
நேற்று சில மின்மினிகள்
எனது இரவுக்கு ஒளி சேர்த்தன
மின்மினிகளை விட்டுவிட்டு
ஒளியை மட்டும்
இன்றிரவுக்கும் சேர்த்து
இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறேன்
நாளைக்கும்
அதை நீட்டலாமென
கணக்கிட்டுக் கொண்டிருக்கிறேன்
என்னைப் பைத்தியக்காரன்
என்றுதானே நினைத்தீர்கள்?
நானும்
உங்களை
அப்படித்தானே
நினைத்திருக்கக் கூடும்?
எப்படியும் இன்றில்
இருக்கப் போவதில்லை நேற்றும் நாளையும்…
*
அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு
அன்று நான் சென்றபோது
அவ்வளவு மகிழ்ச்சி
எங்கு பார்த்தாலும்
வெறும் பொம்மைகளாக இருந்தன
அதே ஊர்த் திருவிழாவில்
என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு
என் மகன் வருகிறான்
அவ்வளவு பதற்றம்
எங்கு பார்த்தாலும்
வெறும் பொம்மைகளாக இருக்கின்றன
”ஐந்து ரூபாய்க்கு பொம்மை கிடைக்குமா ?”
அன்று அப்பா தேடிக் கொண்டிருந்தார்
”ஐம்பது ரூபாய்க்கு
என்ன பொம்மை கிடைக்கும்?”
இன்று நான் தேடிக் கொண்டிருக்கிறேன்
ஐந்திலிருந்து ஐம்பதாகும்போது
மகிழ்ச்சி பதற்றமாகிவிடுகிறது ஏழ்மைக்கு.
*
துடிதுடித்துக் கொண்டிருந்த பட்டாம்பூச்சிக்கு
இறுதியாய் எதன் மேலோ இருந்த
ஏதோவொரு
நம்பிக்கையின் மீதும்
ஏறி இறங்கியது அந்த வாகனம்.