இணைய இதழ் 99கட்டுரைகள்

‘அதிர்ஸ்ய ஜலஹங்கள்’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – ராணி கணேஷ்

கட்டுரை | வாசகசாலை

தலைப்பு கூறுவது போல விநோதமான ஒரு படம்தான். கொஞ்சம் பொறுமையாய் பார்த்தால் படம் சொல்லும் கதையை உள்வாங்க முடியும். மேலோட்டமாக பார்த்தால் என்னடா இது பைத்தியக்காரத்தனமாய் இருக்கிறதே என்று தோன்றும், மிக மெதுவாகச் செல்வது போலவும் தோன்றும். ஆம்; இது ஒரு சர்ரியலிஸ்டிக் படம். நிஜத்திற்கும் கற்பனைக்கும் நடுவே ஒரு பாலத்தை அமைத்து அதில் நம்மை நிற்க வைத்து வேடிக்கை பார்க்க வைப்பதே இதன் தனித்துவம். உண்மையா, கற்பனையா என்ற குழப்பங்களினூடே பயணிக்கும் கதை.

பொதுவாக ஒரு படத்தைப் பார்த்தால், அது நம்மை பாதித்தால் அத்தனை சுலபமாக அதனைக் கடந்து செல்ல முடியாது. குப்பை படமாய் இருந்தாலும் கூட நாலு பேரிடம் ‘என்னத்த எடுத்து வைத்திருக்கிறார்கள்?’ என்று குறை பட்டுக்கொள்கிறோம். நல்ல படங்கள், சர்ச்சையை கிளப்பும் படங்கள் விவாதிக்கப்படுகின்றன. விவாதம் சிந்தனையை வளர்க்கும். சமூக மாற்றத்தை உண்டுபண்ண வல்லதும் கூட. நல்ல திரைப்படங்கள் இப்படித்தான் சமூகத்திற்கு தொண்டாற்றுகிறது இல்லையா?.

சில படங்கள் சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. முன்பெல்லாம் நண்பர்களுடன் மட்டும் உரையாடிய கருத்துகளை இன்று உலகத்தின் எந்த மூலையில் இருப்பவரும் வாசிக்கும் வகையில் பகிர முடிகிறது. ஒரு படத்தை விமர்சிப்பவருக்கு என்ன கிடைக்கிறது? ஒரு விமர்சனம் எழுதி தன் கருத்தோடு சிலர் ஒத்துப்போகையில் நமது பார்வை சரி என்ற பெருமிதமும், ஒரு இனம்புரியா உவகையும் தோன்றும். நல்ல படத்தைப் பற்றி பேசுவதும், அதை அலசி ஆராய்வதும் சந்தோஷமான விஷயம். நல்ல படம் கொடுத்தவருக்கு செய்யும் நன்றி என சொல்லலாம். எழுத்தோ, படமோ எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் வாசகனின்/பார்வையாளனின்/ரசிகனின் கருத்துகள் படைப்பாளனுக்கு மிகுந்த உற்சாகத்தையும், உவகையையும் தரும். படைப்பாளனுக்கு அதனால் வருமானம் கிடைக்கிறதோ இல்லையோ இப்படியான அங்கீகாரங்களும், பாராட்டுகளும் மிக அவசியம். வலைதளங்களில் பதிவிடும் பொழுது வரும் எதிர்வினைகளை எதிர்கொள்ளவும் தெரிய வேண்டும்.

அதிர்ஸ்ய ஜலஹங்கள் – இந்த படத்தை உளவியல் சார்ந்த படம் என்று கூறலாம். மனோரதமானது கொஞ்சம் பிசகினாலும் மனோவியாதியாக மாறிவிடும் அபாயம் எப்பொழுதுமே உண்டு. எண்ணங்கள்தான் வாழ்க்கை. எசகுபிசகான எண்ணங்கள் சமயங்களில் பெரும் சிக்கலில் கொண்டு விடுகிறது. கி.ரா-வின் ‘கோபல்ல கிராமம்’ நாவலில் அப்படி ஒரு கதாபாத்திரம் உண்டு. தனக்கு கண் குருடாகிவிட்டதாகவும், தன் உடன்பிறந்தோர் அனைவரும் தன்னை கைவிட்டு விட்டதாகவும், ஆலிலை தைத்துதான் ஜீவிதம் என்ற மனோரதத்தில் கண்ணை மூடிக்கொண்டு கண்ணீர் பெருக தைப்பார். என்ன பயன்? தேவையற்ற கற்பனைகளும் ஆசைகளும் துன்பத்தைதான் தரும். மனமானது எப்படி வேண்டுமானலும் கற்பனை செய்யும். மனம் எத்தனை வலிமையானது, நினைத்தமட்டில் கண்ணீர் பெருக்கவும், புன்னகைக்கவும், தைரியம் கொள்ளவுமாக எல்லாவற்றையும் செய்யவல்லது. உடலின் தெம்பு மனோதைரியத்தை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. ஊக்கமான சொற்கள் மனதை தானாகவே சரிசெய்கிறது, மனம் லேசானால், சரியாகிவிட்டால் எந்த குறையும் பெரிதாகத் தெரிவதில்லை.

ஆரம்ப காட்சியில் காவல் துறையினர் சாலைகளில் உறங்கும் ஆதரவற்றோர்களை நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் மனநிலை சரியில்லாதவர்களுக்கான காப்பகத்தில் கொண்டு அடைக்கின்றார்கள். இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முன்பு அடைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் பைத்தியமா, தெளிவாகி விட்டார்களா என்பதை பற்றிய கவலைகள் யாருக்கும் இல்லை. பொறுப்பை நியாமான வழியில் தட்டிக் கழிப்பது போல மாத்திரைகளை அளித்து அனுப்பி விடுகிறார்கள்.

‘மனோவியாதி மருத்துவமனைகளில் இருப்பவர்கள் எல்லாருமே பைத்தியங்களா? மருத்துவரும் பைத்தியமா?’ என்று கேட்டு அவர் கூறிய பதிலை அவருக்கே கூறும் இடத்தில், நமக்கு பைத்தியக்காரனாய் அறிமுகமாகும் டோவினோ உருவ லட்சணங்களையும் மீறி, கொடுக்கப்பட்ட மாத்திரைகளை வானில் பறக்கடித்து, தெளிவுடையவனாகத் தெரிகிறான். இறந்து போனவர்களின் பெயர்களை கூறும் கதையில் வாழ்பவர்களின் பெயர்கள் எங்கேயும் இடம்பெறவில்லை என்பது ஒரு விநோதம்தான். உண்மையில் அவர்கள் பெயர்கள் அவசியமாய் இல்லை.

மொத்தமாய் ஐந்து பெயரில்லா நபர்கள் முக்கிய கதாபாத்திரங்களாய் காணக்கிடைக்கிறார்கள். ரசாயன ஆலைக்கு பக்கத்தில் உள்ள சிறு மர வீட்டில் வாழும் தாத்தாவும், பேரன், பேத்தியும், அதனைத் தாண்டி பழைய ரயில் கூபேயில் வாழும் அவனும் அவளும். இது போக ஒரு சில அதிகாரிகள். எதிர் எதிர் கூபேயில் வசிக்கும் அவர்கள் ஆரம்பத்தில் முட்டிக்கொள்கிறார்கள். வாயில் தண்ணீர் எடுத்து தூவும் அவளைக் கண்டு அவனும் அதையே செய்து பார்க்கையில் அவளிடம் இருந்து முதல் புன்னகையை பரிசாகப் பெறுகிறான். இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பது போல வேறு வழியற்றதாலோ, தினமும் பார்க்கும் முக பழக்கத்தாலோ பேசிப் பழகுகிறார்கள். சிலரைப் பார்க்க பார்க்க பிடித்துவிடுவது போல இவர்களுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போகிறது. இருவரும் இருளில் நட்சத்திரங்களை பரிசீலித்துக் கொண்டே புல்வெளியில் கிடப்பது இன்னுமொரு கவிதை.

சர்ரியலிஸம் நம்மை நம் கண்களை, மனதை குழப்பக் கூடியது. சர்ரியலிஸ்டிக் ஆர்ட்டில் இஷ்டம் போல வரையலாம். மனதில் தோன்றியவண்ணம், எங்கேயுமே தோன்றியிறாத வண்ணம் வரையலாம். யட்சி, யாழி போன்றவை அப்படி உருவானவைதானோ என்று நான் நினைப்பதுண்டு. மனித மூளை எத்தனை வலிமை வாய்ந்தது. கற்பனையில் எப்படி வேண்டுமானாலும் உருவாக்கும். எண்ணங்களை சங்கிலி இட்டு வைக்க முடியாதுதானே?! காலில்லா காற்றைப் போல எங்கெல்லாமோ பயணிக்க பழகிய மனம் காட்டும் ஜாலமே கண்களுக்கு தெரியாத இந்த மாய ஜன்னல்.

மாய ஜன்னல் வழியாக சில காட்சிகளை காண்கிறோம். அது நிஜமா அவன் கற்பனையா என்ற சந்தேகம் வரவேயில்லை. மாண்டவர் பேசினால் எப்படி இருக்கும்? ‘The Sixth Sense’ படம் போல தாங்கள் இறந்த கதையை முதலில் சொல்வார்கள் இல்லையா, அப்படித்தான் பேராசிரியர் பஷீர் அவர் இறந்த நேரத்துக்குள் அழைத்துச் சென்று காட்டுகிறார். பெயரற்ற மனிதர்கள் கதையில் முதல் பெயருள்ள மரித்தவர். ‘எப்படி என்றாலும் பிணம் என்றுதானே சொல்வார்கள்’, என அவர் சொல்லும் பாடம் ஆழமானது. மரித்த பின் எதுவும் நம்முடையது இல்லை. பெயர் கூட மறந்து பிணம் என்றே அழைக்கப்படுகிறோம். பிணவறையில் இருந்து சாவகாசமாய் அவர் அறைக்குள் நுழைவது வித்தி யாசமான பார்வை. கிடாரிஸ்டுடன் கதைக்கையில் தோன்றும் பின்பக்கச் சுவர் போல.

பேயைப் பார்த்தேன்.. தெய்வத்தைப் பார்த்தேன் என்று கூறுபவர்களிடம் கதை கேட்டு அதனை நம்புவதும் நம்பாததும் கேட்பவரின் மனநிலை அல்லது விருப்பம் சார்ந்து இல்லையா? நிஜமாவே பார்த்தார்களா இல்லை பிரமையா என்பதும் கேள்விக்குரியதே. அப்படித்தான் இந்த படத்திலும் எல்லாமே அவனின் கற்பனையா, இல்லை உண்மையில் நடக்கிறதா என்பதை நம்புவதும், நம்பாமல் போவது பார்வையாளனின் விருப்பம் என்பது போல எந்த சார்பும் இல்லாமல் நடுநிலை என்றும் இல்லாமல் ஒரு கதையை செதுக்கிச் செல்கிறார் இயக்குனர். மாண்டவர்கள் கூறியது உண்மை என்றோ, இல்லை பொய் என்றோ எந்த தரவுகளும் நமக்கு கொடுக்கப்படுவதில்லை. நாம் பார்த்ததைப் போல அவளும் இந்த கதைகளைக் கேட்கிறாள். ஆலோசனை சொல்கிறாள். பின்னர் அவளும் ஒரு வினோதத்தைக் காண்கிறாள். இதில் எதெல்லாம் உண்மை எதெல்லாம் கற்பனை, மனோகிரியைகள் என்பதை ஒவ்வொரு பார்வையாளனுமே முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையில் நிகழ்கால விடயங்கள் கனவாக மாறி காட்சிபிழை போல கருத்தில் தங்கி, எழுந்த பின் நிஜமா கனவா என்று நம்மை குழப்புவது போலத்தான் அவனும் குழம்பிப் போகிறான். அவனுக்கு மன நோய் இல்லை என்பதை பல சந்தர்ப்பங்களில் நமக்கு உணரத் தரும் இயக்குனர் சர்ரியலிஸ்டிக் காட்சிகளாய் திரிபு கொள்ளும் நிகழ்வுகளை அனுமானிக்க இயலாத வண்ணம் நடத்திச் செல்கிறார். அவன் கானும் காட்சியான விமானத்தில் வந்திறங்கும் அதிகாரியின் இசை நிகழ்வுகள், பெட்டிகளில் புத்தகங்கள் இவற்றையெல்லாம் கற்பனையா நிஜமா என்ற பெரும் சுழலுக்குள் தள்ளி அடியாழத்துக்கு கொண்டு செல்கிறார்கள்.

‘இது அநியாயம். அதிகார வர்க்கம் செய்யும் அநியாயம். அப்போ யார்கிட்ட சொல்றது?’ என்ற வயதானவரின் கேள்விக்கு, ‘ரோட்டில் நடந்த என்னை பைத்தியமென்று பிடித்து ஆறு மாதம் அடைத்து வைத்தார்கள். என்ன நீதி இருக்கு யார் கிட்ட சொல்ல முடியும்? ஒன்னும் செய்ய முடியாது’, என்று அவன் கூறிய போது, “சே என்ன உலகம் என்று நம் மனமும் சோர்வடைகையில் அந்த வயதானவர் மீண்டும் நம்பிக்கை விதைகளை வார்த்தைகளில் மெழுகித் தூவுகிறார். ‘அது போர் நேரம் என்பதால் இருக்கும்’ என்று நம்பிக்கையின் ஜன்னலைத் திறந்து வைக்கிறார். எளிய மக்களுக்கு யார் துணை? அவர்களால் அவர்கள் நிலத்துக்கு போராட முடியவில்லை. ‘நிலம் என் உரிமை’ என்று எத்தனை கத்தினாலும் எங்கோ யாருடைய நிலமோ அதிகாரத்தின் பிடியில் சிக்கிக்கொண்டேதான் இருக்கிறது. வலியவன் ஜெயிக்கிறான். எளியவன் – இல்லாதவன் இருப்பதையும் இழக்கிறான்.

விலைமகளாய் இருந்தாலும் ‘என் உடல் என் விருப்பம்’ என்று ஸ்திரமாய் கூறும் அவள், பிரச்சனையை சமாளிக்கும் துணிச்சல், பழைய ஞாபகங்கள், வலிகள் என அந்தப் பெண்ணாக நிமிஷா மிக நேர்த்தியாகச் செய்துள்ளார். கேரக்டர் முக்கியம் என்று சொல்லித்திரியும் நாட்டில்தான், ‘அது அவள் வயிற்று பிழைப்பு, செய்யும் தொழிலை வைத்து அவள் குணத்தை மதிப்பிடாதே, அவள் நல்லவள்’ என்ற முதியவரின் வார்த்தைகள் மற்றொரு ஜன்னலைத் திறக்கிறது. இழப்பதற்கு எதுவும் இல்லாதவரிடம் தன்னையறியாமல் ஒரு துணிச்சல் துளிர் விடுகிறது. அந்த குருட்டுத் துணிச்சலைப் பற்றியே அவர்களின் வாழ்க்கைக் கொடி மேல்நோக்கிப் படர்கிறது.

டோவினோ தயாரித்து நடித்துள்ள படம். ஆரம்பத்தில் ஜப்பானில் கல்யானராமன் கமலை ஞாபகப்படுத்தினார். நிறம் கம்மலாய், வாயை விட்டு வெளியே தெரியும் பற்களோடு கதாநாயகனுக்கான எந்த லட்சணமும் இல்லாமல்தான் தோன்றுகிறார். பின்னர் அந்த கதாபாத்திரத்தில் அத்தனை அழகாய் பொருந்தி போகிறார். விக்ரம் போல கதாப்பாத்திரத்துக்காக எடை குறைந்து மெனக்கிட்டு இருக்கிறார். போலீசாரைக் கண்டு அஞ்சுவது, பின்னர் நல்லது நடக்க தன்னால் ஆன பிராயத்தனம் பண்ணுவதற்காக போலீசாரிடம் சென்று பேசி அடி வாங்குவது, அவளிடம் பம்முவது, குழந்தைகளிடம் பிரியமாய் இருப்பது, மரித்தவர்களோடு இயல்பாக உரையாடுவது என அந்த பாத்திரத்தில் அப்படி பொருந்திப் போகிறார்.

கண்ணுக்கு தெரியாத மாய ஜன்னல் நமக்கு காட்டும் அரூப காட்சிகளுக்கு இடையே போர் குறித்த அச்சம் படம் நெடுகிலும் உள்ளது. ஸ்டெரிலைட் ஆலை பிரச்சனை, போபால் கேஸ் கசிவு போன்ற ஒன்றை எதிர்பார்க்கையில் போர் குறித்த பயங்கள் ஹெலிகாப்டர் சத்தத்தில் நம்முள்ளும் இறங்குகிறது. நாட்டு பாதுகாப்பு என்று வரும்பொழுது யாருக்கும் எந்த கேள்வியும் கேட்க வாய்ப்பதில்லை. போர் என்னென்ன செய்யும். மனிதனை அச்சுறுத்தும், ஜெயிலில் இடும், பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு இட்டுச் செல்லும், ஒளிந்து ஓட செய்யும், பயங்களை சுமந்தலைய வைக்கும், நிலத்தை அபகரிக்கும், கொலை கூட செய்ய வைக்கும்.

எதைப்பற்றி இந்த படம் பேசுகிறது என்று ஒன்றைக் குறிப்பிட்டு சொல்லாமல், மனம், போர், தனிமை, வாழ்க்கை, சுய போராட்டம், சாவுகள், அதிகாரம், மாற்றம் என பரவிச் செல்கிறது. எல்லோருக்கும் புரிந்துவிடாத புதிர் ஓவியமென விரியும் கதை முற்றுப்பெறாத கவிதை போல தொக்கி நிற்கிறது. மிச்ச கவிதையை பார்வையாளனே எழுதிக் கொள்கிறான். யாருமற்ற பரந்தவெளியில் இவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். காவல் அதிகாரிகளை காண்பிக்காமல் போனால் எல்லாமே கற்பனையோ என்ற ஐயம் எழக்கூடும். இவர்களது இருப்பிடத்துக்கும் வெளியுலகத்திற்குமான தொடர்பு கூட இருக்கிறதா? எந்த மாயப் பாலத்தின் வழியே அவன் புற உலகை அடைகிறான் என்றே தெரியவில்லை.

அருமையான அறை அமைப்பு ரயில்வே கூபேயில், ஒரு கவிதை போல காட்சியாகிறது ஜன்னலின் வழியே மற்றொரு ஜன்னலின் காட்சி. அவனின் அறை நின்றுபோனவற்றை எல்லாம் ஓட வைத்து வெளிச்சம் பெற்று கொண்டாட்டமாய் இருக்கிறது. அவளின் அறை அவளது மனோரதங்களால் நிறைந்து மிளிர்கிறது. திரைச் சீலைகளுக்குள் ஒளித்து வைக்கப்படும் அவள் வாழ்க்கை அவனுக்கு அசூயை அளித்தாலும், மனிதன் விருப்பங்களுக்கும், ஆசைகளுக்கும், காதலுக்கும், காமத்துக்கும் கட்டுப்பட்டவன்தான் என தெளிவுபடுத்துகிறான் அவன். ரயில் பெட்டி போல வடிவமைத்தவர்கள் நீக்கப்பட்ட இருப்பிடங்களின் தடயங்களை விட்டிருந்தால் இன்னும் இயல்பாக இருந்திருக்கும். ரசாயன குடுவைகள் ஏன் என்று விளங்காவிட்டாலும் எதையாவது ஆராயும் மனநிலை கொண்ட அவன் ஏதாவது செய்வான் என்றே புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஜன்னலில் விளிம்பில் பூத்துக்குலுங்கும் மலர்கள் அழகியலின் மற்றொரு ஜன்னல்.

ஒரு பிரத்யேக அழகியலோடு நிலவமைப்பு காட்சிப்படுத்தபட்டுள்ளது. அந்த நிலப்பரப்பு, ஆட்டுப்பட்டி, மர வீடு ஆகிய இடங்களின் இனிமையும், இரவின் குளிர்மையும் நம்மையும் வந்து ஆட்டி வைக்கிறது. இதனை இப்பொழுதுகளை மிக அழகாக காண்பித்திருக்கிறார்கள். அருமையான ஒலி மற்று ஒளிப்பதிவு. இறுதியில் நிஜம் நிகழ்வு மாயையில் அவர்களோடு நாமும் சேர்ந்து தேடத் துவங்குகிறோம் அந்த சிறுவன் சிறுமியை! அவளின் உடையில் ரத்தமிருக்கிறது, ஆனால் உடல்களில்லை. இறுதியில் போர் பயம் காட்டும் வானூர்திகள், உயிர்பயம் காட்டும் ரசாயனப் புகை, குழந்தைகளைத் தேடி காணாத பயம் என பயங்களோடும், பல கேள்விகளோடும் நிறுத்தப்படுகிறது படம்..சட்டென அடைக்கப்பட்ட ஜன்னலைப் போல.

வித்தியாசமான படம், பொறுமையாக பார்க்க வேண்டும். பல அவார்டுகளை வாங்கி குவித்திருக்கிறது. ரிக்கி கெஜ்ஜின் மென்மையான இசை படம் நெடுகிலும் இன்னும் இனிமை சேர்க்கிறது. வாழ்த்துக்ள் மருத்துவர் பிஜ்ஜு குமாருக்கும், டொவினோ மற்றும் படக்குழுவினருக்கும்.

அதிர்ஸ்ய ஜலஹங்கள்

மொழி : மலையாளம்

கதை, இயக்கம் : டாக்டர். பிஜ்ஜூ குமார்

நடிப்பு: டொவினோ தாமஸ், நிமிஷா சஜயன்

இசை : ரிக்கி கெஜ்

ஒளிப்பதிவு : யெது ராதாகிருஷ்ணன்

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button