உண்டான மெல்லிய தேக உஷ்ணம் இருவருக்கும் ஒரே உணர்வைத் தந்தது, அசூயை. விடைபெறுகையில் பேனாக்காரிக்கு விளங்கியது, ஆக்ரோஷமாக இயங்கி உடல் உரசி அணல் பறந்தும் அவள் சிந்தையில் பரவியிருந்த கல் குளிரின் காரணம்.

அவள் மஞ்சள் நிறம். அவளுடைய அறையின் நிறமும் மஞ்சள். மஞ்சள் அடிப்படை நிறங்களில் ஒன்று. சிகப்புடன் தொடர்பில்லாதது. கருமையை எதிர்ப்பது. மஞ்சள் இயற்கையின் நிறம். அவளே இயற்கை. ஒளித் துகள்கள் மங்கியும் பிரகாசித்தும் அறையின் மூலைகளை வெப்ப வெளிகளாக, திட்டுகளாக மாற்றின. அவள் பட்டாம்பூச்சி, பறக்கவும் செய்தாள். ஆன்மா அவளது இலேசான இறகு காலம் அவளைப் பார்த்து வியந்தது. தன் சூழ்ச்சி வலையில் சிக்காத பட்டாம்பூச்சி. செம்மையில் மீமெய்யியலும் வறுமையில் தர்க்கமும் உண்டாவது இயல்பு. ஆன்மா பறக்க நிரம்பிய வயிறு முக்கியம். அவள் இளமையில் வறுமை காணாதவள். உலகை நம்பிக்கையின் கண்ணோடு பார்த்தவள். இளமை, வர்த்தகிக்கப்படும் பொருள் அல்ல. ஔவை யயாதியைச் சந்தித்திருந்தாலும் அந்த வர்த்தகம் நடந்திருக்காது. சணல் கயிற்றுச் சுருக்கால் பூங்காற்றைப் பிடிக்க முயலும் செயல் இளமையைத் திரும்பப் பெற நினைப்பது. காலம் குரூரமான ஞாயஸ்தன். அனைவருக்கும் ஒரு முறை, ஒரே முறை வசந்தத்தைக் கொடுப்பான்.

அன்று ஞாயிறு. அன்றாடம் நாளேடுகள் கொடுக்கும் அவலங்களைப் புறம் தள்ளிக் கூடுதல் தாள்களில் நம்பிக்கை பிறக்க வாய்ப்புகள் உண்டு. நாளேடுகளில் அச்சடிக்கப்பட்டிருக்கும் செய்திகள் என்றுமே அதிர்ச்சி கொடுப்பவை அல்ல. அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள் அண்மையில் இருப்பவர்களைப் பற்றியவை மட்டுமே. சமூகம் வேறு குடும்பம் வேறு என மாறியிருக்கும் கலியுகத்தில் நாளேடுகளில் வரும் அவலங்கள் அதிர்ச்சி கொடுப்பதில்லை. ஆனால் உன்னிப்பாக வாசித்தால் அசரீரிகள் கேட்கும். காலத்தினால் ஆட்கொள்ளப்பட்ட குரல்கள். காலத்தை நேரடியாகப் பார்த்து காலத்தின் உண்மை ஆகிருதியை, ரகசியத்தை அறிந்த வரலாற்றின் கூக்குரல்.

தலைப் பக்கங்களை உதறித்தள்ளிக் கூடுதல் பாகத்தின் முதல் தாளில் அப்பக்கத்திற்கு நிரம்பியிருந்த அந்தப் புகைப்படத்தைப் பார்த்த கணத்தில் காலத்தின் சூது அவளை மௌனமாய் வலுவாகக் கவ்வி விலகியது. ஒரு சித்திரம் ஆயிரம் வார்த்தைகள் சொல்லும் என்பார்கள். கருஞ் சிகப்புச் சுவரின் முன் சிகப்புச் சேலை அணிந்து நின்றிருந்த அவளின் படம் ஒரு நொடிப்பொழுதில் அப்படி என்னதான் இவளிடம் சொன்னதோ தெரியவில்லை, நேரடியாகக் கண்களிலிருந்து சிந்தைக்கு விஷம் பரவத் தொடங்கியது. அந்தக் கண்களையே சில வினாடிகள் நோக்கிக்கொண்டிருந்தாள் என்னவென்று புரியாமல்.

“கடவுளே!”

பிரார்த்தனையின் அடிப்படை விண்ணப்பம் அல்ல, அதன் அடிப்படை ஆசை அல்லது ஏக்கத்தின் வெளிப்பாடு. நிச்சயமாக வேட்கை அதன் அடிவாரம் அல்ல. அவர்கள் கண்கள் நோக்கிய மறுகணத்தில் எங்கோ உள்ளிருந்து உதித்து உதடு வழி வந்த சொல்லைக் கேட்டு அவளுக்கே வியப்பு. உள்ளுணர்வின் குரல் சில சமயங்களில் சிந்தை மயங்கியிருக்கும் நிலையில் உதட்டிலிருந்து நழுவிவிடுகிறது.

வார்த்தைகள் பலமுறை உணர்ச்சி, அர்த்த உள்ளடக்கங்களைச் சரிவர வெளிப்படுத்துவதில்லை. தட்டைச் சதுர முகம் கொண்ட கரண்டி எத்தனை முறை பானையின் சுவரைச் சுரண்டினாலும் பானையில் சில பருக்கைகள் மீதம் இருந்துவிடும். பானை -எதார்த்தம், கரண்டி மொழி பானைக்கேற்ற கரண்டியை ஒவ்வொருமுறை செய்ய முடியாது. சொற்களின் சேர்க்கையால் உருவாகும் வாக்கியங்கள், இலக்கியம் மற்றும் மொழி, மொழியின் பிரயோகம் சிந்தை எனும் தர்க்க இயந்திரத்திற்கு மனதின் உணர்ச்சிகளையும், எதார்த்தத்தையும் முழுமையாக எடுத்துரைக்க முடிவதில்லை. கருவியின் குறைகளால் வரம்பிக்கப்படுகிறது மனிதச் சிந்தனையின் வெளிப்பாடுகள். இப்போது அது முக்கியமல்ல. அவள் உச்சரித்த அந்த ஒற்றைச் சொல், மனதிலிருந்து வெளிவந்ததல்ல, அது ஆன்மாவின் குரல்.

பொதுவாகத் தெய்வம் தன் பெயர் உச்சரிக்கப்படுவதைக் கேட்டும் செயலிழந்து நிற்பதுபோலத் தோன்றும் சந்தர்ப்பங்கள், சிந்தை அல்லது உடல் செய்யும் வறட்டுச் சொல் பிரயோகப் பிரார்த்தனையின் பின்விளைவாகவே இருக்கும். தெய்வத்தின் புலன்களுக்கு ஊனின் குரல் ஒலிப்பதில்லை. ஆனால் ஆன்மாவின் குரல் வேறு, ஏனெனில், ஆன்மா தெய்வத்திடம் இருந்தே எழுந்து அதனிடமே திரும்புவது. தன் பிரதி தன்னையே சொல்லி அழைப்பதன் உள் கருத்து தெய்வத்திற்குப் புரிந்தது. காலத்தின் பிடியில் சிக்கி மெதுவாக மெய் இழந்து முடிவில் சிந்தை இழக்கப்போகும் யுவதியிடம் அதனால் நேரடியாகப் பேச முடியவில்லை எனினும், ஒரு கணம் அவள் சிந்தையில் மின்னலைப்போல ஒலித்து மறைந்தது.

‘அவளை நீ பார்த்தே தீரவேண்டும்’

பித்து பிடித்துப் போனாள். அவள் யார்? ஏன் அந்தக் கோலம்? ஏன் என்னை இப்படி ஈர்க்கிறது அந்தப் படம்? தெரியவில்லை. நாளேட்டின் ஆசிரியரைத் தொடர்பு கொண்டாள், ‘எதற்காக?’ என்றார். அவளால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. நதி ஆழியை ஏன் பார்க்கத் துடிக்கிறது? விசை பொருளின் மேல் தீண்டுகையில் ஏன் அதன் நிலை மாறுகிறது? அன்று ஒரு நாள் மட்டும் நாளேட்டின் செய்தி அதிர்ச்சி கொடுத்தது. அதன் காரணம் மனிதாபிமானமா? அப்படி இருந்திருந்தால் பணம் அனுப்பியிருக்கலாம். இந்தத் தவிப்பு வேறு, இதன் வேர் வேறு.

அன்று மாலை அவள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டாள் பேனாக்காரி, ‘ஏன்மா?’ என்றாள். முதல் முறை மனம் திறந்து பாடியது வான் பறவை. வார்த்தைகளால் அல்ல, மௌனம் கலந்த கரையலால். அந்தக் குரல் பேனாக்காரியை உருகியது. ‘சரி’ என்றாள் முடிவில்.

அடர்ந்த கொச்சை நாற்றம் நிறைந்த அறைக்கு அந்த ஜன்னல் ஒன்றே வெளியுலகம் ஒன்று இருக்கிறது என்பதற்கான அத்தாட்சி. பெரும்பாலும் அது மூடியே இருக்கும். அந்த அறையின் கதவு வெறும் கண் துடைப்பு. அவள் அக்கதவு மூடியிருப்பதையே விரும்பினாள். கதவு திறப்பது ஒரு காரணத்திற்காக மட்டுமே, சித்திரவதை.

அன்று விடியலில் மீண்டும் கீழ் வானம் மெல்லிய சிகப்பு நிறம் பூண்டிருந்தது. ஆனால் அந்த விடியல் வித்தியாசமானது, வெகு நேரம் ஆகியும் ஆதவன் தன் முகம் காட்டவில்லை, மாறாக மெல்லிய தென்றல் வீசியதில் இனம் புரியாத எதிர்பார்ப்பு. மெல்லிய கீச்சுச் சப்தமிட்டுத் தென்றல் கதவைத் திறந்தது. வெளியில் இரு முகங்கள். அதில் ஒரு முகத்தைப் பார்த்ததும் இனம் புரியாத பூரிப்பு, விடியல்! அக்கணம் ஆதவன் மெதுவாக ஜன்னல் வழி ஒளிர, மஞ்சள், கறுத்த சிக்கப்போடு கலந்து தூய வெள்ளை நிறமானது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button