
கூடாரத்திற்குள் நுழைந்த ஓர் ஒட்டகமென இருளை கொஞ்சம் கொஞ்சமாய் விரட்டி தன் ஆதிக்கத்தை நீட்டித்தது காலைக் கதிரவனின் வெளிச்சக் கரங்கள். வழமையான சலசலப்புச் சத்தங்களுடன் விடிந்தது அந்த ஞாயிற்றுக் கிழமையின் காலை. ஐந்து வீடுகள் கொண்ட காம்பவுண்ட் என்பதால் ஒரு பக்கம் குழந்தைகள் விளையாட, கடைசி வீட்டு வாசலில் நடுத்தர வயதுப் பெண்மணி ஒருத்தி கூடையில் காய்கறி விற்றுக் கொண்டிருக்க, அதுசமயம் காம்பவுண்டு வாசலுக்கு அருகில் மீன் விற்பவரின் கூவல் காம்பவுண்டில் இருந்தவர்களைத் திரும்பிப்பார்க்கச் செய்தது.
கிழக்குப் பக்கம் பார்த்த இரண்டாவது வீட்டில் வசித்து வந்தனர் செந்தில், சுகன்யா தம்பதியர்; இருவருக்கும் அன்று விடுமுறை என்பதால், தூக்கம் தெளிந்தும் கட்டிலை விட்டு எழவில்லை. வெளியில் ஆரம்பித்த இளவெயிலுக்கு இலேசான வெம்மை துவங்க, அதிகாலை பனிக்குக் குறைக்கப்பட்ட மிதவேகத்தில் ‘கீச்கீச்’சென சத்தமிட்டுக் கொண்டு மின்விசிறி சுழன்றது. பக்கத்து வீட்டுத் தொலைக்காட்சி அன்றைய எட்டுமணி செய்திகளை அலைப்படுத்திக் கொண்டிருந்தது. அவர்கள் வசிப்பது பொது மதில் வீடு என்பதால் பக்கத்து வீட்டுச் சம்பாஷனைகள், டிவி சத்தம் எல்லாம் பரஸ்பரம் தெளிவாகவே கேட்கும்.
சுகன்யாவின் காதுப் பக்கத்தில் மூச்சு விட்டுக்கொண்டு அவள் மீது கையைப் போட்டு, தன் காலை நேரத்து சில்மிசத்தை அரங்கேற்றத் துவங்கியிருந்தான் செந்தில். அவனது மூச்சுக்காற்றின் குறுகுறுப்பில் சுகன்யாவுக்கும் கழுத்தோரம் புல்லரிக்கத் தொடங்கியது. சிணுங்கிய அவள் நெளிய.. அவளைத் தன் பக்கமாய் இழுத்தான். அரைக் கண்ணால் விழித்தவன் ரிமோட்டைத் தேடி பாடல் சேனலை வைத்து சற்று சத்தம் அதிகமாக ஒலிக்கச் செய்தான். செந்தில் அப்படி டீவி சத்தம் அதிகரித்து வைத்ததும் ஏதோ குறிப்புணர்ந்தவளாய், கண் திறக்காமல் வாய் மூடியபடியே அவள் சிரித்துக் கொண்டாள்.
கட்டில் சத்தமும், முனகல் சத்தமும் வெளியில் கேட்காதிருக்க செந்தில் வழமையாய் கையாளும் உத்தி அது. அதுசமயம் தொலைக்காட்சியில் ‘வைகாசி நிலவே’ பாடல் இசைத்துக் கொண்டிருக்க.. இருவருக்கும் தூபமிட்டதாய் அமைந்தது. செந்திலின் முன்னெடுப்பை உணர்ந்தவளாய் நமுட்டுச் சிரிப்புடன் ஒத்துழைத்தபடியே. கண் விழிக்காமலயே,
“காலையிலயேவா..? அடங்க மாட்டல்ல..?” என்றதும்,
“மாட்டேன்தான்.! இன்னிக்கு அய்யாக்கு லீவுல்ல”
“அதுக்குனு நேரங்காலமில்லாம..?!” போலியாய்ச் சீண்டினாள்.
இதற்கு செந்தில் பதில் சொல்லும் முன் ஒலித்துக் கொண்டிருந்த அந்த வைகாசி நிலவே பாடலில்
‘அட காலம் நேரம்
பார்த்துக்கொண்டா
காற்றும் பூவும்
காதல் செய்யும்..?!’ வரிகள் ஒலிக்க..
“கேட்டுச்சா… இதுக்கெல்லாம் கால நேரங் கெடையாதாம்டி கருவாச்சி..!”
என்றவனிடம் அவள்
“ஒனக்குனே பாட்டு போடுறாய்ங்க பாரு காலங்கா…………”
மேற்கொண்டு பேசவிடாமல் வாயோடு வாய் பொருத்தினான். அந்தப் பாடலைத் தொடர்ந்து மூன்று பாடல்கள் சத்தமாய் ஓடி முடிக்க.. அவர்களோடு சேர்ந்து கட்டிலும் மூச்சு வாங்கியது. பாடலின் சத்தத்தைக் குறைக்கையில்
‘இன்னும் கொஞ்சம் நேரம்
இருந்தா தான் என்ன …?!
ஏன் அவசரம் ?!
என்ன அவசரம்…?!’
என்று பாடல் ஒலிக்க..
ஆடை குலைந்த நிலையில் இருந்த சுகன்யா, ஒருக்களித்துப் படுத்து முகம் திருப்பி,
“ஓய்… மாமா.. அப்டியே இந்தப் பாட்டுக்கும் பதில் சொல்லு..!” என புருவமுயர்த்தி நக்கலாய்ச் சிரித்தாள்.
லுங்கியை வாயில் கடித்தபடி அரைஞாண் கயிற்றை சரி செய்து கொண்டிருந்த அவன் பொய்யாய் முறைத்து.. பதில் சொல்ல எத்தனிக்க, லுங்கி நழுவியது. சுகன்யா திரும்பவும் சிரித்தாள். சுதாரித்து லுங்கியைப் பிடித்துக்கொண்டு,
“என்னாடி கருவாச்சி… காலங்காத்தாலயே ஆரம்பிச்சிட்டியா?”
“ஓஹோ…! நா ஆரம்பிச்சேனா…? சரி விடு; மத்தியானத்துக்கு மருக்கா பசிக்குதுன்ட்டு கட்டிலுப் பக்கமா வருவல்ல.. !”
“அத அப்ப பாத்துக்கலாம்டி; இப்ப எந்திரிச்சு டீய்ய கீய போட்றீ..!” சமையல்கட்டுத் திண்டு மீதிருந்த சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து வாசற்படியில் அமர்ந்தான்.
சிறிது நேரம் அப்படியே கலைந்த குழல், நெகிழ்ந்த ஆடையுடன் படுக்கையில் கிடந்தவள், நைட்டியை மாத்திரம் மாட்டிக் கொண்டு வெளியிலிருந்த பாத்ரூம் சென்று முகம் கழுவித் திரும்பினாள்; முகக்கண்ணாடிப் பக்கம் சென்று அரைகுறையாகத் தலைவாரி உச்சிக் கொண்டை இட்டுக் கொண்டாள். சாக்லெட் நிறம், போதுமான அடர்த்தியில் கூந்தல், அகல விரியும் கண்கள், கொஞ்சம் எடுப்பான மூக்கு என ஒரு சராசரி குடும்ப அழகிக்கான அனைத்தும் கச்சிதமாய் இருந்தது. அரங்கேறிய காலைச் சங்கமத்தால் முகமெல்லாம் ஒரே பூரிப்பு. ஈர முகத்தில் கண்ணாடி அவளை அழகாகக் காட்டியது; கூடவே அது கேலியும் பேச.. வெட்கப்பட்டுக் கொண்டாள். வாய் திறக்காமல் ஒரு புன்முறுவல் செய்கையில் நாசித்துவாரம் விரிந்து ஒரு திருப்திப் பெருமூச்சை உதிர்த்து வாசலில் உட்கார்ந்து புகை விட்டுக் கொண்டிருந்த செந்திலைப் பார்த்துக் கொண்டே பழைய ஞாபகங்களுக்குள் புதைந்தாள்.
செந்தில் – சுகன்யா தம்பதி நான்கு வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், இரு வீட்டாரும் கோபத்தில் இவர்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. செந்தில் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு ஊரில் ஒரு வேன் டிரைவராக இருந்தான். பக்கத்து டவுனில் இருந்த கல்லூரியில் சுகன்யா பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். அவள் கல்லூரிக்கு சென்று வந்த வேனில்தான் செந்தில் டிரைவராய் இருந்தான். அவள் அந்த வேனில் போய்வரும் வாடிக்கை உண்டானதற்கான காரணம், அந்த வழித்தடத்தில் பேருந்து வரத்து குறைவு என்பதாயிருந்தாலும், செந்தில் தன் வேனில் ஒலிக்க விடும் காதல் பாடல்களும் முக்கிய காரணம். சுகன்யா, அவளது தோழிகள் கார்த்திகா, உமா மூவரும் அந்த வேனில்தான் கல்லூரி சென்று வருவதை வாடிக்கையாய் வைத்திருந்தனர். கண்ணாடியில் செந்தில் சுகன்யா கண்கள் பார்த்துக் கொள்ள, ஒலித்த சினிமா காதல் பாடல்கள் தூதாக.. இருவருக்கும் பற்றிக்கொண்டது. ஆறு மாதம் பார்க்கவும், பேசவுமாய் இருந்த காதல் அடுத்த கட்டத்தை எட்டியது, இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர். தற்சமயம் பக்கத்து ஊரில் வசித்து ஆளுக்கொரு வேலைக்கு சென்று வாழ்வை நகர்த்தி வருகின்றனர். ஆரம்பத்தில் ஜெராக்ஸ் கடை ஒன்றிற்கு வேலை சென்று வந்த சுகன்யா, சம்பளம் குறைவு எனக் கருதி முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்த தேயிலை எஸ்டேட்டில் கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தாள். தினசரி காலை ஆறு மணிக்கு ஜீப்பில் அழைத்துச் சென்று மதியம் மூன்று மணிக்கு திருப்பி கொண்டு வந்து வீட்டருகே இறக்கிச் செல்வர். அக்கம் பக்கத்தினர் நிறைய பேர் உடன் சென்று வந்ததும், ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் சம்பளம் என்பதும் அவளுக்குச் சமாதானமாய் இருந்தது. போதாதற்கு மாலையில் நேரத்தில் வீடு திரும்புவதும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதும் கூடுதல் சௌகர்யமாய் இருந்தது. ஓரளவிற்குப் போதுமான வருமானம், காதலித்தவனோடு மகிழ்வான வாழ்க்கை என இருந்தாலும், நான்கு ஆண்டுகளாகியும் ‘தனக்கு குழந்தை இல்லை’ என்பது உள்ளக் கிடக்கையில் ஒரு வருத்தத்தை நெருஞ்சியாய்த் தைத்தது. செந்தில் மோகித்து தொடுகையிலெல்லாம் சுகன்யா படுக்கையில் மலர்வதற்கு அவன் மீதான தீராக்காதல்தான் காரணம் எனினும், குழந்தை ஆசையும் ஒரு பிரதானக் காரணமாய் இருந்தது.
அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கி அவளை நிகழ்காலத்திற்கு, அந்த ஞாயிறு காலையின் பரபரப்பிற்குத் திருப்பியது.
வெளியில் பக்கத்து வீட்டு இளங்கோ வாசலருகே பல் துலக்கியபடி செந்திலிடம் பேசிக் கொண்டிருந்தார். இளங்கோ சற்று ஒடிசலான உருவம், தலையில் முடி கொட்டியிருக்கும். ஆனால், பேச்சு சத்தம் வெங்கலக்குரலாய் ஒலிக்கும்.
“என்னா செந்திலு… சம்பளம் வாங்கியாச்சா..?” இளங்கோ கேள்வியில் ஓர் ஆர்வம் தெரிந்தது.
“நைட்டே வாங்கிட்டேன் ண்ணே.. நீங்க வாங்கலயா..?”
திராட்சைத் தோட்டத் தொழிலாளியாய் செந்தில் ஓர் இடத்திலும், இளங்கோ வேறு இடத்திலும் வாரச் சம்பளத்திற்கு வேலை செய்து கொண்டிருந்தனர். கொடியில் இருக்கும் திராட்சையை வெட்டிக் கொடுக்கும் வேலை அது. சம்பளம் அறுநூறு முதல் எழுநூறு வரையில் கிடைக்கும். வாரச்சம்பளத்தை ராமு மேஸ்த்திரி பட்டுவாடா செய்வார்.
“நேத்து சனிக்கெழம அதுவுமா.. சாய்ந்திரமா அந்த மேஸ்த்திரி நாரப்பய.. சமயம் பாத்து கழுத்தறுத்துட்டான்யா.. பதினஞ்சு பேத்துக்கு சம்பளந் தரல; வாரச் சம்பளம் போடலனா ஞாத்துக்கெழமைக்கு என்ன பண்றது சொல்லு..?” தன் வாரக்கடைசி வறுமைக்கு நேந்து விட்டதையெண்ணி புலம்பினார்.
பேசிக் கொண்டிருக்கையில் இரு டம்ளரில் டீ’யுடன் வந்த சுகன்யா..,
“அப்ப இன்னிக்கு கறி புளி ஒண்ணுஞ் சமைக்கலயாண்ணே..? திங்கிற பசங்க இருக்குற வீட்டுல..” இளங்கோ பதில் சொல்லும் முன் சுகன்யாவே தொடர்ந்தாள், செந்திலை நோக்கி,
“என்னங்க…! கறி என்ன வேணும்னு மதினிட்ட கேட்டு இன்னிக்கு நீங்க எடுத்து குடுங்க.. அப்டியே நமக்கும் கொஞ்சம் எலும்புக்கறியும் மதிலொட்டியும் எடுத்துக்கங்க” ஒரே மூச்சாய்ச் சொல்லி முடித்தாள். இளங்கோ மனைவி அரசமணி வாசலில் இருந்தபடி எட்டிப்பார்த்தாள். இளங்கோ – அரசமணி தம்பதிக்கு பத்து வயதில் இரட்டைக் குழந்தைகள்.. அருண், வருண்.
செந்தில் தான் ஊதிக்கொண்டிருந்த சிகரெட்டின் கடைசித் தவணையை இழுத்து முடித்து.. சுகன்யா கையிலிருந்த டம்ளரை வாங்கிய படி கண்ஜாடை காட்டி இளங்கோவுக்கும் டீ கொடுக்கச் சொன்னான்.
“அண்ணே இந்தாங்க டீ குடிங்க..!” டம்ளரை வாஞ்சையாய் நீட்டினாள்.
“இல்லம்மா நாங்க குடிச்சிட்டோம். நீ குடிம்மா” இளங்கோ மறுதலித்தார்.
“சர்ண்ணே, நாம போயி கறி எடுத்து வந்துருவோம்..!” செந்தில் கேட்டதும் இளங்கோ தன் மனைவி அரசமணியின் முகத்தைப் பார்த்தான். ஒரு வயதுக்குப் பின் கணவன், மனைவியின் சமிக்ஞை இன்றி எதுவும் செய்வதில்லை என்பது அவர்களது இல்லறத்தின் புரிதல். அவளும் தயக்கமாய் பதில் சொல்லாமல் மழுங்க மழுங்க விழித்தாள். பல் துலக்கிக் கொண்டிருந்தமையால் சைகையால் ‘கொஞ்சம் இரு’ என செந்திலிடம் கூறவிட்டு வீட்டிற்குள் சென்றார், இளங்கோ.
“சொல்லு மணி… கறி எடுத்து வந்துடவா.?”
“ஆட்டுக்கறி அரக்கிலோ எடுத்து வந்துடுங்க.. ஒங்களுக்கு நாளைக்கு சம்பளம் வந்துடும்ல..? திருப்பி தந்துக்கலாம்..!”
“அதெல்லாம் நாளைக்கு அவன் தந்துதான ஆகணும்.. சரி, அரக்கிலோ போதுமா?”
“போதுங்க கொஞ்சம் இரத்தம் வாங்கிக்கங்க..!”
“அந்த சட்டைய எடு. பிள்ளைக தூங்குறாய்ங்களா..? “
பெரியவன் தூங்குறான்; வருண் காப்பி குடிச்சிட்டு சும்மா படுத்துருக்கான்.”
செந்திலின் மோட்டார் சைக்கிளில் இருவருமாய் கறிக்கடைக்கு விரைந்தனர். அரைமணி நேரத்தில் இருவரும் மனைவிமார்கள் கேட்ட கறியுடன் வீடு வந்து சேர்ந்தனர். வெங்காயமெல்லாம் உரித்து சமையலுக்குத் தயார் நிலையில் இருந்த சுகன்யா, செந்தில் வந்ததும் சமையலை அமர்க்களப்படுத்த ஆயத்தமானாள். முந்தைய நாள் மீந்த மாவினில் தலா இரண்டு தோசை சுட்டுத் தின்றனர். சிறிதுநேரம் டிவி முன் அமர்ந்திருந்த செந்தில்.. “ந்தார்றீ.. சும்மா அப்டியே கடத்தெரு பக்கமா போயிட்டு வர்றேன்.. நீ சமையல முடி..!”
“செத்தவடம் இரு மாமா.. சூப்பு ரெடியாயிரும்.. குடிச்சுட்டு கெளம்பு…”
“இப்ப வந்துருவேன்டி..!” என சொல்லிவிட்டு பைக்கை எடுத்து டீக்கடை பக்கம் போனான்.
அங்கு டீக்கடையில் டிரைவர் குமரவேல் நின்றிருந்தான். வாரத்தில் மூன்று நாட்கள் வேலைக்கு போவதும் மிச்ச நாட்களில் அந்தப் பணத்தைக் குடித்தே செலவு செய்வதும் அவன் வாடிக்கை. அவனும் டிரைவர் என்பதால் செந்திலுக்கு குமரவேல் வெகுகால பழக்கம். குமரவேலுக்குக் குடிப்பழக்கம் இருப்பதால் அவன் மனைவி அவனை விட்டுப் பிரிந்துவிட்டாள்.
செந்தில் அவனுடன் சேர்வது கூட சுகன்யாவுக்குப் பிடிக்கவில்லை; காரணம் குமரவேலைச் சந்திக்கும் பெரும்பாலான நாட்கள் செந்தில் குடிக்காமல் வீடு திரும்புவதில்லை. அன்று இருவரது கையிலும் பண ஓட்டம் இருந்தமையால் வழமையான குசலவிசாரிப்பே
“சரக்கு போடலாமா மாப்ள?” என்றே துவங்கியது.
இருவரும் ஒயின்ஷாப் சென்று திரும்புகையில் வலுவான போதையில் வந்தனர். தெருமுக்குப் பக்கத்தில் இருந்த அதே டீக்கடையில் திரும்ப வந்து அங்கிருந்தவர்களோடு வம்பளந்து கொண்டிருந்தனர்.
இங்கு வீட்டில் சூப்பு எடுத்து தூக்குவாளியில் மூடி வைத்து, கறிக்குழம்பு.. மதிலொட்டி வறுவலுடன் சமையலை முடித்து வைத்திருந்த சுகன்யா, பனிரெண்டு மணி முதலே செந்திலுக்காக காத்திருந்தாள். பக்கத்து வீடு அரசமணி, இளங்கோ மற்றும் பிள்ளைகளுக்கு கறிச்சோறு பரிமாறிக் கொண்டிருந்தாள். ஒரு சிறு கிண்ணத்தில் இரத்தப்பொரியல் கொண்டு வந்து சுகன்யாவிடம் நீட்டினாள், அரசமணி.
“ப்ச்… என்னத்துக்கு மதினி இதெல்லாம்..? இங்கயும் கறிக்கொழம்பு தான..! பிள்ளைகள நல்லா திங்க விட வேண்டி தான..?”
“நீயி ரத்தம் எடுக்கலல்ல.. ரத்தப்பொரியலுனா எந்தம்பி நல்லா திங்கும்ல.!”
“…………….!” மௌனித்து வாய் திறவாமல் ஒரு சிரிப்பை மட்டும் உதிர்த்தாள். அச்சிரிப்பில் அத்துனை வலி வெளிப்பட்டது.
“இன்னும் ஆளக்காணோம்..?!!!” மெலிதான குரலில் கேட்டாள் அரசமணி.
“வருவாப்டிக்கா..! அவங்கப்பனாத்தா வாங்கி விட்ட தோட்டந் தொறவெல்லாம் சுத்தியடிச்சு வரணும்ல..?” உடைந்த குரலில் விரக்தியும் ஏமாற்றமும் தொனித்தது.
“ந்தா புள்ள… எதாச்சும் பேசி சண்ட போட்றாத. வந்தா சோத்த போட்டு திங்கவிட்டு படுக்க வச்சிரு..!”
“நா என்னைக்கு சண்ட போட்ருக்கேன்..! அந்த மனுசந்தே… வாயிக்கு வந்ததையெல்லாம் பேசிட்டு திரியும்..!”
“விடு, என்னிக்குந் தெரிஞ்ச குருநாதந்தான.? புதுசாவா சாமியாட போறாப்ள..!” சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றாள் அரசமணி.
நேரம் மூன்று மணியை நெருங்கத் தட்டுத்தடுமாறி தன் பைக்கை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு வாசல் படியில் அமர்ந்தான் செந்தில். அவன் இப்படி போதையில் வரும் போதெல்லாம் சுகன்யா அவனை பொறுமையாகவே கையாள்வாள்.
“வா மாமா.. சாப்டலாம்.!”
பவ்யமாய் அழைத்தாள். அதைக் காதில் வாங்காமல் இளங்கோவின் மகன் வருணிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தான். சூழலை உணர்ந்த இளங்கோ நாசூக்காக பேசி செந்திலை வீட்டிற்குள் சாப்பிட அனுப்பி வைத்தார்.
சோற்றைத் தட்டில் போட்டு கறிக்குழம்பு ஊத்த…
“நீயி சாப்ட்டியா? ” என்று குளறினான்..
“நீ முதல்ல சாப்டு மாமா.. நா அப்பறமா சாப்ட்டுக்குறேன்..!” சமாதானக் குரலாய்ச் சொன்னாள்.
“நடிக்கிறா… முண்ட..!” செந்தில் ஆரம்பித்தான்.
“………”
“அப்டியே பத்தினி வேசம் போட்ருவா.. தேவிடியா..!”
“இப்ப எதுக்கு இப்டிலாம் பேசுற..?”
“இப்ப அந்த சுந்தரு போன் பண்றதில்லயா?”
“எப்பவோ நடந்தத… இப்ப எதுக்கு மாமா இழுக்குற? குடிச்சா மட்டும்தான் இப்டி பேசுற..!” அழுகுரலில் பேசத் தொடங்கினாள்.
“பேசத்தான்டி செய்வேன்..! அவன் எதுக்குடி ஒனக்கு போன் பண்ணுனான்..?” மூணுமணி வெயில் உரைத்து அடிக்கவே குடித்திருந்த செந்திலுக்கு முகமெல்லாம் வியர்த்தது.
இளங்கோ வெளியில் வந்து எட்டிப்பார்த்து, “என்னா செந்திலு.. இப்டி பண்ணுற? நல்லா மாடா ஒழைக்கிற.. இப்டி பண்ணி எதுக்கு பேர கெடுத்துக்குற?” செந்தில் எழுந்து வாசலுக்கு வந்தான். வருண், அருண் அப்பா பின்னால் நின்று நடப்பவற்றை வேடிக்கை பார்த்தனர்.
“அசிங்க அசிங்கமா பேசுறாருண்ணே… இவர நம்பிதான எல்லாத்தையும் விட்டுட்டு வந்தேன்..!” விம்மினாள் சுகன்யா.
“ஏய், ந்தாம்மா.. நாந்தா பேசுறேன்ல; நீயி சும்மா இரும்மா.. ” கண்ணைச் சிமிட்டி வாய் மூடச் சொன்னார்.
“அந்தாளு என்னா ஒம்மேல பிரியம் இல்லாமயா இருக்காப்ள… நீ ஒடனே மூக்கச் சீந்தாத.. அதெல்லாம் நீயி அந்தாள நம்பி வந் தான்; வந்ததுக்கு நல்லாதான் உனைய வச்சிருக்காப்ள.. எதோ கொஞ்சம் குடிச்சிருக்காரு.. இப்ப பேசுறதெல்லாம் பெருசா எடுத்துக்காதம்மா..!”
மேற்கொண்டு சுகன்யா பதிலளிக்க எத்தனிக்க அரசமணி கையைப் பிடித்து அமர்த்தினாள்.
“சுகன்யா சோத்த எடுத்து வய்யி… நீயுஞ் சாப்டு..” சொல்லிக்கொண்டே அரசமணி சுகன்யாவையும் செந்திலையும் சாப்பிட அமர்த்தினாள். இருவரும் சாப்பிட்டு முடிக்க சற்றுநேரம் செந்தில் புலம்பியபடியே உறங்கிப் போனான். சுகன்யா வெறுமையாய் வாசலைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.
சுந்தர்…!
சுகன்யாவின் தூரத்து உறவுக்காரப் பையன்; ஊர் பஞ்சாயத்து போர்டில் தண்ணீர் திறத்துவிடும் வேலை பார்ப்பவன். சுந்தருக்கு இவள் மீது அலாதிப் பிரியம்; சுகன்யா கல்லூரி போய்க் கொண்டிருந்த கட்டத்தில் இவளைக் கட்டிக்கொள்ள ஆசைப்பட்டவன். ஆனால், சுகன்யாவுக்கு அவன் மீது காதல் இல்லை என்ற போதும் அவன் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவள், திடுதிப்பென காதல் … கல்யாணம் என்றதும் சுந்தருக்கு சற்று அதிர்ச்சி. திருமணமான சிலகாலம் கழித்து ஒரு முறை அவனிடமிருந்து ஃபோன் வந்திருந்தது. அன்றுதான் அவன் அவளைக் காதலித்ததைச் சொன்னான். தற்போதும் அவள் செந்திலை விட்டு வந்தால் மணம் முடிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தான்.
செந்தில் மீது காதலும், நம்பிக்கையும் அதீதமாய் இருந்தமையால் இதை உளறிவிட்டாள், சுகன்யா. காதலன் கணவனான பின் இன்னொரு ஆண் பற்றி, அவன் ஃபோன் செய்ததைப் பற்றி உளற வேண்டிய அவசியமில்லை. பின்னால் சுந்தரால் எதுவும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என அனுமானித்து சொல்லி வைத்தாள். ஆனால், செந்திலிடமிருந்து இப்போது சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி அவள் யோசிக்கவில்லை. நம்பிக் கெடுதல் என்பது இதுதான். ஆயிரம்தான் அவன் கணவனாக இருந்தாலும் அவனும் ஒரு ஆண்.
‘தற்போது கூட சுந்தர் சுகன்யாவை திருமணம் செய்து கொள்ளத் தயாராகத்தான் இருந்தான்’, என்பதைப் பற்றி மட்டும் சொல்லாமல் மறைத்து விட்டாள். ஆயிரம் இருந்தாலும் அவள் ஒரு பெண்; கணவனாகவே இருந்தாலும் எந்த விஷயத்தையும் முழுமையாகச் சொல்ல மாட்டாள்.
அடுத்தநாள் காலை எழுந்த செந்தில் எதுவும் பேசிக் கொள்ளாகாமல் வேலைக்குக் கிளம்பினான். வழமையாக அப்படிதான் செய்வான். இரண்டு மூன்று நாட்களுக்கு சரிவர பேசிக்கொள்ள மாட்டான். சுகன்யாவும் இந்த முறை எதுவும் பேசிக் கொள்ளவில்லை அவன் சொன்ன ‘தேவிடியா’ என்ற வார்த்தை அவளை மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. நாட்கள் நகர்ந்தது; ஐந்தாம் நாள் காலை பேச்சுவார்த்தை துவங்கியது; மாலை சிரித்துப் பேச ஆரம்பித்தனர். அன்றிரவு டிவி சத்தம் வெகுநேரம் அதிர்ந்தது, உடன் கட்டிலும்.
பின்னொரு நாள்…
சுகன்யா வேலைக்கு போகும் இடத்தில் டிரைவர் வரவில்லை; அதுசமயம் சொல்லி வைத்தது போல்.. அன்று செந்தில் வேலை இல்லாமல் வீட்டில்தான் இருந்தான். சுகன்யாவின் மேஸ்திரியிடம் தன் கணவன் கூட டிரைவர்தான் என்று சொன்னாள்.
“நம்ம டவைருக்குனா எழநூறு ரூவாதான் தருவேன்.. உங்கூட்டுக்கார்ரு எம்புட்டு கேப்பாரோ?”
“நூறு ரூவா சேத்து குடுங்கண்ணே… நா கூட்டியாறேன்..!”
“எட்நூறா…?”
“குடுங்கண்ணே… ஒரு நாளைக்குதான!”
“நல்லா ஓட்டுவாப்ளயா? கீழ ரோட்டூல ஓட்றது வேற.. மலங்காட்டுல ஓட்டுறது வேற..”
“அதெல்லாம் மாமா ஓட்டிருவாருண்ணே…!”
உடனே ஓடியவள் வீட்டிலிருந்து செந்திலைக் கூட்டி வந்தாள். வண்டியில் அவனருகே உட்கார்ந்தாள். முன்னிருக்கையில் இருவர் அமரவேண்டிய இடத்தில் மூன்று பெண்கள் அமர்ந்து கொண்டனர். ஜீப் கேரளா எல்லைக்குள் போனதும்,
“இங்கன வர்றப்பலாம் நம்ம லவ் பண்றப்ப நீ பாட்டு போடுவல்ல…
‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’னு அது ஞாபகம் வரும் மாமா” நெருக்கமாய் குழைந்தாள்.
செந்தில் சிரித்துக்கொண்டான்.
“ஒரு நாளாச்சும் இந்த ரோட்டுல உங்கூட ஜீப்ல போணும்னு நெனச்சேன்; இன்னிக்கு நடந்துருச்சு” முகமெல்லாம் பூரிப்பு.
“இந்த க்ளைமேட்டுக்கு மூடேத்தாத கருவாச்சி.. அப்பறம் ஒனக்குதே கஷ்டம்..!” அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கிசுகிசுத்தான்.
தேயிலைக்காடு… சில்லென்ற காற்று… அடிக்கடித் தூறி காணாமல் போகும் சாரல். ரம்யமான காட்சியாய் இருந்தது. சுகன்யா உட்பட ஆங்காங்கே நான்கைந்து பேர் தனித்தனியாக தேயிலை பறித்துக் கொண்டிருந்தனர். அதற்கு முன்பாக அட்டைக்கடிக்குத் தப்பிக்க எதோ ஒரு மருந்தை கை, கால்களில் பூசிக்கொண்டனர். வேலை முடிந்து திரும்பியதும் எல்லோருக்கும் அன்றைய சம்பளத்தை பட்டுவாடா செய்தார் மேஸ்த்திரி. கடைசியாக செந்தில் சுகன்யாவுக்கு சம்பளம் கொடுக்க வந்தார். சுகன்யாவுக்கு ஐநூறு, செந்திலுக்கு எண்ணூறு; மொத்தம் ஆயிரத்து முந்நூறு கொடுக்க வேண்டும். ஆனால், மேஸ்திரியிடம் இருந்தது, இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே.
“ந்தாப்பா ஆயிர ரூவா இருக்கு; முந்நூறு ரூவா நாளப்பின்ன வாங்கிக்க.”
“இல்லண்ணே… இப்பவே குடுத்துருங்க” சம்பள விசயத்தில் கறாராக இருந்தான் செந்தில்.
“அட, இருந்த ரூவாயெல்லாம் பட்டுவாடா பண்ணிட்டேனப்பா.. செந்திலு… இப்ப என்னா ஒனக்கு பாக்கி முந்நூறு ரூவாதான…? இந்தாப்புடி ஒரு கோடி ரூவா பரிசடிக்கப் போற லாட்டரி; இருவத்தி நாலாந் தேதி குலுக்கலு. ஆசையா வாங்குனேன்…! ம்ம்ம்ம்..! “
“அய்யே இதெல்லாம் வேணாண்ணே… ரூவாயா குடுத்துருங்க.”
“அட, கோடி ரூவா விழுந்தா பங்குக்கெல்லாம் வரமாட்டேனப்பா… ரொம்ப கெறாக்கிப் பண்ணாம போ.”
சொல்லிவிட்டு கடந்து போனார் மேஸ்த்திரி.
“பீபொறுக்கிப்பய…! இவன் ஊதாரித்தனமா வாங்குன லாட்டரிய ஒழச்சவன் தலையில கட்டிட்டுப் போறான் பாரு…!”
“சரி, விடு மாமா; அந்த ஆளு அப்படித்தான் . நீ வா போலாம்.”
“இந்தாளு என்னடி லாட்ரிச் சீட்டெல்லாம் வாங்குறான்?”
“நம்மூருலதான் லாட்ரீ இல்ல; இங்கன கேரளாக்குள்ள இருக்குது மாமா. ஒருவாட்டி இந்தாளுக்கு பதினஞ்சாயிரம் விழுந்துச்சாம்…! அப்பருந்தே விடாம வாங்கிட்டுதான் கெடக்கான். இன்னிக்கு நம்ம முந்நூரூவாய்க்கு தலையில கட்டிட்டான்”
மனிதர்கள் எப்போதும் அப்படித்தான்; ஒருமுறை நடந்த அதிசயத்தை, அதிர்ஷ்டத்தை மண்டைக்குள் ஏற்றி மிச்ச வாழ்வை அதனோடு பொருத்தி நாசமாய்ப் போவார்கள்.
வீட்டுக்குப் போனதுமாய் அந்த லாட்டரிச் சீட்டை டிவிக்கு மேல் போர்த்தியிருந்த டவலைத் தூக்கி அதனுள் பத்திரப்படுத்தினாள். பால் அட்டை, கேபிள் அட்டை, எப்போதோ எடுத்த பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவில் மீந்த இரு நகல்களுடன் இந்த லாட்டரிச் சீட்டும் பத்திரமாய்த் தூங்கியது.
அந்த வார ஞாயிற்றுக்கிழமை செந்தில் குடிக்காமல் இருந்ததால் மகிழ்வாய்க் கழிந்தது.
இரண்டு நாள் கழித்து செந்தில் வேலைக்குப் போனதும், அன்று வேலை இல்லையென திரும்பி வந்துவிட்டான். வீட்டில் சுகன்யாவும் இல்லை; வேலைக்குப் போயிருந்தாள். கடைத்தெரு பக்கம் போனவன் குமரவேலுவைப் பார்த்தான். ‘இன்று குடிக்க கூடாது’ என்ற முடிவில் இருந்தவன், சற்று நேரம் பகடியாய் பேசிப் பொழுதை கழித்துக் கொண்டிருந்தான். ஆனால்,சற்று நேரத்திற்கெல்லாம் குமரவேலுவுடன் ஒயின்ஷாப்பில் குடித்துக் கொண்டிருந்தான். குடிப்பவனின் வைராக்கியம் எல்லாம் அவ்வளவு தான். ‘குடிக்க வேண்டாம்’ என்ற எண்ணம் அவனுக்காய்த் தோன்றியது அல்ல; குடித்தால் வீட்டில் பிரச்சனை வரும் என்று யோசித்ததால். சரி.. இப்போது குடித்தாகி விட்டது. வீட்டைச் சமாளிக்க ஒரு யோசனை வேண்டும்.
குடித்துவிட்டு பிரச்சனை செய்பவர்கள் எப்போதும் ஒரு காரணத்தைத் தயார் நிலையில் வைத்துக் கொள்கிறார்கள். செந்திலுக்கோ இரண்டு காரணங்கள் இருந்தது. ஒன்று, குழந்தை இல்லை; இன்னொன்று, சுந்தர் சுகன்யாவுக்கு போன் செய்தது.
எது எப்படியோ.. சுகன்யா, செந்திலை கேள்வி கேட்டு மடக்காமல் இருக்கவும் செந்தில் செய்ததை தவறு என முன்னிறுத்தாமல் இருக்கவும் இவனுக்கு ஒரு துருப்புச் சீட்டு தேவைப்பட்டது;
அது சுந்தர்..!
சுகன்யா வீடு திரும்புகையில் வீட்டில் முழு போதையில் உட்கார்ந்திருந்தான் செந்தில். அப்படிப் பார்த்ததும் மனதளவில் நொறுங்கிப் போனாள். அவனோடு எதுவும் பேசாத சுகன்யா, வந்து வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் சுந்தரைக் குறிப்பிட்டு ‘தேவிடியா’ பட்டம் கொடுத்து வசைமொழியாய் ஆரம்பித்தான், செந்தில். சுகன்யா பதில் எதுவும் பேசவில்லை. அவன் மீது ஒருவித வெறுப்பு வரத் துவங்கியது.
தம்பதிகளுக்குள் கோபம் கூட மாறிவிடும்; வெறுப்பு அவ்வளவு சீக்கிரம் மாறக்கூடியது, அல்ல. முதல் முறையாய் வெறுப்பின் ஒரு துளி சுகன்யா மனதுக்குள் விழுந்தது. சுகன்யாவுக்கு பின்னிரவு வரை உறக்கம் பிடிக்கவில்லை. இவனைப் பார்த்த காலம் முதல்.. காதலிக்கத் தொடங்கி.. திருமணத்தில் வந்த பிரச்சனைகள் தாண்டி.. இன்று வாழும் வாழ்க்கை வரை.. சந்தோச துக்க சண்டையிட்ட எல்லா நிகழ்வுகளையும் மனதுக்குள் ஒருமுறை படமாய் ஓட்டி முடிக்க அவளுக்கு அந்த பின்னிரவு வரை தேவைப்பட்டது. உறங்காமலே கனவு கண்டாள். நேரம் காலை மூன்று மணியை நெருங்கியிருந்தது.
ஆனால், செந்தில், அப்படியே உறங்கிப் போனான். அவனது லுங்கியை ஒழுங்குபடுத்தி தலையணை வைத்து படுக்க வைத்திருந்தாள். அவள் இவனுடன் படுக்காமல் முதல்முறையாக தரையில் ஒரு தலையணை மாத்திரம் வைத்து உறங்கினாள். தம்பதிகளுக்குள் மனதில் உண்டாகும் உளைச்சலை வெளிப்படுத்தும் முதல் விடயம், தள்ளிப்படுத்தல். இங்கு சமாதானமாய்ச் சேர்ந்தால் கூடல் இனிக்கும்; இல்லையேல் வெறுப்பு வளரும்.
இந்த நான்கு ஆண்டு மணவாழ்வில் அவளுக்கு தலையணை அதிகம் தேவைப்பட்டதே இல்லை. பெரும்பாலான நாட்களில் செந்திலின் இடது கையில் தலைவைத்து தான் உறங்கிப் போவாள். இன்று தனியாய்த் தலையணையுடன்.
அவனோ கட்டிலில்…
விடிவதற்கு முன்னால், செந்திலுக்கு தூக்கத்திலே இலேசாக போதை தெளிய.. ஏதேதோ எண்ணங்கள் மனதுக்குள் ஓடியது. வெளியில் பனி பொழியும் அதிகாலை நேரத்திலும் இவன் முகம் வியர்க்கத் தொடங்கியது. கண்கள் திறவாமலே எதோ சுருக்கங்கள் வெளிப்பட்டது.
.
.
அடுத்த நாள் 24 ஆம் தேதி. சுகன்யா வேலைக்குப் போய்விட்டாள். 11 மணி சுமாருக்கு, சுகன்யாவின் மேஸ்த்திரி வந்து முந்நூறு ரூபாயைக் கொடுத்து அந்த லாட்டரிச் சீட்டைக் கேட்டார். வீட்டில் இருந்த சண்டை நிலவரத்தில், அந்தச் சீட்டை இவனுக்கோ தேடி எடுக்க தோணவில்லை.
“செந்திலு முந்நூறுக்கு பதிலா ஐநூறு ரூவா தர்றேனப்பா; இல்லல்ல ஆயிர ரூவா தர்றேன்!” என்று மேஸ்திரி சொன்னதும் செந்திலுக்கு சந்தேகம் வலுத்தது.
“அது எப்பவோ கசக்கித் தூக்கிப் போட்டாச்சுண்ணே… நீ குடுத்தப்பவே கோவத்துல அங்கனயே தூக்கிப் போட்டுட்டேன்!” என்றான்.
செந்தில் சட்டையைப் பிடித்து ஆவேசமான குரலில் “மடப்பயலே, போச்சுடா ஒரு கோடி…! ஒரு கோடி விழுந்திருக்குடா..!” சற்று நேரம் புலம்பிவிட்டு.. தலையில் அடித்தபடி மேஸ்திரி சென்றார்.
செந்திலுக்குப் பரவசமும் ஒருவித பயமும் தொற்றிக் கொண்டது.
கோடி ரூபாய் லாட்டரி விழுந்த குஷியில் செந்தில் தலைகால் புரியாமல் வீட்டுக்கும் வாசலுக்கும் நடந்து கொண்டிருந்தான். தொங்கிக் கொண்டிருந்த அம்பிகா காலண்டரில் தேதி கிழித்தான், தேதி இருபத்தி நான்கு. சுட்டு விரலால் ராசிபலனைத் தடவினான். இவனது கும்ப ராசிக்கு ‘அதிர்ஷ்டம்’ என்று போட்டிருந்தது. கண்ணாடி பார்த்து சிரித்துக் கொண்டான்.
சற்று நேரத்திற்கெல்லாம் வெளியில் சென்றவன், அங்கு முன்னாள் லாட்டரி சீட்டு விற்பனையாளராய் இருந்த தங்கராசு வீட்டிற்குச் சென்றான். தமிழகத்தில் லாட்டரி இருந்த போது ‘தங்கம் லாட்டரி’ என ஊருக்குள் லாட்டரி விற்பனையில் வெகு பிரபலமான ஆள். தங்கராசுவைத் தனியே வெளியில் அழைத்துச் சென்று கேரளத்து லாட்டரிச் சீட்டில் ஒரு கோடி ரூபாய் பணம் விழுந்ததையும் அதை பெறும் வழிமுறைகளையும் கேட்டுக் கொண்டான். ஒரு சிறு தொகையும் அதற்கான ஊதியமாய்த் தரச் சம்மதித்தான்.
அங்கிருந்து திரும்பி வந்து… வீட்டில் பீரோ, கண்ணாடி, அலமாரி எல்லாம் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தான், ‘அந்த லாட்டரி சீட்டு எங்கே?’ என. வேலைக்குப் போயிருந்த சுகன்யா திரும்பி வரும் நேரம் ஆனது; ஆனால், அன்று நேரம் அதிகமாகியும் அவள் வரவில்லை, இரண்டு மணி நேரமாக அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான், செந்தில். வாசலில் தங்கராசுவும் உட்கார்ந்திருந்தார். சற்று நேரத்தில் சுகன்யா சுந்தருடன் பைக்கில் வந்து இறங்கினாள். செந்திலின் பரவசம் மொத்தமும் காலியானது; உடல் குப்’பென வியர்த்து இரத்தம் சூடானது. ஆனால், சுகன்யா மிகவும் சாதாரணமாகவே நடந்து வீட்டு வாசலுக்கு வந்தாள். செந்தில் கோபத்தை அடக்கிப் பல்லைக் கடித்துக் கொண்டு சுகன்யா, சுந்தர் இருவரையும் மாறிமாறி பார்த்தான்.
பக்கத்து வீட்டு அரசமணி பதறியபடி, “ஏய் என்ன புள்ள.. என்ன இப்படி பண்ணிட்டு திரியுற..?”
“பதறாத மதினி.. நான் ஒண்ணும் பண்ணல; இனிமேல் தான் பண்ண போறேன், கல்யாணம்.!
ஆச ஆசயா இந்த மனுசன காதலிச்சு கல்யாணஞ் செஞ்சேன். ஆனா, இந்த மனுசன பாரு.. எனய நம்பல; சந்தேகப்படுறாரு.. மானங்கெட பேசுறாரு. இந்த லட்சணத்துல இவரு கூட இனியும் வாழ்ந்தா.. அது ரெண்டு பேருக்குமே நல்லதில்ல. அதனால நா சுந்தர கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு முடிவு பண்ணி இருக்கேன்! இனி எந்த பிரச்சனையும் வேண்டாம்; இதுக்கப்புறம் என்மேல எந்த உரிமையும் இந்தாளுக்கு இல்ல..!” சுகன்யா பேசி முடிக்க இடிந்து போய் அப்படியே வாசலில் உட்கார்ந்தான் செந்தில்.
“ஓ.. இம்புட்டு தூரம் பேச ஆரம்பிச்சிட்டியா? இங்காருடி… நீயென்னடி எனைய வேணாம்ன்றது… நா சொல்றேன்.. நீ எனக்கு வேணாம் டி.”
“சரி.. அப்ப நாங்க போறோம்; அந்த ஒரு கோடி ரூவா பணத்த பூரா நானே வாங்கிக்கிறேன்.” திகைத்து வாயடைத்துப் போனான், செந்தில். முந்தைய நாள் சண்டையில் மன உளைச்சலில் இருந்தவள், வேலையில் லயிக்காமல் பாதியிலயே வீடு திரும்புகையில், சுகன்யாவைப் பார்த்த மேஸ்திரி லாட்டரியில் பணம் விழுந்ததையும், அந்தச் சீட்டை செந்தில் கிழித்தெறிந்ததாகச் சொன்னதையும் புலம்பியிருந்தார். அதன் பின் அவள் சுந்தரைச் சந்தித்து, கலந்து பேசி வீட்டிற்கு கூட்டி வந்திருக்கிறாள். “சரி… நானே வாங்கிக்கவா” சுகன்யா மறுபடியும் சொல்ல
“என்னா மயித்துக்கு? எனக்குத் தரவேண்டிய சம்பள பாக்கிக்குதான அந்தாளு அந்த லாட்டரிச்சீட்ட குடுத்தான்…! ஒழுங்கா சீட்டை குடுத்துட்டு அந்த தேவிடியாப் பயலோட எங்க வேணா போயி நாசமா போ.”
“எதே… உன்னோட சம்பள பாக்கியா?? ரெண்டு பேரு சம்பளத்தையும் ஒன்னாதான் கொடுத்தான்; அதுல பாக்கிதான் அந்த லாட்டரிச் சீட்டு! அன்னைக்கு அந்த வேலைக்கு ஒன்னய கூட்டிட்டு போனதே நானு. அப்ப எனக்கு அதுல பங்கு இருக்குதான?”
இந்த லாட்டரிச் சீட்டு… கோடி ரூபாய் பணம் விவகாரம் என எதுவும் தெரியாத அரசமணி இருவர் முகத்தையும் குழப்பத்துடன் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள். அதுசமயம் இளங்கோவும் வேலை விட்டுத் திரும்பி வந்தார்; இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்த விவரங்களை அரசமணி மூலமாகத் தெரிந்து கொண்டார்.
“ஏம்மா… என்னதான் பணங்காசு இருந்தாலும்.. செந்திலு கூட வாழ்றது தானம்மா ஒனக்கு மரியாத.. சந்தோசம்.. கௌரவம்.. எல்லாம்!
என்ன செந்திலு.. நீ விவரமான பய… கஷ்டப்பட்ட காலத்துலயெல்லாம் அந்த பிள்ளய கூடவே வச்சிருந்த.. இப்ப ஏதோ அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு..! இப்ப போய் அந்த பிள்ளய தூரமா வைக்கணுங்கிறியே.. நல்லாவா இருக்கு?”
இளங்கோவின் பேச்சை இருவருமே பொருட்படுத்தவில்லை அவர்கள் யோசனை பணத்தை பற்றியே இருந்தது. அதிக பணம் கைக்கு வரும் போது அதீத சுயநலம் மனிதனை ஆட்கொள்கிறது.
“எண்ணேய்… நாலு காசு கையில இருந்தாலே பாட்டிலுங் கையுமா சுத்துற மனுஷன்… இப்ப இம்புட்டு காசு..! இந்தாளு ஒழுங்கா இருக்குமுன்னு நினைக்கிறீங்க?” சுகன்யாவின் உடல் மொழியே மாறி இருந்தது. குரலில் ஒரு சிறு அலட்சியம் ஏறி உட்கார்ந்திருந்தது.
“காசு கைக்கு வர்றதுக்கு முன்னாடியே ஒருத்தன கையில புடிச்சுக்கிட்டு வந்திருக்கா. இவள வச்சு நான் வாழணுமா?” அனைவரும் மௌனம் காக்க செந்திலே மேற்கொண்டு தொடர்ந்தான்.
“பத்து பதினஞ்சு நாள்ல பணம் வந்துரும்; வரி போக வர்ற காச ஆளுக்கு பாதி எடுத்துக்கிட்டு அவங்கவங்க வழிய பாத்து போயிக்க வேண்டியதுதான்” செந்தில் யார் முகத்தையும் பார்க்காமல் பொதுவாகச் சொல்லி முடித்தான். சுகன்யா வீட்டிற்குள் சென்று டிவி மேல் டவலுக்கு அடியில் இருந்த லாட்டரிச் சீட்டை எடுத்து தங்கராசுவிடம் கொடுத்தாள். தங்கராசு அதை வாங்கி செந்திலிடம் கொடுத்தார்.
சுந்தர், சுகன்யாவின் காதில் ஏதோ கிசுகிசுக்க, செந்தில் முறைத்தான். அரசமணியும், இளங்கோவும் அருவருப்பாக பார்த்தனர். ‘என்னவாம்?’ என்பது போல் புருவத்தை உயர்த்தி சுகன்யாவிடம் கேட்டார், இளங்கோ.
“இல்லண்ணே… காசு, பணம் வந்ததுக்கப்புறம் எனக்கும் பாதுகாப்பு வேணும்ல..? அதனால சட்டப்படி விவாகரத்து வாங்குறது அப்புறம் வாங்கிக்கிறேன்; அதுக்கு முன்ன ஊரறிய பிரியிறதுக்கு பஞ்சாயத்து வச்சு முடிச்சுக்குவோம்” சுகன்யா முடிக்க,
“ஏன்னா.. விவாகரத்தும் வாங்காம… பஞ்சாயத்தும் வைக்காம நாங்க ஒண்ணா இருந்தா அது நல்லா இருக்காதுல்ல?” அத்தனை நேர கலவரத்திற்குப் பின்பு, முதன்முறையாக சன்னமான குரலில் திருவாய் மலர்ந்தான் சுந்தர். அவன் சொல்லி முடித்ததும் ஆகச்சரியாக “த்தூஊ..!” என துப்பினான், செந்தில். பீரோவில் இருந்த அவளது புடவைகள் மற்ற துணிமணிகள் அனைத்தையும் இரண்டு பைகளில் எடுத்துக் கொண்டு சுகன்யா, சுந்தரோடு கிளம்பினாள்.
.
.
ஒரு பக்கம் செந்தில் தனது குடிகாரக் கூட்டாளி குமரவேலுடன் சேர்ந்து ஒரு ‘பார்’ வைக்க மும்முரமாய் விசாரித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஏற்ற தொழில்! உடன் ‘இரண்டு, மூன்று பழைய கார்கள் வாங்கி வைத்துக் கொண்டால் டிராவல்ஸ் போலவும் நடத்தலாம்’ என்றும் திட்டம் போட்டுக் கொண்டிருந்தான்.
இன்னொரு பக்கம் சுகன்யா தான் வேலைக்குப் போகும் தேயிலைக் காடுகளில் ஒரு ஏக்கர் அளவுக்கு விலை கேட்டுக் கொண்டிருந்தாள்; சுந்தருடன் அங்கு போய் இருந்துகொண்டு தேயிலை காட்டைப் பராமரித்து அங்கேயே ஜீவனம் பண்ண திட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.
நான்கு பெரியவர்கள் கூடி ஒப்புக்கு ஒரு பஞ்சாயத்து கூட்டி செந்தில், சுகன்யா தம்பதி பிரிவதாக அறிவித்து, சட்டரீதியாக விவாகரத்து பெறும் வரை சுகன்யா சுந்தரின் பாதுகாப்பில் இருக்க சம்மதம் தெரிவித்தனர்; செந்திலும் உடன் சம்மதித்தான். சுகன்யா, சுந்தருடன் மனதார வந்துவிட்டாலும் மனதளவில் இன்னும் புதுவாழ்வு வாழ தயார் நிலையில் இல்லை, என்பதை சுந்தரும் அறிந்தே இருந்தான். இது சுந்தருக்குள் ஒரு மனக்குழப்பத்தை உண்டாக்கியது; ஒருவேளை பணம் வந்தவுடன் திரும்பவும் இவள் மனம் மாறி விடுவாளோ? என்று. ‘ஓர் இரவு எனினும் அவளோடு வாழ்ந்து விட்டால் அவள் தன்னை விட்டுப் போக மாட்டாள்’ என்று கணக்கு போட்டான். அன்று இரவே அவளைத் தொட முயற்சித்தான். அவள் தனக்குக் காலையிலிருந்தே தலைசுற்றலாக இருப்பதாகச் சொல்லி நிராகரித்தாள். பேசிக் கொண்டிருக்கையில் தலைசுற்றல் அதிகமாகி குமட்டலில் வாந்தி எடுத்தாள். உடனடியாக பைக்கில் ஏற்றி அருகில் இருந்த டவுனில் பிரியதர்ஷினி டாக்டரிடம் காட்டினான். சுகன்யா கர்ப்பமாய் இருப்பதாக டாக்டர் சொல்லவே சுகன்யாவும் சுந்தரும் ஒரு சேர அதிர்ந்தனர். இது அவளது நான்காண்டு தவம்; வரம் கிட்டுகையில் உடன் கணவன் இல்லை. சில நேரம் இப்படித்தான், வாழ்க்கை சந்தோசத்தையும் துக்கத்தையும் ஒரே நேரத்தில் கொடுத்து திணறடிக்கும்.
டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தை மட்டும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினர். வீடு திரும்பும் வரை இருவரும் ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டிற்கு வந்தவள் மாத்திரையைப் போட்டுக்கொண்டு அப்படியே உறங்கிப் போனாள். ஆனால், சுந்தருக்கு உறக்கம் பிடிக்கவில்லை.
‘அந்தக் குழந்தையைப் பெற்றுக் கொள்வதா? கலைப்பதா? பெற்றுக் கொள்வதென்றால் செந்திலின் குழந்தையை தான் எப்படி வளர்ப்பது?
‘கலைப்பது என்றாலும் சுகன்யா சம்மதிப்பாளா? இது பற்றி எப்படி பேசுவது??’ குழப்பத்திலயே அந்த இரவு கழிந்தது. அதிகாலையில் பாத்ரூம் செல்வதற்காக எழுந்தவள் சுந்தர் உறங்காமல் இருப்பதைக் கண்டு அருகில் வந்தாள். அவன் தோளைப் பற்றி,
“என்ன ஆச்சு? தூங்கலயா?” என்றாள்.
“இல்ல.. இப்ப நீ கர்ப்பமா இருக்கல.. அதான் என்ன பண்றது? ஏது பண்றதுன்னு ஒண்ணும் புரியல” என்றான்.
“ஏன் நா கர்ப்பமா இருக்கிறதுல ஒனக்கு என்ன பிரச்சன? நா கர்ப்பமா இருந்தா ஒனக்கு எங்கூட சந்தோஷமா இருக்க முடியாது! அதான?”
” அட அது இல்ல சுகன்யா.. இது செந்திலோட கொழந்த. நாம எப்படி வளர்க்க முடியும்?”
“யார் சொன்னது? இது என்னோட கொழந்த; நா வளத்துக்குவேன். எங்கிட்ட ஒன்னும் இல்லாத காலத்துல எனக்கொரு கொழந்த இருந்தாலே நா அவன ராஜா மாதிரி வளர்ப்பேன்; இப்போ எங்கிட்ட போதுமான அளவு பணம் இருக்கு.. என் கொழந்தய வளக்க எனக்கு என்ன பெரச்சன? “
“அதத்தான் நானுஞ் சொல்ல வரேன்; இந்த பணம் ஒன்னோட பங்குதான.. செந்தில்கிட்ட இருக்குறது அவனோட பங்கு! அப்ப குழந்தைக்குன்னு ஒரு பங்கு வரணும்ல? இப்ப அதையும் அவங்கிட்ட கேட்டு வாங்கணும்ல?” சுகன்யா கேவலமாகப் பார்த்தாள் சுந்தரை. மேற்கொண்டு எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டாள். சில மனிதர்கள் எப்போதும் அப்படித்தான்.. பணமென்று வந்துவிட்டால் தன் கடைசி சதவீத அல்பத்தனத்தையும் காட்டத் தயங்குவதில்லை.
சுகன்யா கர்ப்பமாய் இருக்கும் விசயம் செந்திலுக்குத் தெரிய வரவே கோடி ரூபாய் கிடைத்ததை விடக் கூடுதலாய் மகிழ்ந்தான். ஆனால், இனி ஒருபோதும் அவள் தன்னோடு இருக்கப் போவதில்லை என்பது நினைவுக்கு வரவே அந்தநொடி அவனது மொத்த சந்தோசமும் இருண்டது. அவள் கருத்தரித்தால் எப்படியெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டுமென வெகுகாலமாய் கொண்டிருந்த அவன் ஆழ்மன ஆசைகளயெல்லாம் நினைவு கூர்ந்தான். கண்கள் பனித்தது.
ஆண் எத்துனை அயோக்கியத்தனம் செய்தாலும், இது மாதிரி நொடிப்பொழுதில் புனிதப்பட்டுப் போக கூச்சப்படுவதே இல்லை. பூட்டிய வீட்டுக்குள் தனியாய் அழுதான். கவனிப்பாரற்ற நேரத்தில் துளிர்க்கும் கண்ணீருக்கு எப்பொழுதும் அடர்த்தி அதிகம். அந்தக் கண்ணீர் அவனை உண்மையில் புனிதப்படுத்தியது. அவள் போட்டோவை எடுத்து வைத்துக் கொண்டு
“சுகன்யா நான் தப்பு பண்ணிட்டேன்; இனி எப்பவும் ஒன்னய நான் தப்பா பேசமாட்டேன்டி.. இந்தா என்னோட பங்கு காசையும் நீயே வச்சுக்கோ. நீ என் கூட மட்டும் இருந்தா போதும்..! எனக்கு நீ மட்டும் தான்டி வேணும் கருவாச்சி..!” என்று கதறி அழுதான்.
திரும்பத் திரும்ப அப்படியே சொல்லி அழுது கொண்டிருக்க துக்கம் தொண்டையை அடைக்க.. மூச்சுத்திணறல் ஏற்பட்டது போல் உணர்ந்தான்.
.
.
சட்டென தூக்கத்தில் விழித்தவன்… இடவலமாய்த் திரும்பிப் பார்த்தான். சுகன்யா தனியாக தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதைப் போல் தெரிந்தது. கண்களைத் தேய்த்து திருப்பவும் பார்த்தான். அப்படியேதான் படுத்திருந்தாள். சுந்தரோடு போனவள் எப்போது வந்தாளென யோசித்தான். பீரோவைத் திறந்து பார்த்தால் அங்கே சுகன்யாவின் புடவைகள் அனைத்தும் இருந்தபடியே இருந்தது. செந்திலுக்கு ஒன்றும் விளங்கவில்லை; டிவி மேல் டவலுக்கு அடியில் பார்த்தான், அந்த லாட்டரிச் சீட்டும் அப்படியே இருந்தது. டிவிக்கு அருகே சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த அம்பிகா காலண்டரைப் பார்த்தான்; அது தேதி இருபத்தி இரண்டைக் காட்டிக் கொண்டிருந்தது. திரும்ப லாட்டரி சீட்டைப் பார்த்தான். அதில் ’24ஆம் தேதி குலுக்கல்’ என மலையாளத்தில் எழுதி இருந்தது. குலுக்கல் இன்னும் நடக்கவில்லை; இன்னும் இரண்டு நாள் இருக்கிறது. ஆக..
லாட்டரி விழுந்தது…
சுகன்யா சுந்தரோடு வந்தது…
அவனோடே சென்றது…
சுகன்யா கர்ப்பம் தரித்தது…
என அத்தனையும் கனவா??
ஒரு நிமிடம் நிதானித்து யோசித்தான்; முதலில் அந்த லாட்டரி டிக்கெட்டை கிழித்துப் போட்டான். தரையில் படுத்திருந்த சுகன்யா அருகில் போய் உட்கார்ந்தான்.. அவள் நைட்டி முழங்காலுக்கு ஏறி இருந்தது; முதன்முறையாக அவள் காலை பிடித்தான்; கெண்டைக்காலைப் பிடித்து.. பின் பாதத்தைப் பிடித்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் சட்டென எழுந்து நைட்டியை கீழே கால் வரை இறக்கிவிட்டு.. அவனை ஒரு கணம் உற்றுப் பார்த்தாள். அந்த நான்கு வருடத்தில் அவனிடம் இல்லாத ஒரு முகபாவனையைக் கண்டாள். ஏதோ பேய் அறைந்தவனைப் போல் இருந்தான். அழுது வீங்கிய முகம் வித்தியாசமாய்த் தெரிந்தது.
“என்னாச்சு மாமா… என்னாச்சு…??” என்று பதட்டத்துடன் செந்திலின் கன்னத்தைத் தடவி கழுத்தைத் தடவி தலைகோதி வாஞ்சையாய்க் கேட்டாள். ஒரு கணம் பேச்சு எதுவும் வரவில்லை செந்திலுக்கு. மழுங்க மழுங்க விழித்தான்; அவன் தலையை தன் மாரோடு அணைத்துக் கொண்டாள். சற்று ஆசுவாசம் ஆனதும்… அவன் கண்ட அந்த கனவினைச் சொன்னான்.
“கனவு தான… விடு மாமா..!” அழுகை நின்றது.
“அப்ப நா மாசமா இருந்தா தான் நீ மாறுவியா? “
“இல்லடி கொழந்த என்ன கொழந்த? எனக்கு நீ தான்டி முக்கியம்! இந்த ஒரு ராத்திரியில எனக்கு எல்லாமே புரிஞ்சிருச்சு”
இந்தக் குழந்தையின்மைதான் ஒரு தம்பதியை என்னவெல்லாம் செய்கிறது.. காதலின் பூரணத்தை அனுபவிக்க வேண்டிய அந்தக் காமத்தை.. கூடலை உணர விடாமல், ஏதோ குழந்தையை உண்டாக்கும் ஒரு செய்முறையாகச் செய்ய நிர்பந்திக்கும் அவலம். உச்சம் தொட்ட பின் பரவசப்பட வேண்டிய நிமிடங்களை ‘இம்முறையேனும் தங்கிடுமா?’ என்றொரு ஐயப்பாட்டிலேயே நகர்த்தும். எல்லாம் இந்த குழந்தை வேண்டி நிகழும் அவலங்கள். செந்தில் தீர்க்கமாகவேச் சொன்னான்,
“நமக்கு கொழந்த வர்றப்ப வரட்டும்; அதுக்காக நாம எதயும் மாத்திக்க வேணாம். கொழந்த வந்தாலும் வரலனாலும் நீ எனக்கு எப்பவும் ‘எங் கருவாச்சி’ தான்.” நீர் கோர்த்த விழிகளோடு சுகன்யா செந்திலைப் பார்த்தாள்.
கனவின் இறுதியில் அவன் புலம்பிய குழறிய அதே வார்த்தைகளை அவளிடம் சொன்னான்.
“இனி எப்பவும் ஒனய தப்பா பேசமாட்டேன்டி.. நீ மட்டும் என்னய விட்டுப் போயிடாத கருவாச்சி..!” என்று அழுதான்.
“அழாத மாமா…”
கம்மலான குரலில் சொன்னாள்.
“இல்லடி.. நா ஒன்ன்…”
மேற்கொண்டு அவனைப் பேச விடாமல் அவன் வாய் மீது வாய் பொருத்தினாள்.. அப்படியே சில நிமிடங்கள் நீடிக்க.. அவனது சுவாசம் சீரானது.
அதற்குப் பின் முத்தத்தில் அவனது ஆதிக்கம் துவங்க.. அந்த அதிகாலையில் அவனது கை,
டீவி ரிமோட்டைத் தேடியது.