
96
ஜானு சென்ற சிங்கப்பூர் விமானம்
சற்றுமுன் தரையிறங்க
அழைக்க வருவதாகச் சொன்ன கணவனைத்
தேடிக் கண்டதும் காரில் ஏறினாள்
அதிலும் ராம் இல்லை.
அவளின் சென்னைப் பயணமோ
பழைய மாணவர் சந்திப்பின் நிகழ்வுகளிலோ அவசியமில்லாதவன்
அவள் இல்லாத நாட்களின்
அலுவலகக் கதைகளைச்
சொல்லி முடிக்க வீடு வந்திருந்தது
அதிலும் ராம் இல்லை.
சிங்கப்பூர் தெருக்களில்
இழந்த காதலை நினைவூட்டும்
ஒரு காதலரும் தென்படவில்லை
சாலைகளில் துளி காதலும் சிந்தாமல்
யாவரும் நகர்ந்து கொண்டிருந்தனர்
அதிலும் ராம் இல்லை
டீக்கடையில் பண்பலை வைக்கும் வழக்கமில்லாத ஊரில்
‘யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே’ பாடலை
யாரும் விரும்பிக் கேட்க முடியாது
அதிலும் ராம் இல்லை.
வீடு வந்ததும் மகள் ஓடிவந்தாள்
ராம் என்ற சாயலில்
அவளுக்குப் பெயரும் இல்லை
அதிலும் ராம் இல்லை
கலைந்திருந்த மகளைச் சரிசெய்தாள்
கலைந்திருந்த வீட்டைச் சரிசெய்தாள்
கலைந்திருந்த கணவனைச் சரிசெய்தாள்
அதிலும் ராம் இல்லை
பயணமும் வீட்டுவேலைகளும்
நிறைந்த அலுப்பைத் தர
கனவுகளையும் தாண்டிய
ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தாள்
அதிலும் ராம் இல்லை
குறைந்தபட்ச நினைவுகளுக்கும்
அனுமதியில்லாத
ஜானுக்களின் காதல் ஆன்மா
இறைவனின் திருப்பெயரால் சாந்தியடைவதாக.
***********
பூக் காலம்
எனக்குப் பூ வாங்கத் தெரியாது
என்று சொல்கிற மனைவியே
என்னைப் பூ வாங்கி வரச் சொல்லிய
ஆச்சர்யத்தில் இருக்கின்றேன்.
எனக்குப்
பூவாங்கக் கற்றுக் கொடுப்பதற்கென்றே
முன்னம் நிற்கின்றனர் மூன்று பெண்கள்
அவர்களது கணவர்களுக்கும்
பூ வாங்கத் தெரிந்திருக்கவில்லை போலும்.
அவர்களைத் தவிர்த்துவிட்டு என்னிடம்
எத்தனை முழம் என்கிற
பூக்காரிக்கும் திருமணம் ஆகியிருந்தது.
‘காலையில வைக்கிற மாதிரி ரெண்டு முழம்’ என்றதும்
எல்லோரும் சிரிக்க ஏதுவாக
‘இருட்டுக்கு இல்லையோ’ என்றாள்
அதிலொரு குசும்புக்காரி.
‘ச்சூ பேசாம இருங்க’ என்று
இரண்டு முழம் ஆண்பூ கொடுத்து
அவர்களை அடக்கிய பூக்காரி
இரண்டு முழம் பெண்பூவால்
என்னைத் தேற்றுகிறாள்
இப்போது நான் வேண்டுவதெல்லாம்
மிச்சமிருக்கும் அரைமுழம் ஆண்பூவால்
அவளும் இன்று ஆறுதலடையட்டும்
என் ஆண்டவரே.
***********