
அடேய் மார்க்!!!
முகஞ்சுழித்துக் கொண்டே
முகநூல் வருகிறார்
எதன்மீதும் பற்றற்ற
எதன்மீதும் அன்பற்ற
எதனோடும் ஒட்டாத
பயனர் ஒருவர்
அவரின்
நகையுலர்ந்த இதழ்களில்
வரிவரியாய் வெடித்து நிற்கிறது
விரக்தி
அன்பு வறண்ட
மனங்கொண்ட விரலில்
செதில்செதிலாய் பிளந்து விரிகிறது
வெறுப்பு
பாரபட்சம் பார்த்து
அவர் அழுத்தும்
ஹார்ட்டின்களுக்கும் ஹாஹாக்களுக்கும் இருக்கும் மரியாதை
எப்போதும் கிடைப்பதில்லை
நாமிடும்
நேர்மையான ப்ளூ லைக்குகளுக்கு.
***********
அமரும் இடங்களிலெல்லாம்
அன்ப்ரண்டுகளை விழச் செய்யும்
பறவையைத் தெரியுமெனக்கு
எப்போது வீழலாம்
என ஊசலாடிக் கொண்டிருக்கும்
நட்புகளின்
கடைசி நூலின் மேல்
மிகச்சரியாக
ஏதோவோர் தருணத்தில்
எதிர்பாராமல் அமர்ந்துவிடும்
அப்பறவை
அத்தனை பலியையும் ஏற்றுக் கொண்டு
அறுந்து போகும் நட்பைப் பார்த்துப்
பரிதாபமாகக் கேட்கும்
“சிரித்தது ஒரு தவறா?”
***********
இப்படித்தான்
முகநூலிலேயே
அரும்பி மலர்ந்து வாடியுதிர்ந்து போன
காதலொன்று இருந்தது
கதையொன்றும் பிரமாதமில்லை
அவளுக்கு ஹார்ட்டின் போட்டான்
அரும்பியது
தொடர்ந்து ஹார்ட்டின் போட்டான்
மலர்ந்தது
போலவே
வேறொருத்திக்கு ஹார்ட்டின் போட்டான்
வாடியது
தொடர்ந்து எல்லோருக்கும் போட்டான்
உதிர்ந்தது
***********