![Paravai Bala](https://vasagasalai.com/wp-content/uploads/2019/03/Paravai-Bala.jpg)
3.வரைபடம்
பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு நிலத்தை வாங்கிய பின் உங்களுக்கிருக்கும் முக்கிய பணி நீங்கள் உருவாக்கப் போகும் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் வரைபடம் தயாரிப்பது.
சீமைக்கருவேலம், ஆரஸ்பதி(யூகலிப்டஸ்) போன்ற இந்த மண்ணிற்கு ஒவ்வாத மரங்களை இயந்திரத்தின் உதவியோடு வேரோடு பிடுங்கி, மேடு பள்ளம் திருத்தி நிலத்தை சமன்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்ட பிறகு உங்களை ஒரு பறவையாக உருவகப்படுத்திக்கொண்டு நிலத்தைப் பார்வையிடுங்கள்.
அந்தப்பார்வை தான் வேளாண்மையில் உங்களுடைய முதல் ராஜபார்வை.
எந்தத் தாவரங்களும் இல்லாத பொட்டல் நிறைந்த காட்சி அது போல் உங்களுக்கு வருங்காலத்தில் கிடைக்கப்பெறாது. ஆதலால் உங்கள் நிலத்தில் எது மேடான பகுதி? எது மிகமிக தாழ்வான பகுதி? நாற்பக்கமும் உங்கள் நிலத்திற்கு வந்து போகும் மழைநீரின் வழித்தடம் ஆகிய அனைத்தையும் உங்கள் பார்வையால் அளக்க வேண்டும்.
இந்த வேலையெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது உங்களுடைய அங்காளி, பங்காளி, சுற்றத்தார் மற்றும் நண்பர்களிடமிருந்து ஆலோசனைகள் வந்துகொண்டேயிருக்கும். கூடவே வாஸ்துவும் வந்து தன் பங்குக்குத் தொல்லை கொடுக்கும். அவற்றையெல்லாம் ஒரு ஓரமாக வைத்துவிட்டு நீங்கள் ஏற்கெனவே பார்வையிட்டு வந்த தோட்டங்களின் அனுபவம், ‘வானகம்’ போன்ற அமைப்பு தந்த அனுபவத்தோடு சேர்த்து உங்களின் சுயபுத்தியின் அடிப்படையில் தோட்டத்தின் வரைபடத்தை தயாரிக்க வேண்டும்.
உயிர்வேலி, பறவைகளை ஈர்க்கும் மரங்கள், பலகை தரும் மரங்கள், கனி தரும் மரங்கள், வாசனை பரப்பும் மரங்கள் என தோட்டத்தில் விளிம்பிலிருந்து மையம் நோக்கி வளர்க்கப்போகிறீர்களா? அல்லது அந்த மரங்களையெல்லாம் தனித்தனிக்காடுகளாக உருவாக்கப் போகிறீர்களா? என்பதை நீங்கள் கையில் வைத்திருக்கும் பணமும், நிலத்தின் அளவுமே தீர்மானிக்கும்.
பின்பு ஆடு, மாடு, கோழி, வாத்து, நாய் உள்ளிட்ட ‘லைப் ஸ்டாக்’ ஏரியா எங்கே, எவ்வாறு இடம்பெறச்செய்யவேண்டும்?
காய்கறிக்கு எவ்வளவு நிலம்?
கீரைகளுக்கு எவ்வளவு நிலம்?
பயறு மற்றும் சிறுதானியங்களுக்கு எவ்வளவு நிலம்?
நெல், மற்றும் பண்ணைக் குட்டைகளுக்கு எவ்வளவு நிலம்?
ஆநிரைகளுக்கான உணவுக்காடு எவ்வளவு வேண்டும்? என்பதையெல்லாம் அந்த வரைபடத்தில் பார்த்து பார்த்து செதுக்க வேண்டும்.
உங்கள் நிலத்தில் இருப்பதிலேயே மிகவும் பள்ளமான பகுதியில் பண்ணைக்குட்டையும் மேடான பகுதியில் ‘லைப் ஸ்டாக் ஏரியா’வும் அதன் அருகிலேயே உங்களுடைய வாழ்நாள் கனவு இல்லமும் அமைவது சிறப்பு. காரணம் ஆநிரைகள் எப்போதும் கண் பார்வையிலேயே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவைகள் நம்மைக் காணாமல் ஏங்கிப்போக வாய்ப்பிருக்கிறது.
ஒரு காட்டு வகை மரமானது அதனுடைய முழு வளர்ச்சியை எட்டும் போது பக்கவாட்டாக 150 அடியும், உயர்மட்டமாக 150 அடியும் கிளைகளைப்பரப்பி பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும். அதே போல ஆண்டுகள் செல்லச்செல்ல பெருகிக்கொண்டே போகும் ஆநிரைகள், செடி கொடிகள், மூலிகைகள், பூச்சிகள், ஊர்வன, பறப்பனவென்று விரிவடைந்து கொண்டே செல்லும் போது அவைகளை மிகச்சரியாகக் கையாள்வதையும் மனதில் வைத்துக்கொண்டு வரைபடம் தயாரிக்க வேண்டும்.
வரைபடம் தயாரிக்கும் போது அளவீடுகள் பற்றி உங்களுக்கு அறியாமையோ, அல்லது சரியாகச் செய்து விடுவோமா? என்கிற சந்தேகம் எழும்பட்சத்தில் அதில் பாண்டித்தியம் பெற்றோரை பக்கத்தில் வைத்துக்கொள்வது சிறப்பு.
பாதை விரியும்…
முந்தைய பகுதிகள்: