![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/03/kaviji.jpg)
அர்த்த ஜாமம் அலறிக் கொண்டிருந்தது.
வாசலில் இருக்கும் சிவப்பு பூக்களின் மரத்தில் ஆந்தை ஒன்று மதி மயங்கி கத்திக் கொண்டிருப்பதை சமீபமாக துல்லியமாய் கேட்க முடிகிறது. இன்றும் அதே சத்தம். அதே குறுகுறுப்பு. அதே நிசப்தம். சிவப்பு பூக்கள் தொடர்ந்து ஒவ்வொன்றாய் விழுந்து கொண்டே இருந்தன.
இன்னதென உணர முடியாத ஒரு தருணம் வாய்க்கும் இரவில் அந்த தருணத்தை கடக்கவும் முடியாத கடத்தவும் முடியாத பேரச்சம் ஒன்று எழும். ரியா அப்படித்தான் கண் விழித்தாள். வெகு நேரமாக கதவு தட்டப்படுதை போல உணர்ந்தவளுக்கு இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்ற பதற்றம் இயல்பாகவே வந்தது. வீட்டில் யாரும் இல்லாத நடுநிசியில்… கிணற்றுக்குள் இருந்து மிதந்து மிதந்து மேலெழும் சத்தத்தில் வட்ட வட்ட கண்களாக அந்த அறையில் அவளை எதுவோ சுற்றியது. எழுந்து கதவருகே சென்ற போது சத்தம் இன்னும் பலமாக இருந்தது. அந்த சத்தத்தில் ஆந்தையின் அலறல் இன்னும் துல்லியமாய் கேட்க….. தூக்கி வாரி போட்டது. கதவில் இருக்கும் லென்ஸ் வழியே ஒற்றைக்கண் சுருக்கினாள்.
நிம்மதி பெருமூச்சு அவள் புறங்கையில் பட்டு திரும்பி அவள் முகத்திலேயே அனல் பரப்பியது.
“அண்ண்ண்ணா….!”
வாய் விட்டு முனங்கி ஆசுவாசம் அடைந்தாலும்…… அடுத்த நொடியே அடிவயிற்றில் அட்ரினல் சுரந்தது.
“எதுக்கு……, இந்த நேரத்துல வந்திருக்கான்…?”
நெற்றி சுருங்கிய யோசனையோடு கதவை வேகமாய் திறந்தாள்.
‘என்னாச்சு…?’ என்பது போல மிரட்சியோடு பார்த்தவளுக்கு…. அவனே புரிந்து கொண்டு வேகமாய் பதிலளித்தான்.
“ஹே … ரியா ஒன்னும் பயப்படாத. கொஞ்சம் வெளிய போயிருந்தேன். பைக் பஞ்சர். வீட்டுக்கு போறத விட இங்க வர்றது பக்கமா இருந்துச்சு. அவ்ளோ தான்…” என்றபடியே இயல்பாக உள்ளே வந்தான்.
“அப்பாடா என்பது போல் ஒரு பார்வை பார்த்தபடியே, “இரு…… தண்ணி கொண்டு வர்றேன் ….” என்று கிட்சன் பக்கம் போகையில் தான் திக்கென்று உணர்ந்தாள். மறந்திருந்த பயங்கரம் மூளைக்குள் மறு அவதாரம் எடுத்து நின்றது.
“ஓ மை காட்……. அண்ணன் தான் பைக் ஆக்சிடெண்ட்ல போன வாரம் செத்துட்டான்ல……..!”
ஆந்தையின் அலறல் படு பயங்கரமாக இருந்ததை உணர முடிந்தது. உடல் நடுங்கி பயத்தின் உச்சத்தில்…. நிலை குலைந்து மெல்லத் திரும்பிய அவள் கண்களில் அவன் காணப்படவில்லை.
சுற்றும் முற்றும் பார்த்த கண்களில் அவன் அகப்படவேயில்லை. அறை முழுக்க எதுவோ மறைந்து கொண்டே இருப்பது போல தெரிந்தது.
கதவு சாத்தப்பட்டு தான் இருந்தது. திக்கென்று எழுந்து அமர்ந்த ரியாவுக்கு புரிந்தது……அத்தனையும் கனவு.
“ச்சே… என்ன ஒரு மோசமான கனவு. உயிரோட இருக்கற அண்ணன் செத்த மாதிரி….” மனசு தடுமாறியது.
“இப்போதெல்லாம் எதுவுமே சரியாக இல்லை…ஏதோ தவறாகவே இருக்கிறது….” அவள் விரல்களாலே தலை வாரி கொண்டையிட்டுக் கொண்டே யோசித்தாள். அதே கணம் மீண்டும் கதவு தட்டும் சத்தம். இதுவும் கனவா என்ற தடுமாற்றத்தில் மூளையில் நான்கு புறத்திலும் நின்று யோசித்தாள். ஆனால் இம்முறை நிஜமாகவே கதவு தட்டப்பட்டது.
தானாக உடல் நடுங்க உள்ளே எதுவோ கத்த இனம் புரியாத படபடப்போடு கதவைத் திறந்தவளுக்கு ஆச்சரியம். வெளியே அவளின் அண்ணன் நின்றிருந்தான்.
அதிர்ச்சியில் உறைந்து பார்த்தவளுக்கு அதே பதிலை இம்மி பிசகாமல் சொன்னான்.
அவள் தடுமாறி நிலை குலைந்து சோபாவில் சரிய….” ஹே…. ரியா…. என்னாச்சு…” என்று பதறி அவளருகே நகர்ந்து சத்தமிட்டுக்கொண்டே …….. அவள் மயக்கம் அடைத்திருக்கிறாள் என்பதை உணர்ந்தவனாய் சமையலறைக்குள் ஓடி வேக வேகமாய் தண்ணீர் எடுத்து வந்தான்.
வந்தவன் கண்களில் திக்கென்று மறைந்தது… காட்சி. சோபாவில் அவளைக் காணவில்லை. நின்று அறையை உள்வாங்கி யோசித்து……. கண்கள் சுழல…..
“ரியா .. ரியா…. எங்க இருக்க..?” என்று அடுத்தறையில் தேடி விட்டு படபடப்போடு அதற்கும் அடுத்த அறைக்குள் நுழைந்தான்.
அங்கே தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள்…. ரியா.
தண்ணீரை கீழே தவற விட்டவன் “ஓஹ்….. மை காட்….” என்று கத்தி கதறி… பதறி தொங்கிக் கொண்டிருந்த கால்களை தொட்டு……..” ர்ர்ரியா.. என்னாச்சு…… என்னாச்சு…ரியா என்று கத்தியபோது உணர முடிந்தது. ரியாவின் கால்கள் சில்லிட்டிருந்தன.
“அவள் இறந்து குறைந்தது 3 மணி நேரத்துக்கு மேல் இருக்கும்….” என டாக்டர் அவனுக்கு தெரிந்து விட்டது.
ஆந்தையின் சத்தம் இன்னும் கோரமானது. கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவிடுக்கில் சிவப்பு பூக்கள் சில நுழைந்து கொண்டிருந்தன.