என்பத்தி எட்டு ரூபாய்… சொச்சம்
இந்த முப்பது ஆண்டுகளில்
முப்பதாயிரம் முறை
சூரியனை வலம் வந்து
சலித்த என் பூமியின்
விரலையும் உதட்டையும் சேர்த்து சுடுகிறது
ஒட்ட இழுத்த பீடி
மதுக்குப்பியின்
பிட்டத்தை தட்டி தலையைத்திருகும்
நுட்பத்திற்கு அவகாசமில்லை
பொறித்த கோழித்துண்டங்களையோ
உரித்த வெள்ளரிக் கீற்றுகளையோ
உதிர்ந்த திராட்சைப் பழங்களையோ
ஒரு வாயில் மென்றபடி
மறுவாயில்
உறைந்த நீர்க் கட்டிகள் மிதக்கும்
மதுக் குவளையை சூப்ப நேரமில்லை
பூமி ஒன்னேகால் சுற்றிற்கு வந்திருந்தது
கோடைக்கால மேட்னி ஒன்றில்
எரியூட்டப்பட்ட குடிசைகள் போல்
சடசடத்து கொழுந்துவிடும் அடிவயிற்றில்.
***********
பசி மீது நிரப்பும் பௌர்ணமி
நாவல் பழ இரவு வானம்
ஒரு மாநகர அடுக்ககக் குப்பைத் தொட்டி
இந்த பௌர்ணமி
அழுகிய ஆரஞ்சு
இந்த நட்சத்திரங்கள்
கடித்துப் போட்ட எலும்புத் துண்டுகள்
பஞ்சுவரை புதைக்கப்பட்ட
சிகரெட் துண்டுகள்
மதுவின் மிதமான நெடியை விலக்கி
மாநகர் பூதம் பசித்த நாயின் ஊளை
உங்களாலும் என்னாலும்
கைவிடப்பட்ட இசைக் கோர்வை
குலைநடுங்கும் இரவின் திரைச்சீலையில்
உச்ச வெறி கொண்டு
பசியின் ரேகைகளைத் தீட்டும் ஓவியனை
ஒரு நாய்
விளக்கு அணைக்கப்படாத
அடுக்கக அறைகள்
மேனியை துளையிட்ட ஒரு சிகரேட் துண்டு
கா மதுப் புட்டி
நாவல் பழ இரவு உற்று நோக்கின.
***********