
இன்னும் தொடங்கிடாத காலத்தின் அன்புகள்
1. சிறிய புண்னொன்றின் வலி அதன் காரணத்தையேத் தேடிக்கொண்டிருக்கிறது.
சாய்ந்து கொள்வதற்கெனயிருந்த மனமே நெருக்கத்தை உணரவைத்தது.
பிறகு
மிக மோசமான ஒரு சோகத்தில் கைவிடப்பட்டிருக்கிற தது.
சிறிய காரணமொன்றின் வலி அதன் வாழ்வையேத் தேடிக்கொண்டிருக்கிறது.
எல்லா நெருக்கடிகளிலும் கூடவேயிருந்த உறவே பிரியத்தை முழுமையாக்கியது.
பிறகு
தன் முன் நீண்டுகிடந்த வெளியில் ஏமாற்றப்பட்டிருக்கிற தது.
சிறிய வாழ்வொன்றின் வலி அதன் மரணத்தையேத் தேடிக்கொண்டிருக்கிறது
ஒவ்வொரு பருவத்திற்குள்ளிருந்தத் தாகமே அக்காலத்தைக் கடக்க வைத்தது
பிறகு
தன் முடிவை எல்லோருக்காகவும் ஒரு முறை செய்து காண்பிக்கிற தது.
2. கனவு ஒரு தொடக்கத்தில் உலகை மிக நெருக்கமாகக் காண்பிக்கிறது
எல்லோரும் அன்பென்பதில் மிகப்பாதியாக யிருந்தோம்.
முழுவதும் நிறைந்து விட்ட இக்காலத்தை முதலில் மாற்றவேண்டும்.
ஒவ்வொன்றிற்கும் புதிய தினத்தைப் பரிசளிக்க வேண்டும்.
மிக விசாலமான அத்தினத்தில் அவை விரும்பியபடி
வாழ்ந்து கொள்கிறது
இறந்து கொள்கிறது
பிறந்து கொள்கிறது.
கனவு ஒரு முடிவில் உலகை மிக ஆபத்தானதாகக் காண்பிக்கிறது,
அதன் பெரும் அமைதியை இச்சிறு அன்பின் ஒலி தான் கீறி கீறி
முழுவதுமாக உடைக்கிறது.
3. நமது சந்திப்பை திட்டமிட்டுக்கொண்டோம்
ஒரு புதிய அழுகைக்கென.
நம் உறவின் பூரணமில்லாதவைகளை
ஒவ்வொன்றாகப் பெயர்த்து நிரப்பினோம்.
இனி நம் சொற்கள் வெறும் அதிகப்படியானவை.
இவ்வளவு உயரேயிருக்கும் நட்சத்திரங்கள்
எவற்றைப் பிரார்த்திக்கின்றன.
நமது சந்திப்பை முழுவதும் கைவிட்டிருந்தோம்
ஒரு கடைசி அளப்பரிய சந்தோசத்திற்கென.
மேலுமவற்றை மிகத்தனிமையாகக் கண்டடைவதற்கென.
எல்லா வழிகளிலும் ஒரு பாடல் தனித்து விடப்பட்டிருக்கிறது.
4. நீ கைவிடப்பட்டிருக்கிறாய்
உலகின் தனிமையில் எல்லோருக்கும் ஒரே மொழிதான்.
நீ மோசமாக காயமடைந்திருக்கிறாய்
உலகின் நிச்சயமின்மைகளில் எல்லோருக்கும் ஒரே நோய்மைதான்.
நீ ஆறுதலடைந்திருக்கிறாய்
உலகின் சாமாதானத்தில் எல்லோருக்கும் ஒரே ஆசிர்வாதம்தான்.
நீ வெறுக்கப்பட்டிருக்கிறாய்
உலகின் காரணங்களில் எல்லோருக்கும் ஒரே கண்ணீர்தான்.
நீ காதலிக்கப்பட்டிருக்கிறாய்
உலகின் பிரியங்களில் எல்லோருக்கும் ஒரே முத்தம்தான்.
நீ ஏமாற்றப்பட்டிருக்கிறாய்
உலகின் கணக்குகளில் எல்லோருக்கும் ஒரே சூத்திரம்தான்.
நீ புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறாய்
உலகின் இரக்கங்களில் எல்லோருக்கும் ஒரே நம்பிக்கைதான்
நீ இறந்து போயிருக்கிறாய்
உலகின் புதிர்களில் எல்லோருக்கும் ஒரே முடிவுதான்.
நீ புராதனமாகிவிட்டிருக்கிறாய்
உலகின் ஞாபகங்களில் எல்லோருக்கும் ஒரே தீர்க்கத்தரிசனம் தான்.
5. கடைசியில் தன்னை முற்றிலும் களைந்து கொள்கிறது
அதன் நீண்ட வெறுமை பழகிப் போன மகிழ்ச்சியின்மையையே
திரும்பத்திரும்ப கொண்டுவந்து சேர்க்கிறது.
தனக்கான துணையொன்றைத் தேடிடுமது
தன் வாழ்வை அங்கு திருப்பிக்கொள்கிறது.
அதன் புதியதிசை மிகப்பிரம்மாண்டமானதாக யிருக்கிறது.
திரும்பும் இடத்தில் திரும்பிக்கொள்ளும் அதனன்பு மிக லாவகமானது.
6. மரணிக்கும் போது எது எல்லாவற்றையும் தனிமைப்படுத்துகிறதோ
அதுவே அவ்வாழ்வின் பேரொளி.
பெறுவதற்கெனயிருந்த சில அவமதிப்புகளை தோற்கடித்திருந்தன அவை
அனுமதித்திருந்த அளவுகளை விடவும் அவை திருப்தி கொண்டுவிட்டன.
புறக்கணித்திருந்த ஒரு பாடலைப் பாடிய படியே,
ஒரு இடைவெளியில் கைவிடப்பட்டிருந்த உறவொன்றைப் பிடித்த படியே,
நேசங்களைத் துவங்கும் மனதொன்றை அது
தனக்கென உருவாக்கிக்கொண்டது.
அதன் எல்லாவற்றிலுமிருக்கும் மீதியைத்தான்
எப்போதும் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.