ச.ஆனந்தகுமாரின், ’நினைவு யாழ்’ வாசிப்பனுபவம் – யமக்குன்று
கட்டுரை | வாசகசாலை

பதினேழு கதைகள் அடங்கிய எளிய வாசகர்கள் வாசிக்க ஏதுவான அற்புதமான படைப்பு. இதில் இடம்பெறும் கதைமாந்தர்கள் கடைசியில் தன்னை அறத்தின் நோக்கத்தில் இருத்திக்கொண்டு நிற்கிற மீட்சி பெருவலிமை. ஒவ்வொரு முடிவிலும் மையக் கதாபாத்திரம் குறிப்பிட்ட செயலை, நினைவை, படிப்பினையைப் புதுப்பித்துக்கொள்கிறது.
அறத்திற்கு எதிராய் இருப்பின் வேறெந்த அளவுகோல் பேதமுமின்றி அவ்விடத்தைப் புறந்தள்ளிக் கடந்து போகிறது. அல்வா போல வாசிக்க எளிது கூட்டிடும் அதே நேரத்தில் வீரியமான அழுத்தத்தைத் தரவல்லதாகவும் இருக்கத் தவறவில்லை.
வாழைப்பழத்தில் குண்டூசி போல மென்வழி கதைசொல்லல் வழியாக மனிதர்கள் அசௌரியமான நிலையில் மீண்டும் முந்தைய விசயங்களில் சந்தித்த மனிதர்களைப் பார்த்திடாமல் விலகுவது, உண்மையான கருணைக்கு அர்த்தம் பிறப்பிப்பது, நகரத்து மாந்தர்களில் பல்வேறு முரண்பட்ட மனிதர்களை எடுத்து பாத்திரமாகக் கையாண்டு அதனதன் தனித்துவத்தையும் செம்மைப்படுத்தியிருக்கிற கதை வகைகள்.
ஆசிரியர் ஆனந்த்குமார் மேலும் பாத்திரங்களை வேலை இழந்த நேரத்தில் அவசரத்திற்காகச் செய்யும் பிழையும் அதைச் சரிசெய்து மீள்வதும், பெண்கள் சீரழிவில் சிக்கிவிடாமல் தடுக்கக் கொலைகளைச் செய்யும் ஒருவனைக் கைது செய்கிற இடத்திலிருந்து அவனிடமே தனது தங்கையின் நீதிக்காகக் கொலை மனு அளிப்பதுமென நகரமென்றாலும் அதில் மேல்நிலை, இடைநிலை, கீழ்நிலையென எல்லாக் களங்களில் நின்றும் அடுக்கியிருக்கிறார்.
ரௌத்திரம் பழக வேட்கையிருந்தும் சூழல்வயப் பிழைப்பால் தன்னைக் குறுக்கிக்கொள்பவர் என-அதே சமயம் தன் மகளிடம் மென்மையாக இருந்துகொண்டு கௌரவத்தில் அல்லது பணத்தில் பொருத்திக்கொள்ள முடியாத காதலனை மிரட்டியது அவளுக்குத் தெரிந்த விசயம் கேட்டு சில நாட்களில் செத்துப்போவது என எல்லாக் களங்களையும் நிரப்பியிருக்கிறார்.
பழைய வாழ்க்கையை நினைந்து உருகுகிற, ஏங்குகிற, அங்கலாய்த்துப் புழுங்குகிற, பெருமூச்சோடு ஆசுவாசமாகிற அம்சங்களே அனைத்துக் கதைகளிலும் மனிதர்களின் வெவ்வேறு உணர்வுகளையும் லாவகமாகக் கையாண்டிருக்கிற யுக்தி அடர்த்தியாகக் கதை எழுதியும் தேறாத எழுத்தாளர்களுக்குப் பொறாமை தூண்டும் விதமாய் நிற்கும்.
அவசரப்பட்டு தவறாய் நினைத்த ஒருவரின் உண்மை முகம் தெரிந்து அப்படியே அவருக்கு முழுமையோடு உதவுகிற மனிதம், கனவை நனவாக்க முடியாமல் நஞ்சாகப்போன வாழ்க்கையை நன்கறிந்த ஒருவர் பார்த்து வருந்துவது மீண்டும் மனிதம், மேலும் சாதி வேற்றுமையால் கோவிலுக்குள் நுழைகிற அறப்போராட்டத்தை அரைப் போராட்டமாய் நிறுத்தி புரட்சியின் தொடர்ச்சிக்காகவும்- பாதுகாப்பு அடிப்படையில் தன்மக்களைக் காப்பதும் அறிவார்ந்த பொறுப்பான அரசியல்.
முன்னாள் காதலியின் பெயரை மனநல மருத்துவரான மகளுக்கு வைக்கும் அப்பனின் சாவில் அவிழும் நிறம், அடுக்குமாடிக் குடியிருப்பில் சவம் வைத்திருக்கக் கொடுக்கிற காலக்கெடு பெரும் காலக்கேடெனக் கடத்துகிற உத்தி, ஆசிரியரின் கையில் கதையின் குடுமி இருப்பதால் மனைவி கையால் உணவில் கலந்த விசம் தின்றும் கைமட்டும் போன உருப்படாத கணவன், அதை மனைவியின் கோணத்திலிருந்து நியாயப்படுத்தும் பாங்கும் தருகிற மிரட்சி.
மொத்தத்தில் ஆங்காங்கே சிற்சில களேபரங்களைப் பெரிய பதற்றமோ அடர்த்தியான வார்த்தைகளோ நேரடியாகத் தராமல் கதையில் அறமுடிவாக அதைத்தர நினைத்திருப்பது தனிப் பாணியாக இருக்கிறது.
அதிக உரைப்பும் நல்லதல்லவெனத் தெரிந்து உக்கிரப் பங்கங்களை வாசகர்கள் நிரப்பிக்கொள்ள அதிக இடம் கொடுத்திருப்பது ஒருபுறம், அதேநேரம் காரமாய் வீரியம்கொணர சிற்சில இடங்களில் அழுத்தத்தை நேரடியாக உணரச் செய்கிற கவுச்சிச் சொற்கள் அல்லது கடுஞ்சொற்கள் இல்லாதது தனிப்பட்ட வகையில் சிறு குறையாகத் தென்பட்டாலும் -குறிப்பிட்ட கோடுகளுக்குள் நொண்டியடிக்காமல் இலக்கை நோக்கி கச்சிதமாக அலட்டிக்கொள்ளாமல் பரிசெடுக்கும் பந்தயக்குதிரை மீட்டுபவை யாவும் நினைவின் கம்பிகளை முன்காலத்தின் ஆதிக்கரு வரை நீண்டுகொண்டிருக்கிற விதம்.
கதைக்குத் தலா பத்து போதும் நகரத்தின் எல்லாக் களங்களையும் அதன் மனித மனங்களையும், வெம்பல்களையும் முடிவில் வலியுறுத்துகிற அறத்தின் இழுக்கும் தன்மையும் தகும்.
2026இன் மிக முக்கிய ‘நிகழ் சிறுகதைகள்’ வகையறாவில் இடம்பெறக்கூடிய தாட்டியத்தை மென்மையாகப் பதிவு செய்கிற நூல். யாவரும் படிக்க சிறந்த நூல்.
*
நூல்: நினைவு யாழ்
வகைமை: சிறுகதைகள்
ஆசிரியர்: ச.ஆனந்தகுமார்
வெளியீடு: வேரல் புக்ஸ்
விலை: ரூ.170
***



