
மையப்புள்ளி!
அந்தப் புள்ளியை
நோக்கி
சொற்களை
நகர்த்தியபடியே
காத்திருந்தோம்
எப்போது
நிகழுமென
அறிந்திருக்கவில்லை
ஆனால்
நிகழுமென
அறிந்தேதான் இருந்தோம்
விதவிதமாய்
சிந்தனைகள்
கோணங்கள்
பரிமாணங்கள்
பார்வைகள்
தேடி முன்னகரும்
புள்ளியின் சாயல்
வார்த்தைகளில்
புலப்படுமாவென
எதிர்பார்த்திருந்தோம்
கண்ணுற்ற
கணத்தில்
நிம்மதியாய்
இருந்தது
ஏற்கனவே
அறிந்திருந்த நொடிதான்
இருந்தாலும்
நேரம் பார்த்துக்கொண்டோம்
அதன் பிறகு
சொற்கள்
எதுவும்
தேவைப்படவில்லை!
நிழல்களோடு நடனம்!
கோபம்
வருத்தம்
பதற்றம்
ஏமாற்றம்
பயம்
பசி
ஆசை
விரக்தி
ஒவ்வொன்றும்
என் நிழல்கள்!
விரட்டி விரட்டி
களைத்த பின்பு
அவற்றின்
கைகளை
பிடித்துக்கொண்டே
மெல்ல
பாட ஆரம்பித்தேன்.
இசையின் லயத்தில்
ராகத்தின் சஞ்சாரத்தில்
மனதின்
மங்கல மண்டபத்தில்
எங்கள் நடனத்தின்
அரங்கேற்றம்!
நடன அசைவின்
நகர்வுகளில்
உச்சஸ்தாயின்
உத்வேகத்தில்
எங்கள்
ஆயுதங்களை
நாங்கள்
எப்போதோ
துறந்திருந்தோம்!
இதயத் துடிப்பின்
தாளகதியில்
சுழன்றாடும்
ஒத்திசைவின்
வளையத்தில்
நுழைந்திருந்தோம்
இருளுக்கு நன்றி!
நிழல்களுக்கு நன்றி!
வாழ்தல் வேண்டி
ஊழ்வினை துரத்த
எங்களுக்குள்
எழுதிக்கொண்டோம்
சமாதான உடன்படிக்கை!



