
பொம்மியும் பொம்மையும்
சில நாட்களாகவே ஒற்றைத்தலைவலி. மைக்ரீன்தான். என்னைச் சந்திப்பவர்களின் இவர்தான் முதன்மையானவர். மாதம் ஒரு முறை வந்துவிட்டு போவார். சில சமங்களில் ஒரே நாளில் கிளம்பிவிடுவார்; சில சமயங்களில் ஒருவாரம்வரை இருந்துவிட்டு, என்னைப் படுத்தியெடுத்துவிட்டு போவார்.
ரொம்பவும் பழகிவிட்டதால், அவர் வருவதற்கான அறிகுறிகள் தென்படும்போதே கொஞ்சம் சூதானமாக இருந்து தப்பித்துக் கொள்வேன்.
சமீபத்தில் ஒரு கட்டுரையை எழுதி கொண்டிருந்த சமயத்தில், அவர் வரும் அறிகுறியை தவறவிட்டுவிட்டேன். வந்திருந்தவர் மண்டைக்குள்ளேயே குடித்தனம் போட்டுவிட்டார். வெளிச்சத்தை லேசாகப் பார்த்தாலும் மண்டைக்குள் தாண்டவம் ஆடிவிடுவார். நல்லவேளையாக மூக்கு கண்ணாடியை மாற்றியிருந்தேன். ஓரளவு வெளிச்சத்தில் இருந்து தப்பித்தேன்.
இயந்திர மனிதன் போல நடக்கும் போதும் உட்காரும்போதும் தலையை நேராகவே வைத்துக்கொள்வேன். தலை குனிந்தால், தலையோடு நானும் குனிந்து குட்டிக் கரணம் அடிப்பது போல ஒரு மயக்கம் உண்டாகி அப்படியே விழுந்துவிடுவேன். விழுந்தும் இருக்கிறேன். விபத்தொன்றில் ஏற்கனவே அடிவாங்கிய தலை என்பதால் மைக்ரீனுக்கு கூடுதல் வசதி; கூடுதல் வலி.
வீட்டில் பொம்மி விளையாடிக்கொண்டிருந்தாள். அவளுக்கென்று பொம்மைகள் இருந்தாலும் சில நாட்களுக்கு முன் ‘குழந்தை பொம்மை’ ஒன்றைக் கேட்டிருந்தாள். விலை அதிகமில்லை என்பதால் தாமதிக்காது காரணம் சொல்லாது வாங்கி கொடுத்தோம். குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடும் போது குழந்தைகள் அவற்றின் தாயாக மாறிவிடுகின்றார்கள். கொஞ்சுகிறார்கள். அதட்டவும் செய்கிறார்கள்.
நேற்று காலை, தலைவலியுடன் வீட்டில் நடமாடிக்கொண்டிருந்தேன். பொம்மி அவளின் குழந்தை பொம்மையைக் குளிப்பாட்டி துவட்டிக் கொண்டிருந்தாள்.
வீட்டு வரவேற்பறையில் பொம்மிக்கென்று சின்னதாய் ஒரு மெத்தையைப் போட்டிருக்கிறோம். பல நேரங்களில் பகலில் அங்கே அவள் பால் குடித்தபடி படுப்பாள்.
அதே இடத்தில் குழந்தையை படுக்க வைத்திருந்தாள்.
பொம்மி என்னிடம் வந்து பால் வேண்டும் என கேட்க, நானும் ஐந்து கரண்டி மாவிற்கு ஐந்து லிட்டர் வெதுவெதுப்பான நீரை கலந்து, கலக்கி கொண்டுவந்து கொடுத்தேன். அவள் படுக்க வேண்டும் என்பதற்காக கீழே குனியாமல் அங்குள்ள பொம்மையை காலால் தள்ளிவிட்டேன். அது மெத்தையில் இருந்து வெளியில் வந்து விழுந்தது.
திடீரென பொம்மியின் அலறல் சத்தம். என்ன ஆனது என பயந்து அவள் பக்கம் சென்றேன். பொம்மி அவளது பால் பாட்டிலை கீழே போட்டுவிட்டு ஓடினாள்.
ஓடியவள் மெத்தையில் இருந்து தள்ளி விழுந்த பொம்மையைத் தன் மடியில் வைத்தபடி மேலும் அழத்தொடங்கியவள், தனது பிஞ்சுக் கைகளை அந்தக் குழந்தையின் தலையில் வைத்து தேய்த்தபடி ஏதேதோ மொழியில் சமாதானம் செய்தாள்.
பின் அங்கிருந்தபடியே என்னைப் பார்த்து அழுதபடி ஏதோ சொல்கிறாள். கையை நீட்டி என்னை அடிப்பது போல செய்கை காட்டியவள் மீண்டும் அந்தப் பொம்மையைச் சமாதானம் செய்கிறாள்.
நான் பொம்மையின் அருகில் செல்வதையும் அவள் விரும்பவில்லை. பொம்மையைத் தூக்கிக்கொண்டு அம்மாவிடம் ஓடினாள்.
அதோடு என்னிடம் வரவேயில்லை. பாலையும் குடிக்கவில்லை. அழுதபடி பொம்மையுடன் தூங்கிவிட்டாள். எழுந்ததும் சரியாகிவிடும், அவளும் மறந்துவிடுவாள் என நம்பிக்கொண்டேன். நடக்கவில்லை.
எழுந்தும் கூட அவள் என்னிடம் வரவில்லை. இல்லாள்தான் ஒரு யோசனை சொன்னாள். அதுதான் பொம்மியை சமாதானம் செய்யும் என்றாள். எனக்கு அதில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை.
பொம்மியிடம் சென்றேன். அவளருகில் அமர்ந்தேன். அவள் என் பக்கம் திரும்பவேயில்லை. அவள் கையில் இருக்கும் குழந்தையிடம் மன்னிப்பு கேட்டேன். அந்தக் குழந்தையின் தலையைத் தடவி கொடுத்தேன். அப்படியே அணைத்து முத்தமிட்டு மீண்டும் பொம்மியிடம் கொடுத்தேன். குழந்தையை வாங்கிய பொம்மி; அதனிடம் அவள் மொழியில் ஏதோ பேசினாள். குழந்தை ஏதும் சொல்லியிருக்கக்கூடும்.
பொம்மி சிரித்தபடி குழந்தையைக் கீழே படுக்க வைத்துவிட்டு என்னை அணைத்துக் கொண்டாள். கண்ணத்தில் முத்தமிட்டபடி என்னை தூக்கச் சொன்னாள். எசமானி சொன்னபடியே அவளைத் தூக்கியபடி வீடு முழுக்க வட்டமிட்டபடி அவளுடன் எனக்கு தெரிந்த ஒரே நடனத்தை ஆடுகிறேன்.
இப்போது மைக்ரீன் வலி மறந்தே போனது. உங்களுக்கும் அது இந்நேரம் மறந்திருக்கும்.
அது இருக்கட்டும். இப்போது எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான். அந்தப் பொம்மை என்னை மன்னித்ததா? அது பொம்மியிடம் என்ன சொல்லியிருக்கும்? பொம்மி அந்தப் பொம்மையுடன் அப்படி என்னதான் பேசியிருப்பாள். என்றாவது ஒரு நாள் அந்தப் பொம்மையும் என்னை அப்பா என்றழைத்தால் நான் என்ன செய்யட்டும்? நீங்களே சொல்லுங்கள்….