
“கல்விதான் இன்றைய உலகின் அச்சாணி. இது அறிவு யுகம்….முன்பு எப்போதையும்விட, கல்வி இன்று சமுதாய வளர்ச்சியை ,அதிகார அமைப்பை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணி.“ இப்படி முழக்கத்தோடு பொதுப்பள்ளியை, அரசுப்பள்ளியைக் காப்பாற்ற, மேம்படுத்த இன்று தனது என்பத்தியோரு வயதில் கூடப் போராடிக் கொண்டிருக்கிறார் கல்வியாளர் முனைவர் .வே.வசந்திதேவி.
1938 ல் பிறந்த வசந்திதேவி எட்டுவயதுவரை பள்ளி செல்லாமல், தாயிடமே கல்வி கற்று, நேரடியாக மூன்றாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, டபுள் ப்ரமோஷன் கிடைத்து ஐந்தாம் வகுப்பு சென்றவர். அந்தக் காலத்திலேயே திண்டுக்கல்லுக்கு ஆங்கிலப் புத்தகங்களை வரவழைத்து வாசிக்கும் வழக்கம் கொண்ட பெற்றோர். பள்ளிப்படிப்பை முடிக்குமுன்னரே புகழ்பெற்ற ஆங்கிலப் புத்தகங்கள் அத்துப்படி. “கற்றை கற்றையாக ஷெர்லாக் ஹோம்ஸ் படித்திருக்கிறேன்..” எனச் சிரிக்கிறார். ஆங்கில இலக்கியம் படித்த ஆசிரியப் பயிற்சி பெற்ற அம்மா, முனிசிபல் சேர்மன் அப்பா.
சுதந்திர இயக்கத் தலைவர்களின் கதைகளை அப்பா சொன்ன பாங்கைக் கேட்டு வளர்ந்தவர். சொல்லப்போனால் சித்தரஞ்சன் தாசை மனம் கவர் நாயகனாகக் கருதி வந்த இவர் தந்தை பி.வி.தாஸ், சித்தரஞ்சனின் மனைவி பெயரான வசந்திதேவி என்பதைத்தான் தன் மகளுக்குச் சூட்டியிருந்தார்.
சுதந்திர தினத்தையே புத்தாடை,பலகாரங்கள்,தேசியக் கொலு எனப் பண்டிகையாகக் கொண்டாடிவந்த புகழ்பெற்ற குடும்பம்.
“பள்ளி முடித்து, திண்டுக்கல்லை விட்டு சென்னையில் கல்லூரியில் நுழையும் வரை எனது அரசியல் உலகம் என் தந்தையின் கண் வழியே கண்டதுதான். அவரது விருப்பு, வெறுப்புகள், விமர்சனங்கள், சார்புகள், எதிர்ப்புகள் இவையே பெரும்பாலும் என் நிலைகளை நிர்ணயித்தன. பொதுவாகவே, எல்லாவற்றிலும் என் தந்தையின் தாக்கம் என்னிடம் அதிகம். வரலாறு, கர்நாடக சங்கீதம், அடிமட்டத்து மக்களைப் பற்றிய அக்கறை, ஏழ்மை ஒழிப்பே அரசியலின் முதல் கடமை என்ற நம்பிக்கை இப்படி பலவற்றைச் சொல்லலாம்…”
என்று நினைவு கூர்கிறார் வசந்திதேவி. துப்புரவுத் தொழிலாளர் நலன், ஜட்கா வண்டித் தொழிலாளர்களுக்கு ஆதரவு என்று வாழ்ந்தவர் தந்தை. பின்னாளில் திண்டுக்கல்லில், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டபோது அவரை நினைவு கூர்ந்து, பி.வி.தாஸ் காலனி என்று பெயர் சூட்டினர்.
மதுரை மாவட்டத்திலேயே பள்ளியிறுதியில் முதல் மாணவியாகத் தேறியபோதும், தந்தை பயின்ற வரலாற்றுப்பாடமே தேர்வு செய்தார். இராணிமேரி கல்லூரியில் இன்டர்மீடியட் முடித்து மாநிலக் கல்லூரியில் B.A (HONOURS)சேர்ந்தார். பட்டப்படிப்பு முடிந்தவுடன், பயின்ற இராணி மேரி கல்லூரியிலேயே பேராசிரியரானார்.

பொதுவுடமை சித்தாந்தத்தில் அக்கறை, சீர்திருத்த செயல்பாடுகள் என்று வாழ்ந்த இவர் தந்தையின் ஈடுபாடுகள் ஆன்மீகத்திலும் இருந்தன. முருகபக்தி, கம்பராமாயண பாராயணம் என்று வாழ்ந்தபோதும், அவர் அறையில் வைத்திருந்த ஒரே படம் பெரியாருடையது.(விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பெரியார் ஒளி விருதினை வசந்திதேவிக்கு 2016ல் வழங்கியது.)தீவிர தமிழார்வம், திராவிட நாகரிக நம்பிக்கையும் கொண்டிருந்தார். மகளோ மாநிலக் கல்லூரி மாணவ வாழ்க்கையிலேயே மார்க்சிய சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டார். இடதுசாரி தத்துவங்களில் தோய்ந்தவர்கள் நண்பர்களானார்கள். மார்க்ஸியம் பற்றி படிப்பதும், புரிந்து கொள்ள முயற்சிப்பதும் சீராகத்தொடங்கிற்று. சர்வதேச அரங்கில் சோவியத் யூனியனின் பிரம்மாண்ட வளர்ச்சி, செஞ்சீனாவின் எழுச்சி, க்யூபா, வியட்நாம் இவைதான் உணர்வுகளைஆட்கொண்டிருந்தன. இந்திய அரசியலிலும், இடதுசாரி இயக்கங்கள்தான் நம்பிக்கைக்கு உரியவையாக இருந்தன.
கேரளாவில் E.M.S.நம்பூதிரிப்பாட்டின் அமைச்சரவை, உலகில் தேர்தல் மூலம் அதிகாரத்தை வென்ற முதல் கம்யூனிஸ அரசு, 1959ல் நேரு அரசினால் கலைக்கப்பட்டபோது கடும் கோபமும், ஆத்திரமும் பொங்கியது. சென்னை மெரினா கடற்கரையில் கண்டனக் கூட்டம் அலை மோதிற்று; கூட்டத்தில் M.B.ஸ்ரீநிவாசன் தன் கம்பீரக் குரலில் பாடிய பாடல், “பாண்டவர் தோற்றார், கெளரவர் வென்றார் பாரதக் குடியரசில்” ஜெயகாந்தன் எழுதியது என்று நினைக்கிறேன்.. வியத்நாம் போரின் ஒவ்வொரு நாள் நிகழ்வையும் ஆதங்கத்துடன் கண்காணிப்பதும்,அவற்றைப் பற்றி என் நண்பர்களிடம் பேசுவதும் அன்றைய தினசரி நிகழ்ச்சிகள்…”
என்று சொல்லும் வசந்திதேவி மார்க்ஸிய நம்பிக்கையே இன்றுவரை என் ஆன்ம நேயமாகவும், அறிவார்ந்த சமூக சித்தாந்தமாகவும் நின்று என் வாழ்வின் இயக்கங்களை ஒருமைப்படுத்துகிறது எனக் குறிப்பிடுகிறார்.
பின்னாளில் MADRAS YOUTH CHOIR என்ற இளைஞர் சேர்ந்திசைக்குழுவை M.B.ஸ்ரீநிவாசன் உருவாக்கியதன் தொடக்கத்திலும் வசந்திதேவி இருந்திருக்கிறார். 1971ல் தனது வானொலி நிகழ்ச்சி ஒன்றிற்காக அவரது உதவியை நாடியபோது, M.B.ஸ்ரீநிவாசன் இளைய குரல்களை ஒருங்கிணைக்கும் தனது கனவு குறித்துச் சொல்ல உருவானதுதான் MADRAS YOUTH CHOIR. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகாலம் வசந்திதேவியும் அக்குழுவில் பாடியிருக்கிறார். சிறுவயதில் தந்தையின் ஏற்பாட்டில் கற்றபோது பெரிதாக ஈர்க்காத கர்நாடக இசைப்பயிற்சியை பின்னாளில் தாமே முயன்று கற்றுக்கொள்ள மேற்கொண்ட அனுபவம் உதவியது. அதில் ஆரம்பக் காலத்தில் பாடிய ஒரு பாட்டு, “வியத்நாம், வியத்நாம்” என்பது.
“வீசுகின்ற தீயிடையில் வீழ்ந்தும், நீ
வேவதில்லை சாவதில்லை
வியத்நாம் பாசறையே
வீடாக நினைத்தாய்,
விடுதலைப் பாட்டிசையாய்
காற்றினிலே நிறைந்தாய்”
இந்தப் பாடலை பாடும்போதெல்லாம் உணர்ச்சிமயமாகி M.B.ஸ்ரீநிவாசனின் கேலிக்கு ஆளாவது வழக்கம்.
“வியத்நாமின் விடுதலைக்குப் பின் 80களின் இறுதியில் வியத்நாமிற்குப் போயிருந்தேன். அப்பொழுது நான் பார்த்த பல மாற்றங்கள் எனக்கு ஏமாற்றத்தையும்,மனவேதனையையும் தந்தன. மக்கள் தங்கள் வரலாற்று வடுக்களை மறந்துவிடலாகாது.” எனக் குறிப்பிடுகிறார் வசந்திதேவி .
பல காரணங்களால் நேரடித் தொடர்பு பெறமுடியாது போன தம் தாய்வழித் தாத்தா சக்கரைச் செட்டியாரை அவரது தொழிற்சங்க ஈடுபாடு, போராட்ட குணம் போன்றவற்றின் தாக்கம் தன்னில் இருந்திருக்கலாம் என்று நினைவு கூர்கிறார்.
சக்கரைச் செட்டியார், கல்லூரி காலத்தில் கிறித்தவ மதத்திற்கு மாறி தத்துவ போதகராக, ஆசிரியராகப் பின் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பாரதியின் நண்பர். பாரதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட 11 பேரில் ஒருவர். 1918ல் தொடங்கப்பட்ட சென்னை தொழிலாளர் சங்கத்தின் இரண்டு துணைத் தலைவர்களில் ஒருவர். மற்றொருவர் திரு.வி.க.
முதல் மத்திய தொழிற்சங்க அமைப்பான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் தமிழ் மாநிலத் தலைவராக நீண்டகாலம் செயல்பட்டவர். சென்னை மேயர் பதவியையும் வகித்தவர். ஆந்திர மாநில பிராமணப் பெண்ணை மணந்து சக்கரை செட்டியார் தொடங்கி வைத்த கலப்புமணக் கணக்கு மூன்று தலைமுறையாகவும் தொடர்வதைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் வசந்திதேவி.
கிறித்தவ பின்னணியில் வளர்ந்த சக்கரை செட்டியாரின் மகள் (வசந்தி தேவியின் தாய் ) மணந்துகொண்டது இந்து நாயுடுவான பி.வி.தாசை. 1935ல் மதம் மாறாமல், தங்களுக்கு எந்த மதமும் இல்லை என்ற சத்தியப் பிரமாணத்தைச் செய்து சடங்குகளற்ற திருமணம் செய்தவர்கள் அவர்கள். அத்தை, சித்தி, தான், தனது மக்கள் என அனைவரும் இதே வழியில் மணம்புரிந்தவர்கள் என்று குறிப்பிடுகிறார்.
அடுத்த தலைமுறையில், கனடாவில் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியராக, புகழ்பெற்ற அரசியல் விஞ்ஞான நூல்களின் ஆசிரியராக விளங்கும் மகன் நரேந்திரா சுப்ரமணியம் மாநிலம் தாண்டி கேரளப் பெண்ணை மணந்துகொண்டார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியரும் தென்னிந்திய வாழ்வியல் ஆய்வுகளை எழுதும் நூலாசிரியருமான மகள் அஜந்தா சுப்ரமணியம் நாடு, இன வரையறை கடந்து ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கரை மணம் முடித்திருக்கிறார்.
“இருபதாம் நூற்றாண்டின் பல புதிய சுழற்சிகளின் வழி உருவான குடும்பம் எனது…” என்று அடையாளப்படுத்துகிறார் வசந்திதேவி.
ஆகச் சிறந்த மதிப்பெண்களுடன் பள்ளிக்கல்வியை முடித்த மகன், மகள் இருவருமே உயர்கல்வியில், பொறியியல் அல்லது மருத்துவம் என்ற சக்கரத்தில் கைவைக்காமல் வாழ்வியல் சார்ந்த தேர்வுகளை, சிந்தனைகளைக் கொண்டிருந்தனர் என்பதில் வசந்தி தேவிக்குப் பெரும் மகிழ்ச்சி.
புனைவு இலக்கிய வாசிப்பு படிக்கும் காலத்தில் வாரப்பத்திரிகை தொடர்கள் சிலவற்றோடு முடிந்தது. கட்டுரைகள், ஆய்வு நூல்கள், வரலாறு, தத்துவம் போன்றவையே பெரிதும் ஈர்ப்பவை.
அவர் வேடிக்கையாகக் குறிப்பிடும் ஒரு சம்பவம்:
மகனுக்கு மூன்று நான்கு வயது இருக்கும்போதிலிருந்தே தோழனாகக் கருதி (மகளுக்கும் மகனுக்கும் ஏழரை ஆண்டுகள் வித்தியாசம்) நாளிதழ் செய்திகளிலிருந்து வாசிப்பதை எல்லாம் அவரிடம் பகிர்வதும் பேசுவதும் வழக்கம். வயதுக்கு மீறிய விஷயங்களை அவன் தலையில் ஏற்றுகிறோம் என்று தோன்றியதேயில்லை. ஒன்பது வயதில் மஞ்சள் காமாலை வந்து ஒருமாதம் பள்ளிக்குப் போகமுடியாமல் அவன் இருக்கையில் நானும் விடுப்பு எடுத்துக்கொண்டு அவனுடன் இருந்தேன். நானூறு பக்க Red star over china என்ற EDGAR SNOW எழுதிய சீன வரலாற்றுப் புத்தகத்தை வாசித்துக் காட்டிக் கொண்டு இருந்தேன்.
குழந்தைகளோடு நல்ல புரிதலும், அணுக்கமும் இருந்ததும், தனது சிந்தனைத் தாக்கமும் செயல்பாடும் தொடர்வதும் குறித்து நிறைவு கொள்கிறார்.
நட்பு வட்டம் என்றால் சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்கள் வட்டம், வயது வேறுபாடின்றிப் பெரியது. கல்லூரி வாழ்வில் உடன் பயின்ற மைதிலி சிவராமன் எல்லாவற்றையும் விவாதிக்கக் கூடிய வாழ்நாள் தோழியானார். அவரது கணவர் கருணாகரனும் நல்ல நண்பர்.
ஆயிரக்கணக்கான வரலாற்றுப் பேராசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராகக் கரைந்து போகாது எண்பத்தியொரு வயதிலும் சிந்தித்துக்கொண்டே இருக்கும் தனித்த அடையாளம் கிட்டியதன் பின்னணியில் இவ்வளவு கூறுகளும் இருந்திருக்கலாம். ஆனால் அவை மட்டுமே காரணமல்ல.
பெண்விடுதலைக் கருத்துகள் தனக்குள் உருவானதற்கு தந்தையின் வளர்ப்பே காரணம் என்கிறார். தம்பியை விடவும் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அன்று பெண்கள் அறியாத பல திறப்புகளும் இவருக்குக் கிட்டின. சென்னையில் கிரிக்கெட் டெஸ்ட் என்றால் திண்டுக்கல்லில் இருந்து ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு அழைத்துப் போகும் அளவுக்கு ஈடுபாடு காட்டினார். ஆனாலும், தனது பெண்ணிய சிந்தனைகள் கட்டற்ற போக்கைக் கொண்டதல்ல. சுயமரியாதையை, சுயமதிப்பீட்டை, அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்டது என்கிறார்.
“1959ல் கல்லூரிப்படிப்பை முடித்த உடனேயே ஆசிரியப்பணியில் சேர்ந்த காலத்திலிருந்தே அறச்சீற்றமும், துணிவும், நேர்மையுமே உடனிருந்தன. பல லட்சியக் கனவுகளில் மிதந்துகொண்டிருந்த காலம். மாணவப் பருவத்தின் கனவுகள் கண்களிலிருந்து கலையாத காலம். அன்றிலிருந்து அமைப்பின் எதிராளியாகத்தான் இருந்தேன். எனக்கு வரித்துக்கொண்ட லட்சியங்களை, புது உலகம் படைக்கும் லட்சியங்களை, அமைப்பின் உள்ளிருந்தும், அமைப்பின் வழியாகவும், அமைப்பிற்கு வெளியே அதனைச் சுற்றியும், அமைப்பை உடைத்தும் தொடர முற்பட்டிருக்கிறேன். பெரும்பாலும் ஏமாற்றங்களே விளைந்தாலும், சோர்வடைந்துவிடாத அளவிற்காவது நம்பிக்கையும் தந்தன.”
என்பது அவரே சொல்லும் போராட்ட வரலாற்றுச் சுருக்கம். யாரும் எதிர்க்கத் துணியாத, சர்வாதிகாரி எனப் பெயர் பெற்ற கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் சிலருக்கு அவர் அநீதி இழைத்தபோது பேராசிரியர் அனைவரிலும் இளையவரான இவர் தனித்து எதிர்க்குரல் கொடுத்தார்.
மாணவர் பேரவை, நாட்டுநலப்பணித் திட்டம், வயதுவந்தோர் கல்வித் திட்டம் போன்ற அமைப்புகளின் மூலம், கல்வித் திட்டத்தின் இயங்குவெளிகளை அடையாளம் கண்டு, சமூகத்தோடு மாணவர்களை இணைப்பதும், சமுதாயப் பிரச்சினைகளை உணரவைப்பதுமான தொடர் செயல்பாடுகள் வசந்திதேவியின் பணிவாழ்வெங்கும் நிரம்பியிருந்தன.
இராணிமேரி கல்லூரி, மாநிலக் கல்லூரி, மதுரை மீனாட்சி கல்லூரி என்று இணைப்பேராசிரியராகத் தொடங்கிய பணி, பேராசிரியாகிப் பிறகு 1968ல் இராணிமேரிக் கல்லூரியில் துறைத்தலைவர், 1988ல் குடந்தை அரசு மகளிர் கல்லூரி முதல்வர் என்று நீண்டபோதும், புதிதாகத் திருநெல்வேலியில் 1992ல் உருவான மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பொறுப்பேற்று, இரண்டாம் முறையும் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1998ல் ஒய்வு பெறும்வரை இந்த சமூகக் கவனமும், ஈடுபாடும் நாளும் மேம்பட்டே வந்தன.
இதனிடையே ஆசிய வளர்ச்சி வங்கியின் உயர் அதிகாரியாகக் கணவர் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவுக்கு மூன்றாண்டுகள் விடுப்பில் சென்றிருந்தார் வசந்திதேவி. அங்கேயே அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலை குறித்து முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டார். பிலிப்பைன்சின் விடுதலைப் போராட்டக் களத்தில் இருந்து கற்பிக்கும் பணிக்குத் திரும்பிய ஆசிரியர்களின் வகுப்பில் பயின்ற தாக்கமும் சேர்ந்தது.
1981 முதல் திண்டுக்கல்லில் பணியாற்றிய காலம் மிகச் சிறப்பானது.மகளிர் சார்ந்த பல விஷயங்களிலும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பல கூட்டங்கள், போட்டிகள் தொடர்ந்து நடத்துவார்.சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மாணவிகள் கலந்துகொள்ளும் பெருந்திரள் ஊர்வலமும், பாப்பா உமாநாத் போன்ற தலைவர்களின் பங்கேற்புமாக இடைநிலை நகரமான திண்டுக்கல்லில் ஒரே அமர்க்களம்தான். கல்லூரிக்கு வெளியேயுள்ள மகளிரின் பிரச்சினைகளை மாணவிகள் புரிந்துகொள்ள வழிகாட்டியதும், சுய உதவிக் குழுக்களை உருவாக்கி வழிநடத்தியதுமான திண்டுக்கல் செயற்பாடுகள் கும்பகோணத்தில் கல்லூரி முதல்வரானதும் இன்னும் கூர்மை பெற்றன.
ஆசிரியர் சங்கங்களின் போராட்ட வரலாற்றிலும் வசந்திதேவியின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது. 1985 ஜாக்டீ பள்ளி, கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்புப் போராட்டத்தில் பெருமளவில் பெண் ஆசிரியப் பெருமக்கள் பங்கேற்று மதுரை சிறையில் பத்துநாட்கள் அடைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவராகக் கைதாகியிருந்த இந்த திண்டுக்கல் பேராசிரியரின் பிரச்சார வலிமை தீபாவளிக்குக்கூட அந்தப்பெண்கள் மன்னிப்புக் கேட்டு விடுதலைபெற விரும்பாத ஒருமைப்பாட்டில் அரசுக்குப் புரிந்தது. கல்விப் பாதுகாப்பு குறித்த தன் சிந்தனைக்கான திறப்பு கிடைத்த சந்தர்ப்பமும் அதுதான் எனக் குறிப்பிடுகிறார்.
அதன்பிறகு கல்லூரி முதல்வராகிக் குடந்தைக்குப் போனபோதோ இன்னும் பல விஷயங்களைச் செய்யும் சுதந்திரம் கிடைத்தது.கோயில் நகரமாம் கும்பகோணம் மாணவிகள் முன்னேற்றக் கருத்துகளை முழக்கமிட்டுச் செல்லும் ஊர்வலங்களைக் கண்டு வியந்தது.
தமிழக அரசு பல்கலைக்கழகங்களில் (மகளிர் பல்கலைக்கழகம் தவிர) ஒரு துணைவேந்தர் பொறுப்பைப் பெற்ற முதல் பெண் இவரானார். தானே முடிவெடுக்கும் ஜெயலலிதாவின் வழக்கம் இவர் பெயரை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் பதவிக்கு குறிப்பிட வைத்தது.
புதிய பல்கலைக் கழகத்தின் கட்டுமானப் பணிகளில் இருந்து, பாடத்திட்டக் கட்டமைப்பு வரை ஏற்பதற்கான சவால்கள் நிறைய இருந்தன. தொடர்பில்லாத அரசியல் அதிகார வர்க்கத்தின் கறை படியாமல், ஒவ்வொன்றையும் நிறைவேற்றினார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது தன் தலைமையிலேயே மாணவர்கள் பங்குபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தை நெல்லையே வியக்க நடத்தினார். வழக்கம்போல விமர்சனங்களையும் சந்தித்தார்.
மாணவர்களுக்குப் புதிய திறப்புகளைத் தரக்கூடிய வகையில் வாழ்வியலோடு தொடர்புடைய, சுற்றுச்சூழல் கல்வி, மகளிர் இயல், நுகர்வோர் உரிமை என்று பல விருப்பப் பாடங்களை வைத்தது, அந்தப் பகுதிக்கே உரிய பத்தமடைப் பாய், மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரப் பழங்குடியினர் மருந்துகள் போன்றவற்றைப் போற்றவும், பரப்பவும் நடவடிக்கைகள் எடுத்தது, பொது அறிவுப் பாடத்தை ஓராண்டுக்கான திட்டத்தில் வைத்தது, விளையாட்டு, NCC, NSS, அறிவொளி, கிராம வளர்ச்சி போன்ற ஏதாவதொன்றில் ஒவ்வொரு மாணவரையும் கட்டாயம் பங்குபெற வைத்தது எனப் பல புதுமைகளைச் செய்தார்.
இதற்காக நாடெங்கிலும் தமக்கிருந்த நல்லறிஞர் தொடர்புகள் அனைத்தையும் பயன்படுத்தி தமிழில் பாடத்திட்டங்களை வகுப்பது, ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பது என்ற தம் முயற்சிகளுக்கு ஆசிரியர்கள் நல்லாதரவு தந்ததை எப்போதும் குறிப்பிடுவது வழக்கம்.
ஆனால்,இந்தப் புதிய முயற்சிகளுக்கு,அந்தப் பகுதியின் பழமையான தனியார் கல்லூரிகள் சிலவற்றின் தரப்பு, பணியாளர் தேர்வு, கட்டுமானப்பணி என எதிலும் தங்களால் தலையிட முடியவில்லையே என்று ஆத்திரப்பட்ட அரசியலார் உள்ளிட்டவர்களின் தரப்பு இவற்றை நீதிமன்றங்களின் துணைகொண்டே வெல்ல வேண்டி இருந்தது. இவற்றுக்கெல்லாம் தனக்குத் தோன்றாத் துணையாக இருந்தது சட்ட ஆலோசகராக இருந்த (பின்னாளில் நீதியரசரான ) வழக்கறிஞர் கே.சந்துரு தான் என்கிறார் வசந்திதேவி. அதன்பிறகும் கூட இன்றுவரை சமூகநலன் சார்ந்த தொடர் பணிகளில் வழிகாட்டவும், ஆலோசனை அளிக்கவுமான சிறந்த தோழராகவும் அவர் இருக்கிறார். ஆசிரியர் நலன், மாணவர் நலன் இரண்டையும் போற்றிப் புதிய முன்னெடுப்புகளைச் செய்யும் இவருக்கு வெற்றியாக இரண்டாவது முறையும் துணைவேந்தர் பதவி அளிக்கப்பட்டது.
“மனம் சோராத போராளி அவர்…சமூக மாற்றங்கள் சார்ந்த பணிகள் அனைத்துமே சிறிய அல்லது பெரிய போராட்டங்களின் விளைவாகக் கூடிவந்தவைதாம் என்ற வரலாற்றுணர்வு அவருக்கு இருக்கிறது. இந்த வரலாற்றுணர்வுதான் அவரைச் சோர்வடைய விடாது தொடர்ந்து போராடத் தூண்டிக்கொண்டிருக்கிறது… இது ஒரு முடிவற்ற போராட்டம்.” இவ்வாறு எழுத்தாளர் சுந்தர ராமசாமி வசந்திதேவியைப் பற்றிக் குறிப்பிடுவதை அவரே ஒப்புக் கொள்கிறார்.
தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவராக 2002-2005 காலகட்டத்தில் பொறுப்பு வகித்தார். நிதியோ, அதிகாரமோ, வசதிகளோ இல்லாமல், பெயரளவில் இருந்த ஆணையத்துக்கு உயிரூட்ட அரசோடு நெடும் போராட்டத்தை நடத்தியபடியே, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிவழங்க முயற்சிகளை முன்னெடுத்தார்.
மனித உரிமை விழிப்புணர்வில் இவரது பங்கு மகத்தானது. மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மக்கள் கண்காணிப்பகத்தின் ஒரு அங்கமாக உருவான மனித உரிமைக் கல்வி நிறுவனத்துக்கு 2005 -2013 காலத்தில் தலைமைப் பொறுப்பேற்று வழி நடத்தினார்.
தமிழகம், கேரளா, டெல்லி, அஸ்ஸாம் போன்ற பதினான்கு மாநிலங்களின் அரசுகளுடன் உடன்பாடு மேற்கொண்டு ஆறாம் வகுப்பு அளவில் அந்தந்த மாநில மொழியில் மனித உரிமைகள் குறித்த பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டன. ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் இதன் தேவையை உணர்ந்த ஆசிரியர்கள் இப்பயிற்சி கிட்டாத மேல்வகுப்பு மாணவர்களுக்கு தாங்களே திருத்திய பாடத்தை உருவாக்கி கற்பித்த அற்புதமெல்லாம் நிகழ்ந்திருக்கிறது. “ஓய்வின்றி இந்தப் பணிக்காக நாடு முழுவதும் பயணித்துக் கொண்டேயிருந்த நாட்கள் சிறப்பானவை.” என்கிறார் வசந்திதேவி.
1962ல் சி.டி.தேஷ்முக்-துர்காபாய் தேஷ்முக் ஆகியோரால் உருவாக்கப்பட்ட,சமூக விஞ்ஞானிகளும், செயற்பாட்டாளர்களும் கொண்ட இந்திய சமூக வளர்ச்சிக் கழகத்தின் செயற்குழு உறுப்பினராக உள்ளார். சமூக வளர்ச்சி குறித்த ஆய்வுகளை நடத்தி தேசியக் கொள்கை உருவாக்கங்களில் வழிகாட்டும் அமைப்பு இது.
MADRAS INSTITUE OF DEVELOPMENT STUDIES என்ற சமூக, பொருளாதார, கலாசார ஆய்வில் இந்திய முன்னணி அமைப்பின் காப்பாளராக இருந்தார். இந்திய வளர்ச்சி நிறுவனத் தலைவராக இருந்து புதிய கற்றல் கற்பித்தல் முறைகளை உருவாக்கினார்.
‘கல்வி’ என்ற அமைப்பை எழுத்தாளர் ஞாநி, நீதிபதி .கே.சந்துரு போன்றோருடன் இணைந்து நடத்திவந்தார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் சென்னை,ஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட மக்கள் நலக் கூட்டணியின் பொது வேட்பாளராக அக்கூட்டணித் தலைவர்கள் இவரை வேண்டினர்.அத்தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. தேர்தல், கட்சி அரசியலில் பெரிதும் ஈடுபாடு இல்லாதிருப்பினும் தான் அக்கறைகொண்ட பொதுவுடைமை, தலித் முன்னேற்ற அமைப்புகள் வைத்த கோரிக்கையினை ஏற்றார். முன்பே உணர்ந்தது போலவே தோல்வியே கிட்டியது. கட்சி அரசியலைத் தொடரவில்லை.
2017ஆம் ஆண்டு முதல் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி தலைவராக இருந்து நடத்தி ”மக்களின் விழிப்புணர்வுதான் ஜனநாயகத்தின் ஊற்றுக்கண். அதிலிருந்து பிறக்கும் செயல், உரிமைகளை உறுதி செய்யும்: ஜனநாயகத்தை அர்த்தமுள்ளதாக்கும்.” என்பது அவருடைய எல்லாச் செயல்பாடுகளின் அடிப்படை எனலாம். சிறந்த கல்வியாளர்கள் எஸ்.எஸ்.ராஜகோபாலன் ச.மாடசாமி, ஜே.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்களோடு கடும் முயற்சிகளை இந்த அமைப்பின் மூலம் எடுத்து வருகிறார். 2009 கல்வி உரிமைச் சட்டத்தின்படி அமைக்கப்பட வேண்டிய பள்ளி மேலாண்மைக்குழு, கிராமசபைக் கூட்டம் இரண்டையும் சட்டரீதியிலான கருவிகளாகக் கொண்டே அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
பொதுப்பள்ளிகள்,அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவது, தரத்தை உயர்த்தி சேர்க்கையை அதிகப்படுத்துவது, குழந்தைகளை எதிர்கால வாழ்க்கைக்குத் தயார்படுத்துவது போன்றவை பிரதான நோக்கங்கள். அர்ப்பணிப்புள்ளள ஆசிரியர்களின் உழைப்பு இதை சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கிறது.
வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கல்வி வழங்கல் மேம்பாடு குறித்து எழுதியும் பேசியும் வருகிறார் வசந்திதேவி. எழுத்தாளர் சுந்தர இராமசாமி, வசந்திதேவியுடன் நடத்திய நீண்ட உரையாடலை, ‘தமிழகத்தில் கல்வி’ என்ற தொகுப்பாக வெளியிட்டார். கல்வி குறித்து இவர் பேசியவையும், எழுதியவையும் “சக்தி பிறக்கும் கல்வி” என்ற பெயரில் முதலில் காலச்சுவடு வெளியீடாக வந்தது. .அதன்பிறகான கட்டுரைகளும் இணைக்கப்பட்டு “கல்வி ஓர் அரசியல்” என்ற பாரதி புத்தகாலய வெளியீடாக வந்துள்ளது.
சமூகநீதி ஆளுமையான பி.எஸ்.கிருஷ்ணன் குறித்து A CRUSADE FOR SOCIAL JUSTICE.P.S.KRISHNAN BENDING GOVERNANCE TOWARDS THE DERPRIVED என்ற தலைப்பில் ஒரு நேர்காணல் தொகுப்பை ஆங்கிலத்தில் கொண்டுவந்திருக்கிறார். எண்ணற்றற கட்டுரைகளும், உரைகளும் இவரது சிந்தனையின் வீச்சை உலகுக்குச் சொல்லிக்கொண்டே உள்ளன. சமீபத்தில் மகளிர் ஆணையத்தில் வசந்திதேவியின் மூன்றாண்டுகள் அனுபவத்தை ப்ரேமாரேவதி நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்.
இன்னும் எழுதப்படவேண்டியவை ஏராளம் உள்ளதாகக் குறிப்பிடுகிறார் வசந்திதேவி. “இந்த தேசம் உயர வேண்டுமென்றால் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையும் முன்னேற்றமும் மட்டுமே அதை சாத்தியமாக்கும்.” என்பதையே வலியுறுத்துகிறார். “தன்னைக் கவர்ந்த தலைவர் அம்பேத்கர்” என்று குறிப்பிடும் வசந்திதேவி தலித் முன்னேற்றச் சிந்தனையாளர்களோடும் அமைப்புகளோடும் தொடர்ந்து இணைந்து இயங்கிவருகிறார்.
1972ல் தங்கம் அணிவதைக் கைவிட்ட இவர் தன் மகளுக்கும் தங்கமே தரவில்லை. மகள் திருமண சீதனமாகக் கூட இவர் அம்மா தந்து சென்ற சில நகைகளைதான் கொடுத்திருக்கிறார். பட்டு அணிவதேயில்லை. எப்போதும் எளிய கைத்தறி உடைகள்தான். எல்லாவகை உணவுகளும் பிடிக்கும் என்றாலும் இப்போதெல்லாம் யாராவது வீட்டுக்கு வந்தால்தான் அசைவம். காலையில் தினமும் நாற்பது நிமிடங்கள் யோகா பயிற்சி. வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் நடைப்பயிற்சி.
“ஆன்மீக ஈடுபாடு இல்லையென்றாலும் கலைதரிசனத்துக்காக ஆலயங்களுக்குச் சென்றதுண்டு. பெரும்பாலும் தொலைக்காட்சியில் செய்தி தவிர ஆர்வமில்லை. சினிமா அறவே கிடையாது. யாருக்கும் அறிவுரை சொல்வதில்லை. உதவி தேவையென்றால் முடிந்தால் செய்வேன் அவ்வளவுதான்…” என்று புன்னகைக்கிறார்.
பெண்கள் பொதுவெளிக்கு வரும்போது எதிர்ப்புகள் இருக்கும். தைரியம் வேண்டும். தார்மீகப் பொறுப்போடு பதவியை, இடத்தை அணுகவேண்டும். ஆணோ, பெண்ணோ, பொறுப்புக்குரிய அடிப்படை சிந்தனைத் தெளிவு இருந்தால் அதுவே உங்களை இயக்கும். அதுவே உங்கள் பாதையை அமைக்கும். மனிதநேய அணுகுமுறையும், முறைகேடுகளைத் தவிர்ப்பதும் கட்டாயம் என்பது இவர் காட்டும் வழி.
தொடரும்….