
ஆலகாலம் வெறும் ஆலகாலம்
=============================
சென்னையில் வசிக்கும் ஜான்ஸி ராணியின் முதல் கவிதைத் தொகுப்பு “ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்”. தலைப்பே மிகப் பெரிய ஈர்ப்பினையும், பெண்ணியக் கவிதைகள் இவை என்பதையும் பறைசாற்றுகின்றன. போலவே தொகுப்பின் பல கவிதைகள் பெண்ணியம் பேசுகின்றன. நாசுக்காய், மெல்லிய குரலில் ஆனால் அழுத்தமாகப் பேசுகின்றன. அந்தக் குரல் தேவைப்படும் இடங்களில் கண்டிப்பான அதிர்வுகள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. திட்டுவதற்கு குரல் உயர்த்த வேண்டிய அவசியமேயில்லை, மெல்லிய குரலில் சொல்லி எதிராளியை தொம்சம் செய்துவிட முடியும், இது எப்போதும் உரத்துப் பேசும் பெண்ணியக் கவிதைகளிடையே அடங்கிப் போக வாய்ப்பில்லை. உரத்து ஒலிக்கும் எந்தக் குரலும் விரைவில் அலுப்படையச் செய்துவிடும் அபாயமும் உண்டு. இந்தக் குரலில் தெளிவும், தீர்க்கமும் இக்கவிதைகளில் கனத்தை பல நாள் உலவச் செய்யும்.
இந்தத் தொகுப்பில் “தையல் என்பது காரணப் பெயர்” , “காதல் எனும் யுடோப்பியா” , “இன்னபிற” என்று மூன்று பிரிவுகளாக கவிதைகளை அடக்கியுள்ளார். குறிப்பாக இந்தத் தலைப்புகளில் அமைந்த எந்தக் கவிதையும் தொகுப்பில் இல்லாதது இதன் சிறப்பம்சம். உண்மையில் பார்த்தால் இவரது கவிதைகள் ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான கவிதைகளுக்கு தலைப்பில்லை. நூலின் தலைப்பு இக்கவிதைகளின் ஒட்டு மொத்தப் போக்கை சித்தரிக்கின்றது. போலவே ஒவ்வொரு பிரிவில் அடங்கியிருக்கும் கவிதையின் உள்ளடக்கம் சார்ந்து அதன் தலைப்பு அமைந்துள்ளது.
“தையல் என்பது காரணப் பெயர்” என்பது ஒரு கவிதையின் இறுதிவரி. அது பெண் நோவு சார்ந்த கவிதை. ஈஸ்ட்ரோஜன் என்ற வார்த்தை இன்னொரு கவிதையில் வருகிறது அதுவும் கிட்டத்தட்ட பெண் நோவினை குறிக்கும் கவிதையே. தையல் என்பது காரணப்பெயர் பிரிவில் இருக்கும் அனைத்து கவிதைகளுமே சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் துயரங்களைப் பேசுபவை. அதில் இல்லற துயரங்கள், ஆண் பெண் உறவில் நிகழும் சிக்கல்கள், சமூகம் தரும் அழுத்தங்கள் ஆகிய எல்லாமே அடங்கியிருக்கின்றன.
அடுத்த தலைப்பு மிகவும் கவித்துவமான “காதல் எனும் யுடோப்பியா”, “யுடோப்பியா” என்பதன் பொருளைத் தேடினால் “an imagined place or state of things in which everything is perfect.” ஜான்ஸி ராணி எந்தப் பொருளில் இந்தத் தலைப்பை தேர்தெடுத்தார் என்பதை அவரிடம்தான் கேட்டறிய வேண்டும் .அதன் ஒரு பொருளான “காதல் எனும் கனவுலகம்” என்ற பொருளே இனிமையாக ஒலிக்கிறது. இந்தப் பிரிவில் இருப்பவை எல்லாமே காதல் கவிதைகள்.
“இன்னபிற”_ இந்த இரண்டு பிரிவிலும் அடங்காத கவிதைகள் என்று சொல்லலாம்.
இந்த மூன்று பிரிவுகளில் அடங்காதது முதல் கவிதை .”யானை வேண்டுமென்று அழுத பிள்ளைக்கு பானை வயிற்றோடும் யானை முகத்தோடும் நான் செய்து கொடுத்த பொம்மையை முழு முதற்கடவுள் என்றீர் நீங்கள்” என்று எழுதிய இடத்திலேயே ‘இவர் கவனிக்கத் தகுந்த கவிஞர்’ என்ற இடத்திற்கு வந்து நிற்கிறார் ஜான்ஸி ராணி.
புராண கதைகளின் சுவடுகள் மற்றும் பாதிப்புகள் பல கவிதைகளில் வருகிறது. புராண கதை மாந்தர் இவர் கவிதையுள் தாய்மை, கருணை, பெண்ணியக் கருத்து, இன்னபிறவென்ற பல்வேறு உணர்வுத்தளங்களை மீட்டெடுக்கின்றனர். கடந்த பத்தியில் சொல்லப்பட்ட ‘முழுமுதற் கடவுள் கவிதை’ இன்னொரு விதத்தில் புராண கதை வடிவானது, பார்வதி தான் குளிக்கும் மஞ்சளில் செய்த பொம்மையே கணபதி. அவர் தலையை சிவன் கொய்ய, பின்னர் யானைத்தலையைப் பொருத்தி உயிர் ஊட்டினார்கள் என்ற கதைக்கு மிக அருகில் பொருந்திப் போகிறது. கூடவே தன் குழந்தைக்காக எதையும் செய்ய விழையும் தாய்மனம் மிளிரும் கவிதை என்றே சொல்ல வேண்டும். ஆண்டாள் பற்றி ஒரு கவிதையுண்டு. அந்த கவிதையின் இரண்டாம் வரியடையும் போதே அது ஆண்டாளை சுட்டும் கவிதை என்பது புரிந்து விடும், ஆண்டாளுக்கு கவிதை எழுதி அதில் பெண்ணிய தொனியை திணித்திருக்கிறார். தற்கால ஆண்டாள்களுக்கு தேவைப்படும் அறிவுரை அந்தக் கவிதை. காதல் கவிதைகளில் ஒன்றில் சந்திரமதியின் தாலி என்ற படிமம் வருகிறது. விஸ்வரூபம் என்று தலைப்பிட்ட கவிதையில் வாமனன் உலகளந்த சித்திரம் வருகிறது. அந்தக் கவிதையில் காதலுற்று “உடலளந்து உயிரளந்து மூன்றாம் அடிக்கு எதையளக்க என்று என்னிடம் கேட்கிறது உன் காதல்” என்று பகிர்கின்றார். தொகுப்பின் ஆகச் சிறந்த கவிதையொன்றாக பின்வரும் கவிதையைச் சொல்வேன், இதுவும் தொன்ம கதையின் நவீன கவிதையின் சாயலைக் கொண்டது.
ஒருபுறம்
தேவர்கள் போல் வேடமிட்ட அசுரர்கள்
மறுபுறம்
அசுரர்கள் என அசுரர்கள்
மலையென மத்து அவளே
பாம்பாய் நீளும் உங்கள் நாவுகள்
கடையக் கடைய
பாற்கடலில்
பொங்கி வந்ததெல்லாம்
வெறும் ஆலகாலம்
ஆண்டாண்டு காலமாய் அதை
விழுங்கி நிற்கும்
அவள் பெயர் நீலகண்டி.
இதில் நீலமுண்டவளும் அவளே, பாற்கடலைக் கடையும் மத்தும் அவளே, மேலும் அவள் வாழ்வில் தேவர்களுக்கு இடமில்லை, தேவ வேடமிட்ட அசுரர்களும், அசுரர்களும் சூழ்ந்தவளுக்கு கிடைப்பதெல்லாம் ஆலகாலம் ..வெறும் ஆலகாலம். அரசுர்களை விடவா ஆலகாலம் அவளை பாதித்து விடமுடியும்?
சிறு குழந்தை மீதான பாலியல் சித்திரவதையையும், அதன் பின்விளைவுகளைப் பற்றியும் இவ்வளவு அதிர்வூட்டும் கவிதைப் பதிவை வேறெந்த கவிதைகளிலும் இதுவரை நான் பார்க்கவில்லை. மழலை மாறாத குழந்தை என்று தொடங்குகிறது கவிதை. பள்ளிக்குச் செல்ல அடம் பிடிக்கும் குழந்தையை வழக்கம் போல அம்மா அடி வைத்து அனுப்பப் பார்க்கிறாள், தலைவலி, வயிறு வலி என்று என்னென்னவோ காரணங்களை சொல்லும் குழந்தை இறுதியாக “சுஸ்ஸு போனா வலிக்குதும்மா” என்ற வரியை வாசிக்கும் போது எழும் அதிர்ச்சியை வார்த்தைகளால் வடிப்பது கடினம். சொந்த அண்ணன் மடியிலும் அமர மிரள்கிறாள் அந்தக் குழந்தை என்று பதிவு செய்து விட்டு, அந்த கவிதை இவ்வாறு முடிகிறது
“ருசி கண்ட பூனைகளுக்கு மத்தியில்தான்
வாழ வேண்டியதாகிறது
சூடு கண்ட பூனைகளும்”
இதே வகையைச் சார்ந்த இன்னொரு கவிதை “ஒரு OCD யின் முன் வரலாறு” என்று தலைப்பிட்ட கவிதை. OCD என்பது மனவள துறைசார் நோய்மையைக் குறிக்கும். இந்த நோய்மை சார்ந்த விபரங்களை வாசித்துவிட்டு இந்தக் கவிதையை வாசிக்கும் போது ஏற்படும் அதிர்விற்கு அளவேயில்லை. பெண் குழந்தைகள் பொக்கிஷங்கள். ஆனால் அவர்களின் பாதுகாப்பை சமூகத்தில் அனைவரும் உறுதி செய்ய வேண்டும். இதுவரை பலவகையாக விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் இதற்கான தீர்வு எப்படியிருக்க வேண்டுமென்பதை நோக்கி நாம் விரைவில் நகர வேண்டும்.
பெண் நோவு, வாதை சொல்லும் பல கவிதைகள் இந்தத் தொகுப்பிலுண்டு. மாதவிடாய் பிரச்சனைகள், இணக்கமற்ற கலவி, கருக்கலைப்பு, குழந்தை பிறப்பு அறுவை சிகிச்சை, கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை, நாற்பதுகளின் நடுவில் நிகழும் பருவ மாற்றங்கள், அதிகப்படியான உதிரப்போக்கினால் அவதியுரும் நோவுகள், முதிரிளம் பிராயத்துக்குரிய பெண்ணின் மனநல பிரச்சனைகள், அத்தருணங்களில் அடிக்கடி மாறும் குணம் அவை தரும் பின்விளைவுகள் என்ற மிக நீண்ட பட்டியலில் அவரது பல கவிதைகள் உண்டு. இவ்வாறான நோவுகள், உடல் வாதைகள் எதையுமே புரிந்து கொள்ள இயலாத இணையர்களை கேவலோடு கேள்வி கேட்கும் இறைஞ்சும் குரலும் இந்தப் பட்டியலில் இறுதியில் சேர்ந்து கொள்கிறது. “தையல் என்பது காரணப் பெயர்” என்று முடியும் கவிதையும் அவற்றிலொன்று.
முதல் பிரிவில் பல கவிதைகள் பெண்ணியத்தை பேசும் கவிதைகளாக இருக்கின்றன. எவ்வளவு சண்டையிட்டாலும் பெற்ற பிள்ளைகளை ஆயுதமாக முன்னிருத்தும்போது கொல்லத் துடிக்கும் எல்லா ஆயுதங்களை அதனதன் இடத்தில் வைத்து விட்டு முள்கீரிடமானாலும் அதனை அணிந்து இணையரின் அருகே அமர வேண்டிய இயலாமையை பதிவு செய்கிறார். பெரும்பாலான இந்தப் பெண்களில் வாழ்நிலை இவ்வாறே இருக்கிறது என்பதை நாம் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. எத்தனை முறை அழுத்தி தேய்த்தாலும் மங்கியோ மறைந்தோ போவதில்லை என் உடலில் ஆருப மையால் எழுதப்பட்டிக்கும் “owned by you” என்று ஒளிரும் உன் பெயர் என்று ஆதங்கத்தை பகிர்கிறது இன்னொரு கவிதை. இந்த வகை கவிதையில் சண்டையின் பொருட்டு வெளியே கிளம்பிவிடும் சுதந்திரம் தனக்கில்லை என்று தொடங்கும் கவிதை, எல்லா தவிப்புகளையும் அரட்டல்களையும் தனது வீட்டிலுள்ளே ஓடும் அனலாற்றில்தான் கரைக்க வேண்டுமென்றும், பின்னர் நள்ளிரவில் சரணடையும் தருணத்தில் குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் மறந்துவிடும் நோய்மை இருந்தால் நன்றாக இருக்குமென்றும் பதிவு செய்கிறது மற்றொரு கவிதை. இந்த வகையில் பின்வரும் கவிதை இந்தத் தொகுப்பின் மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது
ஓர் ஒப்பனையை
கலைவது போல் சுலபமில்லை
தோலின் ஏழு அடுக்குகள் தாண்டி
மிச்சமிருக்கக்கூடும்
ரத்தநாளங்களில்
மீதமின்னும்
எலும்பு மஜ்ஜைகளில்
ஆண்டாண்டுகளாய் கடத்திய வெட்கங்கள்
ப்ரியனே!
எனது மதுப் பொத்தல்கள் இறுகிகிடப்பவை
பைய வெட்கக்குமிழ் திறந்து
நுரைத்தடங்கும் முன்
திரிசங்கு சொர்க்கங்கள்
கடந்திருக்கிறாய் நீ
அலையடிக்கும் கடல் நடுவே
ஒற்றைக் கலமென அலைக்கழியும்
என் மதுப் போத்தல்
தீராத வலியுணர்த்தும் கவிதை என்று மேல் சொன்ன கவிதையைச் சொல்வேன். தனது மெல்லிய குரலில் தன் உரிமையைக் கூட கேட்கத் தயங்கும் பெரும்பாலான இந்தியப் பெண்களின் மனநிலையை சொல்கிறது.
கவித்துவ படிமங்கள் பல சிறப்பாக அமையப்பட்ட கவிதைகள் நிறைந்தது ஜான்ஸி ராணியின் இத்தொகுப்பு. ரப்பர் மரத்தில் கீறி ரப்பரை வடிக்கும் கலயத்தை பெண் வாழ்வோடு ஒப்பிட்ட ஒரு கவிதையுண்டு. ரப்பர் மரமாகிறாள் பெண், வார்த்தைகளால் கிழிக்கிறான் துணை ,அதற்கு அவனுக்கு கிடைத்த உரிமை அவன் கட்டிய தாலி. பெண்ணோ சொற்களை கலயத்துள் சேர்க்கிறாள். அதிலிருந்து அவள் தனது கவிதைகளைப் படைக்கிறாள். இது பெண்ணியக் கவிதையாக உருப்பெறுவதே கவிதையுள் செய்திருக்கும் ரசவாதம். அவ்வாறே மற்றொரு கவிதையில் சொல்கிறார், குற்றசாட்டுகளற்ற காதல் கலவியைப் போற்றி ஒருபக்கம் நீளும் கவிதையொன்றின் முடிவு பின்வருமாறு இருக்கிறது.
“இவ்விரவுக் கடலை நீந்திப் போகிறேன்
என் உடலே படகாய்
நம் காதல் அதன் துடுப்பாய்.”
மேலும் இன்னொரு கவிதையில் சொல்கிறார் “சுருணைத்துணியென உயிர்” இது அபாரமான உவமை. சுருணைத்துணி அடுக்களையில் அடுப்பிலிருந்து சூடான பாத்திரத்தை இறக்கப் பயன்படும் துணி. பசியைத் தணிக்க அமுதம் அதை சமைத்து முடித்த பின்னர் எடுத்து பரிமாறவோ அல்லது அதே அடுப்பில் வேறெதும் சமைக்க, ஏற்கனவே இருக்கும் பாத்திரத்தை இறக்கி வைக்க உதவும் இந்த துணி பெரும்பாலும் கிழிந்த நிலையில் இருக்கும். அழுக்கு அண்டி பயன்பாட்டில் பின் விட்டெறியப்பட்டிருக்கும். என்னதான் அந்த துணியில்லாமல் நம்மால் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்க முடியாதென்றாலும் அதனை நாம் துவைத்து உலர்த்தி உரிய அங்கீகாரத்தோடு, பீரோவில் வாசனையூட்டிகளிடையே வைக்கப் போவதில்லை. அதுபோல அவமதிக்கப்பட்ட உயிர் என்பது போன்ற தொனியில் ஒலிக்கும் கவிதைக்கு இந்த உவமை அருமையாக பொருந்திப் போகிறது.
இரண்டாம் பிரிவான “காதல் எனும் யுடோப்பியா” ரோமாண்டிச அல்லது காதல் கவிதைகள் கொண்டது. முதல் பிரிவான “தையல் என்பது காரணப் பெயர்” பிரிவுக்கு எதிர்மறையான காதலும், சுகந்தமும், பெருவாழ்வின் மகிழ்ச்சியும் பதிவாகிறது இந்தப் பிரிவில். பல கவிதைகள் அதீத காதலைப் பேசுகின்றன. அதில் ஒன்று ,”எப்போதும் ஏகாந்தமாய இருக்கும் வனதேவதை அடர் வனத்தில் நுழைந்த முதல் சூரிய கிரணத்தில் இறங்கி இறுதியில் என் வனம் வசமில்லை ஏன் நுழைந்தாய் உன் புல்லாங்குழலுடன்” என்று இனிமையாக கேட்கிறது. “தனிமையின் குடுவையின் ஊற்றி வைத்த நீ நொதித்து என் ப்ரிய கள்ளாகிறாய் “என்று மணக்கிறது. “இவரது கிறங்கிய கண்களின் நட்சத்திர பரல்களும், தேகமெங்கும் சூரிய, சந்திர கிரணங்களும்” என்ற ஒரு காதல் பிரபஞ்சத்தயே படைக்கிறது மற்றொரு கவிதை. இந்தப் பிரிவின் இறுதியில் இருக்கும் கவிதை சிறந்த கவிதையாக மிளிர்கிறது.
ஒரு நீண்ட அரவெமென
மெல்ல ஊரும்
உந்தன் ஸ்பரிசம்
வழிநெடுக என்
வெட்கங்களை புசித்தபடி
அரூபவெளியின் ஆப்பிள் கனிகளை
என் பசிக்கு
பிட்டுபிட்டு அளித்தபடி
படிப்படியாய்
மேலேறி மேலேறி
பரமனின் பாம்பென குடைவிரித்து
பாற்கடல் வெண் அமுதமூட்டி
ஒரு பெரும் தீண்டலின்
போதையின் பித்தம் தலைக்கேறி
நான் பிதற்றுகையில்
சில நொடி சொர்க்கவாசல் திறந்துமூட
இவ்விரவின் வைகுண்டப் ப்ராப்த்தி…
மற்றொருமொரு கவிதையில் இணையின் “ஒன்றிரண்டு நரைபூத்த மார்பினை வெண் அல்லிகள் பூத்த இரவு தடாகமென்கிறார்”. நரைபூத்த மார்புக்குரியவர் நாற்பதைக் கடந்தவராக இருக்கவேண்டும், அந்தப் பருவத்தில் காதலோ காமமோ சலிப்பாக மாறும் வாய்ப்புகள் மிக அதிகம், குடும்ப அமைப்புக்குள் நாற்பதைக் கடந்த ஆணின் இணை கிட்டதட்ட நாற்பதை நெருங்குபவளாக இருப்பாள், வீட்டில் குழந்தைகள் பதின்பருவத்திலிருக்கும் வாய்ப்புகளுமுண்டு. இப்படிப்பட்ட சூழலில் கவிதையின் “இரவுத் தடாகம்” என்ற வார்த்தைப் பிரயோகம் காதலை காமத்தை அத்தனை லயித்து சொல்கிறது.
இன்னபிற என்ற பிரிவில் குழந்தைமை மாறாத பால்யத்தின் மந்திரஜாலங்கள் கொண்ட ஓரிரு கவிதைகள் உண்டு. சம கால சமூகப் பிரச்சனையான நீட் தேர்வின் பொருட்டு உயிர் இழந்த அனிதாவிற்கு ஒரு கவிதையும் பதிவாகியிருக்கிறது. வேலைக்குப் போகும் ஒரு பெண் ஞாயிறை எப்படி கொண்டாடுவாள் திங்களை எப்படி வெறுப்பாள் என்பதை பதிவு செய்யும் கவிதையும் உண்டு. கடிகாரத்தை உடைத்தெறிந்தால் காலம் அப்படியே நின்று போகும் என்று வெள்ளந்தி மனம் கொண்ட கவிதையும் உண்டு. சில கவிதைகள் மிகச் சாதாரணமாக தோன்றினாலும் துறைசார் கவிதைகளில் “ஓர் OCD முன் வரலாறு” என்று தலைப்பிட்ட கவிதையையும், “செலக்டிவ் அம்னீஷியா” வேண்டி இறைஞ்சும் தலைவியைப் பற்றிய கவிதையும், “ஈஸ்ட்ரோஜனின் ஏற்ற இறக்கங்கள்” என்று தொடங்கும் கவிதையையும் இவர் தொகுப்புக்கு பிரத்யேகமான நிறத்தை சேர்க்கின்றன.
முழுதொகுப்பிலும் பல கவிதைகளில் வடிவம் குழப்பமிருக்கிறது, சில வரிகளில் ஒற்றைச் சொல்லை அடுத்த வரிக்கு எதற்கு கொண்டு வந்திருக்கின்றார் என்ற கேள்வியுண்டு எனக்கு. அங்கே ஒரு இடைவெளியை நினைத்து அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால் அந்த ஒற்றை வார்த்தை முதல் வரியோடே இருந்தால் கவிதை இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். உதாரணத்துக்கு “யாசித்து பழக்கமற்றவள்” என்று தொடங்கும் கவிதையில் இரண்டாம் வரியில் “கேட்கிறேன்” என்று வருகிறது. நான்காம் வரி “முட்டுகிறது” என்கிறது ஆறாம் வரி “நாளும்” என்று சொல்கிறது. இந்த தனித்தனி வார்த்தைகளுக்கு அதன் முதல் வரியின்றி எந்த அர்த்தமும் இல்லை கவிதையென்னும் நுண்வடிவக் கலையில் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வரி அர்த்தம் தரவேண்டும். இதைப் போலவே இன்னொரு கவிதையில் “இசைத்து மகிழ்கிறேன் என்” / “யாழை” என்று இரண்டு வரிகளை விட “இசைத்து மகிழ்கிறேன் என் யாழை” என்று ஒற்றை வரி இன்னும் வலுவானதாக இருக்கும். தொகுப்பில் மற்றொரு இடைவெளியாக நான் பார்ப்பது துறைசார் வார்த்தைகள்,வாக்கியங்கள், சொற்றொடர் சுருக்கங்கள், சில வசீகரமான ஆங்கில வார்த்தைகளுக்கு பொருள் அல்லது விளக்கம் அதன் இலக்கியத் தொடர்புகளை அருங்சொற்பொருள் பட்டியலை இணைத்திருக்கிலாம் அல்லது கவிதையடியிலேயே அடிக்குறிப்பாக தந்திருக்கலாம். தமிழ் இலக்கியச் சூழல் இயங்கும் வேகத்தில் புரியாத வார்த்தையை தேடிப் பார்க்க நொடி நேரம் கூட செலவளிக்க யாரும் தயாராக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர்கள் எளிதாக இந்தக் வார்த்தைகளின் அழுத்தத்தைக் கடந்து போக வாய்ப்புண்டு. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் OCD என்பதன் பொருள் புரிந்தவர்களுக்கு அந்தக் கவிதை கொடுக்கும் அதிர்ச்சி அதன் பொருள் தெரியாதவர்களுக்குத் தராது.
இவர் கவிதைகளில் முதலில் தொனிப்பது சமகால கவிதைகளில் அல்லது எழுத்தாளர்களிடம் தற்சமயம் இருக்கும் மனநிலையில் புழக்கத்தில் ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்தி எழுதுவது என்பதே. ஆனால் ஒரு மொழியை அழிக்க அந்த மொழியின் வார்த்தைகளை மெல்ல மெல்ல அழித்தாலே போதும். மொழியழிந்தால் அதன் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் என்று எல்லாமே அழிய அனேக வாய்ப்புகள் இருக்கின்றன. இவரது பல கவிதைகளில் நேரடியாக ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார். ஈஸ்ட்ரோஜன், யுடோப்பியா, வெடிர்கோ, செலக்டீவ் அம்னீசியா போல, ஆங்கிலச் சொற்களை தமிழில் எழுதியும் பயன்படுத்தியிருக்கிறார். அதே சமயம் வழக்கொழிந்த தமிழ்சொற்களான பதங்கமாதல், பதங்கம் (காற்றில் கரைவது) போன்ற சொற்களையும் பயன்படுத்தியிருக்கிறார். துறைசார் சொற்களுக்கு இணையான கலைச்சொல்லை பயன்படுத்தியிருந்தால் அது மொழிக்கு இன்னும் வலுசேர்க்குமென்பது எனது எண்ணம். ஆகவே என்னுடைய ஆவல் இவர் முழுமையாக தமிழ் சொற்களை பயன்படுத்தி கவிதைகள் எழுத வேண்டும் என்பதே ஆகும்.
ஒட்டுமொத்தமாக இந்தத் தொகுப்பினை வாசிக்கும் போது புலப்படும் விஷயங்கள்.. பல வாசிக்க எளிமையான கவிதைகளை ஜான்ஸி ராணி எழுதியிருக்கிறார். அவை நேரடியாக மொழிபவை. வசீகரிக்கும் தலைப்பையும் சற்றே மனத்தடுமாற்றம் கொள்ளும் அட்டையையும் கொண்ட இந்தத் தொகுப்பில் பல்வேறு கவிதைகள் இருந்தாலும் ஆண் பெண் உறுப்புகளைக் குறிக்கும் எந்தச் சொல்லுமில்லை. முகம் சுழிக்க வைக்கும் எந்தக் கவிதையுமில்லை. ஒட்டுமொத்தமாய் நவீன பெண்கவிதைக்கு புதிய முகமொன்றை வரைந்து விட்டு காண்டா மணியும், ஓங்கி ஒலிக்கும் கொட்டு முரசுகளும் இயங்கும் களத்தில் ஒற்றைப் புல்லாங்குழலை ஊதிக் கொண்டிருக்கிறது ஜான்ஸி ராணியின் கவிதைகள். முதல் தொகுப்பில் சொல்லியிருக்கும் கவிதைகளைத் தாண்டி தனித்துவமாய் “ஜான்ஸி ராணியால் மட்டுமே இந்தக் கவிதைகளை எழுத முடியும்” என்றன்ற தீர்க்கமான கவிதைகளை எழுத அவருக்கு எனது வாழ்த்துகள்.