இணைய இதழ்இணைய இதழ் 60தொடர்கள்

அகமும் புறமும்; 09 – கமலதேவி

தொடர் | வாசகசாலை

வேட்டைச்சாறு

ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள் இழைப்
பாடுவல் விறலியர் கோதையும் புனைக;
அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம்
பரியல் வேண்டா; வரு பதம் நாடி,
ஐவனம் காவலர் பெய் தீ நந்தின்,
ஔி திகழ் திருந்து மணி நளிஇருள் அகற்றும்
வன் புல நாடன், வய மான் பிட்டன்
ஆர் அமர் கடக்கும் வேலும், அவன் இறை
மா வள் ஈகைக் கோதையும்,
மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே!

புறநானூறு : 172
பாடியவர்: வடமண்ணக்கன் தாமோதரனார்
திணை: பாடாண் திணை
துறை: இயன்மொழி

பாடலுக்குரிய தலைவனின் இயல்புகளை பாடுதல் என்பது இயன்மொழிக்காஞ்சித்துறையின் பொதுவான இலக்கணமாகும். இது பாடாண்திணைக்குமானது.

பிட்டங்கொற்றன் என்பவர் சேரமான் கோதையின் ஆளுகைக்குட்பட்ட மலைநாட்டு சிற்றரசர் என்றும் சேரமானின் தளபதியாக இருந்தவர் என்றும் கூறப்படுகிறார். இது பிட்டங்கொற்றனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட பாடல்.

‘ஏற்றுக உலையே ஆக்குக சோறே’ என்ற வரியில் உள்ள ‘உற்சாகமான ஆணையிடும்’ மனநிலையே இந்தப்பாடலின் மொத்த உணர்வு நிலை . ஒவ்வொரு வரிக்கும் அது ஏறிச் சென்று பகைவரும் வாழ்க என்று உயரத்தில் நிற்கிறது. எத்தனை களிப்பு! முதல் வார்த்தையே மனதை பித்தாக்குவது. இதை எழுதியவர் இந்த முதல் சொல்லை சொல்லும் போது எந்த உணர்வு நிலையில் இருந்திருப்பாரோ அதே உணர்வு நிலையில் கேட்பவர் அனைவரும் இன்றுவரை நிற்கமுடிகிறது. சில சொற்கள் மந்திரம் போன்றவை. மானுடம் முழுமைக்குமான சொல் இது. உலகை நோக்கி ‘மகிழ்ந்திருங்கள்’ என்று ஓங்கிச் சொல்ல ஒருவனுக்கு எத்தனை விசாலமான மனது வேண்டும். அது கவிஞனுக்கான மனம். கவிஞனே மானுடம் முழுமைக்குமான சொற்களை காலகாலத்திற்கும் விட்டு செல்கிறான். ஆணையென்றும், அன்பென்றும், கூற்றென்றும் முழங்கும் சொற்கள். ‘எண் எழுத்து இகழேல்’, ‘அன்பென்று கொட்டு முரசே’, ‘அறம் கூற்றாகும்’ என்ற சொற்களை காலத்தின் மீது ஏவி விட்டுச் சென்றவர்களில் ஒருவன் தான் ‘ஏற்றுக உலையே’ என்று கூறி நம்மை மகிழ்ந்திருக்கச் சொன்னவன். 

ஊர்த்திருவிழா ஊர்விருந்துடன் தொடங்கும். எல்லை தெய்வங்களுக்கு பலிகள் கொடுக்கப்படும். தாத்தா காலம் வரை ஆடுகள்,எருமை,கொல்லி மலை பன்றிகள் என்று மூன்று வகையான விலங்குகளும் பலியிடப்பட்டன. கோடையில் பன்றிகள் தங்கள் குடும்பம் சகிதமாக இரவு நேரத்தில் மலையிறங்கி கடலைக் காடுகளை, கிழங்குக் காடுகளை அகழ்ந்தெடுக்கும். திருவிழாவும் கோடையில் வருவதால் அந்தகாலத்தில் கண்ணி வைத்து பிடிப்பார்கள் என்று சொன்னார்கள். மலையேறி பன்றி பிடிக்க வேண்டும் என்றால் வலிமையே உருவாக தெய்வம் இறங்கி வந்தால் தான் முடியும். அவை கொல்லிமலையை அகழ்ந்து உணவாக்கிக்கொண்டு வளரும் உயிர்கள். யானையின் தந்தத்தைப் போலவே இந்தப் பன்றிகளின் கோரைப்பற்களை கண்டால் உடல் சிலிர்க்கும். நிலத்தை குத்தி அகழ்ந்து போடும். அத்தனை வலிமையான ஜீவராசி.

இப்பொழுது ஆடுகள் மட்டும் பலியிடப்படுகின்றன. இரவுப் பொழுதில் ஊர் விருந்து நடக்கும். என்னுடைய பத்தாவது வயதில் முதன் முதலாக அய்யாவின் கையைப் பிடித்துக்கொண்டு ஊர்விருந்திற்குச் சென்றேன். ஊரைக்கடந்து மேற்கு எல்லையில் கொல்லிமலை அடிவாரத்திலிருந்து சற்றுமுன்னே பெரும்பாதையில் இருக்கும் எட்டடியான் எல்லையில் கும்பல் திரண்டிருந்தது. எட்டடியான் கல்லாக நின்று சந்தனமும் குங்குமமும் பூசி நின்றார். கல்லாற்றின் மேட்டுச் சரிவில் பாசன வாய்க்கால் ஓரத்தில் இருந்த வயலில் பெரிய பெரிய சால் பானைகள் கல்கூட்டிய அடுப்புகளில் ஏற்றப்பட்டிருந்தன. [ஆகப்பெரிய பானை ‘சால்’ என்று அழைக்கப்படுகிறது] காய்ந்த மரங்களை ஒடித்து அடுப்பிற்குள் தள்ளினார்கள். அவை ‘மடமட’வென்று வெடித்து பற்றி எரிந்தன.

அய்யா எனக்கு மேற்குத் திசையை காட்டினார். கொல்லிமலையின் பின்னால் சூரியன் மறைந்து பொழுது இறங்கிக் கொண்டிருந்தது. அதுவும் சால்களுக்கு கீழே எரியும் தீயைப்போல இருந்தது. பொழுது இறங்க இறங்க ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குவிந்தனர். நன்கு இருட்டியதும் பூஜை நடந்தது. சங்கின் ஒலி காதை பதறச் செய்ய, சேமக்கலத்தின் ஒலி விடாமல் எழுந்தது. எட்டுதிசைகளுக்கும் பலி சோறு வைப்பதற்காக ஆட்கள் கிளம்பிச் சென்றார்கள். அவர்கள் கைகளில் மூடிய வாழை இலைகள் இருந்தன. “மாப்ள..நீங்கெல்லாம் முன்னால வாங்க,” என்று பூசாரி பாட்டாவின் குரல் அழைத்தது. அய்யா பின்னால் திரும்பி இன்னும் சிலரை அழைத்து விட்டு என் கையைப்பிடித்தபடி முன்னால் சென்றார். சாமிக்கு முன்னால் அடுக்கடுக்காக பெரிய இலைகள் விரிக்கப்பட்டன. சோற்று உருண்டைகளும்,ஆக்கிய கறியும் படையலாக வைக்கப்பட்டன. சுற்றிலும் பந்தங்களின் ஒலி காற்றில் அசைந்து இருளைக் கலைக்க முயன்று கொண்டிருந்தது. அனைவரும் சாமி கும்பிட்டானதும் கூட்டம் கலையைத்தொடங்கியது.

“பெரும்பாத நெடுக்க எல்லாரும் ஒக்காருங்க,”என்ற பலத்த குரலிற்கு கட்டுப்பட்டவர்கள் போல பாதைக்கு இருபுறமும் வரிசையாக ஆட்கள் அமரத்தொடங்கினார்கள். “கவிச்சி ஆகாதவங்க பாறாங்கல்லு மேட்டுல ஒக்காருங்கய்யா. ஆகாரம் எடுக்காம வெறும் வயித்தோட போயிறப்பிடாது,” என்று அவரே ஓங்கிச் சொன்னார். நாங்கள் மேடான இடத்தில் இருந்த பாறைக்கு கீழே அமர்ந்தோம். அங்கிருந்து பார்த்தால் நீண்ட வரிசையில் ஆட்கள் உண்பதன் முழு சித்திரமும் அழகாகத் தெரிந்தது. வாழை இலை வரிசையாக விரிக்கப்பட்டு பெரிய உருண்டையாக சோற்றை உருட்டி வைத்தார்கள். ஒரு இலைக்கு ஒரு உருண்டை. உண்பவர்கள் சோற்றுண்டையின் நடுவில் பெரிய குழியாக செய்தார்கள். அதன் நடுவில் உள்ள குழி நிறைந்து வழிய ‘வேட்டைச்சாறு’ விடப்பட்டது. அது குழம்பு அல்ல; ‘சாறு’ தான். நீரளவே நீர்த்த குழம்பு. அதன் சுவை எந்த குழம்பிற்கும் இல்லை என்று இந்த ஆண்டுத் திருவிழாவின் போதும் ஆட்கள் சொல்வதைக் கேட்டேன். வெண்பொங்கலுக்கு நடுவில் உடைத்த வெல்லத்தையும், வாழைப்பழத்தையும் ஊன்றி எடுத்த இலைகளை மூங்கில் கூடையில் கொண்டு வந்து எங்களுக்கு அளித்தார்கள். “நல்லா சாப்பிடுங்க…எந்தச் சோறுன்னாலும் இன்னைக்கு திங்கிற சோத்து ருசிக்கு ஈடாவாது பொண்ணு,” என்றபடி ஒரு மாமா நீட்டிய இலையை இரு கைகளாலும் வாங்கினேன். சூடு தாங்காமல் இலையைக் கோணலாக வைத்தேன். மண்தரையில் இலையை இழுக்க முடியவில்லை. அவர் என்னை இலையின் போக்கிற்கு ஏற்ப தூக்கி அமர்த்தினார். “மண்ணுல விரிச்ச இல ‘நம்ம பெறந்த விதி’ பொண்ணு. நம்ம தான் அதுக்கேத்தாப்புல தள்ளி ஒக்காந்துக்கனும்..உம் போக்குக்கு இழுத்தையான்னா இலயோட சேந்து சோறும் போச்சு,” என்று முதுகில் செல்லமாக அடித்தார். இந்த வரிகளை வீட்டில் இலையில் உண்ணும் போதெல்லாம் அய்யா சொல்வார். நான் இலையை அடிக்கடி கிழித்து விட்டு விழிக்கும் ஆள். அன்று சூடான வெண்பொங்கலில் நீராகிக் கலந்த வெல்லத்தில் தோய்த்து உண்ட உணவின் ருசி நாவில் இன்னும் இருக்கிறது.

முன்னாலிருந்த பாட்டா அய்யாவிடம், “சோத்துல ஒதுங்கி நின்னா… எல்லாத்துலயும் விட்டுப்போகும் மருமவனே..உம்பிள்ளைக காலத்துல நமக்குள்ள உள்ள பந்தம் விட்டுப்போவும். ஒங்காப்பாரு எப்படி எலும்பு கடிப்பாரு தெரியுல்ல,” என்று வருத்தமாகச் சொன்னார். அய்யா சிரித்தபடி, “ஒதுங்கி போகலையே மாமா..கூட தானே இருக்கேன்.எம் பிள்ளைங்களும் உங்கக் கூட இருக்கும். விசனப்படாம சாப்பிடுங்க,” என்றார். ‘ஒன்னா இருந்து பசியாறுங்க’ என்றுதான் ஊர்ப்பெரியவர்களும், வீட்டுப்பெரியவர்களும் எப்போதும் சொல்லிக்காண்டே இருக்கிறார்கள். வரிசையாக ஆட்கள் உண்டு முடித்த இலைகளுடன் எழ எழ புது இலைகள் விரிக்கப்பட்டன. பக்கத்து ஊர்களுக்கு எங்கள் ஊர் சார்பில் தண்டோரா போடப்பட்டு அழைப்பு விடப்படும் என்பதால் கும்பல் வந்து கொண்டே இருந்தது. நேரம் செல்லச் செல்ல காற்று குளிர்ந்து வீசியது. நாங்கள் அமர்ந்திருந்த பாறைக்கு மேற்குப் புறம் ஆட்கள் கூட்டமாக அமர்ந்தார்கள். ‘பொழுதாச்சு..’ என்ற குரல் அடிக்கடி ஒலிக்கத் தொடங்கியதும் அய்யா எழுந்து வேட்டியை தட்டிக்கொண்டார். நான் வரமாட்டேன் என்று திரும்பி அமர்ந்து கொண்டேன். “வா.. சாமீ,” என்று என்னை வலுக்கட்டாயமாக தூக்கினார். [ பெண் குழந்தையை சாமி என்றும்,ஆண் குழந்தையை அய்யா என்றும் அழைப்பது வழக்கம்] வேடிக்கை பார்க்க வசதியாக அவரால் இயன்ற வரை உயர்த்தி தூக்கிக்கொண்டு நடந்தார். என்னுடைய அரைப்பாவாடயை காற்றிடமிருந்து காப்பாற்றிக்கொண்டே, “அழாம வேடிக்க பாரு..அங்கப்போய் நிக்கலாம்,” என்றார். “பொம்பளைக, சின்ன பசங்களை பாருங்கய்யா. வெரசா சோத்தப்போட்டு அனுப்புங்க,” என்று அங்கங்கே சொல்லிக்கொண்டிருந்தார்கள். “பழக்கமில்லாத ஆளுகள தூக்கிட்டு வந்து சோத்தப்போட்டு அனுப்பு,” என்று ஒருவர் சிரித்தபடி சொன்னார். ஆற்று மேட்டில் இருந்த பானைகளைக் காட்டி,”ய்யா..அந்த பானைலெல்லாம் என்ன இருக்கு,” என்று கேட்டேன். “ஜூஸ்..பாப்பாவுக்கு சளி பிடிச்சுக்கும்,” என்றபடி மிதிவண்டி நிற்கும் இடத்திற்கு வந்ததும் என்னை அதன் மீது நிற்க வைத்து, “இப்பப் பாரு,” என்றார்.

பெருங்கூட்டம் சலசலப்புடனும் உற்சாகத்துடனும் பேசிச் சிரித்தபடி சுழன்று கொண்டிருந்தது. இருளில் யாரையும் அடையாளம் தெரியவில்லை. உற்சாகமான குரல்கள். ஆட்கள் நடந்து செல்லும் ஒலிகளும் கேட்டன.

“நல்ல ருசி,’

“வயிறு நெறஞ்சி போச்சுய்யா,”

– இன்னும் இன்னும் உற்சாகக்குரல்கள். 

வானத்தில் விண்மீன்கள் செறிந்து கிடந்தன. வழி நெடுக பந்தங்கள். மரங்களில், வயல்காடுகளில், ஓடும் நீரில், வீசும் காற்றில் ஈரம் ஏறிக் கொண்டிருந்தது. குளிரில் கைகளைக் கட்டிக்கொண்டேன். இரவு கடந்து வானம் வெளுக்கும் பொழுதில் வீடு வந்து சேர்ந்தோம். விருந்து இன்னும் மிச்சமிருந்தது. வேட்டையாடி தன் குடியுடன் உண்டு களித்த காட்டு வாழ்வின் இரவுப் பொழுதின் மிச்சங்கள் என்றும் முடிவதில்லை.

உலை ஏற்றி சோறாக்குக.
குறைவின்றி கள் அருந்துக.
விறலியர் மாலை சூடுக.
மகிழ்ச்சியளிப்பதை செய்து
மகிழ்ந்திருங்கள்.
நாளை பற்றிய கவலை வேண்டாம்.
ஐவனத்தின் காவலுக்காக
மூட்டப்பட்ட தீயின் ஔி குறையுமானாலும்,
வலிய வேலினை உடைய 
நம் வயமான் பிட்டனின் நாட்டின் மணிஔி இருள் அகற்றும்.
அவன் வாழ்க.
அவன் தலைவன் கோதை வாழ்க.
அவனின் பகைவர்களும் நெடுநாள் வாழ்க.

[ஐவனம் _ திணை வயல்கள் போன்ற தானியக்காடு] 

(தொடரும்…)

[email protected]

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button