
மணிமேகலா
என் ஜென்ம நட்சத்திரம் வானத்தில்
உதிப்பதற்கு முன்பே
உன்னை நேசிக்க ஆரம்பித்தேன்
பிரபஞ்சத்தின் ரகசியமொழிகள்
சூரிய மண்டலத்திற்கு அப்பாலிருக்கும்
இன்னொரு சூரிய மண்டலத்தில்
வாசிக்கப்பட்டன
உன் விழிகளின் இமைகள் வளரும்போது
பூமியில் பூக்கள் மலர்ந்தன
உன் விரல்களில் நகங்கள் வளர்ந்தபோது
இமயமலையில் அடுக்குகள் தோன்றின
உன் தோள்கள்
உன் கழுத்து
உன் தொடைகளின் வழியாக
நதிகள் உருவாகி
சமவெளி எங்கும் பச்சையமாய்
விடிந்தது
உன் ஜனனம் அறிவிக்கப்பட்ட
அந்த நாளில்
பெருநகரத்தில் ஒரு போதி விருட்சம்
மீண்டும் முளைத்தது
சித்தார்த்தனுக்கு ஏது வீடு?
ஏது உறவு?
பிக்குனியின் பிச்சைப் பாத்திரத்தில்
உன் எச்சில் வாசனை
ஆபுத்திரனைத் தேடி
அலையும் மணிமேகலா…
*
பாற்கடலின் கடைசி நொடிகள்
நீ வெளியேறிய அந்த இரவில்
கரிய மேகத்துண்டுகளால்
முகத்தை மறைத்துக் கொண்டேன்.
நீ விட்டுச் சென்ற இடி மின்னலுடன்
விடைபெறுகிறது மழைக்காலம்
பூஜை அறையில்
விழித்திருந்த ஆதிபராசக்தி
உன் பக்தியின் சுவாச மண்டலத்தை
புனிதப்படுத்த முடியாமல்
தற்கொலை செய்துகொண்டாள்
விந்துகளின் வாசனைகளைத் தேடி
அலைந்த
யோனிப் புற்றிலிருந்து
எட்டிப் பார்க்கின்றன
புணர்ச்சி விதியின்
ஒற்றுப்பிழையாய்
நெளிந்து கொண்டிருக்கும்
கருநாகக் குட்டிகள்
நீ வெளியேறிய அந்த இரவில்
கருகிய முல்லை
கலம்பகப் பாடலின்
நூறாவது பந்தல் தாண்டி
எரிகிறது புல்லாங்குழல்
தலைவிரிக் கோலமாய்
வாசலில் திருமகள் ஒப்பாரி
துரோகத்தின் பாடையில்
காலத்தின் பிணம்
சாப விமோசனத்திற்காக
வாசலில் காத்திருக்கும்
புதல்வர்கள்
‘எல்லா விந்துகளிலும் தானே இருப்பதாக’
தத்துவம் பேசியவன்
பள்ளிகொண்டபுரத்தில்
படுக்கையில் இருக்கிறான்
அவன் பிழைப்பது கடினம்
பாற்கடல் உறவுகளுக்கு
சொல்லிவிடுங்கள்.
*