கடலின் அமைதி
~~~~~~~~~~~~~
அவனுக்கு
கடல் மட்டுமே தெரியும்
எவ்வளவு அலைகளைத்தான்
தொடர்ந்து அடுக்குவாய் என
சலித்துக் கிடந்தது கரை
அவனுக்கு
கடல் மட்டுமே தெரியும்…
தீரா உப்பைத் திணித்தே
கொன்று விடுவாய் போலிருக்கிறது
புலம்புகின்றன மீன்கள்
அவனுக்கு
கடல் மட்டுமே தெரியும்…
எத்தனைக் காதல்களால்
கிளிஞ்சல்களை
உடைத்துக் கொண்டே இருப்பாய்
கை வலிக்கவே வலிக்காதா
என்றது மணல்
அவனுக்கு
கடல் மட்டுமே தெரியும்….
ஒரு “அ” எழுதினால்
போதாதா
இவ்வளவு பெரிய கவிதைகள்
தேவைதானா என்றன
கப்பல்களும் படகுகளும்
அவனுக்கு
கடல் மட்டுமே தெரியும்….
கடல்
அமைதியாக
பதில்களற்று இருந்தது
அப்போது
எவ்வளவு பெரிய அமைதி.
காற்றின் குளியல்
~~~~~~~~~~~~~~~
குளியலறைக் கதவை
சரியாக மூடாமல் வந்து விட்டேன்
Push – Pull தெரியாத காற்று
முட்டிக்கொண்டே இருந்தது
எப்படியாவது
உள்ளே வைத்து மூடிவிடு
அல்லது
திறந்து விடு என அடம்பிடித்தது
மூடிவைத்த பிறகு
காற்று குளிப்பது போல இருந்தது
திறந்து பார்த்தால்
நீர் மட்டுமே தளும்பியது
வாளியில்
கதவை மூடி உட்கார்ந்த போது
பார்க்கமுடியாத குளியல்
மீண்டும் மீண்டும்
தொந்தரவு செய்தது
நீரை எடுத்து
மேலே ஊற்றிக் கொண்டும்
வழிந்தோடும் சப்தம் இல்லை
முதலில் குளித்த காற்று இல்லை
இது வேறு என்று
படபடத்தது
உள்ளே கதவு
மறுபடியும் கதவைத் திறக்காமல்
மொட்டைமாடியில் நின்று
ரகசியமாக எட்டிப் பார்த்தேன்
காகமொன்று எச்சமிட்டபடி
கா கா கா கா என்றது.