இணைய இதழ் 107கட்டுரைகள்

கோஹினூர்: ஒப்பற்ற வைரத்தின் சுருக்கமான வரலாறு – சரத்

கட்டுரை | வாசகசாலை

இங்கிலாந்து ராணியாக கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆட்சி புரிந்த இரண்டாம் எலிசபெத் 2022-இல் இறந்தபோது, கோஹினூர் வைரம் பற்றிய புகைச்சல் மீண்டும் பரவ ஆரம்பித்தது.

இங்கிலாந்து அரசிடம் மீட்டு, கோஹினூரை மீண்டும் இந்தியா கொண்டு வரவேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது. சொல்லப்போனால் அது முதல்முறையாக வைக்கப்பட்ட கோரிக்கை அல்ல. அதற்கு முன்பே பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு ஆட்சியாளர்களால் எழுப்பப்பட்ட ஒன்றுதான்.

ஆனால், சிலந்தி வலையைப் போல அதில் நடைமுறை சிக்கல்கள் பல பிணைந்திருப்பதால், இந்தியாவுக்குச் சொந்தம் என நம்பப்படும் கோஹினூர் வைரம் இன்றுவரை மீட்கப்படாமலே இருக்கிறது.

உண்மையில் கோஹினூர் வைரம் இந்தியாவுக்குதான் சொந்தமா? எனில், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் கூட அதற்குச் சொந்தம் கொண்டாடுகிறார்களே எதனால்?

விடை தெரிய, கோஹினூருடன் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் நாமும் சேர்ந்தே பயணிக்க வேண்டும்.

*

கோஹினூர் வைரத்தின் பிறப்பிடம் பற்றி ஆராய்ந்தால், ‘கோல்கொண்டா’ என்கிற வார்த்தை அடிபடுகிறது. கோல்கொண்டா என்பது ஆந்திராவின் குண்டூர் அருகில் இருக்கும் ஒரு பகுதி. 

11-ஆம் நூற்றாண்டில் அங்கே கட்டப்பட்ட கோட்டை (கோல்கொண்டா கோட்டை), பலவிதமான விலையுயர்ந்த வைரங்களை வியாபாரம் செய்யும் மாபெரும் வர்த்தக மையமாக செயல்பட்டு வந்திருக்கிறது. அங்கிருந்துதான் கோஹினூர் வைரம் தோன்றியிருக்க வேண்டும் என்கிறார்கள். கோஹினூர் மட்டுமல்ல, புகழ்பெற்ற வைரங்களான நூர்-உல்-ஐன் (Noor-ul- Ain), ஆர்லோவ் ஆக்ரா வைரம் (Orlov Agra Diamond), அகமதாபாத் வைரம் (Ahmedabad Diamond) போன்றவற்றின் தாய் வீடும் கோல்கொண்டா தான்.

சரி, கோஹினூருக்கு வருவோம்.

12-ஆம் நூற்றாண்டில், ஆந்திர நிலங்களை ஆண்ட காக்கத்தியர்களிடம் (Kakatiyas) இருந்து விலையுயர்ந்த வைரங்கள் பல அலாவுதீன் கில்ஜியால் கொள்ளையடிக்கப்பட்டது. அதில் ஒன்றாக இந்த கோஹினூரும் இருந்திருக்க வேண்டும். 

அதன்பிறகு துக்ளக் ராஜ்ஜியம் (1320-1413), சையது ராஜ்ஜியம் (1414-1451), லெளதி ராஜ்ஜியம் (1451-1526) என அடுத்தடுத்து கை மாறியிருக்கிறது கோஹினூர்.

1526-ஆம் ஆண்டு நடந்த முதலாம் பானிபட் போரில் இப்ராஹிம் லெளதியை, பாபர் வென்றதன் மூலம், முகலாயர்கள் ராஜ்ஜியம் தொடங்கியது. கூடவே கோஹினூரும் அவர்களிடத்தில் வந்தது.

முகலாயர்கள் காலத்தில்தான் கோஹினூருக்கு ‘எலைட்’ அந்தஸ்து கிடைத்தது. ஆம்! பாபரின் சுயசரிதையான பாபர் நாமாவில் (Baburnama) கோஹினூர் பற்றிய குறிப்பு இப்படி எழுதப்பட்டிருக்கிறது: 

இந்த வைரமானது, இன்றைய உலக மக்களின் தினசரி செலவில் பாதி மதிப்புடையது‘. 

இப்படி பாபரின் வழிவந்த முகலாய மன்னர்கள், கோஹினூரைப் போற்றிப் பாதுகாத்தனர். அதிலும் ஷாஜகான் ஒருபடி மேலே போய், தான் அமரும் மயிலாசன இருக்கையில் கோஹினூரைப் பொதித்து வைத்தார். ஏழு வருடங்களாக செதுக்கப்பட்ட அந்த மயிலாசனம், அப்போதைய மதிப்பில் தாஜ்மகாலை விட நான்கு மடங்கு விலையுயர்ந்தது என்கின்றனர். 

1739 வாக்கில் பாரசீகத்திலிருந்து படையெடுத்து வந்த நாதிர் ஷா (Nadir Shah), முகலாயர்களை வீழ்த்தி மயிலாசனத்தையும் கைப்பற்றினார். கோஹினூருடன் பல வைரங்கள் அதில் பொதிந்திருப்பதைக் கண்டு வியந்தார். உடனே அது பாரசீகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஒவ்வொன்றாக பெயர்க்கப்பட்டது. 

நில்லுங்கள்…இங்கேயே ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். இதுவரை கோஹினூர் வைரத்துக்கு, ‘கோஹினூர்’ எனப் பெயர் இடப்படவில்லை!‌

ஆம். பெயர்த்து எடுக்கப்பட்ட வைரங்களில், கோஹினூர் மிகவும் ஒளி பொருந்தியதாக இருந்ததால், ‘மலையளவு ஒளி (Mountain of Light)’ என்று பொருள்படும் வகையில் பாரசீக மொழியில் ‘கோஹினூர்’ எனப் பெயரிட்டார் நாதிர் ஷா!

அவருக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானின் துராணி ராஜ்ஜியத்தைத் தோற்றுவித்தவரும் நாதிர் ஷாவின் தளபதியுமான அஹமத் ஷா அப்தாலி (Ahmed Shah Abdali) கைகளுக்கு கோஹினூர் சென்றடைந்தது. அடுத்த எழுபது ஆண்டுகளுக்கு கோஹினூரின் உறைவிடம் ஆப்கானிஸ்தான்தான் (ஆப்கானிஸ்தான் சொந்தம் கொண்டாடுவதின் காரணம் இப்போது புரிகிறதா?)

1800 சமயத்தில் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் சீக்கியர்களின் கை ஓங்க ஆரம்பித்தது. சீக்கிய ராஜ்ஜியத்தின் முதல் மன்னரான ரஞ்சித் சிங், அப்தாலி வழிவந்த மன்னரான ஷீஜாவை மிரட்டி கோஹினூரை அபகரித்துக் கொண்டார். அதாவது ஆப்கானிஸ்தானிலிருந்து மீண்டும் இந்தியா வந்தடைந்தது கோஹினூர்.

ரஞ்சித் சிங்கிடம் வந்தபிறகு கோஹினூர் ஒரு சிறப்பிடத்தைப் பெற்றது. அதுவரை விலையுயர்ந்த வைரமாக மட்டுமே கருதப்பட்ட கோஹினூர், அதிகாரத்தின் அடையாளமாக உருவெடுத்தது அப்போது தான். கோஹினூர் வைரத்தை கைப்பட்டையில் அணிந்து, ‘கெத்தாக’ அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்தார் ரஞ்சித் சிங். ஆனால், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. விரைவிலேயே நோயுற்று இறந்து போனார் அவர். ரஞ்சித் சிங் அளவுக்கு பலம் பொருந்தியவர்களாக அவரது வாரிசுகள் இல்லை. எனவே, சீக்கிய ராஜ்ஜியம் அழியும் தருவாயில் இருந்தது.

அதேநேரம் ‘வணிகம் செய்ய வந்திருக்கிறோம் பாஸ்…’ என களமிறங்கிய கிழக்கிந்திய கம்பெனி, மெல்ல மெல்ல மக்களை ஆளும் அதிகாரத்தை கைப்பற்றத் தொடங்கியது. அதன் நீட்சியாக பத்து வயது மன்னர் துலீப் சிங்கை அடிபணிய வைத்து, புதிய சில ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர் ஆங்கிலேயர்கள். 

கையெழுத்தான ஒப்பந்தங்களில் முக்கிய வரிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு: ஷீஜாவிடம் இருந்து மன்னர் ரஞ்சித் சிங் எடுத்துக் கொண்ட கோஹினூரை, இங்கிலாந்து மகாராணியிடம் (மகாராணி விக்டோரியா) ஒப்படைக்கிறார் மன்னர் துலீப் சிங்

இது நடந்தது, 1849-இல். இப்படித்தான் கோஹினூர் வைரம், ஆங்கிலேயர்களிடம் வந்து சேர்ந்தது!

1851-இல், லண்டனின் ஹைட் பார்க்கில் (Hyde Park) பொதுமக்களின் பார்வைக்காக முதல் முறையாக வைக்கப்பட்டது கோஹினூர். அதற்கு முன்பே கோஹினூர் பிரபலமாகி இருந்ததால், அதனைக் காண ஹைட் பார்க் முன்பு மக்கள் கூட்டம் கூடியது. அப்போது இங்கிலாந்தின் முன்னணிப் பத்திரிகைகள் பல, கோஹினூர் பற்றியும் இந்நிகழ்வைப் பற்றியும் விரிவாக எழுதித் தள்ளியது.

1853-இல் இளவரசர் ஆல்பர்ட், கோஹினூர் வைரத்தைப் புதுப்பிக்க முடிவு செய்தார். அதன்படி 37 கிராம் அளவிலிருந்து 21 கிராமாக வெட்டப்பட்டது கோகினூர்.

எந்தவொரு விஷயமும் அதீதப் புகழை அடையும் போது, கூடவே சர்ச்சைகளையும் விலைக்கு வாங்கிக் கொள்ளும் அல்லவா! கோஹினூர் மட்டும் விதிவிலக்கா என்ன? கோஹினூருக்கு முளைத்த சர்ச்சை, ‘சாபம்’ வடிவில் வந்தது. நாதிர் ஷா காலத்தில் தொடங்கி, ரஞ்சித் சிங் காலத்தில் வலுப்பெற்று, ஆங்கிலேயர் காலத்தில் மேலும் தீவிரமடைந்தது‌ கோஹினூரைச் சுற்றி வந்தது அந்த சாபப் புயல் (இன்று வரை அது கரையைக் கடக்கவே இல்லை என்பது வேறு விஷயம்).

அதாவது, ‘கோஹினூரைக் கையாளும் எந்தவொரு ஆணும் சபிக்கப்பட்டவன் ஆகிறான். பெண்களை அது ஒன்றும் செய்வதில்லை…’

இதுதான் கோஹினூரின்‌ மீது ஏவி விடப்பட்ட கட்டுக்கதை.

அதற்கேற்ப மகாராணி விக்டோரியா, எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் 55 வருடங்கள் ஆட்சியில் இருந்தார். 81 வயதில் காலமானார். 

சாபக்கதையை நம்பியதால்தான் என்னவோ, விக்டோரியாவின் மரணத்திற்குப் பிறகு மன்னராக பொறுப்பேற்ற அவரது மகன் ஏழாம் எட்வர்ட் கோஹினூர் பக்கம் தலைவைத்து கூட படுக்கவில்லை. மாறாக அவருடைய மனைவி மகாராணி அலெக்ஸாண்ட்ரா கோஹினூரை விரும்பி அணிந்துகொண்டார். 

அலெக்ஸாண்ட்ராவைத் தொடர்ந்து மகாராணி மேரியும், மகாராணி எலிசபெத்தும் அடுத்தடுத்து கோஹினூரை அணிந்தனர்.

ஆனால், 1952-இல் பொறுப்பேற்ற மகாராணி இரண்டாம் எலிசபெத் கோஹினூரை சட்டை செய்யவில்லை. யார் அணிந்தாலும் கோஹினூர் ஆபத்தைத் தரும் என அவர் நம்பினார். அந்த நம்பிக்கை 2022, செப்டெம்பர் எட்டாம் நாள் வரை தொடர்ந்தது. 

நீங்கள் யூகிப்பது சரி தான். தன்னுடைய 96 வது வயதில் காலமான மகாராணி இரண்டாம் எலிசபெத், சாகும்வரை கோஹினூரை அணியவே இல்லை. இக்கட்டுரையின் முதல் வரியில் குறிப்பிட்டிருப்பதைப் போல, அவர் இறந்த அடுத்த நாளே கோஹினூரை இந்தியாவுக்கு மீட்டல் தொடர்பான விவாதங்கள் ஆரம்பித்தது.

*

1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது, கோஹினூரை இந்தியா வசம் ஒப்படைக்க வேண்டும் என ஜவஹர்லால் நேரு கோரிக்கை விடுத்தார். ஆனால், ‘கோஹினூர் வைரத்தை மகாராணி விக்டோரியாவிடம் தாமாக முன்வந்து பரிசளித்தார் மன்னர் துலீப் சிங். எனவே கோஹினூர் எங்களுக்குத் தான் சொந்தம்’ என்றது இங்கிலாந்து அரசு.

அதன் பின்னர், பல முறை கோகினூரை இந்தியாவுக்குக் கொண்டுவர முயற்சிகள் நடந்தன. ஆனால், எதுவுமே பலன் அளிக்கவில்லை. 

ரஞ்சித் சிங் காலத்தில் அவர் ஆண்ட பஞ்சாப் பகுதி, தற்போதை பாகிஸ்தானில் உள்ளது. எனவே, ‘நாமும் ஒரு துண்டைப் போட்டு வைப்போம்…’ என பாகிஸ்தானும் கோஹினூரைச் சொந்தம் கொண்டாட, வழக்கம் போல இங்கிலாந்து அரசிடம், ‘இருங்ங் பாய்ய்…’ என்ற பதிலே வந்தது.

இப்போது கோஹினூர் வைரம், இங்கிலாந்தின் ‘டவர் ஆஃப் லண்டன் (Tower of London)‌‌’ -இல் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

பதினொன்றாம் நூற்றாண்டில் ஆரம்பித்தப் பயணம்! கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், இன்றும் இந்த 21 கிராம் கல்லைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோமே. ஏன்? 

முன்பே சொன்னதைப் போல, கோஹினூர் அதிகாரத்தின் அடையாளமாக மாறிப்போனதுதான் காரணம். நீண்ட நெடும் இந்த வரலாற்றுப் பயணத்தின் ஆழத்தில், ‘அதிகாரம்’ என்ற சொல் நிலைத்திருக்கிறது. இப்பயணம் இன்னமும் நீளும். இன்னும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தாலும், கோஹினூரின் ஒப்பற்ற ஒளி குறையப் போவதில்லை. ஏனெனில் அது சாதாரண வைரம் அல்ல, ‘கோஹினூர்’ வைரம்.

References:

1. Dalymple, William and Anand, Anita; Koh-i-Noor: The History of the World’s Most Infamous Diamond, Bloomsbury, 2017.

2. Leela Kohli, Fascinating history of world’s best diamonds, The Northern Star lismore, 2013.

3. Koh-i-Noor ‘Mountain of Light’ article by Satwinder Kaur, Assistant Professor in History, Swift Technical Campus, Punjab, India.

4. Continental Journey of a Cursed Diamond – The Koh-i-Noor, Faiza Mustafa.

5. கோஹினூர், உலகின் புகழ்பெற்ற வைரத்தின் கதை – ராம் அப்பண்ணசாமி, கிழக்கு பதிப்பகம்.

-sarathkumarwrites@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button