பத்மஜா நாராயணனின் ‘ஆட்டிசம்’ (மொழிபெயர்ப்புக் கவிதைகள்) வாசிப்பு அனுபவம் – ஜான்ஸி ராணி
ஜான்ஸிராணி
![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/03/FB_IMG_1584948944544-780x405.jpg)
தலைப்பு : ஆட்டிசம்
ஆசிரியர் : பத்மஜா நாராயணன்
வகைமை : மொழிபெயர்ப்புக் கவிதைகள்
வெளியீடு : பூவரசி வெளியீடு
நான் ஒரு உளவியல் ஆலோசகர் என்பதால் “ஆட்டிசம்” என்ற தலைப்பே கவர்ந்தது. முதல் பார்வையில் கட்டுரைகள் என்றே எண்ணினேன்.கவிதைகள் என்றறிந்து இனிய ஆச்சரியமடைந்தேன்.நிறைய உழைப்பை கோரியிருக்கும் இந்த மாறுபட்ட மொழிப்பெயர்ப்பு முயற்சிக்கு ஆசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ஒவ்வொரு பக்கமாக புரட்ட புரட்ட வலியின் கனம் ஏறிக் கொண்டே செல்கிறது.அந்த உலகில் வாழும் குழந்தைகளும் பெற்றோர்களும் நம்மை வார்தைகளின் வழியே வந்தடைகிறார்கள்…”எங்களைப் புரிந்து கொள்ளுங்களேன்” என்று வேண்டியபடி.
ஆட்டிச குழந்தைகளின் symptoms,அவர்களை வளர்ப்பதில் உள்ள சவால்கள்,சமூகத்தின் பார்வை,அவர்களின் அக உலகம் என பலவற்றை விவரிக்கும் கவிதைகள்.
“எனக்கு ஏன் புன்னகைக்கத் தெரியவில்லை?
எனக்கு ஏன் பொய் சொல்லத் தெரியவில்லை?
நான் எப்பொழுது பிறந்தேன்?
நான் யார்?
நான் ஏன் நானாக இருக்கிறேன் ?”
என்று கேள்விகளை மட்டும் சுமந்தலையும் ஆட்டிச சிறுமி,
“இக்கணம் எங்கிருக்கிறாய் என் குழந்தையே,
உன் எண்ணங்கள் உன்னை எங்கு எடுத்துச் சென்றுவிட்டன.
வாழ்க்கை நம்மை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லட்டும்
உன்னருகில் நான் இருக்கிறேன் என்பதை மட்டுமாவது புரிந்து கொள்.”
என்று தன் ஆட்டிச குழந்தைக்கு promise செய்யும் ஒரு தாய்.
“ஒருநாள் உங்கள் யூகங்களைக்கூடக்
குணப்படுத்திவிடும் சாத்தியம்
என்னிடம் உள்ளது”
” சில விஷயங்களில் நாங்கள் புலிகள்”
~தன்னம்பிகையுடன் கூறும் சிறுவன்..
என இக்கவிதைகளின் வழியே வழியும் சிறு ஒளிக்கீற்று நம் இதயத்தைத் திறக்கக்கூடும்.அவர்களிடம் இன்னும் கொஞ்சம் அன்பைப் பொழிவோமாக.
*ஆட்டிசம்
ரோஜாக்களில் முட்கள்
உள்ளதென நீங்கள் குறை கூறலாம்.
அல்லது முட்களின் நடுவே
ரோஜாக்கள் உள்ளதென
நீங்கள் மகிழ்ந்து கொள்ளலாம்.
நல்ல நாட்களும் உண்டு
கடுமையான நாட்களும் உண்டு
உடைந்து விடாமல்
எப்படியாவது கடந்து செல்ல முயற்சி செய்யும்
நாட்களும் உண்டு
ஆட்டிசம் மிகவும் கடுமையானது
அன்பு செய்தல் அதே சமயம்
மிக எளிதானது.
~~~~~~