
“நல்ல இசை, ருசிமிகு உணவு மற்றும் எழில்மிகு சூழல் நிம்மதியாக மெய்மறந்து மது அருந்த வேண்டும். அப்படி ஒரு இடம் அருகில் ஏதேனும் உள்ளதா…?” என டாட்டூவை உடலில் உடையாக உடுத்திய வடநாட்டு வாலிபன் ஆங்கிலத்தில் கேட்டான். பிரஞ்ஞையற்று முழித்துக் கொண்டிருந்தாள் ஜானகி. பொறுமையில்லாத வாலிபன் அடுத்த நபரிடம் கேட்க விரைந்தான். நாளைக்கு சம்பள நாள் அதற்கான திட்டமிடல், இருநாட்களில் வங்கியிருப்பு காலியாகி விடும். பொங்கலுக்கு புத்தகக் கண்காட்சி துவங்குகிறது. கணவன் ஒரு தீவிர இலக்கிய வாசகன். அதன் காரணமாகவே முறையான சம்பாத்தியம் தள்ளிப்போகிறது. முற்றிலும் உருப்படாமல் எல்லாம் போகவில்லை. அவன் அவனாகவே இருப்பதனாலேயே இன்பமயமான காதலை தந்தாள் ஜானகி. மாத செலவு முழுவதும் அவள் சம்பாத்தியத்தில்தான் நடந்தது. அதனால் அவனுக்கு எந்த குற்ற உணர்வோ, ஜானகிக்கு நெருடலோ கிடையாது.
புத்தக கண்காட்சிக்கு சென்று தங்களின் இந்த வருட விருப்ப பட்டியலில் உள்ள நூல்களை வாங்க வேண்டும். பட்டியலை முழுவதுமாக வாங்க, வருகிற வருமானத்தில் முடியாது. விருப்பபட்டியலில் முன்னனியிலுள்ள நூல்களை முதலில் வாங்கலாம். மிச்சத்தை அடுத்த வருட பட்டியலில் முதல் வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். சென்ற ஆண்டு மிஞ்சியதுதான் இந்த வருட பட்டியலில் முதலிடம். மனதின் அலைகழிப்பு நீண்டது. போன மாதம் பிரியாவிடம் வாங்கிய மூவாயிரத்தை திருப்பி தர வேண்டும்.
கணவனுடைய இலக்கிய பயணத்திற்காகவே காசை கடன் வாங்கி அவனுக்கு அளித்திருந்தாள். புத்தக கண்காட்சி நிறைவுநாள் அன்று தான் ஊர் திரும்புகிறான்.
மாலை நேர கடல் அலையின் சத்தம், பனிக்காலம் என்பதால் மாலையிலே சிலிர்க்க செய்யும் குளிர்காற்று வீசியும் மந்தமான நிலைக்கு இட்டு சென்றிருந்தது. இப்போதெல்லாம் கடலின் பிரமாண்டம் கூட மனதை சம நிலைப்படுத்த முயன்று தோல்வி காண்கிறது. கொஞ்சம் நேரம்கூட அவன் தன்னிடம் பேசவில்லை என மனதிற்குள் கோபத்துடன் திட்டினாள். கோபம் ஒரு நண்டு மணற்மேல் புகுந்து வெளிவருவதற்குள் நீர்த்து போயிருந்தது. இயற்கையின் ஆறுதல் கிடைக்காத நிலையில்தான் கடற்கரை சாலையில் நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.
பதிமூன்றாம் தேதி சம்பளம் கிரடிட் ஆகிவிட்டதாக வங்கி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது. தனியார் அறக்கட்டளையில் பணிபுரிவதால் சம்பளம் சரியான தேதியில் வருவதில்லை. வரும் பதினைந்தாயிரத்தில் வாடகை, மின்கட்டணம், தண்ணிக்கு தனியாக, பாலுக்கு, இந்த மாதம் வழக்கமாக வாங்கும் சமையல் எண்ணெய், சக்கரை, உப்பு உட்பட காலியாயிருந்தது. கடந்த மாதம் வாங்காமல் விட்டிருந்ததால் இந்த மாதம் டப்பாக்களில் மளிகை தரைதட்டியிருந்தது.
சம்பளம் வந்த சில மணி நேரங்களிலேயே மூன்று மாதங்களுக்கு முன் வாங்கியிருந்த ஸ்மார்ட் போனிர்க்கான இஎம்ஐ கட்டணம் 1605 எடுக்கப்பட்ட குறுந்தகவல் வந்திருந்தது. மாலை வேளையில் வாடகையை முதலில் செலுத்திவிட்டு மற்ற தட்டுமுட்டு சாமான்களையும் வாங்கி, கடன்களையும் செலுத்திய பின்னர் தெருவோரம் விற்றுக் கொண்டிருந்த வயதான பாட்டியிடம் ஒரு இளநீர் வாங்கி குடித்தாள். பனிக்காலத்திலும் உடல் சூடேறிப் போயிருந்தது.
ஒரு வழியாக வார இறுதி வந்தது. இரவு உணவு உண்பதற்கு முன் தன் வீட்டை சுற்றி வரும் ஒரு பிரசவித்த பூனைக்கு உணவு வைப்பது வழக்கம். சமீப காலமாக பிரசவித்து வயிறு உப்பி பெருத்து காணப்பட்டது. அதனாலயே கொஞ்சம் அதிகமாக சாப்பிட உணவு வைப்பாள். பூனையும் சரியாக அந்த நேரத்தில் வாசலண்டை எட்டிவிடும். மற்ற நேரங்களில் அதனை அவள் ஒருநாள் கூட கண்டதில்லை. கடந்த இரு தினங்களாக எங்கு தேடியும் பூனையைக் காணவில்லை. சோற்றை வைக்க கதவை திறந்தாள். பூனையை காணவில்லை. சுற்றிமுற்றி பார்த்தாள். எங்கும் தென்படவில்லை. “மியாவ்” என்று கத்திவிட்டு புன்னகைத்தாள், வரவில்லை. சோற்றைப் பார்த்தாள். உருட்டி ஒரு பெரிய உருண்டையாக தினமும் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு கதவை பூட்டிக் கொண்டாள் உணவிற்குப்பின் ஒருமுறை கதவை திறந்து சோறு வைத்த இடத்தைப் பார்த்தாள். அப்படியே இருந்தது. கதவை மூடிக்கொண்டு படுத்து தூங்கினாள். மறுநாள் ஞாயிறு என்பதால் கொஞ்சம் அசந்து தூங்கி விட்டாள். கணவன் வருவதால் அதற்கு முன் சமையலை முடித்து அவன் வந்த உடன் சேர்ந்து சாப்பிட்டு பின் புத்தக கண்காட்சி கிளம்ப வேண்டும். மீன் வாங்கிவிட்டு ரோட்டைக் கடந்து சந்துக்குள் நுழைகையில், சந்தின் முனையில் சிறு பூனைகுஞ்சு கண்கள் மூடிய நிலையில் அசைவற்று கிடந்தது. மெல்ல அருகே சென்று நோக்கினாள். மூன்று நாட்களாக வராமலிருந்த தாய்பூனையின் குழந்தைதான் என யூகிக்க முடிந்தது. சுருண்டு கிடந்தது. வாலில் எந்த அசைவும் இல்லை. திரும்பி நடக்க எத்தனிக்கையில் வலிப்பு வந்ததுபோல் தலையிலிருந்து உடல் வரை பயங்கரமாக அதிர்ந்தது. அப்போதும் கண்கள் திறக்கவில்லை. அதிர்கையில் கண்கள் மூடிய நிலையில் வாய் மட்டும் திறந்திருந்தது. உடல் அதிர்வு நீண்டது. அவளால் அதை சகித்துக் கொள்ள இயலவில்லை. கணவனுக்கு போன் செய்தாள்.
“ஹலோ… டேய் நம்ம சந்துல ஒரு பூனைக்குட்டி பயங்கரமா துடிக்குதுடா.. என்ன ஆச்சுன்னு தெரில. பாவம்டா பயமா இருக்கு..”
“ஹலோ…. சொல்லுடி… ஹலோ.. சரியா கேக்கல.. சிக்னல் இருக்ற இடமா வந்து பேசு..”
பேருந்தில் வந்துக் கொண்டிருத்த இரைச்சலில் அவள் கூறியது சரியாக விழவில்லை.. அலைவரிசையும் சமிக்ஞை இழந்து அழைப்பு துண்டித்து.
வண்டி சிக்னலில் நின்றபோது அவனே அழைத்தான். நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடல் ரிங்க்டோனாக ஒலித்தது. விசயத்தை சொன்னாள். வரும்போதும் அதே நிலையில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தது. பேசிக்கொண்டிருக்கையில் மீண்டும் துடித்தது.
“டேய் மறுபடியும் மறுபடியும் துடிக்குது.. அய்யோ பாவமா இருக்கு.. என்ன பண்றதுன்னே தெரில்ல..!” பதறினாள்.
“ப்ளுகிராஸ் நம்பர் இருக்கா உன்கிட்ட..? சரி இரு. நானே கூகிள் பண்ணிட்டு உடனே அனுப்புறேன்.. நீ உடனே கூப்ட்டு சொல்லு..”
ப்ளுகிராஸ் எண்ணை வாட்சப்பில் அனுப்பினான். அந்த எண்ணிற்கு அழைத்தால் இந்த எண் உபயோகத்தில் இல்லை என வந்தது.
மீண்டும் ஒரு நம்பரை அனுப்பினான்.
அந்த எண்ணிற்கு அழைத்ததில் முழு ரிங் போனது. எடுக்கவில்லை. மீண்டும் மூன்றுமுறை முயற்சித்தாள். அழைப்பு வந்தது அவனிடமிருந்து..
“பேசிட்டியா.. என்ன சொன்னானுவ?”
“எங்க போனே எடுக்க மாட்டேங்குறானுங்க…?”
விடுமுறை நாள் என்பதினால் ப்ளுகிராஸ் போன்ற அத்தியாவசியமான இடங்களில் கூட அலட்சியம் இருப்பதை நினைத்து வருந்தினாள். அவனிடம் பேசிக்கொண்டிருக்கையில் ப்ளுகிராஸ் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது..
“சார்.. இங்க ஒரு பூனைக்குட்டி… ரொம்ப சின்னது.. வலிப்பு வந்தது மாதிரி துடிக்கு.. செத்துருமோன்னு பயமா இருக்கு.. கொஞ்சம் சீக்கிரமா வரீங்களா..?”
“ஸாரி மேடம்.. ஸண்டேனால வண்டி இல்ல… நீங்க கொண்டு வந்தீங்கனா பாக்குறோம்..”
“சார் ப்ளீஸ்.. அது ரொம்ப சின்ன குட்டியா இருக்கு.. “
“வேற வழி இல்ல மேடம்.. பூனைய கொண்டுவாங்க நாங்க பாக்றோம்..”
அழைப்பு துண்டிக்கப்பட்டது..
“நீ இங்க வரதுக்கு எவ்ளோ நேரமாகும்…?”
“ நாப்பது நிமிசத்துல பஸ்டேன்ட் வந்துருவேன்.. நீ கிளம்ப ரெடியாகு..”
“நான் எப்படிடா அத தூக்கிட்டு வருவேன்..? உனக்குத்தான் தெரியும்ல .. நீ வீட்டுக்கு வா”
“வீட்டுக்கு வந்திட்டு கிளம்புனா நேரம்தான் விரயம்.. நீ எப்படியாச்சும் தூக்கிட்டு பஸ் ஸ்டேண்டு வந்திடு.. அங்க இருந்து நம்ம ஆட்டோல போயிடலாம்.. “
என்ன இது தர்ம சங்கடம். விலங்கினங்கள் மேல் பிரியம் என்றாலும் ஒரு இஞ்ச் தள்ளி நின்றுதான் பழகுவாள். இதை தூக்கி கொண்டு எப்படி பஸ் ஸ்டேண்டு வரை செல்வது.. பர்சில் காசு எவ்வளவு உள்ளது எனப் பார்த்தாள். எழுநூறு ருபாய் மிஞ்சியிருந்தது. அயிரை மீனை புளிக்கரைசலில் ஊறவைத்து விட்டு முகத்தை கழுவி கிளம்ப எத்தனித்தாள்.
“இன்னும் அஞ்சு நிமிசத்தில் வந்திடுவேன்” குறுந்தகவல் வந்தது.
ஒரு பிளாஸ்டிக் கூடையை எடுத்துக்கொண்டாள். மெல்ல அதனருகில் சென்று தூக்க எத்தனிக்கையில் மீண்டும் படுபயங்கரமாக துடிதுடித்தது. கடவுளே இந்த பூனைக்கு ஏற்பட்டிருக்கும் விசித்திர வியாதி நின்று விடாதா..! இந்த முறை துடிக்கையில் வாயிலிருந்து நீர் வடிந்தது.
குல்லா வைத்த அப்துல்லா தம்பி நடந்து சென்றுக் கொண்டிருந்தான். அவன்தான் பேருந்து நிலையம் வரைக்கும் கூடையை தூக்கிக்கொண்டு வந்தான். அப்துல்லாவின் பின்னே நடந்து பேருந்து நிலையத்தை அடைத்தாள் ஜானகி. பூனையை அவளிடம் தருகையில் “பூனைக்குட்டியை பத்திரமா பார்த்துகோங்க அக்கா.” என்றான். ஆட்டோவை பிடித்து நின்றுக் கொண்டிருந்தான் கணவன். ஆட்டோகார தம்பி பள்ளிப்படிப்பை முடித்து இளம்பிராயமாக காணப்பட்டான். இருவரும் ஆட்டோவில் ஏறினார்கள்.
“அதுக்கு உடம்புல காத்து படுமே.. துண்டு எதுவும் எடுக்கலையா..”
வேகமாக போக வேண்டும். அப்போது வண்டி குலுங்கும், காற்றின் வேகமும் அதிகமாகும் என முன்கூட்டியே அறிந்து வினவினான். ஜானகி பதற்றத்தில் உறைந்துபோய் காணப்பட்டாள். அருகே இருந்த ரோட்டோர துணிக்கடையில் ஒரு துண்டை வாங்கிவந்து பூனைக்கு போர்த்தினான். வண்டி கிளம்பியது.
“தம்பி கொஞ்சம் சீக்கிரம் போகணும்.. கிண்டி ப்ளுகிராஸ் போக எவ்ளோ நேரம் ஆகும்..”
“முக்கா மணி நேரத்துல போய்டலாம்க்கா.. இன்னைக்கு பெருசா கூட்டம் இருக்காது.. சீக்கிரம் போய்டலாம்..”
“ம்ம்ம்..”
கொந்தளித்து போயிருந்தவளின் கையைப் பிடித்து மெல்ல ஆசுவாசப் படுத்த முனைதான். ஆட்டோ மற்ற வண்டிகளின் நடுவே பாய்ந்துக் கொண்டிருந்தது. அதற்குள் பூனை மறுபடியும் துடிதுடிக்க துவங்கியது, துண்டு விலகியது தலைகீழாக கிடந்தது புடைத்தது. பார்க்க மனம் தாளவில்லை. பூனைகுஞ்சு வெளியே வராமல் இருக்க கூடைபிடியை மட்டும் கையால் பிடித்திருந்தானே தவிர, அந்த பூனையின் வேதனையைக் காணவிரும்பவில்லை. கண்கள் கலங்கி லேசான புன்னகையுடன் அவனைப் பார்த்தாள். “ஏன் இந்த உயிர் இத்தனை துன்பப்படுகிறது? செத்தாவது போய்டாதா..?” என ஒருபுறம் எண்ணினாலும் உள்ளுக்குள் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையும் உதித்தது.
ஆட்டோ தம்பி சாகசம் செய்துக் கொண்டிருந்தான். மீண்டும் பூனையின் துன்பவியல் நிகழ்வு, இந்தமுறை அதிஉக்கிரம். நிமிஷ்ம் அடங்குகையில் இரு கைகளும் பரபரக்க என்று மல்லாந்து படுத்து வாய் பிளந்த நிலையில் காணப்பட்டது. வாயிலிருந்து உமிழ்நீர் வடிந்துக் கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் அடங்கி ஒடுங்கியது. “செத்து விட்டது” என மெளனமாக சொன்னான். புன்னகையிலும் ஒருதுளிர் கண்ணீர் வடிந்தது.
“இப்போ என்ன பண்றது..? போக வேணாம்னு சொல்லிடலாமா..? குப்பை தொட்டியில போட்டுடலாம்..” என்றாள்.
பதில் சொல்லவில்லை.. மௌனம் படர்ந்திருந்தது.. ஆட்டோ கிண்டியை நெருங்கிக் கொண்டிருந்தது. ப்ளுகிராஸிற்கு சீக்கிரம் வந்துவிட வேண்டும் என்ற மனநிலை தற்போது இல்லை. திடீரென்று மீண்டும் பூனை துடிதுடித்தது. அந்த நிமிஷம் அவளின் வாழ்வில் முக்கியமான ஒரு தருணம். அது துன்பப்பட்டாலும் உயிரோடு உள்ளது. காப்பகத்தில் கொண்டு போய் சேர்க்கிற வரைக்கும் அது செத்துவிடக் கூடாது என்பதே இருவர் மனதிலும் ஓடியது. கிண்டியில் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது. சிக்னலில் நெடுநேரமாக நின்றுக் கொண்டிருக்க பொறுமை இழந்து காணப்பட்டாள்.
“தம்பி வேற ஏதாவது ரூட் வழியா போய்டலாமா..?”
“இல்ல அக்கா.. இப்போ சரி ஆயிடும்..போய்டலாம்”
வண்டிகள் எறும்பு போல் நகர்ந்தது.. தம்பி இடையில் புகுந்து “கட்” அடித்து தூக்கி திருப்பி விருட்டென பாய்ந்தான். ப்ளுகிராஸ் வந்தது. வலிப்பும் சேர்ந்து. தம்பிக்கு ஐநூறு ரூபாயை கொடுத்துவிட்டு அப்படியே ஓடி உள்ளே சென்றார்கள். வெளி நோயாளி விலங்குகள் பிரிவில் சொகுசு நாய்களுடன் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தார்கள். வரிசை நீண்டிருந்தது.
உள்ளே ஒருவரிடம் விசயத்தை சொல்ல, வேறொரு கட்டிடத்திற்கு வழிக் காட்டினார்கள். அங்கே சென்று ஒப்படைக்கையிலும் குட்டிக்கு வலிப்பு வந்தது. அவளின் மனம் மீண்டுமொரு முறை ஆசுவாசம் கொண்டது. கொண்டு வந்து சேர்த்து விட்டோம். இனி காப்பாற்றி விடுவார்கள். கொண்டு வந்த கூடை வேண்டுமா என்று பூனைகள் பிரிவு அக்கா கேட்டாள். “வேண்டாம் அக்கா.. பூனையை கொஞ்சம் பார்த்துகோங்க..” என்று சொல்லிவிட்டு இருவரும் வெளியே நடந்தார்கள்.
ப்ளுகிராஸ் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். கட்டியணைத்து ஒரு முத்தமிட்டான். ஆயிரம் முறை தந்திருந்தாலும், இந்த முத்தம் அவளுக்கு அளித்த உணர்வு வேறு எந்த முத்தத்திலும் நடந்திராத ஓன்று. தெருவின் முனைவரை எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இளநீர் விற்றுக் கொண்டிருந்தார்கள். இருவரும் நீர் மட்டும் உள்ள இளங்காயை அருந்தினார்கள். பர்சிலிருந்து பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு மிச்சப்பணத்தை வைக்கையில் மொத்தமாக நாற்பது ருபாய் இருந்தது. புத்தகக் கண்காட்சி போக முடியாதுதான். புளியில் ஊறவைத்த மீனை நல்ல மசாலா அரைத்து குழம்பு செய்து சாப்பிட்டு நிம்மதியாக தூங்க வேண்டும்.
புத்தகக் கண்காட்சி கடைசி நாள் ஆனதினால்தான் இன்றைக்கு கிளம்பி வந்தான். புத்தகம் வாங்க முடியவில்லை என்பதால் இருவருக்கும் எந்த வருத்தமும் இல்லை. இந்த வருடபட்டியல் அடுத்த வருடப் பட்டியலிலும் தொடரும். அடுத்தவருட பட்டியல் கொஞ்சம் தள்ளிப்போய் தாமதமாகும். ஆகட்டும். அதனாலென்ன..? .