இணைய இதழ் 115சிறுகதைகள்

அஸ்தி – சின்னுசாமி சந்திரசேகரன்

சிறுகதை | வாசகசாலை

அந்த மருத்துவமனைக்குள் நர்ஸ் பிரேமா நுழைந்தபோது தன் சொந்த வீட்டில் நுழையும் மகிழ்ச்சியும், கிளர்ச்சியும் அவள் மனதினுள் ஏற்பட்டது. எல்லோருக்கும் பிடிக்காத டெட்டால் நெடியும், அழுகைக் குரல்களும், அழுக்கு உடை அணிந்து சோக முகத்துடன் வலம் வரும் கீழ்த்தட்டு மனிதர்களும், அரசு மருத்துவமனையின் தவிர்க்க முடியாத அவலங்களும் அவளுக்கு மட்டுமே பிடித்தமையாக அமைந்தது ஒரு ஆச்சரியமான விசயம்தான். ஹெட் நர்ஸின் அறைக்குச் சென்று கையொப்பம் இட்டு விட்டு, தனக்கு பணி ஒதுக்கப்பட்ட வார்டை நோக்கி நடந்தாள் பிரேமா.                      

வார்டில் போடப்பட்டிருந்த கட்டில்களில், ஒரே ஒரு கட்டில் தவிர மற்ற எல்லா கட்டில்களிலும் நேற்றுப் பார்த்த நோயாளிகளே இருந்தனர். புதிதாக ஏழாம் நம்பர் பெட்டில் ஒரு பெரியவர் சோர்வாக கண்ணை மூடிப் படுத்திருந்தார். மற்ற நோயாளிகளிடம் சினேகமாக ஒரு புன்னகையை வீசி விட்டு, ஏழாம் நம்பர் படுக்கையை நெருங்கினாள் பிரேமா. கேஸ் ஷீட்டை எடுத்துப் பார்த்தபோது அந்தப் பெரியவரின் பெயர் ராமசாமி என்பதும், இருதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலைமையில் அவர் தன் கடைசி கால கட்டத்தில் இருப்பதும் தெரிந்தது.                                              

அரவம் கேட்டு கண் விழித்த ராமசாமி, பிரேமாவைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். திரும்ப புன்னகைத்த பிரேமா,                            ‘அப்பா.. என்னோட பெயர் பிரேமா… நர்ஸ்… உங்க உடம்பு எப்படி இருக்கு?’ என்றாள் கனிவாக.                                 

‘ஏதோ இருக்குதும்மா… நாட்களை எண்ணிக்கிட்டிருக்கேன்…’ என்றார் புன்னகையுடன்.

‘ஏம்ப்பா அப்படி சொல்றீங்க? சீக்கிரம் குணாமாயிரும் உங்களுக்கு…’ என்றாள் பிரேமா நம்பிக்கையூட்டும் தொனியில்.                         பிரேமாவைப் பார்த்து புன்முறுவலுடன், ‘நான் அதிக நாள் இருக்க மாட்டேனம்மா..’ என்றவர், பிரேமாவை உற்றுப் பார்த்து விட்டு,              ‘நீ சாயலில் என் சின்னப் பெண்ணைப் போலவே இருக்கிறாய்..’ என்றார்.     அவரையும் மீறி அவரின் கண்களின் ஓரத்தில் நீர் கசிந்தது. பிரேமாவிற்கும் ஏனோ அவரிடம் இன்னும் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது.             

‘அப்பா, வேலையை முடித்து விட்டு, பத்து மணிக்கு மேல் வருகிறேன். பேசலாம்..’ என்று கூறி, ஆறுதலாக அவரின் உள்ளங்கையைப் பற்றி விடை பெற்றாள்.            

பணிகள் முடிய காலை பதினொரு மணி ஆயிற்று. ராமசாமி அடிக்கடி திரும்பி அவள் சுறுசுறுப்பாக சிரித்த முகத்துடன் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தார். வேலைகளை முடித்து விட்டு ராமசாமியின் அருகில் ஸ்டூலில் அமர்ந்து கொண்டே கேட்டாள்,                         ‘உங்களுக்கு எத்தனை குழந்தைங்கப்பா?’ என்றாள்.            ‘இரண்டு பெண் பிள்ளைகள் அம்மா… இருந்தாலும் இன்றைய நிலைமையில் நான் அநாதை..’ என்றார்.                          

‘என்னப்பா சொல்றீங்க? இரண்டு பெண்கள் இருக்கும்போது எப்படி நீங்க அநாதை ஆவீங்க?’ என்றாள் பிரேமா.

ஒரு பெருமூச்சுடன் சன்னமான குரலில் ஆரம்பித்தார் ராமசாமி. ‘இங்கிருந்து நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டி கிராமம்தான் எனது சொந்த ஊர். எனக்கு விவசாயம் தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. பெண்கள் இருவரையும் வளர்த்தி, கல்யாணம் செய்து கொடுத்து முடிக்கும்போது, இருந்த இரண்டு ஏக்கர் விவசாய நிலமும் கடனில் போய்விட்டது. எப்படியோ விவசாயக் கூலிக்குப் போய் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும்போது என் மனைவியும் என்னை விட்டுப் போய் விட்டாள். பக்கத்து ஊரில் இருந்தாலும் இரண்டு பெண்களும் என்னைப் பார்க்க வருவதில்லை..’ என்றவர் கொஞ்சம் மூச்சு வாங்கினார்.              ‘

‘உங்கிட்ட எல்லாம் சொல்லணும் போல இருக்கும்மா… இரண்டு பெண்களையும் பக்கத்து கிராமங்களில் விவசாயம் செய்யும் பையன்களுக்குத்தான் கட்டிக் கொடுத்தேன். பெரியவள் பிறப்பிலிருந்தே கடுகடுப்பான குணத்துடன்தான் வளர்ந்தாள். சின்னவள் உன்னைப் போல அருமையான, பாசமான பெண். ஆனால், அவளுக்கு வாய்த்த புருசனோ காசாசை பிடித்த பைத்தியக்காரன். என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும், பெரிய பெண்ணும், சின்ன மாப்பிள்ளையும் என் உறவைத் துண்டித்துக் கொண்டனர். அவர்களின் குடும்பத்தினரைக் கூட அண்ட விடுவதில்லை..’ என்றவர்,

‘நீ செத்தாலும் நாங்க வரமாட்டோம்னு சபதம் போட்டுட்டாங்கம்மா..’ என்றார். கொஞ்சம் மூச்சு வாங்கி இளைப்பாறி விட்டுச் சொன்னார்,              ‘சின்னவ மாத்திரம் அடிக்கடி என் நினைவுக்கு வருவாள். அவள் அப்படியே அவளோட அம்மா மாதிரி..’ என்றவர் கண்ணை மூடி மெளனத்தில் ஆழ்ந்தார். பழைய நினைவுகளில் மூழ்கி விட்டார் என்று தெரிந்தது.                     

அடுத்த இரண்டு நாட்களில் ராமசாமிக்கும், பிரேமாவிற்குமான மன நெருக்கம் கூடியது. அதுவரை யாரிடமும் கூறாத தன் இரண்டு மகள்களின் முகவரிகளைக் கூட பிரேமாவிடம் கொடுத்து விட்டார். நாளுக்கு நாள் அவரிடம் கூடுதல் தளர்வு காணப்பட்டது.       ஒரு நாள் பிரேமாவிடம் மெதுவாகக் கேட்டார்,                 ‘ஏம்மா, என்னை மாதிரி அநாதைகள் செத்துட்டா என்ன பண்ணுவாங்க? எங்காவது கொண்டு போய் வீசி விட்டுறுவாங்களா?’ என்றார் அப்பாவியாக.              

‘ஏம்பா வீணா கற்பனை பண்றீங்க?.. அப்படியெல்லாம் சக மனிதர்களும், அரசாங்கமும் செய்ய மாட்டாங்க. நான் இருக்கிறேன், நீங்க கவலைப்படாதீங்க..’ என்று பிரேமா ஆறுதல் கூறியவுடன் ஒரு நிம்மதி தெரிந்தது அந்த மனிதரின் முகத்தில்.

அன்றே தமிழரசி அக்காவிடம் போனில் பேசினாள் பிரேமா. தமிழரசி அந்த நகரத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்பவள். தனது முப்பது வயதில், ஒரு விபத்தில் கணவனையும், ஐந்து வயது மகனையும் இழந்த பிறகு, வயிற்றுப் பிழைப்பிற்காக காய்கறி வியாபாரமும், மன நிறைவிற்காக அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் சேவையையும் செய்து வருபவள். அவளது சுய சம்பாத்தியமும், அவ்வப்போது கிடைக்கும் நன்கொடைகளும் கொண்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் மன நிம்மதிக்காக அந்தப் பணியைச் செய்து வருபவள் தமிழரசி.             

ராமசாமியின் கதையையும், கவலையையும் தமிழரசி அக்காவிடம் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டாள் பிரேமா.                             

ஒரு நிமிடம் யோசித்த தமிழரசி, ‘வாரிசுகள் இருக்கும்போது, நாம உடலை வாங்க சட்டம் இடம் கொடுக்காதே பிரேமா… ம்…வேணும்னா ஒண்ணு செய். எங்கள் தகப்பனின் இறுதிக் காரியங்களை யார் வேண்டுமானாலும் செய்து கொள்ள முழு மனதுடன் சம்மதிக்கிறோம்னு இரண்டு பெண்களிடமும் உறுதிக் கடிதம் எழுதி வாங்கிட்டு வா. இங்கே லோக்கல் போலீசில் செய்ய வேண்டிய நடைமுறைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.’ என்றாள். ‘சரிங்க அக்கா…நான் அப்புறம் கூப்பிடுகிறேன்..’ என்று தொலைபேசியைத் துண்டித்தாள் பிரேமா.                                          

கரடு முரடான கிராமத்துப் பாதையில் தன் இரு சக்கர வாகனத்தை நிதானமாக ஓட்டிக் கொண்டிருந்தாள் பிரேமா. விசாரித்ததில் இன்னும் ஐந்து நிமிடத்தில் ராமசாமியின் பெரிய பெண்ணின் வீட்டை அடைந்து விடலாம் என்று தெரிந்தது. வீட்டின் உள்ளே ஒரு பெண்ணின் குரல் உயர்ந்தும், ஆணின் குரல் பயந்தும் ஒலித்துக் கொண்டிருந்தது. பிரேமா குரல் கொடுத்ததும் வந்த பெண்தான் ராமசாமியின் மூத்த பெண்ணாக இருக்க வேண்டும். கண்களில் ஒரு வித வெறுப்பும், கோபமும் நிரந்தரமாகக் குடியிருந்தன.                              

‘நான்தான் ராமசாமியின் மூத்த பெண்… என்ன வேணும் உனக்கு?’ என்றாள் மரியாதை இல்லாமல்.                               

‘உங்க அப்பா டவுன் ஆஸ்பத்திரியில் சாகக் கிடக்கிறார்… உங்களுக்கு தகவல் சொல்லலாம் என்று வந்தேன்..’ என்றாள் பிரேமா.               ‘அப்பனா? அப்படியெல்லாம் யாரும் இல்லை எனக்கு. அந்த ஆளை தலை முழுகி ரொம்ப நாள் ஆச்சு… செத்தா தூக்கி வீதியில் எறி…இனி என் அப்பன் பேரைச் சொல்லிக்கிட்டு இங்க வராதே..’ என்றாள் நிஷ்டூரமாக.             

‘அப்படின்னா, இந்த லெட்டரில் கையெழுத்துப் போட்டுக் கொடுங்க… அவரின் இறுதிக் காரியத்தை நாங்களே செய்து கொள்கிறோம்…’ என்று பிரேமா சொன்னவுடன், கொஞ்சம் கூடத் தயங்காமல் கடிதத்தை வாங்கி, கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டு வீட்டுக்குள் சென்று படாரென்று கதவைச் சாத்தித் தாள் வைத்துக் கொண்டாள் அந்த சின்ன சொர்ணாத்தாள்.                         

இரண்டாவது பெண்ணின் வீட்டிலும் கிட்டத்தட்ட இதே வரவேற்புத்தான் கிடைத்தது பிரேமாவிற்கு. ஆனால் அவளிடம் கடுகடுத்தவன் ராமசாமியின் இரண்டாவது பெண்ணின் கணவன். கடிதத்தைப் பிரேமாவிடம் இருந்து பிடுங்குவது போல் வாங்கி, வீட்டுக்குள் சென்று மனைவியிடம் கையெழுத்து வாங்கிக் கொடுத்தான் அந்த முரடன். வீட்டின் உள்ளே ராமசாமியின் இரண்டாவது பெண் விசும்பும் ஒலியும் அவளைச் சத்தமிட்டு அடக்கும் அவளின் கணவனின் குரலும் காற்றில் கலந்து கேட்டது.

அடுத்தமுறை ராமசாமியின் அஸ்தியோடுதான் அவரது மகள்களைத் தேடிச் சென்றாள் பிரேமா. ராமசாமி இறந்ததை அறிவிக்க வேண்டியது தன் கடமை என்பதால், பிடிக்காவிட்டாலும் கூட அந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது அவளுக்கு. மூத்த பெண்ணிடம் ராமசாமியின் மரணத்தை அறிவித்து விட்டு, அவரின் அஸ்தி உள்ள சொம்பை திண்ணையில் வைத்துவிட்டுத் திரும்பும் போது, அஸ்திச் சொம்பு எகிறி வந்து அவள் முன் விழுந்தது.                              ‘அந்த ஆளு எனக்கு அப்பனே இல்லைங்கறேன்… அஸ்தியைக் கொண்டு வந்து வைக்கிறே? இனி இந்தப் பக்கம் வந்தே நடக்கறதே வேற..’ என்று கர்ஜித்தாள் ரெளடி சொர்ணாத்தா.                                  

சின்னப் பெண்ணின் வீட்டில் ராமசாமியின் மரணத்தை அறிவித்தவுடன், வீட்டின் உள்ளிருந்த சின்ன மகள் ‘அப்பா..’ என்று கதறும் அழுகுரல் கேட்டது. ஒரு ஜீவனாவது மனித நேயத்தோடு இருப்பதைப் பார்த்து கொஞ்சம் ஆறுதலாயிற்று பிரேமாவின் மனம். ஆனால், அவளின் கணவனோ பிரேமாவை இடத்தை விட்டு விரட்டுவதிலேயே குறியாக இருந்தான்.                             

ராமசாமியின் அஸ்தி உள்ள சொம்பை எடுத்துக் கொண்டு கனத்த மனதுடன் பிரேமா வீதியில் மெதுவாக நடந்தாள்.                                     ஒரு சிறுவன் வேக வேகமாக சைக்கிளில் வந்து, இளைப்பு வாங்கிக் கொண்டு இறங்கினான். பத்து வயது இருக்கலாம்.                              ‘அக்கா… தாத்தா அஸ்தி கொண்டு வந்தவங்கதானே நீங்க? அம்மா அஸ்தியை வாங்கிக்கச் சொன்னாங்க..’ என்றான்.                    ராமசாமியின் சிறிய பெண்ணின் பையன் என்பதைப் புரிந்து கொண்டாள் பிரேமா. மெளனமாக பெட்டிக்குள் இருந்த அஸ்தி சொம்பைக் கொடுத்தவுடன்,         ‘ஒரு நிமிசம் இருங்க வரேன்..’ என்று பக்கத்தில் இருந்த தோட்டத்துக்குள் ஓடினான். சிறிது நேரத்தில் திரும்பி வந்தவன்,                      ‘அம்மா, தாத்தாவின் அஸ்தியை அவர் நட்டு வைத்த எலுமிச்சை செடியின் வேரில் தூவச் சொன்னாங்க… அப்பாவுக்குத் தெரியாமல் வந்தேன்… நா வரேன்..’ என்று நகர்ந்தவன் பிரேமாவைப் பார்த்து, ‘அக்கா, நீங்க எங்க அம்மா மாதிரியே இருக்கீங்க..’ என்றான்.         சாம்பலாய்க் கிடக்கும் ராமசாமியே எழுந்து வந்து ‘அம்மா…நீ என் சின்னப் பொண்ணைப் போலவே இருக்கிறாய்..’ என்று சொல்வதைப் போலவே இருந்தது.             

தன்னை விட வயதில் மூத்த அக்கா எதற்காக தன்னைக் கும்பிட்டு நிற்கிறார்கள் என்று புரியாமல் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நடந்தான் அந்தச் சிறுவன். -chinnasamychandrasekharan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button