இணைய இதழ் 116கவிதைகள்

தயாஜி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

முழுமை கூடா மனிதர்கள்

அம்மா, வயது 69
அப்பா, சக்கர நாற்காலி
அமலா, மூன்று மாத கர்ப்பிணி
குமார், நான்கு ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்தவர்
பையன், முதன் முறையாக ஆபாச வீடியோ பார்த்தவன்
செல்வி, அதே வீடியோவில் வந்த பெண்

கைப்பேசியைத் தொலைத்தவன்
கைப்பேசியால் தொலைந்தவள்
காதலனை ரொம்பவும் நம்பியவள்
சமாதானம் பேச வந்தவன்
வீட்டு வேலைக்கு வந்தவள்

ஆசிரியர்
வட்டிக்குப் பணம் வாங்கியவர்
கவிதை எழுதுபவர்
கழுத்தில் ருத்ராட்சம் அணிந்தவர்
கடவுள் மறுப்பாளர்

புதிதாய்த் திருமணம் ஆனவள்
பழைய வேலையை இழந்தவன்
முன்னால் காதலி
முகநூல் பிரபலம்
முகம் அடையாளம் தெரியாதவர்

காவல் நிலையம் சென்று வந்தவர்
லஞ்சம் வாங்காதவர்
சுய இன்பம் செய்த சிறுவன்
வயதிற்கு வராத சிறுமி

சில ஆண்டுகளாக
பலவிதமான
அடுக்குமாடிக் கட்டிடங்களில்
அங்கொன்றும் இங்கொன்றும்
என

தவறி விழுந்தவர்களாகச் சொல்லப்பட்டவர்களின்
முழுமையற்ற பட்டியல்.

*

வியாபாரம்

ஒரு புத்தகத்தை
வாசித்துச் சொல்வதை விட
அதனை
ஒரு விளம்பரமாக்கிச் சொன்னால்தான்

பார்க்கிறார்கள்
கேட்கிறார்கள்
வாங்குகிறார்கள்

பார்த்தார்கள்
கேட்டார்கள்
வாங்கினார்கள்
சரி, வாசித்தார்களா

தெரியவில்லை

ஏனெனில்
அவர்கள் வாங்கியது
புத்தகத்தை அல்ல

அதற்கான விளம்பரத்தை
அந்த சில வினாடி
பொய்ச்சுவையை
அவ்வளவுதான்

இப்படிக்கு:
புத்தகக்கடை நடத்தும்
எழுத்தாளர்களின்
கடைசி நம்பிக்கையாளன்.

*

tayag17@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button