சமகால ஆப்பிரிக்கப் பெண் கவிஞர்கள்.
சமகால ஆப்பிரிக்கப் பெண் கவிஞர்களுள் மிக முக்கியமானவராகக் கருதபபடும் சிலரைப் பற்றிய அறிமுகத்தின் துவக்கம் .
வார்சன் ஷயர். 1998 ஆம் ஆண்டு கென்யா நாட்டில் பிறந்தவர். பெற்றோர் சோமாலிய நாட்டைச் சேர்ந்தவர்கள். இளம் பிராயத்திலிருந்து லண்டன் நகரில் வாழ்ந்து வருகிறார். தனது பதினாறு வயதிலிருந்தே கவிதைகள் எழுதத் துவங்கியவர் வார்சன் ஷயர். இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன. Teaching my mother how to give Birth, Her blue body, Penguin modern poets என்பன முக்கியமானவை. மற்றும், பல பிரபல இலக்கிய இதழ்களிலும், இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
அந்நிய நாட்டின் வாழ்கையில் தொன்மத்தின் வேர்களையும், முன்னோர்களையும் தேடித் தேடிக் கண்டடையும் களைப்பையும், அப்படிக் காண்கையில் அவர்கள் புனைந்து வைத்திருந்த உருவத்திற்கும், காட்சிகளுக்கும் முற்றிலும் மாறான பிம்பங்களையே அடையும் விரக்தியையும் இவரது கவிதைகள் பேசுகின்றன. புலம் பெயர்ந்த வாழ்வின் ஏக்கங்களாகவும், மண்ணின் குரலாகவும் ஒலிக்கின்றன இவரது வரிகள். ‘எனது கவிதைகள் ஒருவரின் அனுபவப் பகிரலைப் பற்றிப் பதிவு செய்ய வேண்டும்..முக்கியமாக , அகதிகளை, குடியுரிமை அற்றவர்களை, புலம் பெயர்ந்தவர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அந்தக் கதைகள் வெளி வராமல் போகலாம், அல்லது தவறாக சித்தரிக்கப் படலாம் என்று கூறுகிறார். அதையொட்டியே எழுதப்பட்ட இவரது Home என்னும் கவிதை மிகப் பிரபலமானது. சொந்த நாட்டில் யுத்தமும், அமைதியின்மையும் நிலவுகையில் வலியும் வேதனையும் நிரம்பிய அந்த வாழ்விலிருந்து, உயிராக நேசிக்கும் தாய் மண்ணை விட்டு அயல் நாடுகளுக்கு வேண்டாதவர்களாய், தஞ்சம் புகுந்து வாழும் அவலத்தைப் பதிவு செய்யும் முக்கியமான கவிதை இது. ரோம் நகரத்தில், அகதி முகாமுக்குச் சென்று சோமாலியா, எரிட்ரியா, காங்கோ, சூடான் நாட்டு அகதிகளின் துயர்மிகு வாழ்வியல் சூழலையும், கையறு நிலையையும் நேரில் அவர்களுடன் உரையாடி உணர்ந்ததையும் நேர்மையுடன் பதிவு செய்துள்ளார்.
தாயகத்தை விட்டு யாரும் நீங்கிச் செல்வதில்லை
சுறாமீனின் அகண்ட வாய் போல அது இருந்தாலொழிய..
நகர மக்கள் அனைவரும் எல்லைகளை நோக்கி ஓடுவதைப் பார்த்த பின்பே
நீயும் ஓடுகிறாய்.
உடன் வரும் அண்டை வீட்டார் தொண்டையில் குருதியைச் சுவாசித்தபடி
உன்னை விட விரைவாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
பழைய தகரத் தொழிற்சாலையின் பின்பக்கம்
கிறுகிறுக்க உன்னை முத்தமிட்ட பள்ளித் தோழன்
தன் உடலினும் பெரிய துப்பாக்கியை ஏந்திக் கொண்டிருக்கிறான்
நாடே விரட்டியடிக்கும் வரை, யாரும் அதைத் துறந்து வருவதில்லை.
பாதங்களுக்கடியில் நெருப்பைப் பற்ற வைத்துக் கொண்டு
கொப்பளிக்கும் குருதியைக் குடலில் நிரப்பிக் கொண்டு
கூரிய ரம்பம் கழுத்தறுக்கும் அச்சுறுத்தல் நிகழும் வரை
இது போன்ற காரியத்தைச் செய்ய நீ சிந்தித்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாய்.
இருப்பினும்,
உன் சுவாசங்களுக்குள் தேசிய கீதத்தைச் சுமந்து கொண்டிருந்தாய்.
விமான நிலையத்தின் கழிவறையில் அமர்ந்து கடவுச் சீட்டைக் கிழித்து
விழுங்கும் ஒவ்வொரு காகிதக் கவளமும்
நீ திரும்பி வரவே போவதில்லை என்பதைத் தெளிவாகக்குகையில்
தேம்பி அழுகிறாய்.
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நிலத்தை விட நீர் பாதுகாப்பானதென்று உணரும் வரை
யாரும் தங்கள் குழந்தைகளைப் படகில் கிடத்துவதில்லை யாரும்
புகைவண்டியினடியில் உள்ளங்கைகளைச் சுட்டுக் கொள்வதில்லை.
பயணப் பெட்டிகளுக்கடியிலும்
சரக்குந்துகளின் வயிற்றுக்குள்ளும் இரவு பகல்களைக் கழிப்பதில்லை
செய்தித் தாள்களை உணவாக உட்கொள்வதில்லை.
கடந்து வரும் தூரம்
பயணம் தாண்டிய மற்றொன்றாக இருந்தாலொழிய…
வேலிகளுக்கடியில் ஊர்ந்து செல்வதில்லை
இரங்கத் தக்க வகையில் அடி வாங்க விரும்பியதில்லை.
அகதி முகாம்களையோ
வேதனையில் அங்கம் துவள,
ஆடைகள் உரிக்கப்பட்டு சோதனையிடப் படுவதையோ அல்லது
சிறைச்சாலையையோ யாரும் விரும்பித் தேர்ந்தெடுப்பதில்லை.
ஏனெனில்,
பற்றியெரியும் நகரங்களை விட
சிறைச்சாலைகள் பாதுகாப்பாக இருக்கின்றன.
வாகனம் நிரம்ப வரும்
தந்தையின் சாயலை ஒத்த மனிதர்களை எதிர்கொள்வதை விட
ஒற்றைச் சிறைக் காப்பாளர் சற்றே பரவாயில்லை.
வேறெவராலும் தாங்கவியலாதது.
வேறெவராலும் செரிக்கவியலாதது.
வேறெவரும் இவ்வளவு துணிவுடன் எதிர்கொள்ளும் தடித்த தோலுடையவர்கள் இல்லை..
உங்கள் நாட்டுக்கு ஓடுங்கள் கருப்பர்களே!
அகதிகளே!
ஒண்ட வந்த அழுக்கர்களே!
எங்கள் நாட்டை உறிஞ்சி வறட்சியாக்க வந்தவர்களே!
கையேந்திக் கொண்டிருக்கும் நீக்ரோக்கள்,
வினோத நாற்றம் கொண்டவர்கள்..
காட்டுமிராண்டிகள்..
அவர்கள் நாட்டைக் குலைத்ததோடல்லாமல்
நமது நாட்டிலும் குழப்பம் விளைவிக்கப் போகிறார்கள்.
அந்த வார்த்தைகள்,
அந்த இழிவான பார்வை
இவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
அந்த அடிகள் யாவும்
எலும்புகள் இரண்டாக உடைவதை விட
கடுமை குறைவானவையாக
அல்லது
பதினான்கு ஆண்கள் உன் தொடைகளுக்கிடையில்
இருப்பதை விட
அந்த இழிசொல் மென்மையானதாக இருக்கக் கூடும்.
சிதிலங்களின் குவியல்களை விட
எலும்புகளை விட
உனது குழந்தைகளின் உடல்கள் துண்டாகிச் சிதைவதை விட
இந்த அவமானத்தை விழுங்குவது எளிதாகத்தான் இருக்கிறது.
எனக்கு நாடு திரும்பும் ஆசை உள்ளது.
ஆனால், அது சுறா மீனின் அகண்ட வாய் போல உள்ளது.
நாடு துப்பாக்கியின் குழலாக மாறியுள்ளது.
நாடு உன்னை விளிம்புக்குத் தள்ளும் வரை,
யாரும் புலம்பெயர்வதில்லை..
உனது கால்களின் ஓட்டத்தை அதுவே விரைவுபடுத்தச் சொல்லும் வரை
அதை விட்டு யாரும் நீங்குவதில்லை.
உனது உடமைகளை விட்டு விட்டு
பாலைவனத்தில் ஊர்ந்து
சமுத்திரங்களின் மீது நடந்து…
மூழ்கு!
தற்காத்துக் கொள்!
பசியுடன் இரு!
பிச்சையெடு!
பெருமிதம் மற!
நீ உயிருடன் இருப்பது மிக முக்கியம்.
நீங்கிச் செல்..
என்னிடமிருந்து ஓடி விடு…
நான் என்னவாக ஆகிப் போனேன் என எனக்கே தெரியவில்லை.ஆனால், இங்கிருப்பதை விட வேறெந்த இடமும்
உனக்குப் பாதுகாப்பானது
என உனது நாடு களைத்த குரலில் காதுகளில் சொல்லும் வரை
தாயகத்தை விட்டு யாரும் நீங்கிச் செல்வதில்லை.
இப்படியாகப் பல வரிகளில் வலியை வார்த்தெடுக்கிறார் ஷயர். எப்போதும் கையாளப் படும் மையக் கருத்துகளான தியாகம், சமூக மாற்றங்கள், அதன் பாதிப்பு,ஆகியவற்றிலிருந்து விலகி உலகத்தை நோக்கி எழுப்பும் சாமான்யரின் கேள்விகளைத் தன் கவிதைகள் வாயிலாக எழுப்புகிறார். முற்றிலும் புனைவாக எழுதுவதைத் தவிர்த்து , உண்மையான கதைகளை எழுதுவதே தனது விருப்பம். என்று சொல்பவர், தனது சுற்றங்களும், அதைச் சார்ந்தவர்களுமே பல உண்மைக் கதைகளைத் தனக்கு வழங்கியுள்ளனர் என்கிறார்.
போர் சூழல் உள்ள நாட்டில் வாழும் பெண்களின் உடல் அலைக்கழிக்கப் படும் துயரத்தைத் தன் கவிதைகளெங்கும் படிமமாக உலவ விட்டிருக்கிறார். காயங்களை மிகவும் துணிச்சலுடன் பொது வெளியில் படைப்பவர் வலிகளை மட்டுமல்லாது அதிலிருந்து மீளுவதையும் குறிப்பிடுகிறார். Teaching My Mother How to Give Birth என்னும் தொகுப்பில் பெண்களின் காதல், தனிமை,போராட்டம் போன்றவை அந்தந்தக் காலகட்டத்திற்கேற்ப வரிசையாக எழுதப் பட்டிருக்கின்றன. பதின் பருவம், இளம் பருவம், திருமண வாழ்வு, மண விலக்கு, தாய்மை, மூப்படைதல் மற்றும் இறப்பு பற்றி எழுதியிருக்கிறார், இவற்றில் சோமாலியா பாரம்பரியத்தின் பாதிப்புகள் அதிகம் உள்ளன.
இருபது வயதில், தனது பருத்த உடல் பற்றிய தாழ்வு மனப்பான்மையால் உளவியல் சிக்கலில் துவண்டிருந்த இவர், தன்னைப் போன்ற அகன்ற இடை கொண்ட, துணிவு மிக்க பெண்களைக் கண்டு மீண்டெழுந்துள்ளார். ‘நமது ரகசியங்களைப் பகிர நாம் மிகவும் தயங்குகிறோம். நானும் தயங்கினேன், ஆனால் அப்படிச் செய்கையில் படைப்பாளி பொய் சொல்பவராகி விடுகிறார். என்னால் பொய் சொல்ல முடியாது’ என்று தன் அனுபவங்களை நேர்மையாகப் பகிரும் ஷயர், தனது வாசகர்களையும் அது போன்ற மன நிலையை ஏற்க வைக்கத் தூண்டுகிறார்.
இவரது கவிதைகள் பெரும்பாலும் பின் நவீனத்துவத்தின் வகையைச் சார்ந்தவை.எந்த விதப் பூச்சுகளுமற்று நேரடிச் சொற்களால் கவிதை நெய்கிறார். இவற்றில் ஆன்மாவின் நிதர்சனம் சில வேளைகளில் ஒரு கூரிய கத்தி போலவும், சில வேளைகளில் மென்மையான மலர் போலவும் வெளிப்படுகின்றன. அவரது கவிதைகள் கணக்கற்ற பெண்களின் ஆற்றலையும், தலைமுறைகளின் ஆழத்தையும், பல்லாண்டு கால வாழ்வின் கனத்தையும் ஏந்திக் கொண்டிருக்கின்றன. வலிகளைப் பொதுமைப் படுத்தும் பல கவிதைகளைக் காணலாம்.
பின்னிரவு நேரத்தில்
உலக வரைபடத்தை
மடியில் வைத்துக் கொண்டு
தேசங்களனைத்திலும் விரல்களை ஓட விட்டு
மெல்லிய குரலில் கேட்டேன்
எந்த இடத்தில் வலிக்கிறது?
அது பதில் சொன்னது
“எல்லா இடத்திலும்
எல்லா இடத்திலும்
எல்லா இடத்திலும்”
பெண்களின் தன்னம்பிக்கை குறித்து, ஆண்களுடனான அன்பின் நிலைகளில் சமரசம் செய்து கொள்ளத் தேவையற்ற வாழ்வைப் பற்றி மிக முக்கியமான மேற்கோளாக எப்போதும் சொல்லப் படும் வரிகள் இவை.
யாரேனும் உன்னிடம் ஏற்கெனவே சொல்லியிருக்கக் கூடும்
வெறும் மனிதர்களை வைத்து மட்டும் இல்லங்களை அமைப்பது சாத்தியமில்லை.
மேலும்,
உன்னை விட்டு அவன் விலக நினைத்தால்
விலகிச் செல்லட்டும் ,விடு!
நீ அச்சுறுத்தும் ஆளுமையுடையவள்
அற்புதமானவள் மற்றும் அழகானவள்,
உன்னை எப்படிக் காதலிப்பதென்பதை அறிந்து கொள்வது
அனைவராலும் இயலாத ஒன்று..
ஷயரின் கவிதைகள் தென் ஆப்பிரிக்கா, இத்தாலி, ஜெர்மனி , அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கிய மேடைகளில் வாசிக்கப் பட்டுள்ளன. 2013 ம் ஆண்டு ப்ரூனல் பல்கலை கழகத்தின் சிறந்த ஆப்பிரிக்கக் கவிதைக்கான பரிசை வென்றுள்ளார். 2014 ம் ஆண்டு , லண்டன் நகரின் இளம் கவிஞருக்கான விருதும், ஆஸ்திரேலியாவின் குயின்லாந்தில் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கான உரிமையும் வழங்கப் பட்டது. இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஆப்பிரிக்கக் கவிஞர்களுள் ஒருவராக வார்னர் ஷயர் குறிப்பிடப்படுகிறார்.