இணைய இதழ் 115தொடர்கள்

நான் – ஒரு போஹேமியன் பயணி;3 – காயத்ரி சுவாமிநாதன்

தொடர் | வாசகசாலை

யமுனையை சுமக்கும் மதுரா

பல இடங்களுக்கு எனது விருப்பப்படி பயணம் செய்பவள் நான். எப்போதும் போல ஒரு அழகிய மாலைப் பொழுதில்தான் மதுரா சென்றேன். அதற்கு முன்பாக டெல்லியில் இருந்து புறப்பட்டேன். டெல்லியிலிருந்து மதுரா சென்றடைய கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக ஆகும். எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல்தான் சாலையிலேயே தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தேன். மதுரா மேற்கு உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இது ஆக்ராவிற்கு அருகில் யமுனை போப் பகுதியில் அமைந்துள்ளது. ‘கிருஷ்ணர்’ என்ற பெயரைக் கேட்டாலே எப்போதும் எனக்குள் ஒரு வசீகரமாகவே உணர்வேன். அப்படி, எனக்குள் வசீகரமாக இருக்கும் இந்த கிருஷ்ணர் பிறந்த இடத்திற்கே சென்று அவரை நேரில் பார்த்த சுவாரஸ்யம் அடைந்து, பிறகு அவர் இடத்திலிருந்தே அவரைக் கொண்டாடிய அழகான அனுபவங்களை இந்த அத்தியாயத்தின் மூலமாகப் பகிர்கிறேன். எனது சிறு வயதிலிருந்தே என்னுடைய தாத்தா திரு.ஞானசம்பந்தன் மற்றும் எனது பாட்டி திருமதி.சரோஜா இருவருமே கிருஷ்ணரைப் பற்றி என்னிடம் நிறையத் தகவல்களை கூறிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் வீட்டிலும், பகவத் கீதை இருக்கின்ற வாசகங்கள் மாட்டியிருக்கும். திடீரென்று கிருஷ்ணர் பற்றி ஒருநாள் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். கிருஷ்ணர் கதைகள் இந்து மதத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. கிருஷ்ணர் மதுராவில் பிறந்ததாகக் கூறுகிறார்கள். ஆனால்,கிருஷ்ணர் அங்குதான் பிறந்தார் என்பதற்கு சான்றுகள் இல்லை என்றாலும், எனது தாத்தா என்னிடம் சில கதைகள் மற்றும் இதிகாசங்களைக் கூறும்போது, அவரது பிறப்பிடம் மதுரா என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.

பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டிரடிப்பொடி ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் என 5 ஆழ்வார்கள் 50 பரசுரங்கள் பாடிப் போற்றி வணங்கிய இடம். அயோத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவெந்திகா, புரித்வாராவதி சைவ சப்தைதே மோகஷதாயிகா என்று குறிப்பிடப்படும் 7 மோஷம் அருளும் தலங்களில் மதுராவும் ஒன்று. மதுராவிலிருந்து 11 கிமீ தூரத்தில்தான் பிருந்தாவன் அமைந்துள்ளது. ஆனால், அங்கே நான் செல்லவில்லை. கிருஷ்ணர் பிறந்த கோவிலின் அருகே சில மசூதிகளைப் பார்த்தேன். அங்கே ஒருவரிடம் கேட்டேன், “எப்படி,கிருஷ்ணர் கோவிலின் அருகே மசூதி இருக்கிறது?” என்று? பதிலாக அவர் ஒன்று கூறினார், “கி.மு.6ஆம் நூற்றாண்டிலிருந்து மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாறு முழுவதும் பலமுறை அழிக்கப்பட்டன. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல படையெடுப்பாளர்களால் இந்த ஆலயம் அழிக்கப்பட்டு 5 முறை இடிக்கப்பட்டது. கி.பி்400-ல் குபுது பேரரசர் சந்திரகுப்ர விக்ரமாதித்யாவின் கீழ், ஆலயம் 2-வது முறையாக மீண்டும் கட்டப்பட்டது. அக்காலத்தில் இந்த ஆலயத்தின் அழகைப் பற்றி விவரிக்க ஓவியங்களோ சிற்பங்களோ எதுவும் இல்லை. பிறகு 16 ஆம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட சிக்கந்தர் லோடி இந்த ஆலயத்தை மீண்டும் அழித்தார். பின்பு முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் 1169-1670 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தை இடித்து அதே இடத்தில் ஆலயத்தில் இருந்த பொருட்களை வைத்து, ‘ஷாஹி ஈத்கா ஜாமி மஸ்ஜீத்’ மசூதியைக் கட்டினார். இன்னும் அந்த மசூதி உள்ளது. 1803 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மதுராவை ஆட்சி செய்தனர்”

“பிறகு எப்போது இது புனித இடமாக மாறியது?” எனக் கேட்டேன். “1965-ஆம் ஆண்டின்போது மீண்டும் கிருஷ்ணர் ஆலயத்தைக் கட்டினார்கள் என்று பதிலளித்தார். இங்கே, கிருஷ்ணரின் ஜென்மபூமியில் கிருஷ்ண ஜென்மபூமி ஆலயம், துவாரகாநாத் ஆலயம், கீதா மந்திர் உள்ளிட்ட பல ஆலயங்கள் உள்ளன. முதலில் ஜென்மாஷ்டமி ஆலயத்திற்குச் சென்றேன்.

காலப்போக்கில் இந்த ஜென்மாஸ்தனம் ஒரு அழகிய ஆலயமாகவே உருவாகிவிட்டது. ஆலயத்தின் உள்ளே செல்வதற்கு முன் என்னைக் கண்காணித்துதான் உள்ளே செல்ல அனுமதித்தார்கள். உள்ளே புகைப்படம், தொலைபேசி எடுத்துச் செல்ல மறுக்கப்பட்டது. முதலில் கிருஷ்ணர் பிறந்த இந்தச் சிறையின் அறையைப் பார்க்க வேண்டும் என்று மெதுவாக சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டே நடந்தேன். அந்த இடம் மிகவும் குறுகலாகக் காணப்பட்டது. இந்த ஆலயத்தில் பலகையுடன் கூடிய சிறை போன்ற ஒரு அமைப்பைக் கண்டேன். அந்தப் பலகையில்தான் கிருஷ்ணர் பிறந்தார் எனக் கூறினர். உலகிலுள்ள மிகப் புனிதமான இடங்களில் தலையாய இடமான இங்குள்ள, ‘கர்பக்ருஹா’ (கல்சாவால்) சிறையில் துவாபர யுகத்தில் மாதாதேவகி, வசுதேவருக்கு 8-வது மகனாக கிருஷ்ணர் பிறந்தார். கிருஷ்ணர் பிறந்ததற்கான நோக்கம், தனது தாய்மாமன் கம்சனைக் கொன்று, அவரது தீய செயல்களில் இருந்து மக்களை விடுவிப்பதாக நம்பப்படுகிறது. அதன் அருகில் கிருஷ்ணர் பிறந்தபோது நடந்த சம்பவங்கள் எல்லாம் புகைப்பட வடிவில் சுவற்றில் பார்த்தேன். மேலும் அவற்றில் கிருஷ்ணரின் வெவ்வேறு அவதாரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணர் இங்கே பிறந்தது மட்டுமல்ல, அவர் ராதையோடு நர்த்தனம் புரிந்தது, கோபியரோடு விளையாடிய தருணங்கள், இவற்றைப் பற்றி அங்கே ஒவ்வொன்றாக ஒருவர் எனக்கு எடுத்துரைத்தார். கிருஷ்ணரின் இளமைப் பருவம் கழிந்த இடம் இது. கிருஷ்ணரை நேரில் பார்க்க மட்டுமே எனது கண்கள் காத்துக் கொண்டிருந்தன. உள்ளே சென்ற பிறகு, கிருஷ்ணர் ஆலயத்தின் பிரம்மாண்டமான கட்டிடங்கள் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தின. ஆலயத்தின் அமைதியான சூழலில் கிருஷ்ணரின் பிரசன்னத்தை என்னால் நன்கு உணர முடிந்தது.

மதுரா நகரத்தின் தெருக்களில் வண்ணங்கள், இசை மற்றும் மற்றும் ராதாவுடன் கிருஷ்ணர் லீலைகள் செய்யும் போது பர்ஸானா பெண்கள் அவர்களை அடிக்க தடி எடுத்து விரட்டுவது வழக்கம். இவையெல்லாம் என் விழியின் முன் அரங்கேறிக் கொண்டிருந்தன. பிறகு, எங்கிருந்தோ உரத்த குரல்கள் செவியில் கேட்டன. என்னவென்று பார்த்தபோது, மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஓரிடத்தை நோக்கி, “கிருஷ்ண பகவான்க்கி ஜே” என்று கூறினர். பின்பு, எனக்குள் மிகப்பெரிய தவிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது. “அடேய் என் கிருஷ்ணனே, எங்கே நீ இருக்கிறாய்?” எனப் பெருங்குரலோடு சொல்லிச் சொல்லி அங்கேயே திரிந்து தேடி அலைந்துக் கொண்டிருந்தேன். அங்கிருப்பவர்கள் என்னை வித்தியாசமாகத்தான் பார்த்தார்கள். பின்பு, கிருஷ்ணர் பெரிய கவுன் உடை அணிந்துகொண்டு தன் துணையோடு காட்சி கொடுத்தார். மெய் சிலிர்த்துப் போனேன். எனது கண்களும் முகமும் பேரானந்த்தத்தில் இருந்தன. கிட்டத்தட்ட ஒரு நிமிடம் மெய்மறந்து கிருஷ்ணரையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனது சிறிய வயதிலிருந்தே எனக்குள் ஒரு அங்கமாகவே இருக்கிறார் கிருஷ்ணர். அவரை நேரில் பார்க்கும்போதெல்லாம் எனக்குள் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அங்கேயிருந்து விடுபடவே மனது இல்லை. அந்த ஒரு நிமிடம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.

மதுரா நகரத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். மதுரா ஒரு சிறிய ஊர். கடைகள் மிகக் குறைவாகவே காணப்பட்டன. மதுராவின் சாலையோரம் போகும்போது நிறைய பேர் மாடுகள் வளர்ப்பதைப் பார்த்தேன். கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையானது இந்த மதுரா நகரம். நான் மதுராவிற்குச் சென்ற பிறகு ஒரு சில புதிய தகவல்களையும் சேகரித்தேன். இங்கே இந்து மதத்தினர் மட்டும்தான் மதிக்கப்படுகிறார்கள் என நினைத்திருந்தேன். ஆனால்,இங்கே பெளத்தர்களும் மதிக்கப்படுகிறார்கள் எனத் தெரிந்தது. ஆலயத்திற்குள் ஒரு அருங்காட்சியகத்தைப் பார்த்தேன். அதற்குள், இந்த இந்து மதத்தை ஆதரிக்கும் அண்டை பகுதிகளில் தோண்டி எடுக்கப்பட்ட பல பழங்காலச் சிலைகள், சிற்பங்கள், தங்கம், செம்பு, வெள்ளி நாணயங்கள், டெரகோட்டா வேலைகள், களிமண் பொருட்கள், பழங்காலத்து மட்பாணங்கள், ஓவியங்கள் இருந்தன. அவற்றின் மூலமாக மதுரா நகரத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை அறிய முடிந்தது. முக்கியமாக மதுரா இயற்கை, மதம், கலாச்சாரம் இவற்றின் கவர்ச்சி காரணமாக இந்தியாவிலேயே அதிகமாகப் பார்வையிடப்படும் இடமாக விளங்குகிறது.

மதுராவின் உணவுகளை வெகுவாக ரசித்தேன். இனிப்பு, சூடான பால்பேடா ஆகிய பண்டங்கள் எனக்கு மிகவும் பிடித்தன. மதம் சார்ந்த நகரத்தில், மத மற்றும் புனிதப் பொருட்கள் விற்கும் ஏராளமான கடைகள் இருந்தன. வளமான பாரம்பரியம், பழமையான நகரம், யமுனை ஆற்றின் கரை, எதையும் பிடுங்குவதற்குப் பெயர்போன குரங்குகளோடு ஒரு விளையாட்டு, கிருஷ்ண ஜென்ம பூமி ஆலயம் என மறக்க முடியாத பயணம் இது. இந்த நகரத்தில் பல புராணக் கதைகள் இருந்தாலும் இங்கே வந்த பிறகு நிறைய ஆராய்ந்தேன். இயற்கையான சுற்றுப்புறங்கள், அடர்ந்த மரங்கள் எல்லாம் மதுராவில் என்னை மிகவும் ஈர்த்தன. மதுராவில் வாழும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். நகரில் வசிக்கும் வைஸ்ய மக்கள், தொண்டு மற்றும் மருந்துகளின் சேவைக்காக வீடுகளை உருவாக்குகிறார்கள். எந்தவொரு உதவியும், முழுமையான உதவியாக வழங்கப்படுகிறதைக் காண முடிந்தது. முக்கியமாக அனாதைகள், விதவைகள், ஊனமுற்றோர், குழந்தை இல்லாதவர்களுக்கு மிகவும் உதவி செய்கிறார்கள். யாரும் எந்தவொரு நச்சுப் பண்டத்தையும் உட்கொள்ளாமல் அந்த நகரத்திலுள்ள ஒவ்வொரு நபரும் விதிகளைப் பின்பற்றி வருவதையெல்லாம் என்னிடம் கூறினார்கள்.

துவாரகாதீஷ் 1800 ஆண்டு பழமையான ஆலயம். கீதா மந்திர் ஒரு தனித்துவமான ஆலயம். சுவர்களில் பகவத் கீதையின் கல்வெட்டுகள் இருந்தன. மதுரா நகரத்தின் தெருக்களில் சுற்றித் திரிந்தேன். முக்கியமாக பழங்கால கட்டிடக்கலை, இடிந்துவிழும் பழைய வீடுகள் ஆகியவற்றைக் காண முடிந்தது. இந்த மதுரா உள்ளூர்வாசிகளின் நேசமான அன்பு எனக்கு முழுவதுமாகக் கிடைத்தது. மதுரா தெருக்களில் இருந்த உணவுகளை ருசித்து ரசித்துத் தீர்த்தேன். முக்கியமாக ஆலு, பூரி, சாட் அனைத்தையும் சுவைத்து உண்டேன்.

இந்தியாவின் ஏழு புனித நகரங்களில் மதுராவும் ஒன்றாகும். மதுராவில் நான் சென்ற இடமெல்லாம் தனித்துவமான மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை நிறைய கொடுத்தது. அங்கே திருவிழாவின்போது மக்களின் பேரார்வம், அன்பு மற்றும் உற்சாகம் ஆகியவற்றைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. நான் ஏன் எனது தேசாந்திரிப் பயணத்தின்போது சாலை வழியைத் தேர்ந்தெடுக்கிறேன்  என்றால், இந்தியாவின் நீளம் மற்றும் அகலத்தில் பயணிக்க சாலைகள் மிகவும் மகிழ்ச்சியான வழிகளாக எனக்கு அமைந்தன. எப்பொழுதும் பார்ப்பதற்கும், அனுபவிப்பதற்கும் ஏதோ ஒன்று இருந்துகொண்டே இருக்கிறது. மனமில்லாமல் மதுராவிலிருந்து விடைபெற்றேன், அழகான நினைவுகளை ஒரு புதையலாக எடுத்துக் கொண்டு..!

தொடரும்

gayathriswaminathan132@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button