
எனக்கு முதலாளியாக அறியப்பட்ட இந்தோனேசியாக்காரன் பெரும் கொண்டாட்டங்களை தனக்குள் நிறைத்தவன். கடற்கரை உள்ள எல்லா பெரிய நாடுகளிலும் இவனுக்கு ஹோட்டல் உண்டு. ஊர் பொறுக்கி போல உடையணிந்து கையில் எப்பொழுதும் குழல் சுருட்டு வைத்திருப்பான். அது கொள்ளி போல விரலுக்கிடையே புகைந்து கொண்டே இருக்கும். சைனா, ஜப்பான், இந்தோ போன்ற பல நாட்டின் கலப்பினம் போல கண்களில் எபொழுதும் ஒரு குறும்பு இழையோடும். அவன் மனைவி தெய்வீக புன்னகை கொண்டவள் போல இருப்பாள். வயதை கணிப்பது அவசியமற்றது போன்ற சௌந்தர்யம் கொண்டவளாக இருந்தாள். சிரித்து சிரித்து விழியோரங்களில் நிரந்தர சுருக்கம் தங்கியிருக்கும். எப்பொழுதும் கைகோர்த்து திரிவார்கள். இருவரும் தூய இஸ்லாமிய பெயர் கொண்டவர்கள். வந்த புதிதில் இருவருக்கும் ஒரு ‘அசலாமு அலைக்கும்’ வைத்தேன். அதை கேட்டு அவர்கள் விபரீதமாக பார்த்தார்கள். அதை அடிக்கடி சொல்லி அலி விழுந்து சிரிப்பான். “அதுங்க முசுலீம்தான். நம்ம நினைக்கிற உள்ளூர் துலுக்கனுங்க இல்ல. பணக்கார இபுலீசுங்க. மார்க்க கல்யாணம் கூட பண்ணிருக்க மாட்டாங்க. அவனுங்ககிட்ட போய் ஸலாம் வைக்கிற!” என்றான்.
கணவன் மனைவி இருவரும் மாதம் அவ்வப்பொழுது தங்குவார்கள். சிலநேரம் அவன் தனியாக வருவான். அவனுடன் நெருக்கமாக இன்னொருத்தி வருவாள். நான் வந்த ஆறு மாதங்களில் நான்கு பேரை மாற்றி விட்டான். தெய்வீக சிரிப்புக்காரிக்கு இதெல்லாம் தெரியாமல் நடக்கிறது எனச் சொல்ல மாட்டேன். இருவரும் கடற்கரையை ஒட்டி லாமு எரிமலையில் உருவான அந்த சாம்பல் நிற மணல்பரப்பில் சூரிய ஒளியில் வெள்ளித் துகள்களாக மின்னும் பின்னணியில் உட்கார்ந்து மது அருந்துவார்கள். அவர்களின் ஒரு வாய் மது உறிஞ்சலில் நீண்ட நேர உரையாடல் இருக்கும். அது அவர்களுக்குள் நிறையப் புரிதலை உண்டு பண்ணியிருக்கும் என நம்பினேன். என்ன இருந்தாலும் தெய்வீகம் கொண்டவள் புன்னகைக்கு முன் அவன் ஓட்டிக்கொண்டு வரும் பெண்களால் அருகில் கூட நிற்க முடியாது.
சற்று வயதான ஆண், பெண்களை இங்கு வேலைக்கு இருக்கும் அலி கிழவன், கிழவி என்றே சொல்வான். நான் இப்படி சொல்லத் தயங்கியபொழுது பேசி உற்சாகப்படுத்தி என்னையும் அப்படியே விளிக்க வைத்தான். அவன் பெயர் சகுபர் அலி. நான் உட்பட எல்லோரும் அலி என்று அழைக்கும்போது பல நேரம் அதை ஏற்றுக்கொள்ளாதவன் போல கடுமையாக மறுப்பான். “அலின்னு சொல்லாத அசிங்கமா இருக்கு!” அலி என்றால் உன்னதமானவன், உயர்வானவன் எனப் பொருள் என்றதும் ஒருமுறை அந்த அர்த்தத்திற்கு தன்னை பொருத்தி பார்த்துக்கொண்டவன் போல இடுப்பில் கை வைத்து வடக்கு கடற்கரை நோக்கிப் பார்த்தான். பின் ‘சரி’ என்பது போல வேலையில் மூழ்கினான். நல்ல வட்டசாட்டாமான ஆறடி உயரம் கொண்ட நாற்பது வயது மனப்பக்குவமில்லாதவன். லாமுவிற்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் ஊருக்குப் போக வழியில்லாதவன். ஊரில் அவ்வளவு கடன் அவனுக்கு. பிள்ளை இல்லாத மனைவி ஓடிபோய் இரண்டு ஆண்டுகள் ஆகிறது என்பதை தினத்தந்தி செய்தி போல வெகு சாதாரணமாகச் சொல்வான்.
“உனக்கு இதுல வருத்தமில்லையா அலி?” எனக் கேட்பேன். “வருத்தப்பட்டு என்ன ஆகப்போது? கல்யாணமாகி ஆறு மாசமாகியும் பக்கம் நெருங்க விடல. ஆனா, குடுக்குற காசை மட்டும் வாங்கி வச்சிக்குவா. அப்பவே சுறுக்குன்னு இருக்கும். அடுத்த ஆறுமாதத்தில் ஒரு ரெண்டு நாள் ஒண்ணா இருந்திருப்போம். அதுவும் ஒருதடவை விட்டகொறை தொட்டகுறை. ரெண்டாவது வாட்டி தூக்கவர்ச்சில என்ன நடந்துச்சுன்னு இப்பவரைக்கும் மட்டுப்படல. அப்புறம் கல்யாணத்துக்கு வாங்குன கடன் நெரிக்க ஆரம்பிச்சுருச்சு. அவளே ஏற்பாடு பண்ணி இங்க அனுப்பி வச்சா. இப்ப எவன் கூடவே ஓடிப்போயிட்டான்னு கூட தகவல் இல்ல! இதுல கவலைக்கு என்ன வேலை? அனாதையா இருந்த எனக்கு கல்யாணம் பண்ணி வச்சானுங்க. இப்ப திரும்பவும் அனாதையா நிக்கிறேன்” – என்று யாருக்கோ நடந்ததைப் போலச் சொல்வான்.
எங்க எனக்கு இங்கு ஆறுமாதம் திறந்தவெளி தீவுச்சிறை போல இருந்தது. மாலத்தீவு தலைநகர் மாலேவிற்கு அருகே இருக்கும் லாமு. மாலேவிலிருந்து 250 கிலோமீட்டர் இருக்கும். ஒரு உள்நாட்டுப் படகில் அழைத்து வந்தார்கள். என்னுடன் பயணித்தவர்களுடன் நானும் ஒரு சுற்றுலாப் பயணியாக என்னை நினைத்துக் கொண்டேன். தீவு நெருங்க நெருங்க ஒரு பயம் சுற்றிக்கொண்டது. என்னை அழைத்து வர கெட்டுட் வந்தான். உள்ளூர்க்காரன். பழைய பட நாகேஷ் போல இருப்பான். பொதுவாக பாலி மக்கள் மென்மையானவர்கள். ஆனால், கெட்டுட் அந்த ஊரின் கருப்புப் பக்கத்தைப் பிரதிபலிப்பவனாக இருந்தான். லாமுவின் அமைதியான கடலுக்கு அடியில் இருக்கும் சுழலைப் போல அவனது எண்ணங்கள் வக்ரமானவை என அலி அடிக்கடி சொல்வான். அலி சொன்னதற்கு அச்சுபிசகாமல் நடந்து கொண்டான் கெட்டுட்.
என் உறவினர்கள் அனைவரும் சவூதியில் வம்பாடுபட்டு பணம் சேர்த்து ஊரில் வீட்டை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். உள்ளூர் பிழைப்பு யாருக்கும் எடுபடவில்லை. கல்லூரி முடித்து மீதமிருக்கும் தேர்ச்சி பெறாத பாடங்களை நினைவுபடுத்திப் பார்ப்பதே கடினமாக இருந்தது. அத்தா உள்ளூர் பள்ளிவாசலில் குமாஸ்தா போல வேலை பார்த்தார். எப்பொழுதும் சிரித்த முகம் கொண்ட அவருக்கு பள்ளிவாசல் நிர்வாகம் சந்தா தொகை வசூல் செய்யும் வேலையை தலையில் கட்டியது. பெடல் போட்டு சைக்கிள் ஒட்டியதில் கால் நரம்பு வெளிப்படையாகத் தெரிந்து ஒருகால் நிரந்தரமாக நின்று விட்டது. பின் பள்ளி நிர்வாகம் வந்து லேசான வேலையை கொடுத்து அதை விட லேசான சம்பளம் கொடுத்தது. பள்ளிக்கு வந்த ஒரு அதிராம்பட்டினம் பாய்தான் இந்த மாலத்தீவு வேலை பற்றி அத்தாவிடம் சொல்லி எனக்கு ஏற்பாடு நடந்தது.
முழுதாய் முப்பதாயிரம் புரட்ட அம்மாவின் கருகமணி வரை உள்ளூர் அடகுக்குப் போனது. பல பெரிய மனிதர்கள் வெளிப்படையாய் போட்ட பிச்சை வேறு சேர்ந்து விசா தொகை கட்டப்பட்டது. தனியே விமானக் கட்டணம் செலுத்த அத்தா பல பள்ளிவாசலில் உண்டியல் குலுக்கினார். ஆறு மாதத்தில் அடைபடவேண்டிய கடன் இன்னும் அப்படியே நின்றது. கடைசியாக அத்தாவிற்கு இரண்டு காலும் நின்றதாகச் சொன்னார்கள். ஒருநாள் ஆறு மாதத்திற்கான முதல் சம்பளம் கொடுத்தார்கள்.
அந்த சம்பளத்தை கொடுக்கும் பொழுது கிழவனுக்கு சிரிப்புக் கொள்ளவில்லை. எனக்கு அது அவமானமாக இருந்தது. எல்லாம் டாலர். அதை ஊருக்கு அனுப்புவதே பெரிய சாகசம் போல அலி சொன்னான். வங்கிக் கணக்கு இல்லாமல் தலைமயிரு கூட இங்கு அசையாது. அதுநாள் வரை ஊதியம் இல்லாத எனக்கு அதற்கான தேவையும் இல்லை. அடுத்த மாதத்தில் வங்கிக் கணக்கு ஏற்படுத்தித் தருவதாக எங்கள் மேலாளர் சொன்னார். அவர் திருநெல்வேலிக்காரர். அலி மேலாளரை பஞ்சப் பரதேசி என்பான். அவரும் மேலாளர் என்பதற்கு எந்த லட்சணமும் இல்லாமல் சரியான தேதியில் சம்பளம் வாங்கி யாருக்கும் தெரியாமல் பதுக்கிக் கொள்பவர். என் சம்பளத்தை அவர் வங்கிக்கணக்கில் வைத்து வீட்டுக்கு அனுப்ப செய்த முயற்சி வேலை செய்யவில்லை. இது இந்த ஊரில் சட்ட விரோதம்; இருவருக்கும் வேலை போய்விடும் என போலியாக பயங்காட்டினான். ‘என்ன செய்வது?’ என கேட்டதற்கு, அலி ‘எதற்கு ஊருக்கு பணத்தை அனுப்ப வேண்டும்?’ எனக் கேட்டு என்னிடம் முதன்முறையாக வசவு வாங்கிக் கொண்டான். பின் ‘உன்னையும் என்னைப் போல நினைத்துக் கொண்டேன்’ எனக் கூறி மன்னிப்புக் கேட்டான். பின் அதற்கு பரிகாரமாக ஒரு உண்டியல்காரனிடம் பேசி பணத்தை ஊருக்கு அனுப்ப உதவினான்.
லாமுவில் காற்று எப்போதும் ஈரப்பதத்துடன் கனமாக இருக்கும். மழை மேகங்கள் எப்போது வரும் என்றே தெரியாது. திடீரென ஒரு பெருமழை பெய்துவிட்டு, அடுத்த ஐந்தாவது நிமிடம் பிரகாசமான சூரியன் வந்துவிடும்.
காற்றில் எப்போதும் ஜாதி மல்லி வாசனையும், ஈரமண்ணின் வாசனையும் கலந்தே இருக்கும். இங்கே சூரியன் மறைந்தவுடனேயே கடலிலிருந்து வரும் குளிர்ந்த காற்று பகல் நேர வெப்பத்தை அப்படியே உறிஞ்சி விடும். வேலையில்லா நேரங்களில் கருப்பு மண்ணில் உட்கார்ந்து கடலை வெறித்துப் பார்பேன். என்னைப்போல் கரையில் உட்கார்ந்திருக்கும் எல்லோரிடமும் அலை தனித்தனியே உரையாடுவது போல இருக்கும். இங்கு நான் வந்தது எலெக்ட்ரிசியன் வேலைக்கு! கல்லூரி முடித்து ஆறு மாதம் உள்ளூர் சோப்ளாங்கி முதலாளியுடன் வேலைக்கு போய் ஓரளவு தொழில் கற்றேன். அந்த தகுதி கொடுத்த தைரியம்தான் இங்கு வரை இழுத்து வந்திருக்கிறது.
லாமு தீவின் மின்சார உற்பத்தி மிகவும் பலவீனமானது. இதை வைத்து எந்த வேலையும் இயங்காது. முழுமையாய் ஒரு குண்டு பல்ப் கூட துலங்காது. ஆகவே, இங்கிருக்கும் ஹோட்டல் மற்றும் இன்னபிற முதலாளிகள் சொந்தமாக ஜெனரேட்டர் வைத்திருந்தார்கள். எங்கள் ஹோட்டலில் நான்கு இருந்தது. ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒன்று என சுழற்ச்முறையில் இயக்கும் வண்ணம் வாங்கி வைத்திருந்தான் இந்தோனேசியா கிழவன். அதை இயக்கும் வேலை எனக்கு!
ஜெனரேட்டரை சரியாகப் பராமரித்து தேவையான அளவு பெட்ரோல் ஊற்றிப் பராமரிக்க வேண்டும். இந்தோனேசியா கிழவனும் தெய்வீக புன்னகைக்காரியும் இந்த ஜெனரேட்டரை வரும் போதெல்லாம் சவலைப் பிள்ளையை பார்ப்பது போல பார்த்து தடவிக் கொடுத்துவிட்டுப் போவார்கள். இங்கு ஜெனரேட்டர் இல்லாவிட்டால் ஹோட்டலை மூடி விடலாம். அந்தளவுக்கு முக்கியத்துவம் கொண்டதாய் இருந்தது. இதன் அருகே எனக்கு அறை ஒதுக்கியிருந்தார்கள். ஆறுமாத சம்பள வரவை இந்த அறை விட்டத்தை பார்த்துதான் கேட்பேன். நிறைவான அமைதி கொடுத்த இந்த அறையில்தான் இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு இலங்கைக்காரன் தூக்கு போட்டுச் செத்ததாக அலி சொல்வான். எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஜெனரேட்டர் சத்தம் எந்த அமானுஷ்ய உணர்வையும் எனக்குள் கடத்தாமல் பார்த்துக்கொண்டது.
கெட்டுட்டுடன் எனக்கு முதல் மோதல் பெட்ரோல் தொடர்பாக இருந்தது. ஜெனரேட்டருக்கு வாங்கும் பெட்ரோலில் அவன் விரும்பும் கணக்கில் என்னை எழுதச் சொன்னான். நான் மறுத்தேன். அவன் உள்ளூர் மொழியான திவேஹியில் என் குடும்ப பெண்களைப் பேசினான். ஏதோ திட்டுகிறான் என அமைதியாக இருந்தேன். அதை ஆங்கிலத்தில் மீண்டும் மொழிபெயர்த்து சைகையில் சொன்ன பொழுது சம்பளமும் அத்தாவின் நரம்பு சுற்றிய காலும் இன்னும் பலவகையான வெறியும் சேர்ந்து கொண்டது. அவன் கழுத்தை பிடித்து தூக்கிய பொழுது பெண் உருவம் பதித்த மாத காலண்டர் அவன் தலையில் விழுந்தது. சுற்றில் வைத்து அவனை அழுத்தினேன். இவையனைத்தும் ஒரு சில நொடியில் நடந்து முடியவே அவனை அவசரமாக விடுவித்து பெரிய கொலையில் இருந்து தப்பினேன். கிட்டத்தட்ட மரணத்தை பார்த்து திரும்பியவன் போல அறையிலிருந்து ஓடினான். இரவு முழுக்க அவனைப் பிடித்து தூக்கிய கையில் இருந்து நெஞ்சு வரை கடுமையான வலி பிடித்துக்கொண்டது. உள்ளூர்க்காரனை, அதுவும் நியாயம் என்பது அறவே இல்லாத ஒரு இடத்தில் சுயமரியாதையை அவிழ்ந்துவிட்டது எவ்வளவு பெரிய காரியத்தை கட்டவிழ்த்து விட்டு விட்டது! அலியை எழுப்பலாம் என நினைத்து அமைதியாக இருந்தேன். காரணம் அவன் அசடன் போல சிரித்து வைப்பான். பொண்டாட்டி ஓடியதையே சமையலில் உப்பு கூடியது போல அணுகியவன். இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டான். அமைதியாக இருந்து தூங்கி விட்டேன்.
பின் அதை முறையாக நிர்வாகத்திடம் சொல்ல வேண்டும் என்பதற்காக விடிந்ததும் திருநெல்வேலி மேலாளரிடம் கூறினேன். அவர் அமைதியாக கேட்டுக் கொண்டதே ஆச்சரியமாக இருந்தது. “கெட்டுட் மோசமானவன். இங்க உன்னை நிம்மதியா இருக்க விட மாட்டான். உன் நல்ல நேரம் அவன் கையில் கத்தி இல்ல. இருந்துருந்தா நிச்சயம் சொருக யோசிக்க மாட்டான். உடனே அவன்கிட்ட போய் மன்னிப்புக் கேளு!” எனக் கூறிவிட்டு நின்று விட்ட யோசனையை மீண்டும் தட்டியெழுப்பி கணக்கு எழுதத் தொடங்கினார். இவர் இப்படி நிறைய தடவை நிறைய பேருக்கு யோசனை கூறியிருக்க வேண்டும்.
கெட்டுட், வெளியே சென்று காய்கறி, இறைச்சி வாங்கும் டிரைவர். அவன் ஓட்டும் ஜீப்பை சிரங்கு வந்தது போல பராமரிப்பு செய்வான். வேலை போக எஞ்சிய நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா, ஹெராயின் விற்பான். அங்கு கடுமையான சட்டங்கள் இருந்த போதும் அவற்றின் புழக்கம் தாராளமாக இருந்தது. அவனைத் தேடி வரும் ஆட்களும் ஏழடிக்கு குறைவில்லாதவர்களாக இருப்பார்கள். அவனைத் தேடி வருபவர்களைப் பார்த்தே இவன் ஒரு அச்சுறுத்தல் மிகுந்த ஆளாக மாறியிருந்தான். கையில் டாலர் புழங்கினாலும் இருந்தாலும் அழுக்காக இருப்பான். அவன் அருகில் சென்றதும் இயல்பாக இருந்த முகம் மாறியது. கோபத்தில் ஒரு பெண் போல நளினமாக நடந்து கொண்டான். அவன் தோளில் வைத்த என் கையை ஒரு நடை முன்னதாக நடந்து நிராகரித்து தள்ளி நின்று கொண்டான். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் என் வருத்தத்தை கெட்டுட்டிடம் தெரிவித்தேன். அவன் மெலிதாகச் சிரித்து விட்டு ஒரு சிகரெட்டை பற்ற வைத்து என் உரையாடலுக்கு புகை வழியாக பதில் கூறுவது போல இருந்தான். பின் அலட்சியமாக வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். உரையாடலில் அவனுக்கு ஏதுவாக ‘ஜெனரேட்டர் பெட்ரோல் திருட்டை கண்டுகொள்ள மாட்டேன்’ என்றேன். அதற்கு கூட பதில் கூறாமல் இருந்தது எனக்கு உண்மையில் பயமாக இருந்தது.
அலியிடம் இதுகுறித்து கூறினேன். அவன் என்னை ஆழமாய் பார்த்துவிட்டு தோளில் கை வைத்து ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றான். உண்மையில் கெட்டுட்டுடன் அலிக்கு பெரிய நட்பு இல்லை. எப்பொழுதாவது இருவரும் பீர் குடிப்பார்கள். அதில் பெரிய சுவாரஸ்யம் இருக்காது. அதன்பின் எதிலும் நம்பிக்கையற்றவனாக இருந்தேன். ஜெனரேட்டர் மற்றும் என் அறையை எப்பொழுதும் கவனமாக பார்த்து விட்டு உள்ளே சென்றேன். காரணம் கெட்டுட் கத்திகுத்து சம்பவங்களில் மட்டுமல்ல, அறைக்குள் பாம்பை விட்டு கடிக்க விடும் நுட்பம் கொண்டவர்களை நண்பனாக கொண்டவன் என ஆறுதல் வார்த்தைகளுக்கிடையே அலி கூறியிருந்ததுதான்!
ஒழுங்கான சம்பளம் இல்லை, உடன் வேலை பார்ப்பவர்களின் ஒத்துழைப்பு இல்லை; ஆனால், அச்சுறுத்தல் உண்டு, தன்னை வைத்தே மேம்படக் காத்திருக்கும் குடும்பம் என பார்வை நீளும் எல்லா திசையிலும் முற்றுப்பெறாத வெற்றுக்கடல் வாழ்வு மீதான சலிப்பை கூட்டியிருந்தது. இருக்கும் எல்லா ஜெனரேட்டர்களிலும் ஆறுதல் கோரும் பைத்தியக்காரதனமான வாழ்வாக இருந்தது. ஆறுதலுக்கு எஞ்சியிருந்த அலியுடன் ஒரு அரைமணி நேரம் தொடர்ந்து பேசினால் உண்மையிலேயே பைத்தியமாக மாறி விடுவேனோ என நினைத்தேன்.
அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா செல்ல சென்று கொண்டிருந்தேன். கடல் காற்றில் பாங்கு ஓசையைக் கேட்டபடி சென்றேன். லாமு தீவின் தெற்கு திசையில் இருக்கும் ஒரே பிரதான சாலையைக் கடந்தால் பள்ளிவாசல் இருக்கும். கெட்டுட்வுடன் ஆரம்பத்தில் கொஞ்சம் நட்பு இருந்த பொழுது வெள்ளிக்கிழமை ஜும்மா செல்ல பள்ளிவாசல் வரை காரில் கொண்டு விடுவான். இப்பொழுது நடந்த சென்று கொண்டிருந்தேன். தெருவை ஒட்டி கெட்டுட் காய்கறி வண்டி நின்று கொண்டிருந்தது. கார் பேனட்டை திறந்து கையில் ஒரு மரத்துண்டு வைத்து தட்டிக்கொண்டிருந்தான். நான் அருகில் சென்று அவன் முதுகைத் தொட்டதும் என்னை நேரடியாக பார்ப்பதைத் தவிர்த்தான். பின் காரில் இருந்த ஒயரிங் பிரச்சனையை சரி செய்ய முயற்சி செய்தேன். இது கெட்டுட்வுடன் பகை மறந்து மீண்டும் நட்பு உருவாக காரணமாக இருக்கும் என நம்பினேன். எலக்ட்ரிசியன் வேலை என்றாலும் கார்களில் இருக்கும் அடிப்படை ஒயரிங் அமைப்பு தெரியும் என்பதால் எளிதாகச் சரிசெய்துவிட்டு அவனைப் பார்த்தேன். எந்த நன்றியுணர்வும் முகத்தில் காட்டாமல் காரை எடுத்துக்கொண்டு சென்றான்.
மனம் நிலையில்லாமல் அலைந்தது. பிரமாண்ட பள்ளிவாசலுக்கு பின்புறம் கடற்கரை வெளியே தெரிந்தது. ஜுகுங் படகுகள் லாமுவின் கடற்கரையோரம் வரிசையாக நிற்கும். ஜுகுங் மீன்பிடிப் படகுகள் அந்த ஊருக்கே ஒரு தனி அழகைத் தரும். இவை மரத்தால் செய்யப்பட்ட குறுகிய படகுகள், அதன் இருபுறமும் மூங்கிலால் ஆன மிதவைகள் இணைக்கப்பட்டிருக்கும். அவை காற்றில் ஆடும் பொழுது என் நிச்சயமற்ற வாழ்வின் ஊசலாட்டம் போல இருந்தது. தொழுகை ஆரம்பித்ததும் முடிந்ததும் என் மனதில் இல்லை. திரும்பி நடந்தேன்.
லாமுவில் பெரிய சிமெண்ட் கட்டிடங்களை விட, மரத்தாலும் கற்களாலும் ஆன கட்டிடங்களே அதிகம். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் பென்ஜோர் எனப்படும் நீண்ட மூங்கில் கம்பிகள் அலங்கரிக்கப்பட்டு வளைந்து நிற்கும். அதை மக்கள் தங்களின் பாரம்பரியக் கடமையாக கருதுவார்கள்.
நான் வேலை செய்யும் ரிசார்ட்டைச் சுற்றி புருமேரியா மரங்கள் அதிகம். இதன் பூக்கள் கீழே விழுந்து கிடக்கும்போது ஒருவிதமான தெய்வீக மணம் அந்தப் பகுதியையே ஆட்கொள்ளும். ஆனால், அங்கிருந்த யாரிடமும் தெய்வீக லட்சணங்கள் இருந்ததில்லை எனத் தோன்றியது. கெட்டுட் அதே இடத்தில் காருடன் நின்று கொண்டிருந்தான். எனக்காக கதவைத் திறந்து விட்டான். வழியில் எனக்கு கோழி இறைச்சி கொண்ட ஒரு ரொட்டியை வாங்கிக் கொடுத்தான். இரவு என்னுடன் பீர் சாப்பிட வேண்டும் என்றான். அவனுக்குள் எழுந்த மனமாற்றம் எனக்கு நிறைவை கொடுத்ததும் அவனிடம் மீண்டும் ஒரு மன்னிப்பைக் கோரினேன். என் கைகளை பிடித்து தட்டிவிட்டுச் சிரித்தான்.
அந்த இரவில் நீண்ட நேரம் தூக்கம் பிடிக்கவில்லை. கதவு தட்டப்படும் சப்தம் கேட்டுத் திறந்தேன். ஒரு பெரிய காக்கி நிற காகித பொட்டலத்துடன் கெட்டுட் நின்றான். விட்டுச் சென்ற சிரிப்பை மீண்டும் தொடர்ந்தான். இருவரும் பீர் குடித்தோம். அன்று நான் குடித்த பீர் வாழ்கையில் மூன்றாவது முறை. ஹோட்டலில் மிஞ்சிய இறைச்சியை கொண்டு வந்திருந்தான். ஹோட்டலில் வேலை பார்க்கும் ஒரு உள்ளூர்க்காரன் இவனது சொந்த மச்சான். கைப்பிடி சட்டியை வைத்து சோற்றை வறுக்கும் பொழுது அவன் தொப்பை ஆடுவது வேடிக்கையாக இருக்கும். அவனிடம் சொல்லிவிட்டால் கெட்டுட்க்கு தேவையான உணவுவை தனியாக ஒதுக்கி விடுவான். அன்று இரவு முழுக்க குடித்துக் கொண்டு பேசினோம். அவன் உள்ளூர் மொழியில் ஏதோ சொன்னதை நான் புரிந்தது போல வெகுநேரம் தலையாட்டிக் கொண்டிருந்தது தவிர்த்து ஏதும் நினைவில் இல்லை.
மறுநாள் என் அறைக்கு வந்து கதவை தட்டிய கெட்டுட் ஒரு பெரிய இரும்பு டின்னை கொடுத்துவிட்டுப் போனான். கூடவே ஆங்கிலத்தில் நான் இருக்கிறேன் என்றான். ஆறு மாதம் பார்த்த வேலைக்கு இப்பொழுதுதான் முதல் மாத சம்பளத்தை அவிழ்த்த இந்தோனேசியா கிழவன் முகத்தை நினைத்துப் பார்த்தேன். கூடவே அவன் மனைவி தெய்வீக புன்னகை கொண்டவளையும் நினைத்து பார்த்தேன். அத்தாவின் கால் நரம்புகள் என் கழுத்து வரை நெரிக்கத் தொடங்கியது. இனி இந்த இரும்பு டின்தான் சரியாக வரும் எனத் தோன்றியது. இதில் துணைக்கு அலியை சேர்த்துக் கொள்ளலாமா? என அவனிடம் கேட்கக் நினைத்து அமைதியாக இருந்தேன்.
பெட்ரோல் பொய் கணக்கு எழுதிய மூன்றாவது நாளிலேயே கிழவன் வேறு ஒரு கிழவியுடன் வந்தான். வந்ததும் வராததுமாய் ஜெனரேட்டர் அறையை சோதனை செய்வது போல நாலாபுறமும் நோட்டமிட்டு அந்த இரும்பு டின்னைப் பார்த்தான். எனக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. என்னைப் பார்த்து சிரித்த கிழவன் அருகில் நின்ற மேலாளரை பார்த்து ஏதோ சொன்னான். மேலாளர், “இது சீசன் நேரம். ஜெனரேட்டரை நல்லா மெயின்டெய்ன் பண்ணு!” எனச் சொல்லிவிட்டு அவனும் அர்த்தமாகச் சிரித்தான்.
அடுத்த இரண்டு நாளில் மேலாளர் என்னை தனியாக அழைத்து பேசினான். “கெட்டுட் உள்ளூர்காரன் மட்டுமில்ல. பெரிய ரவுடி. இங்க இருக்கிற எல்லா உள்ளூர் கேங்லையும் உள்ள ஆளு இவனுக்கு கஸ்டமர். அதுனாலதான் ஓனர் கூட ஏதும் கண்டுக்க மாட்டான். நான் சொல்றது புரியும்ன்னு நினைக்கிறேன்!” என்றான்.
அடுத்த இரண்டு மாதங்களில் விசா காசை பெட்ரோல் எடுத்து சம்பாதித்துக் கொண்டேன். கெட்டுட் பெட்ரோல் திருட்டில் மிகவும் நியாயமாக நடந்து கொண்டான். அவன் வீட்டுக்கு அழைத்து சென்று மனைவியுடன் அறிமுகம் செய்து வைத்தான். மனைவி என்னிடம் ஆங்கிலத்தில் நலம் விசாரித்து விட்டு மிகவும் நாகரீகமாக விருந்தோம்பல் செய்தாள். ‘இந்த உள்ளூர் பொறுக்கிக்கு இப்படி ஒரு மனைவியா?’ என ஆச்சரியமாக இருந்தது. என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு செல்லும் போது கெட்டுட்டிடம் அவன் மனைவி குறித்து உரிமையாக கேட்டேன். அதற்கு கெட்டுட், “நீ இன்று சொல்வதை அன்று மனதால் உணர்ந்தேன். ஆகையால்தான் நண்பனின் மனைவி என பாராமல் குடும்பம் நடத்த அழைத்து வந்துவிட்டேன்” என்றான். அடுத்து அவன் குழந்தை குறித்து கேட்க இருந்த கேள்வியைக் கேட்கவில்லை.
நான் வந்து ஒரு வருடம் முடியும் பொழுது லாமு எனக்கு அழகான ஊராக மாறத்தொடங்கியது. முன்பு ஜெனரேட்டர் இயங்கும் பொழுது அதை விட்டு எங்கும் போவதில்லை. நான்கு மணிநேரத்திற்கு ஒருமுறை ஜெனரேட்டரை மாற்ற வேண்டும். அது இயங்கு நிலையில் இருக்கும் பொழுது இன்னொரு ஜெனரேட்டரை இயக்குவது பெரிய சவாலாக இருந்தது. இப்பொழுது அந்த திறனும் கைக்கூடி வந்திருந்தது. ஜெனரேட்டர் இயங்கும் நேரங்களில் கடற்கரைக்குள் சென்று பவளப்பாறைகளை பார்த்து ரசித்தேன்.
வங்கி கணக்கு தொடங்கி ஊருக்கு உரிய நேரத்தில் பணம் அனுப்ப முடிந்தது. வந்த ஒரு வருடத்தில் முழுமையாக நான்கு மாத சம்பளம் மட்டுமே வாங்கியிருந்தேன். அது உள்ளூர் செலவுக்கு மட்டுமே ஆனது. கெட்டுட்டுடன் சேர்ந்து பெட்ரோல் கணக்கு எழுதியதில் எனக்குப் பேசிய சம்பளத்தை விட சற்று அதிகமாகவே அனுப்ப முடிந்தது. தவிர இரண்டுமுறை ரிப்பேர் ஆகாத ஜெனரேட்டரை பழுதானதாக திருநெல்வேலி மேலாளருடன் சேர்ந்து ஒரு கணக்கு எழுதியதில் வார இறுதிகளில் ஒரு சுற்றுலா பயணி போல இயங்க முடிந்தது. கிழவன் சம்பளம் குடுக்க சுணங்குவதன் அர்த்தம் ஓரளவு விளங்கியது. அதில் அலிக்கும் நிறைய செலவு செய்தேன். என் வளர்ச்சியை அவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். கெட்டுட், ‘அலியிடம் பெட்ரோல் குறித்து எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்; அவன் ஒரு கிறுக்கன்!’ என்றான். அலியின் தேவை யாவும் மூன்று நேர சாப்பாட்டில் மட்டும் இருந்தது. அவன் ஊருக்கு இனி திரும்ப விரும்பவில்லை என்றான். ‘இங்கிருக்கும் மையவாடியில் என் உடலுக்கு ஒரு இடம் கிடைக்காதா? என் உடலை நின்றவாறு புதைத்தால் கூட போதும்!’ என்பான்.
எங்கள் ஹோட்டலுக்கு வரும் ஏஜென்ட் ஒருவன் அடுத்த வாரத்திலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகளை ஹோட்டலில் சாப்பிட வரவழைப்பதாகச் சொன்னான். நான் ஜெனரேடரை இயக்கி விட்டு எளிய விசை படகு ஒன்றுக்கு காத்திருந்தேன். அதை இயக்கும் முதலாளிக்கும் எனக்கும் நல்ல பழக்கம் இருந்தது. அவனுக்காக ஒரு பீர் வாங்கிக் கொடுத்தால் நடுக்கடலில் பவளப்பாறையை நெருக்கமாக காட்டுவான். அன்று பார்த்த ஒரு பாறை யானை போலவே இருந்தது. அதை நீண்ட நேரம் பார்த்துவிட்டு கரைக்குத் திரும்பும்பொழுது பொழுது நீண்ட கருத்த புகை வானத்தை நோக்கி கொக்கி போட்டு ஏறிக்கொண்டிருந்தது. படகோட்டி அரைபோதையில் அதை ‘நிலத்தில் யாரோ எரிமலையை இயக்குகிறார்கள்’ என்றான். கரை நெருங்க நெருங்க ஒரு அசாதாரண சப்தம் கேட்டது. கரும்புகைநெடி மிக நெருக்கமாய் இருந்தது. சுற்றுலா பயணிகள் பலர் எரிந்து கொண்டிருக்கும் ஜெனரேட்டர் அறையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். படகு கரையை தொடும் முன்பே கடலில் குதித்து ஹோட்டல் நோக்கி ஓடினேன். கெட்டுட் ஓடிவந்து என்னை அறைந்தான். “முட்டாள் முட்டாள்” என்றது மட்டும் என் காதில் விழுந்தது. இருந்த நான்கில் இரண்டு ஜெனேட்டர்கள் கருகி நாசமாகும் கடைசி கட்ட காட்சியை மட்டுமே பார்க்க முடிந்தது.
அடுத்த ஆறுமணி நேரத்தில் கிழவன் வந்துவிடுவான் என்பதை அறிந்தேன். கிழவனின் குறும்பு புன்னகை இந்த பேரழிவுக்கு பின் எப்படி இருக்கும் என யோசித்து தலைவலி வந்திருந்தது. தூரத்தில் தெய்வீக புன்னகைக்காரி தெரிந்தாள். அடுத்து கிழவன் தெரிந்தான். ஆனால், இது வேறு கிழவன். அதுதான் இவளுக்கு உண்மையான கணவன் என அலி கூறினான். இந்த ஒரு வருடத்தில் இவ்வளவு பெரிய உண்மையை எப்படி கேட்க மறந்தேன் என்பது அந்த நேரத்திலும் ஆச்சரியமாக இருந்தது. சில விசயங்களை இப்படித்தான் கண்கள் மறைந்து விடும், ஜெனரேட்டர் எரிந்தது போல.
தெய்வீக புன்னகைக்காரி மாறாத புன்னகையில் என் பாஸ்போர்ட்டை எடுத்து முகத்திற்கு நேரே வீசினாள். ‘பல லட்சம் சேதாரத்திற்கு உன்னை சிறையில் அடைக்க வேண்டும்’ என அவள் மொழியில் மீண்டும் மீண்டும் கூறினாள். கெட்டுட் அவளை சமாதானம் செய்யப் பேசினான். என்னை அங்கிருந்து வெளியே போகச் சொன்னாள். மேலாளர் நீண்ட நேரம் குனிந்து தலை நிமிராமல் நின்று அவன் வேலையை காப்பாற்றிக் கொண்டான்.
என்னை அழைத்துச் செல்ல படகு தயாராக இருந்தது. கெட்டுட் அவன் செலவில் விமான டிக்கெட் எடுத்தான். ‘மீண்டும் உன்னை அழைத்துக் கொள்கிறேன். அதுவரை ஊரில் சற்று பொறுமையாக இரு’ என அவன் சொல்லும் பொழுது அவனது குழந்தை என்னைப் பார்த்துச் சிரித்தது. அலி எங்கிருந்தோ பணம் புரட்டி வெளிநாட்டு வேலையில் இருந்து விடுமுறைக்குச் செல்லும் ஒருவனின் கௌரவத் தோற்றத்திற்கு ஏற்ப ஒரு பெரிய பெட்டியை என்னிடம் கொடுத்து என்னை கட்டியணைத்துக் கொண்டான். தூரத்தில் பள்ளி பாங்கோசை கேட்டது. அந்த ஜும்மாவுடன் சேர்த்து தொழுகைக்கு சென்று பல மாதங்களாகியது ஞாபத்திற்கு வந்தது. நான் தொழுகையை விட்ட நேரத்தில் அலி தொழுகையை புதிதாக எடுத்திருந்தான். இப்பொழுது விமானம் ஏறினால் அது நாற்பது நிமிடத்திற்குள் திருவனந்தபுரம் சென்றுவிடும். விமானத்திற்கு கிளம்ப இன்னும் நான்கு மணிநேரம் இருந்தது. அருகில் இருந்த பள்ளிவாசலுக்கு என்னை அழைத்துச் செல்லுமாறு கெட்டுட்டை கேட்டுக்கொண்டேன். அலி அதைத் தடுத்து, “வா, காலாற நடந்து செல்வோம்!” என்றான். இருவரும் நடக்கத் தொடங்கினோம்.



