கட்டுரைகள்
Trending

‘ஆயிரம் சூரியப் பேரொளி’ மொழிபெயர்ப்பு நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – முரளி ஜம்புலிங்கம்

ஆயிரம் சூரியப் பேரொளி  (A Thousand Splendid Suns)

நூல் ஆசிரியர்:  காலித் ஹூசைனி  (Khaled Hosseini)

தமிழில்:  ஷஹிதா

பதிப்பகம்: எதிர் வெளியீடு 

இவ்வுலகில் அன்பை விட பேசுவதற்கு நிறைய முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அன்பை விட மேன்மையான விஷயம் ஏதும் இல்லை. அன்பிற்காக ஏங்கி, அன்பை மட்டுமே பரிமாறிக்கொள்கிற மனுஷிகளின் கதைதான் “ஆயிரம் சூரியப் பேரொளி“.

ஆப்கனிஸ்தானில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கிற காலித் ஹூசைனியால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “A Thousand Splendid Suns” என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. தன்னுடைய முந்தைய நாவலான “பட்ட விரட்டியில் ஆமிர் என்கிற சிறுவனின் பார்வையில் ஆண்களின் உலகத்தையும், தான் பிறந்த மண்ணின் அரசியலையும், முக்கியமாக தந்தை மகன் உறவையும் பேசிய காலித் இந்நாவலில் மரியம் லைலா பார்வையில் பெண்களின் உலகத்தையும், மண்ணின் அரசியலையும், அது கொடுக்கின்ற நெருக்கடிகளையும், முக்கியமாக தாய்மகள் உறவையும் பேசி இருக்கிறார்பெண்களை நிலவுடன் ஒப்பிடும் உலகில்பெண்களை ஆயிரம் சூரியப் பேரொளி என்கிறார்.

ஆப்கானின் கிராமப் பகுதியில் தன் தாயுடன் வசித்து வருகிறார் மரியம். நகரத்தில் தன் மனைவிகளுடன் வசிக்கும் செல்வந்தரான அவளின் தந்தை வாரம் ஒரு முறை மரியத்தை பார்த்துச் செல்கிறார். மரியத்தின் ஒரே சந்தோஷம் அது மட்டும்தான். அவர் கொண்டு வரும் பரிசுகளுக்காகவும், அவர் சொல்லும் கதைகளுக்காகவும் அவள் காத்திருக்கிறாள்தன் தந்தை வந்துவிட்டு கிளம்பும்போது கதவுக்கு அருகில் நின்று மூச்சைப் பிடித்துக்கொண்டு பார்ப்பாள். மூச்சை அடக்கிக்கொண்டு தலைக்குள்ளாக அவள் நொடிகளை எண்ணிக்கொண்டிருப்பாள். அவள் மூச்சை நிறுத்தும் ஒவ்வொரு நொடிக்கு பதிலாகவும் இறைவன் அவளுக்கு அவள் தந்தையுடனான நாட்களையளிப்பான் என்று நினைத்துக்கொள்வாள். ஆனால் மரியத்தின் தாயோ, உன் தந்தையை நம்பாதே என்கிறாள். என் வாழ்க்கை சீரழிந்ததற்கு உன் தந்தைதான் காரணம். நான் இருக்கும் வரைதான் உன்னால் வாழ்வை எதிர்கொள்ள முடியும் என்கிறாள். ஆனால் மரியத்திற்கு தன் தந்தை மீதான அன்பு நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டேதான் செல்கிறதுஎன்றாவது ஒரு நாள் அவர் தன்னை நகரத்தில் இருக்கும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் குடும்பத்தோடு சேர்த்துக் கொள்வார் என்று நம்புகிறாள். அவர் சொன்னபடி வராததால் தன் தாயின் சொல்லை மீறி நகரத்திற்குப் பயணமாகிறாள். அங்கு அவளுக்கு ஏமாற்றமும் அவமானமுமே கிடைக்கிறது. இந்நிகழ்வின் எதிரொலியாக தன் தாயையும் இழக்கிறாள். தாயை இழந்த சில நாட்களில் தன் தந்தையின் குடும்பத்தினரால் காபூலில் வசிக்கும் 50 வயது ரஷீதுக்கு மணமுடிக்கப்படுகிறாள். இனி எப்போதும் பார்க்க முடியாத தன் தாயை, இனி எப்போதும் பார்க்க விரும்பாத தன் தந்தையை, தான் ஓடித் திரிந்த மண்ணை.. அனைத்தையும் இழந்து  காபூலுக்குப் பயணமாகிறாள்இது எல்லாம் நடக்கும்போது அவள் வயது 15. 

ஆசிரியராகப் பணிபுரியும் தந்தை, சோவியத்துக்கு எதிரான போரில் தன் இரு மகன்களை இழந்து அவர்கள் நினைவுடன் வாழும் தாய், இருவருடனும் காபூலில் வசித்து வருகிறாள் குட்டிப் பெண் லைலா. அவள் பள்ளித் தோழிகளுடனும், தாரிக் என்கிற ஒற்றைத் தோழனுடனும் அவள் வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போகிறது. லைலாவின் தந்தைக்கு லைலா நிறைய படிக்க வேண்டும், பெரிய பொறுப்பிற்கு வரவேண்டும் என்று ஆசை. ஆனால் இது இப்போதைய சூழ்நிலையில் ஆப்கானில் நடக்காது என்பதால் வேறு நாட்டுக்கு புலம் பெயரலாம் என்று முடிவெடுக்கிறார். லைலாவின் தாய் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறாள். தன் மகன்கள் எதற்காக இறந்தார்களோ அந்த லட்சியம் நிறைவேறி நமக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று நம்புகிறாள். அவள் நினைத்தபடியே ரஷ்ய ராணுவம் காபூலை விட்டு வெளியேறுகிறது. ஆனால் அதற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை இன்னும் மோசமானதாகி விடுகிறது. உள்நாட்டுப் போரில் இன்னும் நிறைய அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஒருநாள், லைலாவின் நெருங்கிய தோழி கிதி தன் தோழிகளுடன் பள்ளிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாள். கிதியின் வீட்டிற்கு அருகில் வழிதவறிய ஏவுகணை ஒன்று சிறுமிகளின் மீது விழுந்தது. அந்தக் கொடூரமான நாளின் மாலையில் கிதியின் தாய், பைத்தியக்காரியைப் போல ஓலமிட்டுக்கொண்டு கிதி கொல்லப்பட்ட தெருவில் மேலும் ஓடியோடி தன் மகளின் உடற்பாகங்களைத் தன் முந்தானையில் சேகரித்துக்கொண்டு அலைகிறாள். கிதியின் அழுகிப்போன வலது கால் அதன் நைலான் காலுறையோடும் ஊதா நிற ஸ்நிக்கர் காலணியோடும் இரண்டு வாரங்கள் கழித்து ஏதோ ஒரு வீட்டுக்கூரையின் மீதிருந்து கிடைத்ததை லைலா அறிகிறாள். தன் தோழி கொல்லப்படுவதைவிட ஒரு குழந்தைக்கு பெரிய பயம் வேறு என்ன இருக்க முடியும். தாயின் மனம் பயம் கொள்ள ஆரம்பிக்கிறது. இந்நாட்டை விட்டுச் சென்று விடலாம் என்று முடிவெடுக்கிறார்கள். பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்ட தன் நண்பன் தாரிக்கை திரும்ப சந்தித்துவிடலாம் என்று மகிழ்ச்சியுடன் தன் வீட்டை விட்டுக் கிளம்பும் நாளில் இன்னொரு ஏவுகணை அவர்கள் வீட்டின் மீது பாய்கிறது. இம்முறை தன் பெற்றோர்களை லைலா இழந்துவிடுகிறாள். யாருமற்ற இந்த 14 வயது குழந்தைக்கு மரியத்தின் கணவன் ரஷீத் அடைக்கலம் கொடுக்கிறான்

அறுபது வயதை நெருங்கிவிட்ட ரஷீதின் ஆதரவை இன்னும் மனிதர்களிடையே மிச்சம் இருக்கிற அன்பு என்று நினைக்கிறாள் சிறுமி. ஆனால் ரஷீதுடன் வாழ்ந்த மரியத்திற்கு தெரியும் அது முழுக்க முழுக்க சுயநலம் என்று. மரியத்தின் மூலம் நிறைவேறாத தன் வாரிசுக் கனவை அவன் சிறுமியின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள ஆசைப்படுகிறானென்று அவள் அறிந்திருந்தாள். ஆட்சியில் இருக்கும் அடிப்படைவாதிகளிடம்   சாவதைவிட எப்போதாவது தன் நண்பன் தாரிக்கை சந்தித்துவிட முடியும் என்ற எதிர்பார்ப்பில் ரஷீதின் ஆசைக்கு இணங்குகிறாள் சிறுமி லைலா

முதலில் விரோதத்துடன் தொடங்கும் மரியம் லைலா உறவு கொஞ்சம் கொஞ்சமாக இளக ஆரம்பிக்கிறது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக மாறுகிறார்கள்எதிர்வரும் நாட்களில் லைலாவுக்கும், அவள் பெற்ற குழந்தைகளுக்கும் அவள் தாயாக மாறுகிறாள். தாலிபான்களின் கைகளுக்கு ஆப்கன் வந்தவுடன் நிலைமை இன்னும் மோசமாகிறது. ரஷித்தின் ஆதிக்கத்தையே எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் பெண்கள் தாலிபான்களால் இன்னும் அவதியுறுகின்றனர். தாலிபான்களைப் பொறுத்தமட்டில், கம்யூனிஸ்ட்டாகவும், எதிர்க்கட்சிகளின் தலைவராகவும் இருக்கும் குற்றத்தின் அளவு, ஒரு பெண்ணாக இருப்பதன் குற்றத்தைவிட, சற்று கூடுதலானது மட்டுமே. இந்நிலையில் இப்பெண்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டதா? அவர்கள் எதிர்பார்த்த சுதந்திரமும் அன்பும் அவர்களுக்குக் கிட்டியதா என்பதை அவர்களின் இரத்தம் கசியும் வலிகளின் மூலம் நமக்குச் சொல்லி இருக்கிறார் எழுத்தாளர் காலித் ஹூசைனி.

இந்நாவலின் மரியம் லைலாவின் உறவைப் பார்க்கும்போது எனக்கு நெருக்குமாகத் தோன்றிய கதாபாத்திரங்கள் “சிங்கிஸ்  ஐத்மாத்தாவின் “அன்னை வயல்” நாவலில் வரும் தல்கோன் மற்றும் அலிமான்தான்தல்கோன் தன் கதையை தான் மிகவும் நேசிக்கும் வயலிடம் சொல்லுவது போல் ஐத்மாத்தாவ் நாவலைப்  புனைந்திருப்பார். இரண்டாம் உலகப்போரில் கணவன் மற்றும் மகன்களை இழந்த தல்கோனின் ஒரே ஆறுதல் அவளின் மூத்த மருமகள் அலிமான்.  யுத்தம் ஒரு அழகிய குடும்பத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை ஆசிரியர் அவ்வளவு தத்ரூபமாக நம் கண்முன் கொண்டு வந்திருப்பார்யுத்தத்தின் ஈவு இரக்கமற்ற தன்மையை நேரடியாக எதிர்கொண்டவர்கள் இப்பெண்கள்சில அழகிய தருணங்களைக் கொண்டதாக இருந்தாலும் வாழ்வின் பெரும்பகுதி தங்களிடம் இரக்கமற்று நடந்துகொண்டதை இப்பெண்கள் அறிந்தேயிருந்தார்கள். கடந்த காலத்தின் சொற்பமான அழகிய நினைவுகள் அவர்களுடையதே அல்ல என்பது போல நிகழ்காலம் இவர்களிடம் நடந்துகொள்கிறது. இங்கே எதிர்காலம் ஒரு பொருட்டல்ல. கடந்த காலம் இந்த ஒரு ஞானத்தைத்தான் இவர்களுக்கு போதித்திருக்கிறது. காலம் இந்தப் பெண்களிடம் கனிவாக இருந்ததில்லை. ஒருவேளை கனிவான காலம் இனிமேல்தான் வரக் காத்திருக்கிறதோ என்று ஏங்கும் பெண்களின் கதை இதுஇது இவர்களின் கதை மட்டுமல்ல, எங்கெல்லாம் மதம், ஜாதி, கடவுள், இனம், மொழி, தேசம் என்ற பெயரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அங்கு முதல் பலியாகிற உலகப் பெண்களின் கதை.                                                               

இந்நாவலை தமிழில் ஷஹிதா மொழிபெயர்த்திருக்கிறார். இந்நாவலை முழுதாக உள்வாங்கிக்கொண்ட ஒருவரால் மட்டுமே இவ்வளவு செழுமையாக மொழிபெயர்க்க முடியும்ஷஹிதாவிற்கும்எதிர் வெளியீடு பதிப்பகத்தின் மூலம் 

இவ்வருடத்தில் வெளியான “பார்வையற்றவளின் சந்ததிகள்மற்றும்கானல் நீர்நாவல்களை மொழிபெயர்த்த விலாசினிக்கும் என் அன்பும் வாழ்த்தும்

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button