சிறுகதைகள்

புருஷ பலி

சித்துராஜ் பொன்ராஜ்

“எது சரியா இருந்தாலும் இல்லாட்டியும் முழி சரியாயிருக்கணும்.” கடையிலிருந்து வாங்கி வந்திருந்த இட்லியைச் சட்டினியில் துவைத்துத் தின்றபடியே செந்தில் சொன்னான்.

“இதுல இருக்குற எல்லா பொண்ணுங்களும் அழகா தானடா இருக்காளுங்க.” கைத்தொலைபேசியில் நிறைந்திருந்த பெண்களின் புகைப்படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே அவன் அம்மா சொன்னாள்.

“முழின்னா கண்ணையும் மூக்கையும் நெத்தியையும் வாயையும் சொல்றேன்னு நெனச்சுக்கிட்டியா? அது ஒரு உயிர்ப்பு, முகத்துல நெறஞ்சிருக்குற வெளிச்சம். அது இருக்குற மாதிரி பொண்ணப் பாரு.”

“இவனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்கப் போறதில்ல. ஒவ்வொருத்தனும் டேட்டிங் ஏப்ஸ்ல பொண்ணுங்களச் சந்திச்சுப் பேசிக்கிட்டிருக்குற காலத்துல…”

சாப்பாட்டு மேசையின் எதிர்ப்பக்கத்தில் பல்கலைக் கழகத்தின் முதுகலை இறுதி வருட நிலவியல் பாடங்களைக் கணினியில் தட்டச்சு செய்து கொண்டிருந்த கார்த்திகா சொன்னாள்.

வெளியே கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்த சாயந்திர வெயில் கார்த்திகா சொன்னதைக் கேட்டு அடுக்குமாடி கட்டடங்களாகக் வரிசை வரிசையாகச் சிரித்தது.

செந்திலுக்கும் அவளுக்கும் இடையில் இருந்த மூன்று வருட இடைவெளி கார்த்திகாவைக் காலோரமாய் உரசிக் கொண்டு போகும் பூனையாகக் கூச வைத்தது. செந்திலை அண்ணன் என்று அழைக்க வேண்டியிருந்த குடும்ப சூழ்நிலைகளைக் கார்த்திகா வெறுத்தாள். நீளமான விரல்களால் தட்டச்சுப் பலகையைத் தட்டியதில் அது தெரிந்தது.

“வெளியூர்ப் பொண்ணப் பார்க்கலாம்னாலும் இவன் வேண்டாம்கிறான்.” ஜோதிமலர் சலித்துக் கொண்டாள். அவளுக்கு மலேசியாவிலும் இந்தியாவிலும் செந்தில் வயதில் உறவுக்காரப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் வீடுகளில் மாலைநேர நொறுக்குத்தீனிகளுக்கும் தேத்தண்ணீருக்கும் இடையே ஜோதிமலரின் தற்போதைய சிவப்பு அடையாள அட்டையும், பகுதி நேர முக ஒப்பனைத் தொழிலும், பட்டுப் புடவைகளும் பேசியவர்களின் நெற்றிகளும்ம் கன்னங்களும் பளபளக்க முணுமுணுக்கும் குரல்களில் விவாதிக்கப்பட்டன.

ஆனால் தொலைக்காட்சி நிறைய பார்ப்பதால் கார்த்திகாவுக்கு ஜோதிமலரைவிட யதார்த்தத்தின் மீது பிடிப்பு அதிகம் இருந்தது.

“அவங்க மாறி ரொம்ப நாளாச்சு. இந்த ஊர்க்காரன்ங்கிறதால ஒடனே பொண்ணு கொடுத்துற மாட்டாங்க. அந்தப் பொண்ணுங்களும் நல்ல தெளிவா இருக்காங்க. சும்மா எவனையாவது கொண்டாந்து நிறுத்தினா கட்டிக்கவும் மாட்டாங்க.”

உணவுக்கடையின் பெயர் போட்ட பிளாஸ்டிக் பையோடு ஜோதிமலர் சாப்பாட்டு மேசையின் பக்கத்தில் கை பிசைந்தபடி நின்றிருந்தாள். கார்த்திகாவின் வார்த்தைகளைக் கேட்டவளின் முகம் கலவரமாகிப் பிளாஸ்டிக் பையாகக் கசங்கிப் போனது.

“வெளியூர்ப் பொண்ணுங்க நம்ம வாழ்க்கை முறைக்கு ஒத்து வருவாங்களானு யோசிக்கணும். நம்ம ஊர்ல இப்ப சாலைப் பணிகள் ரொம்ப அதிகமாயிருச்சு. நம்ம வீட்டுக்கு வரதே ரொம்ப சிரமமா இருக்கு. இன்னைக்குக்கூட ரெண்டு மூணு டாக்ஸிகாரன் என்னை ஏத்த மாட்டேன்னு சொல்லிட்டான். திரும்ப போறதுக்கு அவனுக்கு ஆள் கிடைக்கலனா அதுக்கு நானா பொறுப்பு? கெஞ்சிக் கூத்தாடி உள்ளார இருந்தவங்கள நகரச் சொல்லிப் பஸ்ஸுல இடம்பிடிச்சு நின்னுக்கிட்டே வந்தேன்.”

விரல்களின் நுனிகளில் ஒட்டியிருந்த இட்லி துண்டுகளைக் கவனமாக ஆராய்ந்தபடியே செந்தில் பேசினான்.

“ஏன் உங்க அப்பா என்னக் கட்டிகிட்டுச் சந்தோஷமா இல்லையா?”

“நீ அந்தக் காலம்’ம்மா. உனக்குப் பஸ் ஏறி பழக்கம் இருந்தது.”

கார்த்திகா கணினித் திரையில் தனது கட்டுரையைப் பார்த்தபடி மூக்கைச் சொறிந்தாள்.

“முதல்ல அவனை ஒரு நல்ல பொண்ணாப் பார்த்துப் பேசிப் பழகச் சொல்லேம்மா. அப்புறமா அந்தப் பொண்ணு பஸ் ஏறுவாளா மாட்டாளானு யோசனை பண்ணலாம்.”

ஓரக்கண்ணால் செந்தில் இட்லியை சாம்பாரிலும் சட்டினியிலும் பிரட்டிப் பிரட்டிச் சாப்பிடுவதை அருவருப்புடன் பார்த்தாள். சின்ன வயதில் அப்பாவும் செந்திலும் தொலைக்காட்சி பெட்டிக்கு முன் அமர்ந்துவிட தட்டுகளைக் கழுவ ஜோதிமலர் கார்த்திகாவைக் கூட்டிக் கொண்டு போய்விடுவாள். சோப்புப் பயன்படுத்தித் தேய்க்கப்படும் பாத்திரங்கள் கார்த்திகாவைப் பார்த்து நுரைநுரையாய்த் துப்பும்.

வரவேற்பறை விளக்குக்கு அடியில் நின்று கொண்டிருந்த ஜோதிமலருக்கு முகம் முழுவதும் சாம்பல் நிறமாய்க் கோபம் வந்தது.

“உங்கண்ணன் ஒண்ணும் மத்த பையங்க மாதிரி பொண்ணுங்க பின்னால சுத்துற பொறுக்கி இல்லடி. நான் அவனை அப்படி வளர்க்கல. அதுலயும் இந்தக் காலத்துப் பொண்ணுங்க நல்ல குடும்பத்துப் பையங்களை எங்க ஏறெடுத்துப் பார்க்குறாங்க? தலைமுடியை ரெண்டு பக்கமும் கோடு கோடா மழிச்சுகிட்டு சாமியாரு மாதிரி தொங்கத் தொங்கத் தாடி வச்சுகிட்டு அலையற பையனுங்க பின்னாலதான போறாங்க.”

கண்ணகியாட்டம் ஜோதிமலர் மாறியிருந்தாள். அவள் கால்களைச் சுற்றியும் மாணிக்கப் பரல்களாய் வார்த்தைகள் சிதறிக் கிடந்தன.

தலைமயிரை இரண்டு பக்கமும் கோடு கோடாக மழித்துக் கனமான தாடி வைத்திருப்பவன் பெயர் விக்னேஷ். கார்த்திகாவின் வகுப்புத் தோழன். கார்த்திகா அவனைத் தீபாவளிக்கு வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தி இருக்கிறாள். அவனிடமிருந்து கார்த்திகாவுக்கு அடிக்கடி குறுஞ்செய்திகள் வரும்.

கார்த்திகா ஜோதிமலரைக் கோபத்துடன் பார்த்தாள்.

“சரி, சரி. நான் யாரையும் எதுவும் சொல்லல, போதுமா? நீ கடைசியா என்னதாண்டா சொல்ற? இந்தப் பொண்ணுங்கள்ல ஒருத்திகூட உனக்கு வேண்டாமா?”

“அதான் சொன்னேனே எதுக்கும் முழி சரியாயில்ல.”

“இருபத்தொன்பது வயசாகப் போகுதுடா. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் தட்டிக் கழிக்கப் போற?”

ஜோதிமலர் மூன்றாவது இட்லியைச் சாப்பிட ஆரம்பித்திருந்த செந்திலை ஒருவித பரிதவிப்போடு பார்த்தாள். கோவிலுக்குப் போகும்போதும் கடைத்தெருவிலும் திருமண விழாக்களுக்காகவும் பிறந்த நாள்களுக்காகவும் ஒப்பனை செய்யும் பெண்களிடமிருந்தும் ஜோதிமலருக்கு வரும் விசாரிப்புகள் அதிகரித்திருந்தன. தலையைப் பின்னால் நன்றாகச் சாய்த்து வைக்கச் சொல்லி ஜோதிமலர் புருவம் எழுதிக் கொண்டிருந்த மணப்பெண்கூட ஒற்றைக்கண்ணைத் திறந்து உங்க மகனுக்கு வயசாகிகிட்டே போகுதே கல்யாணம் இன்னமும் ஃபிக்ஸ் ஆகலையா என்றாள்.

கல்யாண மண்டபத்தின் கண்ணுக்குத் தெரியாத மூலையில் இருக்கும் சின்னஞ்சிறிய ஒப்பனை அறை வெளிச்சத்தில் மணப்பெண்ணின் முகத்தில் பரிதாபம் வியர்வையாய்ப் பூத்திருந்தது.

“எனக்குப் பிடிக்கும் போது பண்ணிக்கிறனே.”

“எதையாவது பண்ணிட்டுப் போ. எனக்குத் தெரியாது. அப்பா வரட்டும். அவருகிட்டயே கேக்குறேன்.” என்று ஜோதிமலர் சொன்னாள்.

இட்லி சாப்பிட்டுவிட்டுச் செந்தில் சமையலறையில் கை கழுவிக் கொண்டிருந்தான்.

“அம்மா நாளைக்கு வேலைக்கு டை கட்டிகிட்டுப் போகணும்னு சொன்னேனே. நான் சுளுவா போட்டுகிட்டுப் போற மாதிரி சுருக்குப் போட்டு வச்சிருக்கியா இல்லையா. அபீஸ் போற அவசரத்துல உன்னோட நான் மல்லுகட்டிகிட்டு இருக்க முடியாது. வெள்ளனையயே கெளம்பணும். அப்படியே கழுத்துல மாட்டிகிட்டுப் போற மாதிரி இருந்தாதான் வசதியா இருக்கும்.”

குதிரைகளைப் பேரம் பேசி விற்பவராக வேலை பார்த்துவந்த ராஜமாணிக்கம் வீட்டிற்குச் சிறிது நேரம் கழித்துக் களைப்புடன் வந்தார். கையில் வைத்திருந்த குதிரைச் சாட்டையையும் சேணங்களையும் படுக்கையறைக் கதவுக்குப் பின்னாலிருந்த கொக்கிகளில் மாட்டிவிட்டு உடைகள் மாற்றி வேட்டியைக் கட்டிக் கொண்டு மீண்டும் வரவேற்பறைக்கு வந்தார். ஜோதிமலர் அவர் கையில் கொடுத்த ஆவி பறக்கும் மைலோ பானத்தை உறிஞ்சிக் குடித்தபடியே ஜோதிமலர் செந்திலின் திருமணச் சங்கடங்களைப் பற்றியும் திருமண விஷயத்தில் செந்திலின் பாராமுகத்தைப் பற்றியும் கண்ணீருடன் பேசிய வார்த்தைகளைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்டார்.

குதிரைகள் நேரடி அதிகாரத்திற்கு அடிபணியாதவை. நேரடியாக யாரேனும் குதிரைகளின்மீது அதிகாரம் செய்ய நினைத்தால் குதிரைகள் முரண்டு பிடித்துச் சண்டித்தனம் செய்யும். குதிரைகள் அவை போகும் போக்கிலேயே விடுவதுபோல் நடித்து அவற்றின் கழுத்தை நீவி விட்டும் தாழ்ந்த குரலில் ஆறுதலாகப் பேசியும் அவ்வப்போது நன்கு எண்ணெய் தேய்த்து உருவிவிட்ட சாட்டைகளால் சின்னச் சின்ன அடிகளை வைத்தும் அவற்றை நாம் விரும்பும் திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்று ராஜமாணிக்கத்துக்கு வேலையிடத்தில் சொல்லித் தரப்பட்டிருந்தது.

அதே தந்திரத்தை வீட்டிலும் பயன்படுத்த நினைத்த ராஜமாணிக்கம் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகாவை ஏறெடுத்துப் பார்த்தார்.

“கார்த்திகா நீ சொல்லும்மா. உலகம் உருண்டைனு விஞ்ஞானக் கருவிங்க எதுவும் இல்லாத காலத்துல மனுஷன் எப்படி அனுமானிச்சான்?”

கார்த்திகாவின் இரண்டு கண்களும் அகல விரிந்து பால்வீதியில் மின்னும் ஒளிபொருந்திய கோளங்களாக மாறியிருந்தன. அவள் ராஜமாணிக்கத்தைப் பார்த்து விழித்தாள்.

“அப்பா நான் புவியியல் படிக்கிறேன்தான். ஆனா நான் படிக்குறது…”

“சும்மா சொல்லும்மா. அப்பாதான கேக்குறேன்.”

“சந்திர கிரகணத்துப் போது சந்திரன்மேல விழற நிழல் வட்ட வடிவமா இருக்கு. பூமி தட்டைனா அந்த நிழல் சதுர வடிவமாவோ செவ்வகமாவோ இருந்திருக்கும். ரெண்டாவது, பூமி உருண்டையா இருக்குறதால ஒரே நேரத்துல பூமியில விழற சூரிய வெளிச்சம் அதிகமாவும் சில இடங்கள்ல குறைச்சலாவும் இருக்குது. பூமி தட்டையா இருந்திருந்தா எல்லா.இடத்துலயும் எல்லா இடத்துலயும் அதே நிமிஷத்துல விழற சூரிய வெளிச்சம்.ஒரே அளவுலதான் இருந்திருக்கும்.”

கார்த்திகா சொல்வதை ராஜமாணிக்கம் உன்னிப்பாக்கக் கேட்டார். அவள் சொல்லி முடித்த பிறகு கொஞ்சம் திகைத்துப்போய் அமர்ந்திருந்தார். பின்பு தன் தொடைகளைக் கைகளால் தட்டி விழுந்து விழுந்து சிரித்தார்.

“எவ்வளவு சுலபமா தன் அபிப்பிராயத்த நிரூபிச்சுட்டான் பாரு. ஆமா, பூமி உருண்டைனு சொல்றத ஏன் பல பேரு அவ்வளவு கடுமையா எதிர்த்தாங்க?”

ராஜமாணிக்கத்தின் ஆர்வம் இப்போது கார்த்திகாவையும்  தொற்றிக் கொண்டிருந்தது. அவள் தொலைக்காட்சியை மறந்து காதுகள் விடைக்க தன் தந்தையைப் பார்த்தாள். அவள் மூச்சு இப்போது அனலாய் வெளியேறியது. நெற்றியின் விளிம்பில் திரண்ட லேசான வியர்வையால் அவள் முகம் குதிரையின் முகம்போல கூர்மையாகிப் பளபளத்தது.

“அவங்களுக்குப் பூமிதான் எல்லாத்துக்கும் நடுவுல இருக்குறதாவும் சூரியன் பூமியைச் சுத்தி வரதாவும் பல காரணங்களுக்காக சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருந்துச்சு. பூமி உருண்டைனு ஒத்துக்கிட்டா அதுதான் சூரியனச் சுத்தி வருதுனு ஒத்துக்கணும். அது அவங்களுக்கு ஒத்து வரல.”

கார்த்திகா நடுங்கும் குரலில் பேசினாள்.

“எல்லாத்துக்கும் நடுவுல நாமதான் இருக்கணுங்கற ஆசையும், பிடிவாதமும் மனுஷனை என்ன எல்லாம் பண்ண வைக்குது பார்த்தியா?”

ராஜமாணிக்கத்தின் கண்கள் கடலின் நடுவில் விழும் சூரியக் கதிர்களைத் தன் மடியில் வாங்கிக் கொள்ளும்.சமுத்திர ஆழங்களாகவும் உயர்ரக திராட்சை மதுவாகவும் சுடர்விட்டன.

“நீ சொல்லு செந்தில். அம்மா நீ கல்யாணம் பண்ண மாட்டேங்கறனு வருத்தப்படுறாங்க. அதுக்கு நீ என்ன சொல்ற.”

“அம்மா ஏதோ முட்டாள்தனமா…’

“பூமி உருண்டைனு சொன்னவங்களையும் மத்தவங்க முட்டாள்னு ஏசினாங்க.”

ராஜமாணிக்கத்தின் பேச்சுக்குக் கார்த்திகா மிக பலமாகத் தலையாட்டினாள்.

“அது பூமியோட வடிவம் சம்பந்தப்பட்டது’பா. நான் என் கல்யாணத்தைப் பத்திப் பேசிட்டு இருக்கேன்.”

“அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும். பிண்டத்தில் உள்ளதுதான் அண்டத்திலும்.”

ராஜமாணிக்கத்தின் முகத்தில் அசாதரணமான பொலிவு கூடியிருந்தது. ஜோதிமலரும் அவருடைய பிள்ளைகளும் அவரை லேசான அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“நீங்க என்னப்பா சொல்ல வரீங்க?”

“நீ கல்யாணம் பண்ணிக்கணும்கிறது எங்க தீர்மானம்.”

கார்த்திகா கலகலவென்று சிரித்தாள். ஜோதிமலர் அடங்காத குதூகலத்தோடு கட்டைவிரலைத் தூக்கித் தன் கணவனிடமும் மகளிடமும் காண்பித்தாள். செந்தில் தலை கவிழ்ந்தபடி அமர்ந்திருந்தான்.

“அப்பா, இது என் வாழ்க்கை பிரச்சனை. இதுல என்னை நீங்க வற்புறுத்துறத நான் விரும்பல.”

என்று தொடங்கி செந்தில் பலவகைகளில் தனக்கு ஏன் அம்மா காட்டிய பெண்களைப் பிடிக்கவில்லை என்றும் எதனால் இந்தக் காலக்கட்டத்தில் தனக்குத் திருமணம் ஒத்துவராது என்றும், அதிகம் வற்புறுத்தினால் தான் கையிலெடுக்கக் கூடிய வருந்தக்கூடிய எதிர்வினைகள் எவை எவை என்றும் மிகத் தெளிவாகவும் மிக விவரமாகவும் ராஜமாணிக்கத்தின் முன்னால் எடுத்து வைத்தான். பின்னர் ராஜமாணிக்கம் தனது முடிவை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வன்மையாகப் பரிந்துரை செய்தான்.

எப்போதோ ஆறிப் போயிருந்த மைலோ பானத்தைக் கையில் பிடித்தபடி அமர்ந்திருந்த ராஜமாணிக்கம் தன் ஒரே மகனான செந்தில் பேசுவதை எல்லாம் மிகக் கூர்மையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு மனித வரலாற்றிலேயே மிகுந்த புத்திசாலி என்று புகழப்பட்டவரும், மனித பாஷைகள் மட்டுமன்றி பறவைகள் தொடங்கி எறும்புகள் முடிய எல்லா ஜீவராசிகளின் மொழிகளையும் புரிந்து கொள்ளக் கூடியவர் என்று அறியப்பட்டவருமான சாலமன் மகாராஜாவின் புத்திக்கூர்மையோடும் அசையாத திட சித்தத்தோடும் பின்வரும் தீர்ப்பை வழங்கினார்.

“நீ தனியே முடிவெடுக்கக் கூடிய மனிதன் என்பது உண்மை என்றாலும் உன் மாமிசத்தையும் ரத்தத்தையும் என்னிடமிருந்தும் உன் தாயிடமிருந்தும் நீ பெற்றுக் கொண்ட காரணத்தால் நீ பாதிக்குப் பாதி நாங்கள் சொல்வதைக் கேட்கக் கடமைபட்டவனாகிறாய். அதனால் உன் உடலைப் பாதியாக வெட்டி உன் உடம்பின் ஒரு பாதி நாங்கள் சொல்லும்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் மற்ற பாதி உன் விருப்பம்போல் திருமணம் செய்து கொள்ளமல் இருந்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பளிக்கிறேன்.”

தீர்ப்பைச் சொல்லி முடித்தவுடன் ராஜமாணிக்கத்துக்குக் கொஞ்சம் மூச்சிரைத்தது. அவர் வீட்டின் சமையலறைச் சன்னல்களின் வழியாக வெளியே கறுத்துக் கிடந்த வானத்தை எதிர்ப்பார்ப்புடன் பார்த்தார். வானம் எவ்வித மாற்றமும் இல்லாமல் நகர விளக்குகளின் மெல்லிய போர்வைக்கடியில் அமைதியாகக் கிடந்தது அவருக்கு ஏமாற்ற்த்தைத் தந்தது.

தீர்ப்பைக் கேட்ட ஜோதிமலர் சமையலறைக்கு ஓடிச் சென்று அங்கு இருப்பதிலேயே  மிகப் பெரிய கத்தியை எடுத்துக் கொண்டு வந்தாள். செந்திலை சாப்பாட்டு மேசைக்கு அழைத்துப் போய் அவனை அதன்மேல் நீட்டிப் படுக்கச் செய்தார்கள். அவன் கால்களைக் கார்த்திகா கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அவள் தோள்களை ஜோதிமணி அமுக்கினாள். ராஜமாணிக்கம் கத்தியைத் தன் உள்ளங்கையின்மீது ஓரிரு முறை முன்னும் பின்னும் தேய்த்து அதன் கூர்மையைப் பரிசோரித்துக் கொண்டார்.

ஒருகணம் கையிலிருந்த கத்தியைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்துவிட்டுச் செந்திலின் கபாலத்திலிருந்து கால்கள்வரை சரசரவென்று அறுத்தார்.

நல்ல கூர்மையான கத்தி. விளிம்பு மொத்தமும் சிறு சிறு பற்கள் உடையது. அதிக சிரமம் இல்லாமல் செந்தில் துல்லியமான இரண்டு பகுதிகளாகப் பிரிந்து கிடந்தான்.

ஜோதிமலரும் கார்த்திகாவும் அவசரமாகச் சென்று செந்திலின் வலது பகுதியை அள்ளி எடுத்துக் கொண்டார்கள்.  ஜோதிமலர் தண்ணீர்க்குழாய்க்கு அருகில் மாட்டியிருந்த சிறிய கைத்துண்டை எடுத்து அறுக்கும்போது செந்திலின் மீது தெறித்திருந்த ரத்தத் துளிகளைக் கவனமாகத் துடைத்தாள்.

செந்திலின் இடது பகுதி  முதலில் ஒரு பாதி முகத்தில் குழப்பத்தின் கோடுகளோடு படுத்திருந்தது. பின்பு மேசைமீது எழுந்து அமர்ந்தது. யாரும் தன்னைச் சட்டை செய்யவில்லை என்பது உறுதியானதும் பழக்க தோஷத்தால் எழுந்து போய் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து கையில் எடுத்து வைத்துக் கொண்ட தூர இயக்கியால் ஒவ்வொரு ஒளிவரிசையாக மாற்ற ஆரம்பித்தது.

இதே இடது பாகம் அடுத்த நாள் காலை சீக்கிரமே எழுந்து தன் கழுத்தில் டை மாட்டிக் கொண்டு வேலைக்குப் போனது. வேலை முடிந்தவுடன் டாக்ஸிக்காக அலுப்புடன் நின்றது. கடைசியில் கெஞ்சிக் கூத்தாடி பேருந்தில் நின்று கொண்டிருந்தவர்களை உள்ளே நகர்ந்து போகச் சொல்லி பேருந்தின் கம்பிகளில் தொத்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்தது. கடையில் வாங்கி வந்த இட்லியைச் சாம்பாரிலும் சட்டினியிலும் முக்கி விருப்பத்துடன் சாப்பிட்டது.

ராஜமாணிக்கமும் ஜோதிமலரும் கார்த்திகாவும் வலது பக்கச் செந்திலை நன்றாகச் சீவிச் சிங்காரித்தார்கள். பிறகு அவன் புகைப்படங்களை வைத்துக் கொண்டு கூவிக் கூவி அழைத்தார்கள். அவர்களைச் சுற்றி நின்று கொண்டிருந்த தெரிந்தவர்களும் சொந்தக்காரர்களும் கூவிக் கூவி அழைத்தாள்.

தூரத்திலிருந்து வந்தவர்கள் முதலில் முகம் சுழித்தார்கள். வலது பக்கச் செந்திலை நிறுத்துப் பார்த்துவிட்டுக் கொஞ்சம் கறி குறைகிறதே என்றார்கள். ஆனாலும் பெண்ணுக்கு வயதாகிக் கொண்டே போவதால் சரி, சரி என்று சம்மதித்தார்கள்.

வலது பக்கச் செந்திலும் இப்போது முழியையோ வந்திருக்கும் பெண்ணின் முக காந்தியையோ பெரிய விஷயமாகக் கருதவில்லை. அவனுக்கு இப்போது ஒற்றைக் கண் மட்டும் இருந்ததால் தூரத்தில் இருந்த மனிதர்கள் அவனுக்கு ஒளி குறைந்தவர்களாகவும், பக்கத்தில் உள்ளவர்கள் மகா வெளிச்சம் பொருந்தியவர்களாகவும் மாறியிருந்தார்கள்.

செந்திலும் உருண்டையான பூமியாகி இருந்தான்.

திருமணத்துக்கு இடது பக்கச் செந்தில் வரவில்லை. வழக்கம்போல் அவன் டை கட்டிக்கொண்டு அலுவலகத்துக்குப் போய்விட்டான். கடைசி நேரத்திலாவது வலது பக்கச் செந்திலும் இடது பக்கச் செந்திலும் ஒன்று சேர்ந்து மணமேடையில் அமர்வார்கள் என்று ராஜமாணிக்கத்துக்கு நப்பாசை இருந்தது. ஆனால் அது நடக்காது என்று தெரிந்தவுடன் வலது பக்க செந்திலைப் பார்த்துப் ‘போய் உட்கார்’ என்று கையசைத்தார்.

மணமேடையில் வலது பக்கச் செந்தில் வெட்கத்துடன் புன்னகைத்தபடியே அமர்ந்து கொண்டான். அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் தன் அலுவலக நண்பர்களைப் பார்த்துக் கையசைத்தாள். சரியான கோணங்களிலிருந்து படங்களை எடுக்காத புகைப்படக்காரனை விரல்கள் சொடுக்கி முறைத்தாள்.

அவள் உடம்பில் நிறையவே கறி இருந்தது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button