அந்த ஆட்டுக்குட்டி
கருப்பும் வெள்ளையும் கலந்த
அந்த ஆட்டுக்குட்டி
காண்பதற்கு அது ஓர் அழகு
அது ஒரு சுகம்
ஒரு பிரியத்தின் வாசனையை
உள்ளார்ந்த தவிப்பை
அதனைவிட அந்த நொடிப்பொழுது
யார் தந்து விடக்கூடும்
என்பது போலிருந்தது
அது என்னிடம் ஓடி வரும்போது
வாஞ்சையின் அதீத அழைப்பை உணர்கிறேன்
செல்லமாய்த் தூக்கி
அதனைத் தோளில் போடுகையில்
உலகில் கிடைக்கக்கூடிய அனைத்தும்
கிடைத்தது போல் இருக்கிறது
ஒரு கணநேரம் நெஞ்சிலிருந்து உந்தித் தாவி
கைகளின் வழியாகச் சாலையில் ஓடும்போது
அந்த வெட்டவெளியில்
ஓர் ஆட்டுக்குட்டியுடன் சேர்ந்து
நானும் நனைந்தேன் மழையில்.
***
சகோதர சிநேகிதம்
அவன் எப்படிப்பட்டவனாக
இருந்தபோதிலும்
அவனுக்காகச் சவப்பெட்டி
தேவையாக இருக்கிறது
அவனுக்காக ஒரு மெழுகுவர்த்தி
உருக வேண்டியிருக்கிறது
அவனுக்காக ஒரு கையறுநிலைப் பாடல்
பாட வேண்டியிருக்கிறது
அவனுக்காகச் சுடுகாடு வரை
செல்ல வேண்டி இருக்கிறது
அவனுக்காக இரண்டு சொட்டுக் கண்ணீரைச்
சிந்த வேண்டி இருக்கிறது
அவனுக்காகப் பிடி மண்ணை அள்ளி
மண்ணுக்கு மண்ணாகவும்
சாம்பலுக்குச் சாம்பலாகவும்
சொல்லவேண்டியிருக்கிறது
அவனுக்காக ஒரு
கல்லறை வாசகம் தேட வேண்டியிருக்கிறது
அவனுக்காக அவன் அம்மாவைக்
காண வேண்டும் போலிருக்கிறது
நேற்று அவன் வாங்கிய கடனுக்காக
நான் கடன் பெற வேண்டி இருக்கிறது
இவை எல்லாவற்றிற்கும் மேலாகச்
சில ஆறுதல்கள் தேவையாக இருக்கிறது
இந்த இடத்தில் நீயும் நானும்
அவன் படைத்த கவிதை வரிகளை
இதயத்தில் இரண்டு ஆணிகள் அடித்துச்
சுமக்க வேண்டியிருக்கிறது.
***
உலகம் உருண்டை என்று
கண்டறிந்தவன் கைகளை ஒத்த கைகள் அல்ல
எங்கிருந்தோ அல்ல
இங்கிருந்துதான் புறப்பட்டது
ஒரு கல்
அந்தக் கல் சென்றடைந்த நேரத்தில்
ஒரு பூ
மலரவே இல்லை
மலரின் வாசம் எத்திசையிலும் இல்லை
காற்று இதமான வருடலைத் தரவே இல்லை
நிதானமான பேச்சில்லை
ஒருவர் நோக ஒருவர் பார்த்த வண்ணமிருந்தனர்
ஒரு பரந்த மைதானம் அமைதியை இழந்தது
ஒரு கண நேரம்
எல்லாம் முடிந்தது போலிருந்தது
ஆனால் அது முடிவடையவில்லை
நேற்றிலிருந்து இன்றைக்கு
இன்றிலிருந்து நாளைக்கு
அது தன் வேலையைச் செயலாற்றத் துடித்தது
ஒரு கும்பல் உள்ளம் குளிர
ஆராதனை செய்தனர்
அந்த நிகழ்வு உலகம் உருண்டை என்று
கண்டறிந்தவன் கைகளை ஒத்த கைகள் அல்ல
அந்தக் கை
கற்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறது
அது தன் வேலையைக்
காலதாமதமின்றிச் செய்ய
ஒருவர் கையிலிருந்து ஒருவர் கை
மாற வேண்டி இருக்கிறது.
***
குழந்தைகளோடு விளையாடும் சூரியன்
பசுமையான
இந்தக் காலைப் பொழுது
உன்னுடன் பேச நீண்ட நேரம் காத்திருந்தேன்
வந்தவன்
உன்னுடன் பேச ஒன்றுமில்லை என்றான்
அவனது பேச்சில்
ஈர நிலம் காய்ந்த சருகானது
உடல்கூசி
ஓரடி
பின் வாங்கி
நின்றவன்
நின்ற இடத்தில்
மரம் சடசடவென்று உடைந்தது
அந்தப் பசுமை கொஞ்சம் கொஞ்சமாக
கண்ணை விட்டு விலகிக் கொண்டிருந்தது
அந்தப் பகல்
ஒரு பிரார்த்தனையில் ஒளியேறவில்லையோ
என்று தோன்றியது
அந்நேரம்
இரு குழந்தைகள்
பந்தை
இங்கும் அங்கும் போட்டு
விளையாடிக் கொண்டிருந்தன
மறையத் தொடங்கிய சூரியன்
குழந்தைகள் விளையாட்டில்
அதுவும் தன் பங்கிற்கு
கொஞ்சம் விளையாடியது
கண்ணை விட்டு விலகிய பசுமை
இரு குழந்தைகள் விளையாட்டில்
செம்பழுப்பாய் சிவந்து நின்றது
அடிவானில் அடிமனதில்.
***
புறாவின் உலகம்
புறா தன் சிறகுகளால்
பூமியை அழகாக விரிக்கிறது
அதன் பால்நிறம் நதியில் கலந்து வெண்மையாகிறது
அது கடலைக் கடந்து செல்கையில்
கடல் அமைதி பெறுகிறது கொந்தளிக்கும் நீர் குளிர்ச்சியடைகிறது
எல்லையற்ற கண்ணீரோ எல்லையற்ற தூக்கமோ
அதன் முகத்தில் இல்லவே இல்லை
அது வானத்தில் பறந்து திரிந்தாலும் வனத்தில் பறந்து சென்றாலும்
அதற்கென்று ஓர் அசைவு அதற்கென்று ஓர் உயர்வு இருக்கிறது
ஒரு பச்சையம் அது கால்வைக்க வளர்கிறது
ஒரு நதி
அது
பறக்கும் போது பாய்ந்து ஓடுகிறது
இப்படித்தான் தோழர்களே
நீங்களும் நானும்
சிறு அசைவு சிறு உயர்வும் பெற்ற போதும்
அது புறாவின் அசைவு
புறாவின் உயர்வு போலாகுமா?
****