
4.வேலி
வரைபடம் தயாரித்து முடித்தவுடன் வேலியமைக்க ஆரம்பிக்கலாம்.
வேலி மொத்தம் நான்கு வகைப்படும்.
1, கம்பி வேலி,
2, உயிர் வேலி,
3, மிருக வேலி,
4, மனித வேலி.
1, கம்பி வேலி:
ஆறு அடி உயரமும், ஆறு இஞ்ச் அகலமும் உடைய கல்லை ஒரு ஆழத்தில் பத்தடிக்கு ஒரு கல் வீதம் செங்குத்தாக ஊன்றுவார்கள். தோட்டத்தின் எல்லை ஆரம்பிக்கும் விளிம்பிலிருந்து கிடைமட்டமாக ஒரு அடிக்கு ஒரு முள்கம்பி வீதம் மொத்தம் ஆறு வரிசையும், செங்குத்து வசத்தில் ஒரு கல்லுக்கும், மற்றொரு கல்லிற்குமான பத்தடி இடைவெளியில் ஐந்து முள்கம்பிகள் கட்டு அமைப்புக்கு தற்போதைய விலை நிலவரப்படி ஒரு மீட்டருக்கு 210 ரூபாய் வீதம் செலவாகிறது.
இது போன்ற அமைப்பில் கல் எடுத்து வரும் தூரம், இரும்பின் அன்றைய சந்தை நிலவரம், அதை அமைப்போரின் கூலி இவற்றைப்பொறுத்து அவ்வப்போது இதன் செலவு தீர்மானிக்கப்படும்.
2, உயிர்வேலி :
ஒரு பண்ணையின் வேலியானது எப்போதும் உயிர்ப்புத்தன்மையோடு இருக்கும் அமைப்புக்கு பெயரே உயிர் வேலி.
உயிர்வேலியைப்பொறுத்தவரை கம்பி வேலியை விட செலவு குறைவு, ஆனால் மெனக்கெடலும், நிறைய கால அளவையும் எடுத்துக்கொள்ளும்.
அகத்தி, ஆமணக்கு, படப்பை, வேலிமசால், இலந்தை, சூபாபுல், கொடுக்காபுளி போன்ற நேரடி விதைப்பு தாவரங்களையும், காரமுள், சப்பாத்திக்கள்ளி, திருகுகற்றாலை, நொச்சி, நெய்வேலி காட்டாமணக்கு, கிளுவை, போன்று கரணைகளை தேடித்தேடியெடுத்து வேலியமைக்க வேண்டும்.
இந்த அமைப்பை உருவாக்கம் போது கொஞ்சம் கடினமாக இருந்தாலும், உருவாக்கிய பின்பு
தோட்டத்தின் அரணாக…
பூச்சியியல் மேலாண்மையாக…
ஆநிரைகளின் உணவுக்காடாக…
ஊர்வன, பறப்பனவற்றின் உறைவிடமாக…
பருவநிலைக்கேற்றார்போல உங்களுக்கும் அவ்வப்போது கனிகளை தரும்போது எதையோ சாதித்து விட்டதைப்போல ஒரு திமிரை உங்களுக்குள் பிரசவிக்கும் வலிமை வாய்ந்தது.
3, மிருக வேலி:
தோட்டத்தில் நீரின் பயன்பாடு அதிகரிக்கும் போது பல்லுயிர் சூழலும் பெருக ஆரம்பிக்கும். சின்னசின்ன பூச்சியினங்களை உண்டு வாழும் தவளைகள், கிழங்குகள் மற்றும் தானியங்களை வேட்டையாடிப்பதுக்கும் எலிகளின் தொல்லை எல்லையில்லாமல் போகும்போது பாம்புகள் உணவின் தேவைக்காக உங்கள் தோட்டத்திற்கு வந்து சேரும்.
எலிகள் தோட்டத்தின் பிற பகுதிகளில் இருக்கும் வரை உங்களுக்கு எந்தத்தொல்லையும் இல்லை. ஆனால் அவைகள் நீங்கள் வசிக்கும் வீட்டிற்குள் குடியேறும் போது எலிகளைப்பிடிக்க பாம்புகளும் உங்கள் இல்லம் தேடி வர வாய்ப்பிருக்கிறது. இந்த இடர்பாட்டிலிருந்து தப்பிக்க நாம் பூனைகளை வளர்க்கத்துவங்கினால் எலிகள் நம் வீட்டை அண்டாது. பூனைகள் எப்போதும் தன்னை மிகசுத்தமாக பராமரித்துக்கொள்ளும் ஆற்றலுடையவை, தவிர புலியின் சின்ன உருவம்தான் பூனை. ஆதலால் நிறைய சுதந்திரம் கேட்கும். நாய்கள் போல கட்டிப்போட்டு வளர்க்க சம்மதிக்காது.
பண்ணை அமைக்க வேண்டுமென்று முடிவெடுத்த பின்பு பாதுகாப்பை கவனத்தில் கொண்டு நாயை வளர்பது நலம் பயக்கும்.
நாயை வளர்த்து பழக்கமில்லையா? பரவாயில்லை! ஒருமுறை வளர்த்துப்பாருங்கள் நீங்கள் செலுத்தும் அன்பை பத்து மடங்காக திருப்பித்தரும் நாய்கள்.
நன்றி என்கிற சொல்லுக்கு சரியான அருஞ்சொற்பொருள் தருபவை நீங்கள் வளர்க்கும் நாய்கள் என்பதை உணர்வீர்கள்.
நாய் வளர்ப்பு என்றவுடன் நீங்கள் உடனே வெளிநாட்டு நாயினங்கைளை யோசிக்க வேண்டாம். அவைகள் மிகவும் செலவு மிகுந்தவை. கோம்பை, ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை போன்ற நமது நாட்டின நாய்களே போதுமானவை.
பிறந்து இருபத்தைந்து நாட்களில் தாயிடமிருந்து பிரித்தெடுத்து பாலூட்டி, சிறுநீர் பிரிதலை சுத்தப்படுத்தி சின்னச்சின்ன பூச்சித்தொல்லையிலிருந்து மூன்று மாதங்கள் கவனமாக வளர்தெடுத்தால் போதும் அதன் பின்பு பதினான்கு ஆண்டுகளுக்கு உங்கள் பண்ணையை ஒரு அரண்போல நின்று பாதுகாப்பார் மிஸ்டர் நாய்.
அதன் உணர்வுகளை மழுங்கடிக்க ஊசி, மருந்து, மாத்திரையென்று யோசிக்காமல் நாய் வாங்கும்போதே ஆண், பெண் ஜோடியென்று சேர்த்து வாங்குவது சிறப்பு. நாம் தற்சார்புக்கு திரும்ப வேண்டுமென்று முடிவெடுத்து விட்ட பின்பு நம்மோடு வளரும் ஜீவராசிகளும் பல்கிப்பெருக வழிவகை செய்து கொடுப்பது அடிப்படை உயிரியல் அறம்.
4, மனித வேலி:
நீங்கள் தோட்ட வேலை ஆரம்பித்த செய்தி தெரிந்தவுடன் ‘வறுமைக்கு உரிமையையும், உரிமைக்கு வறுமையும்’ இழந்துவிட்டு, அன்றாடம் வேலை பார்த்தால் தான் தனக்கு சோறு என்கிற நிலையிலிருக்கும் வேளாண் கூலிகள் உங்களை நோக்கி ஓடி வருவார்கள்.
அவர்களே உங்களுடைய தோட்டத்திற்கும், நீண்ட நெடிய உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் உண்மையான பாதுகாப்பு அரணாக இருக்கப்போகிறவர்கள்.அவர்களில் உங்களுக்கு பிடித்தமானவர்களை தேர்ந்தெடுத்து விசுவாசமான வேலைக்காரனாக மாற்றுவதில் தான் உங்கள் வெற்றி அடங்கியிருக்கிறது. அவர்களை அன்பால் வென்று விட்டால் போதும், இந்த இயற்கை வழி வாழ்வியலில் நீங்கள் பாதி கிணற்றை தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம். அவர்கள் நினைத்தால் கம்பி வேலி, உயிர்வேலி, மிருகவேலி ஆகிய மூன்று வேலியை சிதைத்து அழிக்கவும் முடியும், தேவைப்பட்டால் அந்த மூன்று வேலியுமில்லாமல் உங்களை அரண்போல பாதுகாக்கவும் முடியும்.
கொஞ்சம் பிசகினாலும் அவர்களே நித்தம் நித்தம் உங்களுக்கு தொல்லையாக மாறும் அபாயமும் உண்டு. பிறகு நீங்கள் சி சி டி வி கேமரா வைத்தாலும், பண்ணைக்கு பூட்டுப்போட்டாலும் ஒன்றும் வேலைக்கு ஆகாது. ஆகவே மனித வேலியைக்கவனமாக அமைக்கவும்.
பாதை விரியும்…
முந்தைய பகுதிகள்: