
ஊசலாடும் நினைவுகள்
1.
நிச்சயமில்லாத
நாட்களை நோக்கிய
நீண்ட பயணத்தில்
நிகழ்தகவாய்
கட்டங் கட்டுகிறது
வாழ்க்கை..
சிலருக்கு வலியும்
சிலருக்கு வரமுமாய்.
வெற்றியோ தோல்வியோ
வினைகளுக்கான
விளைவுகளாய்
முற்றி முதிர்ந்தபின்
ஊசலாடும் நினைவுகளோடு
ஒவ்வொன்றாய் உதிரப்போவது
நிச்சயம்.
நன்மரத்தின் இலையாய்
துளிர்த்த ஆசைகளின்
ஆதிமூலம்…
ஆடு தின்றுவிடாமல்
அடைகாத்து போஷித்ததில்
எத்தனையோ புயலிலும்
மழையிலும் உதிராமல்
கனிகளையீந்த மரத்தின்
களிப்பான
நினைவுகளை மீண்டும்
மீண்டும் அசைபோட்டு
மகிழ்கையில்
கத்திரியிட்டு
கலைக்கிறது காலம்.
***********
2.
நீண்டுகொண்டிருக்கும்
இடைவெளிகளுக்குள்
குவிந்துகிடக்கும் குறைகள்..
யௌவனத்தை மீட்க ஒருவனும்
இழக்க ஒருத்தியும்
தயாராகிக் கொண்டிருக்கையில்
முரண்களை முடிச்சிட்டுத்
தூண்டிலாக்குகிறது காலம்..
புதிய ஏற்பாடுகளை மேலும்
புனரமைக்கச் சொல்லி
இறைஞ்சுகையில்
மண்ணறைக்குள் மன்றாடுகிறது
ஓர் இதயம்.
கைப்பிடிக் காற்றைக்
கடனளிக்கச் சொல்லி
கருவிகளிடம் கையேந்திக்
கதறிக் கொண்டிருக்கும்
மனிதர்களிடத்தில்
மரங்களுக்கு
அப்படியொன்றும்
எந்தப் பகையுமில்லை..
***********
3.
எல்லாமிருந்தும்
எதுவுமில்லாத ஒரு சூன்யத்தை
நீங்களும்
தரிசித்திருக்கக் கூடும்..
தீக்குள் இருள் மாதிரி
வெறுமைக்குள்ளும்
ஒரு நிம்மதியைப்
பெற்றிருக்கக் கூடும்.
கசப்புகளை
விழுங்கி முடிக்கையிலும்
ஆசுவாசமாய்
உணர்ந்திருக்கக் கூடும்
பூக்கள் எப்போதும்
மலர்ந்துதான்
ஆகவேண்டுமென்ற
கட்டாயமென்ன?
கொஞ்சநேரம்
மொட்டாகவே இருந்துவிட்டுப்
போகட்டுமே.
***********
அருமை.
மகிழ்ச்சி.
வாழ்த்துகள்