இணைய இதழ் 117சிறுகதைகள்

சமன்பாடு – சபிதா காதர்

சிறுகதை | வாசகசாலை

பைத்தியக்காரத்தனங்களை தெரிந்தே செய்ய அசாத்திய தைரியம் தேவை என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. அது பைத்தியக்காரத்தனமில்லை என்று தெரிய வேண்டியவர்களுக்கு தெரிந்தால் போதும்.

“என்னடி இது… இந்த விதி முன்னாடி நடந்திருக்கா?”என்று கிசுகிசுப்பாக பாக்கினு ஆரம்பித்தார். இரண்டு பெண்களுக்கிடையே எதை கிசுகிசுப்பாக பேச வேண்டும், எதை ஊரே கேட்க பேச வேண்டும் என்பதில் பெரிய அரசியல் உண்டு.

“எனக்கும் அதுதான்க்கா புரியல. இஷா தொழுதிட்டு வந்த ஆம்பளைக எல்லாம் முத்தவல்லி வீட்டு முன்னாடி நிக்கிறாக. எப்போ வேணும்னாலும் முத்தவல்லி இங்க வரலாம். வாக்கா. நாம ஜன்னல் வழியாக பார்க்கலாம்” என்றாள் நாகூர்.

இவர்கள் இப்படி அளந்து விட்டுக் கொண்டிருக்க இந்த ஏச்சு பேச்சுக்கு ஆளான அந்த வீட்டிலோ மயான அமைதி. எந்தக் காலத்திலும் அந்த வீட்டில் பிரகாசமான விளக்கெரிந்ததில்லை. அதே மங்கலான முட்டை பல்ப்தான் முன் வாசலில். அந்த வீட்டின் வெளிச்சம் இல்லாத அமைப்பா அல்லது விளக்கொளியை மங்கச்செய்யும் சுவற்றுக்கான வர்ணங்களா இல்லை அங்கே வாழ்ந்த மனிதர்களா ஏதோ ஒன்று அது இருள் அடைந்த வீடுதான்.

அந்த வீட்டின் இரண்டாம் கட்டில், இவளுக்கு கிறுக்கேதும் பிடித்திருக்கிறதா?’என்று தோன்றும் வகையில் அமர்ந்திருந்தாள் ரசீதா.

‘இது என்னடா பெரிய தலையிடியா இருக்கு? தொழுகைக்கு போன புருசனும் கொழுந்தனும் வெரசா வந்தா பரவாயில்லையே…யா அல்லாஹ் நான் என்ன பண்ணுவேன்?’-ன்னு நின்றாள் ஷமீமா. அந்த வீட்டின் இன்றைய எஜமானி.

முத்தவல்லி அல்லு சில்லு பரிவாரங்களுடன் வந்தவர், “யாராவது வயதில் பெரிய பொம்பளைங்க வாங்க” என்று வீட்டு வாசலில் நின்று அழைத்தார். அப்படி யாரும் அங்கே இல்லை என்று தெரிந்தே அழைக்கப்பட்ட அழைப்பு அது.

ஷமீமா மெதுவாக, “பயாஸ் அத்தா, வந்துட்டு இருக்காக”என்று கணவனின் வரவு பற்றிக்கூற, “உன் கொழுந்தன் எங்கமா?” என்று முத்தவல்லி சற்று அதட்டலாக கேட்க, “ரெண்டு பேரும் தான் வந்துட்டு இருக்காக” என்றாள். முத்தவல்லிக்கு அவரின் ஹோதாவை காட்ட வேண்டிய கட்டாயம்.

இதற்கிடையில் அண்ணன் தம்பியான சையதும், பாரூக்கும் ஒரு வித பதட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்கினர். தொழுகை முடிந்த கையோடு ஷமீமா வாங்கிவரச்சொன்ன முட்டையும் கோதுமை மாவும் வண்டியின் ஹான்டில் பாரில் தொங்கிக் கொண்டிருந்தது.

உள்ள உட்கார்ந்து இருக்கும் பொம்பள பிள்ளைக் கூட யார் பேசுவது என்று சலசலப்பு ஆண்களுக்குள்ளே.

முத்தவல்லி எதிர் வீட்டில் இருக்கும் மூதாட்டியான சைனு மம்மானியை அழைத்தார்.

“என்னங்கத்தா?” என்ற பதிலோடு தலை நிறைய முக்காடை இழுத்துப் போட்டுக்கொண்டு தன் வீட்டு திரைக்கு பின்னால் நின்றார்.

“மம்மானி, அந்த பொம்பள பிள்ளைகிட்ட சொல்லு. இங்க வந்து இப்படி உட்காருவதற்கு அந்த புள்ளைக்கு எந்த உரிமையும் இல்லை. எதுவாக இருந்தாலும் பொதுவான ஒரு இடத்தில் பேசிக்கலாம். வேற விவரம் எதுவாக இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம். அந்த புள்ளையை அது அத்தா வீட்டுக்கு போக சொல்லு. பிள்ளைக கல்யாண வயசுல நிக்கிறாக. ரெண்டு பேருக்கும் இதெல்லாம் தேவையில்லாத குழப்பத்தைதான் கொடுக்கும். ஜமாத் இதை அனுமதிக்காது” என்றார்.

ஆமாம் எந்தக் காலத்திலும் அது ரசீதாவின் அத்தா வீடுதான். அவளுடைய வீடாகவே இப்போது இருந்தாலும் அவளுடைய அத்தா வீடுதான். இதற்குள் இருக்கும் சூட்சுமம் புரிய ரசீதாவும் ஒரு மாமங்கம் தேவைப்பட்டது.

அந்தோ பரிதாபம் அவள் வந்து உட்கார்ந்து இருக்கும் வீடும் இப்போது அவளுடையது இல்லை.

வீடு இருந்தும் ஒரு பெண்ணை வீடடற்றவளாக மாற்ற முடியும். அதனை ‘ரசீதாவின் அத்தா வீடு’ எனும் பதம் கச்சிதமாக செய்தது.

சையது குனிந்தது குனிந்த படி நின்றான்.

தனக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்ற பாவம்தான் இப்பொழுதும். தனது அண்ணனின் இந்த முகம் தம்பியை இந்தக் கேள்வியை கேட்கத் தூண்டியது.

“எங்க அண்ணே நிம்மதியா இருக்குறது என்னைக்குமே இவுகளுக்கு பொறுக்காதோ? அந்த மனுஷன் இந்த ஊர விட்டுப் போய் இப்போ தான் ஏதோ ஒரு குடும்பமாக இருக்கார். அது இவுக கண்ணை உறுத்தினால் நாங்க எதும் பண்ண முடியாது. இடத்தை காலி பண்ண சொல்லுங்க” என்று சொன்னான் ஆதங்கத்துடன்.

ஆனால் இதெல்லாம் என்ன வார்த்தை? ஆங்காரத்தின் உச்சத்தில் ரசீதா விட்ட வார்த்தைகளை கணக்கு எடுத்தால் பாரூக் பேசியது எல்லாம் ஒன்றும் இல்லை என்று ஜமாத்தார்கள் அமைதியாக இருந்தனர்.

எதிர் வீட்டிலிருந்த சைனு மம்மானி உள்ளே செல்ல ஆண்கள் வழி விட்டனர்.

“ரசீதா, நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்குறன்னு உனக்கு விளங்குதா? அந்த புள்ளைய வேண்டாம்னு குலா சொல்லிவிட்டது நீ… யாரு பேச்சையும் கேட்காமல் ஒரு நிலைக்கு நின்னது நீ… அந்த புள்ளையும் உன் குணம் மாறும், அழுகு பெத்த ரெண்டு ஆம்பள புள்ளைக இருக்குக.. அதுக கதி நாளைக்கு என்னவாகும்னு பொறுத்து சகிச்சு போனவனை ஆகாதுன்னு அடிச்சது நீ. எல்லாம் பேசி தீர்த்து விட்டு இத்தனை வருஷம் கழிச்சு உன் மக்களுக்கே கல்யாண வயசு வந்துடுச்சு. இப்போ வந்து இங்க உட்கார்ந்து இருக்க.. இதெல்லாம் என்ன? இப்போ சையது உன் புருஷன் கிடையாது மலேசியா சீமையில இருக்காளே அவளோட புருஷன்! இது உனக்கு மட்டும் இல்ல.. உன் மகனுகளுக்கும் தலைகுனிவை கொடுக்காதா?” என்று அவர் சரமாரியாக கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கும் போது, ஒன்பது மணி வண்டியிலிருந்து காலேஜ் பேக் சகிதம் வேர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்தான் ரசீதாவின் இரண்டாவது மகன் ஜாவித்.

அங்கே பலத்த அமைதி நிலவியது. இதுவரை ரசீதாவின் ஆங்காரமான பேச்சுக்களை மட்டுமே கேட்டு பழகி இருந்தவர்கள் ரசீதாவின் ஓங்கி ஒலித்த அழுகுரலை கேட்டுக் கொண்டிருந்தனர்.

“அம்மா…. என்னமா நீ பண்ணிட்டு இருக்க? இங்க ஏன் வந்து உட்கார்ந்து இருக்க? இது யாரு வீடு உனக்கு?” என்று நறுக்குனு கேட்டான் ஜாவித்.

இதைக் கேட்ட சையதுக்கு மனது சுருக்கென்றது.

“அம்மா… அம்மா… அழுகாத மா” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது சென்னையில் பணி புரியும் அண்ணனிடம் இருந்து அலைபேசி அழைக்கிறது .

“ஜா… . ஜா என்னாடா நடக்குது அங்கே?”

“ப்ச்.. நீ ஃபோனை அம்மா கிட்ட கொடு”

தேம்பிக்கொண்டிருந்த ரசீதாவிடம் போனில் என்ன சொல்லப்பட்டதோ… ரசீதா எழுந்து கொண்டு ஃபோனை ஜாவித்திடம் கொடுக்க … மறுமுனையில், “அம்மாவை கூட்டிக்கொண்டு கிளம்புடா”என்றான் அண்ணன்.

கறுப்பு நிற புர்கா வின் தலைத்துணியில் மூக்கை துடைத்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் மகனுடன் வெளியே சென்றாள்.

அது வரை குனிந்தே இருந்த சையது நிமிர்ந்து பார்த்தான். நெடுநெடுவென்று வளர்ந்திருந்த மகன் தாயை தோளணைத்து நடத்திச் சென்றான். மகனின் முகம் பார்க்க நினைத்த சையதுக்கு அந்த கண நேர விநாடி அந்த அவகாசத்தை தரவே இல்லை. அம்மாவின் தோள்பட்டையின் மீது படித்திருந்த அந்த ஒல்லிக்குச்சி கரங்களின் அழுத்தம் அம்மாவை பார்த்துக் கொள்ள நாங்கள் இருக்கின்றோம் எனும் செய்தியை சையதுக்கு சொல்லாமல் சொல்லியது. கையறு நிலையில் சையது அனைத்திற்கும் மெளன சாட்சியாக நின்றான்.

உள்ளபடியே அவன் இவ்வித கையறுநிலைக்கு பழக்கப்படுத்தப்பட்டவன்.

கூட்டம் சலசலப்பு அடங்கி நடையைக் கட்ட முத்தவல்லி சையதிடம் என்ன சொல்வது என்று புரியாமல் சலாத்துடன் முடித்து கொண்டார்.

இந்த ஊர் ஜமாத் அண்ணன் தம்பி சொத்து பிரச்சினை, வரதட்சிணை கொடுமை, மாமியார் மருமகள் சண்டை, புருஷன் பொண்டாட்டி பஞ்சாயத்து, அத்தா மகன் ஒருத்தனுக்கு ஒருத்தன் அரிவாளைத் தூக்கியது, ஜமாத் உட்கட்சி சண்டை, பள்ளிவாசல் வரவுசெலவு கணக்கு கேட்கிறேன் என்று ஒருத்தருக்கு ஒருத்தர் சட்டை கைலியை கிழித்து கொண்டது என்று அனைத்தையும் பார்த்திருக்கிறது.

அதில் ரசீதா சையதை தீர்த்துவிட்ட கதை இன்னைக்கும் பிரசித்தம். ஆம், ரசீதாதான் சையதை தீர்த்து விட்டாள். ஒரு உறையில் ஒரு கத்தி இருப்பதுதான் நியாயம். சாதாரண பொம்பளைங்க ரெண்டு பேரும் ஒத்துப்போவதே குதிரை கொம்பான விஷயம். ஒரு தேள் வயிற்றில் பிறந்து நட்டுவாகாலிக்கு வாக்கப்பட்டவன் நிலை என்னவா இருக்கும்?

ஆமீனா கடுசிலும் கடுசான மனுஷி. வாக்கப்பட்ட அப்துல்லா ராவுத்தர் அப்புராணி மனுஷன். அல்லாஹ் இப்படிதான் சோடி சேர்ப்பானோ.அந்த இரகசியம்அவன் அறிவான்.

யாரோ ஒருத்தர் அடங்கிப் போவது குடும்பத்துக்கு நல்லது தானே? அது அப்துல்லாஹ் வாக இருந்தார். மலேசியா வியாபாரம் அப்துல்லாவுக்கு ஒரு வித மன அமைதியை கொடுத்தது. தலைவலி தலைக்கு மேலே போகும் போது மனுஷன் மலேசியாவில் போய் உட்கார்ந்து கொள்வார்.

ரெண்டு மூணு வருஷ இடைவெளி ஊர்ப் பயணம்தான் பிள்ளைகள் நாலு பேருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் என்றால் கணக்கு போட்டுக்கொள்ளுங்கள். ஆஸ்திக்கு இரண்டு ஆண்கள்.. ஆசைக்கு ஒரு மகள்.

அப்படி ஆஸ்திக்கு தலை மகனாக பிறந்தவன்தான் சையது. குணத்தில் அப்படியே அத்தாவைக் கொண்டு பிறந்தவன். அத்தாவுக்கு ஒரு தேளாக ஆமீனா வந்தார் என்றால், மகனுக்கு நட்டுவாகாலியாக ரசீதா வந்தாள்.

இதில் என்ன விசேஷம் என்றால் ரசீதாவுக்கு ஆமீனா ஒன்னுவிட்ட குப்பிக்காரி.

ஊர் போற்றும் வாப்பட்டிகளா பாவம் அத்தாவுக்கும் மகனுக்கும் வாய்க்கணும்?

எல்லாம் சொத்து பத்து, சொந்தம் என்று பல கணக்குண்டு. ரசீதா அத்தா காஜாவுக்கு நிலபுலம் ரைஸ்மில் உண்டு. ரெண்டே பொம்பள மக்க தான். எல்லாம் யாருக்கு.. இவளுகளுக்குதானே? பெரியவளுக்கு சையதை முடித்து மூத்த மருமகனால் அண்ணன் குடும்பத்தையும் ஆட்டி வைக்கலாம் என்பது ஆமினாவின் கணக்கு.

ஆனால், அப்துல்லாவின் குணத்தை கொண்ட சையது அதுக்கு சரிப்பட மாட்டான் என்பதும், மருமகளாக வந்த ரசீதா இந்த நாசி வழியாகச் சென்று அந்த நாசி வழியாக வருகின்ற வித்தாரக்கள்ளி எனும் உண்மை ஆமீனாவுக்கு பிறகுதான் விளங்கியது.

சில நேரங்களில் சூத்திரம் சரியாக இருந்தாலும் கணக்கிற்கான விடை கிடைப்பதில்லை.

இரண்டு பெண்களின் “தான்தான்” எனும் எண்ணத்திற்கு பலியாகும் ஆண் உண்மையில் பரிதாபத்திற்குரியவன். தான்தான் எனும் ஈகோ பிடித்த கழுதையை ஒரு ஆண் தன் வாழ்நாளில் சந்தித்தே தீருவான் என்பது தலைவிதி.

சில ஆண்களுக்கு இரு கழுதைகளை கட்டி மேய்க்க வேண்டியுள்ளது. ஒரு கழுதை அப்பு ராணி சப்புராணியாகவும் இன்னொரு கழுதை ஓங்குதாங்காக இருந்தால் கூட பிழைத்தான். சமபலம் பொருந்திய, தான் என்ற அகங்காரம் பிடித்த கழுதையாக இருந்தால் முன்னே போனாலும் உதைக்கும் பின்னே போனாலும் உதைக்கும் அல்லவா? அதே நிலைதான் சையதுக்கும்.

அம்மா வீட்டுக்கு கோவித்து கொண்டு சென்ற பொண்டாட்டியை சமாதானம் செய்ய வந்தால் மாமனார் வீட்டு வாயிற் கதவு அவனுக்கு திறக்கவே திறக்காது.

போங்கடா நீங்களும் உங்கள் நாசமா போன கல்யாணமும் என்று அவன் வீட்டுக்குச் சென்றாள் அம்மாக்காரி கதவை திறக்க மாட்டாள். பொறுத்துப் பார்த்த அப்துல்லாஹ் ராவுத்தர் மகனுக்கு டிக்கெட்டை போட்டு மலேசியாவில் உள்ள தன்னுடைய சோத்துக்கடையை பார்த்துக் கொள்ள அழைத்துக் கொண்டார்.

ரெண்டு ராங்கிபிடித்த கழுதைகளையும் அடித்துக்கொண்டு கிடங்கடி எனும் உட்கருத்து அதில் உண்டு. அம்ஜத், ஜாவித் என்று ரசீதா சையதுக்கு இருமகன்களாச்சு. ஊரிலிருந்து கவனிக்க வேண்டிய  சொத்து பத்துக்கள் வளர சையது உள்ளுர்வாசியானான்.

ஆமினாவுக்கு எல்லாம் தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று லகானை ஒரு பக்கம் இழுக்க, ரசீதா ‘இந்த சீட்டு என்கிட்ட செல்லாது’ என்று நின்றாள்.

கதவுகளை திறந்து போட்டு குடும்பம் நடத்த முடியாது. பூட்டியிருக்கும் கதவுக்கு உள்ளே நடப்பது மற்றவர் யோசிக்கக்கூடாது. பெற்ற தாய், தகப்பன், கூடப் பிறந்தவர்கள் என்று யாரும் இதில் வரக்கூடாது. ஆனால், ஆமினா அத்தனையையும் அலசி ஆராய ஆரம்பித்தார். விளைவு ரசீதாவை மேலும் கொம்பு சீவி விட்டது.

சரி இங்கே தானே இந்த கூத்து நடக்கிறது. மகனை குடும்பத்தோடு மலேசியாவில் குடியமர்த்த அப்துல்லா நினைத்துப் பேச, “நான் ஏன் எங்க அத்தா அம்மாவை விட்டு, சொத்து பத்தை விட்டு, கண்காணா தேசத்தில் போய் கிடக்கணும்? வேணும்னா உங்க பொண்டாட்டிய கூட்டிட்டு போய் அங்கேயே வச்சிக்கோங்க”என்று மாமனாரிடம் மல்லுக்கு நின்றாள்.

“என் மகளை என் முன்னாடியே வச்சு பார்த்துக்கதான் உங்க மகனுக்கு கட்டிக் கொடுத்தேன் மச்சான்” என்று ரசீதாவின் அத்தா காஜாவும் சரிக்கு சரியாக நிற்க, இவையெல்லாம் ரசீதாவுக்கு குருட்டு தைரியத்தை கொடுத்தது. மாமியாரை மூக்கறுக்க நினைத்து தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டாள் ரசீதா.

உண்மையை உடைத்துச் சொல்ல வேண்டும் என்றால் அவளுக்கு பிரச்சனையின் காரணம் எதுவென்றே புரியவில்லை. கணவனிடம் அவளுக்கு பெரிதாக முரண்களும் இல்லை. அவன் சில நேரங்களில் அம்மாவின் பக்கம் நிற்கிறான் என்பதை தவிர்த்து அவனைப் பற்றி சொல்ல குறைகளே இல்லை.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஊருக்கே பஜாரியாக தெரியும் ரசீதாவுடன் குடும்பம் நடத்துவது சையதுக்கு அப்படி ஒன்றும் பெருஞ்சுமையாக இல்லை. அந்தந்த கோயிலுக்கு அந்தந்த பூசாரி. அப்படியே இருவருக்குள்ளும் சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்தாலும் காலப்போக்கில் சரி செய்து கொள்ளும் அலைவரிசையில்தான் இருந்தார்கள். காலம் சில சிக்கல்களை விடுவிக்கும். ஆனால், இரு பெண்களின் ‘தான்’ என்ற எண்ணம்தான் இதனை குலா வரைக்கும் இழுத்துச் சென்றது. பொறுமையற்றவர்களின் அவசர முடிவு சையதை நிற்கதியில் தள்ளியது.

இரண்டு ஆண் குழுந்தைகளின் எதிர்காலத்திற்காக கீழத்தெருவில் உள்ள எட்டுக் கடைகளும், நான்கு வீடுகளும் ரசீதாவின் பெயருக்கு மாற்றப்பட்டது. உரிய வயது வந்தவுடன் அம்ஜத், ஜாவித்தை வந்தடைய வழி வகை செய்யப்பட்டது.

மனது வெறுத்த சையது மலேசியாவாசியாகிப் போனான். அப்துல்லாஹ் அங்கேயே ஒரு பெண்ணைப் பார்த்து சையதுக்கு மணம் முடித்து வைத்தார். எப்பேர்ப்பட்ட கொம்பன், கொம்பிமானாலும் அல்லாஹ்வின் அழைப்பிற்கு ஒரு நொடி முந்துமா.. பிந்துமா? அப்துல்லா ராவுத்தர், ஆமீனா, காஜா என்று அடுத்தடுத்த விக்கெட்டிகள் அவுட்டாக, நில புலம், வீடு வாசல், சொத்து பத்துகள் இருந்தது. அம்ஜத்தும், ஜாவித்தும் தகப்பன் இல்லா பிள்ளைகளாக வளர்ந்தனர்.

ரசீதா பிறந்து வரும் போதே வரம் வாங்கி வந்தவள். அவளுடைய அத்தா, பிறகு கணவன் சையது, சரி முன்னாள் கணவன் சையது.. அடுத்து அவள் பெற்ற மகன்கள் என்று அனைவராலும் செல்லம் கொடுக்கப்பட்டே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய வரம். இது வரமா இல்லை சாபமா தெரியவில்லை. ஆனால், அவளுக்கு விதிக்கப்பட்டது அதுதான். மகன்களைப் பொறுத்தவரை அம்மாவை விட்டுச் சென்றவர் என்ற பிம்பமாக மட்டுமே சையத் இருந்தான். அதன் பிரதிபலிப்புதான் ஜாவித் தனது அத்தாவின் முகத்தை ஏறெடுத்து பார்க்காமல் சென்றது.

சையதின் இந்த முறை ஊர்ப் பயணத்திற்கான முக்கியக்காரணமாக இருந்தது வீட்டை முழுவதுமாக தம்பி பெயருக்கு பதிந்து கொடுப்பதற்காக மட்டுமே. அங்கே இருக்கும் சொத்துபத்துக்களுக்கு ஈடாக தம்பிக்கு இங்கிருப்பதை மாற்றப்படுவதன் பின்னனி சையதுக்கு இனி இந்த ஊர் வரும் அவசியம் பெரிதாக இருக்கப் போவதில்லை என்ற காரணங்கள் ரசீதாவுக்கு புரியாமலில்லை.

இந்த ஊர்க்காரர்களின் புத்திக்கு இன்று இவள் நடு வீட்டில் உட்கார்ந்து அழுது சென்றது பைத்தியக்காரத்தனமாக தெரியலாம். ஆனால், ஓங்கி ஒலித்த அழுகுரல் அவளின் காலஞ்சென்ற தவறுகளுக்கான மன்னிப்பாகத்தான் சையதுக்கு தெரிந்தது. இனி இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதே என்ற தவிப்பு அவனுக்கு புரிந்தது. தன்னைப் போலவே அவளை ஏதோ ஒரு சொல்லைக்கொண்டு ஒற்றை நொடியில் சமாதானம் செய்த தன் பெரிய மகனை நினைக்கையில் அவனை அறியாமல் சிறு புன்னகை அரும்பியது.

சமன்பாட்டின் இரண்டு பக்க மதிப்புகளும் சமமானது. எனவே, சமத்துவத்தின் உண்மை நிரூபணமானது.

sabithakadher786@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button