துயரங்களின் வினாத்தாள் / மகிழ்ச்சியின் வினாத்தாள்
- உங்கள் துயரத்தை / மகிழ்ச்சியை யாரிடம் சொல்வீர்கள்?
அ) கொஞ்சம் பெரிய நுரையீரலுடன் பிறந்ததால் எடை குறைவாக இருப்பவர்கள்
ஆ )மரத்தின் நிழலில் இருக்கும் கிளைகளை வெட்டக் கத்தியை ஓங்குபவர்கள்
இ ) புகையை விடக் கொஞ்சம் தடிமனாகச் சிரிப்பவர்கள்
ஈ ) மரத்தை வெட்டிவிட்டு அங்கே அதன் நிழலை நட்டுச் செல்பவர்கள்
- உங்கள் துயரம்/மகிழ்ச்சி ஏன் சிவப்பு நிறமுடையது?
( குருதியின் மதிப்பு = சிவப்பு என்க )
- எந்தத் துயரத்திற்கு/ மகிழ்ச்சிக்கு என்ன உணவு உண்பது
பொருத்துக ?
அ) இனிப்பு – சொற்களால் அடைவது
ஆ) துவர்ப்பு – அன்பால் அடைவது
இ) உவர்ப்பு – நம்பிக்கையால் அடைவது
ஈ) புளிப்பு – பழக்கத்தால் அடைவது
- உங்கள் துயரத்தின் / மகிழ்ச்சியின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை
படம் வரைந்து பாகங்களைக் குறிக்க.
(அல்லது)
துயரத்தின்/மகிழ்ச்சியின் கொடுக்கப்பட்ட உட்பிரிவுகளைப் பற்றி சுருக்கமாக எழுதுக.
அ. எதிரி யாரென்று தெரியாமலிருப்பது
ஆ. ஆறு வித்யாசம் கண்டுபிடிக்க முடியாது அடுத்தடுத்து வரும் துயரம் / மகிழ்ச்சி
இ. நம்பிக்கையின் அடுத்த பக்கம் ஓட்டை விழாமல் பாதுகாப்பது
ஈ. எப்போதும் மழை பெய்யும் நகரத்தில் மழையை நிறுத்தத் தேவையானது எது? ( துயரம்/ மகிழ்ச்சி )
- துயர / மகிழ்ச்சி வரைபடத்தில்
X – அச்சை காலமாகவும் Y– அச்சை ஆட்களாகவும் கொண்டு
புள்ளிகளைக் குறிக்க.
(ஒரு மீட்டர் நினைவு – ஓர் அலகு – என்க )
- துயரத்தை/மகிழ்ச்சியை வெளிச்சமாக மாற்றும் சோதனையை
வண்ணம் தீட்டி
இருட்டில் நடப்பதை விவரித்து எழுதுக.
(கறுப்புத்துணியின் மீது காகிதத்திலிருந்து கொஞ்சம் வெள்ளையைக் கொட்டுவதற்கு காகித முனையைக் கிழித்துக் கொள்க)
- உங்கள் துயரம்/மகிழ்ச்சி தொலைக்காட்சியில் வரும்போது
ஒலியளவைக் குறைப்பதா? கூட்டுவதா?
(கட்டாயம் அணைக்கக் கூடாது)
8 .உங்கள் துயரம் / மகிழ்ச்சி – பற்றிய
செய்முறைத் தேர்வில் எடுத்த மதிப்பெண் எவ்வளவு ? (10 க்கு )
(எண்ணால் எழுதுவதற்குப் பதிலாக எண்ணத்தாலும் எழுதலாம்
~ இரு தசம திருத்தமாக )
- சரக்கு ரயிலின் கடைசி ப்பெட்டி
கடைசி ப் பேருந்து
இவற்றில் துயரம் எது ? மகிழ்ச்சி எது? விளக்குக.
- இதுபோன்ற தேர்வுகளில்
கூடுதல் விடைத்தாள் வழங்காமல் இருப்பது சரியா? / தவறா?
இறந்த உடலுக்குப் பசிக்கும்
என் பாட்டி இறந்தபிறகும் அவளுக்குப் பிடித்தமான எதையும் மாற்றிக்கொள்ளவில்லை
கனவிலும் அவளுக்குப் பிடித்தமான சப்போட்டா பழம் சாப்பிட்டாள்
மஞ்சள் நிற உடையிலிருந்தாள்
கால்மீது கால் போட்டு அமர்ந்திருந்தாள்
தேநீர் தந்தபோது
இரவில் தயாரிக்கும் தேநீரை இரண்டு முறை குடிக்க முடியும் என்றாள்
முதலில் வாசனையால்
அடுத்து சுவையால்
பிறகு
பாதுகாப்பாக இருக்காவிட்டால் நிழலுக்காக நிற்கும் மரம் கூட நம்மை விழுங்கிவிடும்
அதனால் வாரத்தில் ஒரு நாள் நமது நிழலை ஒரு முறை நீராட வைக்க வேண்டும்
தாங்க முடியாத அதிர்ச்சியை அடைந்த பிறகு வீட்டிலுள்ளவர்கள் பெயர்களை மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும்
முடிந்தால் கதவு என்ற சொல்லை பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும்
அப்போதுதான் விரைவாக வெளியேற முடியும்.
கருத்துவேறுபாடு உடையவர்கள்
ஆளுக்கொரு தெற்கு திசையில் நிற்பதாக சொல்வார்கள்
அவர்களிடம் இந்த பூமிக்கு நான்கு தெற்கு திசையெனச் சொல்ல வேண்டும் என்றாள்
என் பாட்டி இறந்தபிறகும் அவளுக்குப் பிடித்தமான எதையும் மாற்றிக்கொள்ளவில்லை
அவளைப் பற்றிய எதுவும் மாறவில்லை
நான் சப்போட்டா பழம் சாப்பிட்டேன்
பழத்தை எடுத்த கைகள் பாட்டியினுடையது
பழத்தைத் தின்ற வாய் பாட்டியினுடையது
நாக்கு மட்டும் என்னுடையது.
( என் தாத்தம்மாவுக்கு….)
பறவையின் நிறத்திலிருக்கும் கண்ணீர்
என் நீள அகலத்திற்கு வெளியே பறக்கும் பறவைக்கு இரண்டு நிறங்கள்
உங்களுக்கு ஒரு நிறம்
எனக்கு ஒரு நிறம்
தூங்குவதற்கு நிறத்தைத் தேர்வு செய்தேன்
தூங்கி எழுந்தபிறகு ஞாபகத்திலிருக்கும் கனவில் இரண்டு மலைகள்
ஒன்று ஏறுவதற்கு
ஒன்று இறங்குவதற்கு
இறங்கும் போது சறுக்காமலிருக்க மழையைப் பற்றினேன்
வீட்டிற்கு முன்னாலும் பின்னாலும் மழை பெய்தது
வீட்டிற்கு முன்னால் பெய்தது கையில் பிடிக்க
வீட்டிற்குப் பின்னால் பெய்வது கால் நனைக்க
கால் நனைத்து விளையாடும்போது
என்னை யாராவது துரத்துகிறார்கள்
ஒளிவதற்கு இரவு
ஓடுவதற்கு பகல்
ஒருநாள் கூடவே ஆடு, மாடு, நாய் எல்லாம் தலைதெறிக்க ஓடிய
நிலநடுக்கத்திற்கு முந்தைய நாளில்
நகரத்தின் பகலும் இரவும் நண்பர்களானார்கள்
பகல் புத்தகத்தைத் தலைகீழாகப் படித்தது
இரவு புத்தகத்தைப் பின்னாலிருந்து படித்தது
அடுத்த நாள் அவர்கள் சந்தித்த அந்தியில் கண்ணீர் நிரம்பியது.