
பேருந்தை போல் அல்லாத நெருங்கிய சன்னல் கம்பிகளைக்கொண்ட இரயிலின் கடைசிப் பெட்டியின் முன்பதிவில்லா இருக்கையில் ஏதோ ஒரு புத்தகத்தை தூக்கிப் போட்டு தனக்கான இருக்கையை அவள் குறுக்குப் பதிவு செய்துக்கொண்டாள்.
உள்ளே நுழைந்த கூட்டம் ஒருவாறு இருக்கை பங்கீட்டில் திருப்தி அடைந்தவர்களாக அமைதி ஆகினர். அதில் விலக்காக இருக்கை கிடைக்காதவர்கள் குறுக்கும் நெடுக்குமாக அந்தப் பெட்டிக்கு முன்னதாகவோ, இதற்கு அடுத்த பெட்டியிலோ கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் நடந்து திரிந்தனர்.
இப்போது அவளின் முழு உருவத்தை தேடுவதற்கான பிரயாசை, மாற்றவர்களுக்கு தன்னைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் கொஞ்சநேரம் பொறுத்திருக்க வேண்டி இருந்தது.
ஏறி அமர்ந்த உடனேயே படிக்கத் தொடங்கி விட்டாள். அவ்வளவு முனைப்பை ஒரு இலக்கியப் புத்தகம் கொடுத்தது ஆச்சரியம்தான். அவள் வைத்திருந்த அந்த நாவலின் அட்டைப்படம் புதிதாக மாற்றப்பட்ட தற்போதைய பதிப்பாக இருக்குமென நினைக்கிறேன். இதைக்கொண்டே அவளிடம் தனது உரையாடலைத் தொடங்கினால் என்ன என்ற யோசனைக்கு பிறகு அடுத்தடுத்தான புதிய யோசனைகள் வந்த வண்ணமிருந்தன.
இப்போது புத்தகத்தைப் பற்றியதான உரையாடலே உசிதம் என்ற நோக்கில் நீண்ட நாட்களுக்கு முன்னதாக படித்திருந்த அவள் வைத்திருந்த அந்த நாவலில் எனக்கு நினைவில் உள்ள கதாபாத்திரத்தையும் சிறப்பான கதைக்காட்சியையும் ஞாபகப்படுத்திக் கொண்டேன்.
இப்படியாக ஒரு மனி நேரத்தை கடந்திருந்தது. இன்னும் மூன்று மணி நேரங்களில் இந்தப் பயணம் முடியப்போவது மனதினை இன்னும் உந்தியபடி இருக்க, பதட்டம் பற்றிக்கொண்டது. அடுத்த அரை மனி நேரத்தை விழுங்கிய பிறகான நிறுத்தத்தில் இரயிலேறிய ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினர் தன்னை வேறு இடம் நகர்ந்து அமர முடியுமா என்ற வேண்டுகோளின்படி, அவர்கள் அமர்த்தி வைத்த இடம் அவளின் எதிரில்.
சிரித்தபடி அவர்கள் நன்றி கூறினார்கள். புன்னகைத்தபடி மௌனமான நன்றி வழங்கி ஏற்றுக்கொண்டேன்.
இப்போது அவளை நன்கு கவனிக்க முடிந்தது. அவளை கவனிப்பது பெண் என்ற ஈர்ப்பில் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். பின் என்ன காரணம் என்றால் அவள் ஒரு வாசகர் என்பதாகும். தன்னுடைய படைப்பில் இரண்டாவது புத்தகம் வெளியாகி உள்ள நேரத்தில் அதனைப் பற்றிய அறிமுகத்திற்கோ இல்லை, விற்று அவள் தலையில் கட்டிவிடுவதென்ற நினைப்பிலோதான் இந்த அறிமுக ஆர்வம்.
இதே ஒரு ஆணாக இருந்திருந்தால் பேசுவது எவ்வளவு எளிதாக இருந்திருக்கும்?
காசு கேட்டு வந்த திருநங்கைகளிடம் பணம் இல்லை என்ற போது எனது கன்னத்தை பிடித்துக் கிள்ளி, “இருக்கும் பாரு” என்றார். அது அவளுக்கு நகைப்புக்குரியதாக இருந்திருக்கும் போல- சிரித்தாள். அது ஒரு தைரியத்தைக் கொடுக்க அவர்களிடம் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து, “இறங்குற இடத்துல இருந்து பஸ்ஸுக்கு போக சில்லரையா வைச்சிருந்தேன்” என்று இல்லை என்று சொன்ன பொய்யை உண்மையாக்கும் பொருட்டு கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பினேன்.
அதன் பிறகு, “இந்தப் புத்தகம் நல்லா இருக்கா?”
“இந்தோ பாருங்க!” என்று என் கைகளுக்கு கொடுக்க நீட்டியவள் “பரவாயில்லை. நிறைய புரிஞ்சிக்க கஷ்டமா இருக்கு”
அவளுக்கு என்னிடம் பேசுவதில் எந்த சிரமமும் இருந்ததாகத் தெரியவில்லை. யாரிடமும்- எல்லோரிடமும் இப்படியாகத்தான் இருக்க வேண்டும்.
“பிராமின் வழக்குல இருக்கதால இருக்கலாம்”
“என்னப் பாத்தா அப்டி தெரியலயோன்னோ?” என்று அவள் கேலிக்காக பிராமணத் தமிழை உபயோகித்தாலும் அதுவே அவள் வழக்கு மொழி என்று என் அனுமானத்திற்கு அடையாளம் கொடுத்தாள்.
“கேட்ட பிறகு தெரிகிறது. அப்ப என்ன சிரமம் இருக்கப் போகிறது?”
“எனக்கு தமிழ் வாசிப்பே சிரமம்தான்” என்று கூறியவள் தனது கணவர் ஒரு புத்தகப் புழு எனவும், அவருக்காகவே இப்போதிருக்கும் நீண்ட வெறுமை நேரத்தை இட்டு நிரப்ப இந்தப் புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னதாலும் ஏற்பட்ட சுய கட்டாயத்தின் அடிப்படையிலே இரயில் பயணத்தின் போது கூட இப்படி என்று சொல்லி முடித்தாள்.
அவளிடம் புத்தகத்தைப் பற்றிய பேச்சை நீட்டிக்க சிந்தனையை வலுவாக்கிய போதும், அவள் பிராமணப்பெண் என்று தெரிந்த பிறகாக தமிழ் இலக்கியத்தில் இருந்து பிராமண எழுத்தாளர்களைப் பிரித்து எடுத்து உரையாடலுக்கு தயார் செய்து வைத்திருந்த நிலையிலும், அவள் வாசகி இல்லை என்று தெரிந்த போது இத்துடன் இந்த உரையாடலை நிறுத்தி விடுவதெனவும், தன்னை ஒரு எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ளாமலும் முடிவு செய்திருந்ததின்படி அவள் பேசி முடிக்கும் வரை காத்திருந்தேன்.
பிறகு அமைதி – இதழ் திறவாமல் உதடு விரித்தபடி முடிந்து போனது – அமைதி.
அவ்வப்போது அவளைப் பார்க்காமல் இல்லை. இப்போது புறத் தோற்றத்தை இரசிக்கும் எண்ணமே இன்றி வேறில்லை. ஹெட்போன் மாட்டி இருந்தாள். தலை லேசாக அசைந்தவாறு இருந்தது. கைகளை தொடையில் தட்டிக் கொண்டிருந்தாள். தவறாத தாளத்தை கவனிக்க தவற விடவில்லை. வெறுமனே தட்டி மட்டும் கொண்டிருந்தாள். நிச்சயம் அடுத்த நிறுத்தத்தில் அடுத்த பெட்டி மாறிவிடுவதென திட்டம். திட்டங்களை தொடை தட்டிய கைகள், விரல்களை எண்ணாமல் இருந்திருந்தால் செயல்படுத்தி இருந்திருந்திருப்பேன்.
உடனே, “நீங்க இசை தொடர்புள்ள ஆளா?”
“ஆமா. இப்ப சமீபமா. அப்றம் காலேஜ் படிக்கும் போது”
“புரியல. ஏன் இப்படி?”
“அதுக்கு இடையில. கல்யாணம், குழந்தைங்க, குடும்ப வாழ்க்கை. அப்படியே போயிருச்சு”
“இப்ப விடுதலை கிடைச்சிருச்சா?”
“பையன் வேலைக்கு போயிட்டான். வீட்டுக்காரரும் நானும் சும்மாதான். அவர் வெளிநாட்டுப் பயணம், புத்தகம். நான் இசை, உள்ளூர் பயணம்”
“சரிதான். இப்ப எந்த கிரேட்ல இருக்கீங்க?”
“தேர்ட் கிரேட்”
“நான் செகண்ட்”
“நல்லது. என்ன இன்ஸ்ட்ருமெண்ட்?”
“வயலின். நீங்க?”
“வீணை, அப்றம் பாட்டு”
“செம்மங்க…”
“என்ன செம்ம? வீணைக்கு கை வலைய மாட்டிக்கிறது. அதுலாம் அந்த வயசுலயே கத்துன்டிருக்கனும். இப்ப வாய்ப்பாட்டு மட்டும்தான்”
“இப்ப எங்க போயிட்டு வர்றீங்க?”
என் பேச்சை இசையில் இருந்து ஏன் நழுவ விட்டேன் என்று நொந்து கொண்டேன். இங்கிருந்து வருகிறேன் என்று அவள் கூறுவதுடன் முடிந்து போகும்படி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேனா?
“திருவையாறுல 128-ஆவது தியாகராஜர் ஆராதனை நடந்துச்சு. போயிட்டு வீட்டுக்கு திரும்பறேன்”
“இனிமே இப்படித்தானா?”
“எப்படி?”
“கோயில் கோயிலா?”
“இல்ல. கச்சேரி கச்சேரியா!”
சிரித்தேன்.
திடிரென யாபகம் வந்தவளாக, “ராஜகோபாலாச்சாரி தெரியும் இல்லையோ”
“யாரு?” நான் நினைத்து வைத்திருக்கும் அவர் தானா?
“ராஜாஜி”
ஆம் அவரே தான்.
“ஏன் இப்ப அரசியல் பேசப் போறீங்களா?”
“இல்லை. இசைதான்”
“சொல்லுங்க” என்னவாக இருக்கும்?
“அவர் வயலின் வாசிப்பாரு”
“அப்படியா?”
“ஆமா. அப்ப அவர் ஒரு வீட்டுல வாடகைக்கு தங்கி இருந்தாராம். தினமும் அவர் வாசிக்கிறத கேட்டு பொறுக்க முடியாம, அந்த வீட்டோட உரிமையாளர் அம்மா அவர் வயலினை வாங்கி வாசிச்சு காட்டி, ‘இதவிட நல்லா வாசிக்கிறவா வர்ற வரைக்கும் இந்த வீடு காலியாவே இருந்துட்டுப் போறது. நீங்க கிளம்புங்க’-ன்னு சொல்லிட்டாளாம்” என்று சொல்லி முடித்தாள். பின்னாளில் அதைப்பற்றி எங்கும் படித்திராத இந்த நிகழ்வுக்கு வாய்விட்டு சிரித்தேன்.
மேலும், “உங்களுக்கு பிடிச்ச ஸ்வரம் எது?”
“என்ன இது? எந்த கண்ணுனு கேட்டா என்ன சொல்றது? ஏழும்தான் வேணும். ஏழும் பிரதானம்தான்”
“சிக்னேச்சர் ஃப்ரேஸ்-ன்பாளே. அந்த மாதிரி கேக்குறேன்”
“புரியல”
“லால்குடி ஜெயராமனுக்கு ஷட்சம்,
எம்.சந்திரசுகரனுக்கு ரிஷபம்,
கார்க்குறிச்சியாருக்கு காந்தாரம்,
கத்ரி கோபால்நாத்-க்கு மத்யமம்,
எல்.வைத்தியநாதனுக்கு பஞ்சமம்,
எம்.டி.இராமநாதனுக்கு தைவதம்,
காரைக்குடி சுப்ரமணியத்துக்கு நிஷாதம்- மாதிரி”
“இவ்வளவு இருக்கா?”
“இல்லாம என்ன!”
“எனக்கு இல்ல”
“உங்களுக்கு?”
“நி – த – நி – ஸ – நி – த – ப – ம – ப – த – நி~”
“நி… நிஷாதமா?”
பெண்களின் உச்சத் தன்மைக்கு ஏற்ற ஏழாம் கட்டை ஸ்வரத்தை பிடித்தமான ஒன்றாக அவள் தேர்வு செய்ததில் பெரிய வியப்பில்லை. எல்லா பெண்ணின் சிரிப்பும் நிஷாதம்தான். வேறுபாடு இருப்பின் நி-யின் மூன்று வகைதான். இவள் சிரிப்பும் அப்படித்தான். எந்த நி என்று கண்டறியும் அளவிற்கான செவிப்புலமை கிட்டாத குறை ஒன்றுதான் தற்போதைய தடை.
மகரக்கட்டு உடைந்து குரல் கணப்பதாலோ என்னவோ, உச்ச ஸ்வரம் மற்றும் உச்ச ஸ்தாயி போன்ற லேசான கூரான ஸ்வரத்தை தன்னால் இயல்பாக்க முடியாது என்பதால், “அப்படி பார்த்தால் காந்தாரம் எனக்கு பிடிச்சது” என்றேன்.
“ஏன்?”
“அது கேட்க நல்லா இருக்கு”
“மத்தத விட…”
“ஆமா, மத்தத விட. அது மட்டும்தான்னா சொல்ல போறேன்”
“…”
“உங்களுக்கு ஏன் நி?”
“ஷார்பா, போர்ஸா, ஸ்ட்ராங்கா, வீரியமா இருக்கோ இல்லையோ. அதான்”
“யாரோ ஒரு கத்துபிள்ளை, நீஷாதத்தை வளைக்க கத்துன்டான்னு வைங்க. அவன்தான் பாண்டித்தியமானவன். என்னைப் பொறுத்த வரைக்கும்”
“ஓஹ்…”
இடைமறிக்கும் குறுக்கீடாக அலைபேசியில் ஏதோ ஒரு ஆண் நண்பரின் அழைப்பு. பிராமணியத்தமிழும் ஆங்கிலமும் மணிப்பிரவாளமாக பேசினாள். இருபது நிமிடங்களுக்கு மேலாக நீண்ட அழைப்புக்கு பிறகு ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு தலையை ஆட்டத் தொடங்கினாள். அடுத்த கேள்விக்கு அடி போட முடியாமல் அமைதியானேன். யோசனைக்கான அமைதி. அப்படியே நீண்டது. அதன்பிறகு மூன்று தொலைபேசி உரையாடல்களை நிகழ்த்தி விட்டாள். அதிலிருந்து அவளுக்கு ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகள் தெரியும் என்று அறிந்து கொண்டேன். அம்மொழி உரையாடலின் போது தாய்மொழி பேச்சின் முக உணர்ச்சிகளை அவள் வெளிப்படுத்தியதில் இருந்து அவள் எந்த மொழிக்காரி என்ற குழப்பமே எஞ்சியது. இல்லை, அவள் பேசிய வேற்று மொழிகளில் இருந்து முக பாவங்களை மட்டும் நுகர்ந்து கொண்டாளா?
அதன்பிறகு அவளை கவனிப்பதில் இருந்து எனது கவனத்தை மடைமாற்றிக்கொண்டேன். பயணத்தின் பாரம் ஒரு மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் பற்றியது. அவ்வப்போது தலையை திருப்பி காணும் வேறுபட்ட காட்சிகளின் ஊடே அவள் உருவம் தட்டுப்படும். தட்டி விட்டுக்கொண்டேன்.
ஏமாற்றம்தான்- இலக்கியமும் இசையும் தெரிந்த ஒரு மனிதரின் அறிமுகம், அதுவும் பெண் அறிமுகம் என்று எவ்வளவு ஆசை வளரத்துக் கொண்டேன்!
அவளுக்கு இலக்கியம் புதிதுதான். இசை பரிச்சயம்தானே! அதைப்பற்றியாவது பேசிக்கொண்டிருக்கலாம்தானே?
தாளமிட்ட கைகளை கவனிக்காமல் இருந்திருந்தால் நீண்டிருக்காது கடந்து போன உரையாடலும்.
அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும். கடைசி நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம். பயணச்சீட்டு இல்லாததிற்கு போடப்படும் அபராதம் கூட அனுகூலம்தான். ஆனால், இப்போது நேரவிரயமாகப் பட்டது. இருக்கையில் இருந்து எழுந்து கொண்டேன்.
நான் அவளிடம் ஏற்கனவே இறங்கப்போகும் நிறுத்தத்தைச் சொல்லி இருந்த போதும், நான் அதற்குத்தான் எழுகிறேன் என்ற போதும், கண்டு கொள்ளாமலோ, பாடல் கேட்கும் கவனத்தில் தவற விடப்பட்டவனாகவோ இறங்க வேண்டி ஆயிற்று.
…. இவ்வாறு தனது அன்றைய இசைக்கச்சேரி முடிந்து வெளியே வந்த போது, பேச நேர்ந்த இசை ரசிகை ஒருத்தி ‘உங்களை இப்பவும் இசைக்கச் செய்கிற, இசைக்கச் செய்த ஊக்கம் எது?’ என்ற கேள்விக்கு இந்த சிறு – கதையை சொல்ல வேண்டியதாயிற்று.
அது நடந்து இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகியும் காட்சி மாறாமல் வரி தொடுப்பது ஆச்சரியம்தான் என்றாள் அந்தப் பெண்.
தன் ரசிகையிடம் இந்த கடந்த காலத்திய கதையை கண்ணியமாக சொல்லி முடிந்ததில் ஒரு ஆசுவாசம்.
காதலியிடம் – அவள் லட்சணமில்லாதவளாகவும், மனைவியிடம் – அவள் ஒரு முதியவளாகவும், நண்பனிடம் – அழமான மார் பிளவுள்ள கவர்ச்சி இசை பண்டிதையாகவும், கோவிலில், விடுதியில், விமானத்தில், பேருந்தில் இசை சபாவில், கச்சேரியில், சக மாணவராகவும், ஆசிரியையாகவும், என இடத்திற்கு இஷ்டமாக, ஆட்களுக்கு ஏற்றாற்போல் கூட்டிக் குறைத்து, கேட்போரின் ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்வதே, அந்த பழைய கதையின் நவீன சாராம்சம்.
தனக்குள்ளான இசை ஆர்வத்தை கிளர்ந்தெழுச் செய்த ஊக்குவிப்பு கதையுடன், கற்பனை காதலியை மூப்படைய விடாத புதிய புதிய கதாபத்திரங்கள் மற்றும் வெவ்வேறான தோற்றத்துடன் மாறிக்கொண்டே இருந்தது.
கிளம்புவதற்கான அறிவிப்பாக ஒரு பக்குவ புன்னகையை அவளை நோக்கிச் செலுத்த வேண்டியதாயிற்று.
“அவங்களை அதுக்கு அப்றம் பாக்கவே இல்லையா?”
“ஏதாவது கச்சேரி முடிவுல உன்ன மாறி வந்து பேசிற மாட்டாளானு ஆசையிலதான் ஒவ்வொரு மேடையா ஏறிட்டு இருக்கேன். ஒவ்வொரு ஊரா சுத்திட்டு இருக்கேன்”
“அவுங்க இசைய ரசிக்கிறவாங்காளா மட்டும் இருந்து கலைஞனை கண்டுக்காதவங்களா இருந்தா, மறந்த முகமா, ஞாபகத்துல இருந்து மாறுபட்ட முகமா இருந்து தவற விட்டிருந்தா என்ன பண்றது?”
“நி-ரி-க-ம-ப-த-நி-ஸ”
“…..”
“நிஷாதத்தின் பகை சுரம் போதும்”
“கைசிகியா? காகலியா?”
…. புன்னகைக்கு பிறகு இயல்பாய் சுருங்கிய இதழ்களுடன் அங்கிருந்து கிளம்பத் தயாரானார். அது வரை காத்திருந்த டிரைவர் அவரின் பிடில் பெட்டியை வாங்கிக்கொண்டு அவரது உயர் ரக சொகுசு காரை நோக்கி விரைந்து கொண்டிருந்தான். அவனுக்கு முன்னதாக காரை நெருங்கி அவனது ஓட்ட நடையை மதிப்பிழக்கச் செய்ய வேண்டாம் என்பது போல் மெதுவாக நடந்து போனவரின் எண்ணங்களில், அடுத்தடுத்தான இந்த உத்வேக கதைக்கான முகமும் குணமும், சிந்தனை செயல்முறையாக ஓடிக்கொண்டிருக்க குறைந்த நடையின் வேகத்துடன் சென்று தயார் நிலையில் இருந்த காரில் ஏறிக் கொண்டார்.