
அலங்கார வளைவுகளாகி வரவேற்கின்றன
ஆலமர விழுதுகள்
கண்மாயைக் காக்க
கரையில் நிற்கும் முனியன்
புரவி இல்லாமல்
வேட்டைக்கு
ஏறுகளைத் துணையாக்குகிறார்
கருமேனி அம்மன் முன்பு
கவனமாய் நடக்கிறது
பலியாட்டுப் பந்தி
கல்யாணம் காதுகுத்தென
கணக்கிலடங்காத கூட்டம்
மண்டபம் தராத இளைப்பாறலை
மரங்கள் தருகின்றன
உபயக் கல்வெட்டில்
ஊரார் பெயர்கள் நிரம்பி வழிய
நிழல் தரும் மரமும்
நீர் தரும் கண்மாயும்
விடுபட்டாலும்
விதர்ப்பம் இல்லை
அவற்றிடம்.
*
தும்பைப் பூக்களை
தேடிக் களைக்கின்றன
வண்ணத்துப்பூச்சிகள்
பூவாமல் கிடக்கும்
தாவரங்களால்
தேன் சேகரிப்பை மறந்த
வேலைக்காரத் தேனீக்கள்
சோம்பலைக் கற்றன
வேலிக்காய்களின்
ருசிக்குப் பழகிய
கரிசல் வெள்ளாடுகளும்
உண்ணக் குலையின்றி தவிக்கின்றன
கூர் மழுங்கிய ஏர்
கேட்பாரற்று
கொல்லையில் கிடக்கிறது
தச்சு வேலைக்காரர்களும்
மண்வெட்டி தூக்கி
கிளம்பி விட்டனர்
நூறுநாள் வேலையில் மண்வெட்ட
புழுவற்ற மரப்பட்டையை
கொத்திக்கொண்டே
மழை வேண்டி உளறாத
நல்லவருக்கு ஏங்கி
அகாலத்தில்
அலறுகிறது ஆந்தை
*
இழப்பின் வலி தாளாத
தாயைப் பிரிந்த மறிக்கு
கூடுதல் நோவைத் தருகிறது
கோடையின் வெம்மை
செருப்பின்றி
தரைச் சூட்டைப் பழகியிருந்த
இடையனின் நிழலில்
இளைப்பாறிய மறிக்கு
காம்பாகின
அவனது விரல்கள்.
*
அலுவலகத்தில்
அப்ரைசல் மீட்டிங்
சக பணியாளரை வெல்ல
இரவெல்லாம்
கண்விழித்து உழைத்து
விடியலில் உறங்கியவனின்
கனவில் வந்தார்
உழவுச் சாலில்
விதைத்த விதைகளை
கொத்தித் தின்ற பறவைகளைக்
கல்லெடுத்து விரட்டிய தாத்தா.
*
வேகுவேகென மூச்சிரைக்க
சாப்பாட்டுக் கூடையோடு
நடந்தவளுக்கு
செல்போன் செய்தி சொன்னது
வேலை இல்லையென
வெயிலும் மழையுமில்லாத கூராப்பை
அத்துவானக் காட்டில்
எதிர்கொண்டு
வான் நோக்கி கலங்கியவளின்
காதில் ஒலிக்கிறது
“கடவுள் தந்த அழகிய வாழ்வு”.
*
நினைவுப் பேழைக்குள் பயன்படுத்தாது
பூட்டி வைத்திருக்கும்
காத்திரச் சொற்கள்
நெருக்கடி தாளாது கதறியும்
சமயம் பார்த்து வெளியிடும்
இலக்கியவாதி
சொற்களின் கோணத்தில்
சுயநலவாதி.
*
கரிசலின் வெயிலை
தலையில் சுமக்கும்
வேலிச் செடிகளைத்
தாங்கி நிற்கும்
வைப்பாற்றங்கரையில்
வளர்ந்து
வெடித்துக் கிடக்கும்
வெள்ளரிப் பழங்களின்
சுவையறிந்த
நண்பன் ஈந்த பழத்தை
வாங்க மறுக்கிறான்
சாதிக் கலவரத்தில்
வெடித்த வெள்ளரிப் பழமாய்
சிதிலமடைந்த அப்பனின்
உடலைக் கண்டவன்.
சூரியப் பூவின்
மகரந்தமெனத்
தரையெங்கும்
படர்ந்திருக்கின்றன
பொன் மஞ்சள்
நெருஞ்சிகள்.
*



