இணைய இதழ்இணைய இதழ் 60தொடர்கள்

கடலும் மனிதரும் – நாராயணி சுப்ரமணியன் – பகுதி 33

தொடர் | வாசகசாலை

கடலின் மண்புழுக்கள்

“பல நூறு கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது” என்று நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் படித்திருப்போம். “அரிய வகை கடல் உயிரினம் பிடிப்பட்டது” செய்திகளுக்கு அடுத்தபடியாக மிகவும் அதிகமாக வரும் கடல்சார் உயிரியல் செய்தி இது. கடலூரில், நாகப்பட்டினத்தில், இராமேஸ்வரத்தில் என தமிழ்நாட்டின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் இதுபோல கடல் அட்டைகள் பிடிபடுகின்றன. ஆனால், கடல் அட்டைகளுக்குத் தமிழ்நாட்டிலோ தென்னிந்தியாவிலோ, இவ்வளவு ஏன் இந்தியா முழுவதிலுமேகூட எங்கேயுமே சந்தை கிடையாது. இங்கே விற்க முடியாத ஒன்றை ஏன் இவ்வளவு தேடித் தேடி சேகரிக்கிறார்கள்?

2015 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் மட்டும் 64,172 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அப்படிப் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மட்டுமே 105 இருக்கும் என்றும் ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. வனவிலங்குகளிலேயே மிகவும் அதிகமாகக் கடத்தப்படுவது கடல் அட்டைதானாம். இந்தியாவில் கடல் அட்டைகளைச் சேகரிப்பதும் விற்பதும் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ள நிலையில், இங்கே கடல் அட்டை என்பது பெரும்பாலும் சட்டவிரோத வனவிலங்கு சந்தை (Illegal Wildlife Trafficking) என்பதோடு மட்டும் நின்றுவிடுகிறது. ஆனால், எல்லா நாடுகளுக்கும் இது வாய்ப்பதில்லை.

“அவர்கள் வந்தால் ஒரு கை பார்த்துவிடுவோம்” என்று கர்ஜிக்கிறார் மெக்சிக்கோவின் யுகடான் தீபகற்பத்தைச் சேர்ந்த ஒரு மீனவர். இங்கே கடல் அட்டை என்பது ஒரு மிகப்பெரிய மாஃபியாவைப் போன்ற தொழில். கடல் அட்டைகளைச் சேகரிக்கும் இடங்கள், விற்கும் களங்கள், இடைத்தரகர்கள் என எல்லாவற்றிலும் கடும் போட்டி நிலவும் வன்முறை நிரம்பிய ஆடுகளம் இது. கடல் அட்டைகள் இருக்கும் வேன்களைக் கவிழ்ப்பது, எதிரி அணிகளின் படகுகள் கிடைத்தால் எரிப்பது என இங்கு எல்லாமே நடந்திருக்கிறது. கடல் அட்டை விற்பனை இங்கு தடை செய்யப்பட்டிருப்பதால் இருப்பது எல்லாமே கறுப்பு சந்தைதான். ஆகவே, இங்கு வன்முறை மிக மோசமாகத் தலைவிரித்து ஆடுகிறது. வனவிலங்குப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் வன்முறையை எதிர்கொள்ளவும் வேண்டும் என்பதால் இதைக் கட்டுப்படுத்துவதும் அதிகாரிகளுக்கு சிக்கலாகியிருக்கிறது. கடல் அட்டைகள் வருவதாக சந்தேகம் உள்ள இடங்களில், ஒரு சாலையில் மட்டுமே 15 சோதனைச்சாவடிகள் வைத்தும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. கப்பற்படையை இதற்காக பணியமர்த்தியிருக்கிறது மெக்சிகோவின் அரசு.

இந்த அளவுக்கு மோசமான சூழல் ஏன் ஏற்பட்டது என்ற வரலாறு முக்கியமானது. மெக்சிகோவைப் பொறுத்தவரை முன்பெல்லாம் கடல் அட்டைகளைப் பிடிப்பது சட்டத்துக்குப் புறம்பானதாக இருக்கவில்லை. ஆனால், தொடர்ந்து அவை பிடிக்கப்பட்டதால் கடல் அட்டைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துபோகவே, விலை வானளவு உயர்ந்தது, விலை அதிகரித்தவுடன் இன்னும் அதிகமான பேர் கடல் அட்டை சந்தையில் ஆர்வத்துடன் நுழைந்தார்கள். இந்த அழுத்தம் காரணமாகக் கடல் அட்டைகளின் எண்ணிக்கை மேலும் குறைய, சீ-சா மரத்தைப் போல இந்தப் பக்கம் விலை உயர்ந்தது. ஒரு கட்டத்தில் கடல் அட்டைகளின் எண்ணிக்கை அதலபாதாளத்துக்கு சரியவே, அவற்றைச் சேகரிப்பது சட்டவிரோதமாக்கப்பட்டது. அதற்குள் விலை கற்பனைக்கெட்டாத அளவுக்கு உயர்ந்திருந்தது என்பதால் கறுப்புச் சந்தையிலாவது இதை விற்கவேண்டும் என்று மேலும் முதலாளிகள் ஆர்வம் காட்டினர். இது ஒரு மீளா சுழற்சியாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. இப்போதெல்லாம் யுகடானின் கடற்கரையில் கடல் அட்டைகள் கிடைப்பதில்லை என்பதால் ஆழத்தில் டைவ் அடித்தால் மட்டுமே அவற்றைச் சேகரிக்க முடிகிறது. தேவையான உபகரணங்களும் பயிற்சியும் இல்லாமல் இப்படி ஆழ்கடலுக்குள் டைவ் அடித்துவிட்டு, போதுமான அவகாசம் இல்லாமல் உடனே கடற்பரப்புக்கு வருவது ஆபத்தானது. அதை Decompression sickness என்பார்கள். இந்தப் பிரச்சனையால் மட்டுமே 40க்கும் மேற்பட்ட கடல் அட்டை சேகரிப்பாளர்கள் யுகடானில் இறந்திருக்கிறார்கள். “அவர் கடற்பரப்புக்கு வந்த உடனேயே என்னவோ போல் இருந்திருக்கிறது. ஓய்வு வேண்டும் என்று முதலாளியிடம் கேட்டிருக்கிறார். வாடிக்கையாளரிடம் பொருளைக் கொடுத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் போ என்று முதலாளி மிரட்டவே, விற்பனைக் கூடத்துக்குப் போயிருக்கிறார். பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்தான், வீடு திரும்பவேயில்லை” என்று அழுகிறார் இறந்துபோன மீனவர் ஒருவரின் மனைவி. கடல் அட்டைகளுடைய விலை இப்போது மிகவும் அதிகரித்திருக்கிறது என்பதால், இதுபோன்ற ஆபத்துகளையும் மீறிப் பலரும் கடலில் இறங்கத் தயாராகவே இருக்கிறார்கள். “கடல் அட்டை ஜுரம் இது. ஊரே இந்த நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது” என்று எழுதுகிறார் ஜிலானொ டி ப்ராவோ. இந்தியாவில் இவற்றைச் சேகரிப்பது சட்ட விரோதம் என்றாலும், இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்ட, உரிமம் உள்ள கடல் அட்டை சேகரிப்பு என்பது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்திலிருந்து கடல் அட்டைகளைப் பிடித்து இலங்கைக்குக் கடத்தும் போக்கும் அதிகரித்திருக்கிறது. ஏற்கனவே எல்லைப்பிரச்சனையில் இருக்கும் இரு நாடுகளுக்கு இடையில் இது ஒரு புதிய சிக்கலாக முளைத்திருக்கிறது. 

ஜப்பானில் இந்த சந்தை வேறு ஒரு தளத்துக்குப் போய்விட்டது. போதைப்பொருட்களைக் கடத்தி வந்த யாகுஸா கடத்தல்காரர்கள், இப்போது கடல் அட்டைகளைக் கடத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்! “அட…. மெத் போதைப்பொருளை விட இதில்தான் லாபம் அதிகம்” என்கிறார்கள்! Breaking Bad தொடர் மீண்டும் எடுக்கப்படுமானால், அதன் மையப்புள்ளியாக இந்தக் கடல் அட்டை இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பலாவ் தீவுகளில், இந்தக் கடல் அட்டை வணிகம் மிகவும் புதிய ஒரு கோணத்தில் பிரச்சனையை உருவாக்கியது. கடலோரங்களில் சிறிய வாளிகளுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் சங்கு, சிப்பி, கடல்பாசி போன்ற உயிரிகளை சேகரிப்பதைப் பார்த்திருப்போம். இதை Gleaning என்பார்கள். பெண்களுக்கான ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக இது எப்படி இயங்குகிறது என்பதைப் பல ஆய்வுகள் பேசியிருக்கின்றன. இந்த செயல்பாடுகளுக்கு நடுவில், அதே கடற்கரையில் இயங்கிய ஆண் மீனவர்கள் குறுக்கிட்டனர். கடல் அட்டை சந்தையின் மதிப்பு கூடியதும் ஆண்கள் அனைவரும் கடல் அட்டை சேகரிப்பில் ஈடுபட்டனர், ஒருகட்டத்தில் கடல் அட்டைகளின் எண்ணிக்கை குறையவே, அதை அப்படியே கைவிட்டுவிட்டு மீண்டும் படகுகளை எடுத்துக்கொண்டு மீன்பிடித்தொழிலுக்குப் போய்விட்டனர். அந்த இடம் தொடர்ந்து அதீதமாகச் சுரண்டப்பட்டதால் முன்பு இருந்ததைப் போலத் தங்களுக்கு வருமானம் கிடைப்பதில்லை என்று பெண்கள் குறைகூறுகின்றனர். “ஒரு ஊருக்குள்ளேயே சுற்றுச்சூழல் பாதிப்பால் வரும் பிரச்சனைகள் ஒவ்வொரு குழுவினரையும் ஒவ்வொரு மாதிரி தாக்கும்; அதைத்தான் இந்த நிகழ்வு காட்டுகிறது” என்று எழுதுகிறார் கரோலின் ஃபெர்குஸான்.

இண்டோ பசிபிக் தீவுநாடுகள், அமெரிக்கா, தென்கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய நாடுகள், மெக்சிகோ, ஆப்பிரிக்காவில் பல நாடுகள், அட்லாண்டிக் கடற்பகுதியை ஒட்டிய நாடுகள், ஆஸ்திரேலியா, கரீபியன் தீவு நாடுகள், ரஷ்யா என உலகின் பல்வேறு நாடுகளும் மிக ஆர்வமாகப் பங்கெடுத்துப் போட்டி போடும் ஒரு சந்தை இது. ‘கடல் தங்கம்’ என்று செல்லமாக அழைக்கப்படும் கடல் அட்டைகளுக்கான சந்தை. “உலகத்தின் விலை உயர்ந்த பொருளான அது, நீர் சூழ்ந்த பெருவெளியில் அமைதியாக சாந்தமாக எவ்வாறு படுத்துக் கிடந்தது? ஒரு உலகளந்த சிலையைப் போல” என்று கடல் அட்டை பற்றி எழுதுகிறார் எழுத்தாளர் சரவணன் சந்திரன். ஒரு கிலோ கடல் அட்டையின் சந்தை மதிப்பைக் கேட்டால் தலையே சுற்றுகிறது.

கடல் அட்டை என்பது என்ன? இதில் என்ன சிறப்பு? இத்தனை நாடுகளிலும் கடல் அட்டையைப் பிடித்து எங்குதான் அனுப்புகிறார்கள்? 

ஒவ்வொரு கேள்வியாகப் பார்க்கலாம்.

கடல் அட்டை (Sea cucumber) என்பது ஒருவகையான முட்தோலி. இதைக் கடல் வெள்ளரி என்றும் சொல்லலாம். கடல் நட்சத்திரங்களின் குடும்பத்தைச் சேர்ந்த கடல் உயிரி இது. இந்தக் குடும்பத்தில் 1700 இனங்கள் இருந்தாலும் வெள்ளை அட்டை, கறுப்பு அட்டை, சங்கு அட்டை, நூல் அட்டை, ஜப்பானிய முள் அட்டை என்று சில இனங்கள் மட்டும்தான் அதிகமாகப் பிடிக்கப்படுகின்றன. இவை சுவைக்காக சாப்பிடப்படுவதில்லை, இது முழுக்க முழுக்க மருத்துவ குணங்களுக்காக மட்டுமே விற்பனையாகும் கடல் உயிரி. மூட்டு வலிக்கு மருந்தாக, திசுக்களை சரிசெய்ய, மூளையில் அழற்சித்திட்டுகளைக் குறைக்க, மலேரியாவின் பாதிப்பைக் குறைக்க என்று இது பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆண்மையை அதிகரிக்கவும் புற்றுநோயைக் குணப்படுத்தவும் கடல் அட்டை உதவும் என்று சொல்லப்பட்டாலும் ஆய்வுகள் இன்னும் அதை உறுதிசெய்யவில்லை. அது மரபுசார் மருத்துவ அமைப்புகளின் நம்பிக்கையாக மட்டுமே இருக்கிறது.

உலகத்தின் எல்லா மூலை முடுக்களிலிருந்தும் கடல் அட்டைகள் பெரும்பாலும் ஒரு இடத்துக்குத் தான் அனுப்பப்படுகின்றன….ஹாங்காங். “உலகின் 63% கடல் அட்டைகள் ஹாங்காங் வழியாகத்தான் பயணிக்கின்றன” என்று உறுதியாகச் சொல்கிறார் ஃபெல்ப்ஸ் பெண்டர்ஹாப் என்ற ஆராய்ச்சியாளர். இங்கு சந்தைக்கட்டுப்பாடுகள் குறைவு என்பதால் கள்ளச்சந்தையிலும் சட்டவிரோதமாகவும் மறைந்தபடி வந்து சேரும் கடல் அட்டைகள் எல்லாமே இங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவை சென்று சேர வேண்டிய இடத்துக்கு பத்திரமாக அனுப்பப்படுகின்றன.

சென்று சேர வேண்டிய அந்த இடம் சீனா. சீனாதான் இவற்றின் இறுதி இலக்கு என்று நீங்களும் யூகித்திருக்கலாம். சீன மரபுசார் மருத்துவத்தில் இந்தக் கடல் அட்டைகளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. உலகின் பிற நாடுகளைப் பொறுத்தவரை கி.பி.800ம் ஆண்டிலிருந்தே கடல் அட்டைகளை அவ்வப்போது பிடித்துத் தின்னும் பழக்கம் உண்டுதான். ஆனால், அந்தப் பழக்கம் பரவலாகவில்லை. சீனாவிலும்கூட பண்டைய காலங்களில் இவற்றின் மருத்துவ குணம் பேசப்படவில்லை. ஒரு காலகட்டத்துக்குப் பிறகே கடல் அட்டைகள் பிரபலமாயின. இந்த வரலாற்றைப் பற்றி ஸூ ஜி (Xu G) என்ற ஆய்வாளர் எழுதியிருக்கும் ஆய்வறிக்கை மிகவும் சுவாரஸ்யமானது. 16ம் நூற்றாண்டில் சீன மருத்துவர்கள் மத்தியில் கடல் அட்டைகள் எப்படிப் பிரபலமடைந்தன என்று இவர் விரிவாக எழுதுகிறார். “உடலுக்கு சூடு தரக்கூடிய பொருட்கள் / உடலைக் குளிர்விக்கக் கூடிய பொருட்கள்” என்ற இருமைத்தன்மையில் சீன மருத்துவர்கள் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். மக்கள் அளவுக்கதிமான குளிர்விக்கும் பொருட்களை சாப்பிடுகிறார்கள் என்றும், அதற்கு மாற்றாக, உடலுக்கு வெப்பம் தருகிற ஆனால் இதமான பொருட்களைப் பரிந்துரைக்கவேண்டும் என்றும் சீன மருத்துவர்கள் தேடினார்களாம். அப்போதுதான் கடல் அட்டை பற்றி அவர்களுக்குத் தெரியவந்திருக்கிறது. ஜின்செங் போலவே இதமான, வெப்பமூட்டும் பொருள் என்ற தொனியில், “கடல் ஜின்செங்” என்று தான் கடல் அட்டை அறிமுகப்படுத்தப்படுகிறது. மெதுவாக இது மருத்துவ நூல்களிலும் எழுதப்பட்டு, கடல் அட்டைகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன.சில நூற்றாண்டுகள் உருண்டோடின. 

மருந்துதான் என்பதாலோ கொஞ்சம் விலை உயர்ந்த பொருள் என்பதாலோ, கடல் அட்டைகளின் விற்பனை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் 1980களில் சீனாவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தால் நடுத்தர வர்க்கத்தினர் இதை ஒரு சொகுசுப் பண்டமாக பாவிக்கத் தொடங்கினர். விருந்துகளில் இதைப் பரிமாறுவது செல்வச் செழிப்பின் அடையாளமானது. அழகான வேலைப்பாடுகள் உள்ள பெட்டிகளில் இதை வைத்துப் பரிசாக வழங்குவது, பெண்களுக்குப் பிறந்தவீட்டு சீராக இதைக் கொடுப்பது என்று மருத்துவப் பொருளில் இருந்து செல்வத்தைப் பறைசாற்றும் குறியீடாக இது மாறிப்போனது. கடல் அட்டைகளுக்கான தேவை அதிகரிக்கவே, ஒரு பெரிய சந்தை உருவானது, எல்லா நாடுகளும் அதில் பங்கெடுத்தன. 1996 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் மட்டும், இந்தக் கடல் அட்டைகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கை 35ல் இருந்து 83 ஆக உயர்ந்தது!

“சில நாடுகள் இதை அனுமதிக்கின்றனவே? எல்லாரும் அனுமதித்தால் கறுப்பு சந்தையின் சிக்கல்கள் இருக்காதே?” என்ற கேள்வி எழலாம். முன்பே சொன்னதுபோல கடல் அட்டை சேகரிப்பின் சூழலியல் சிக்கலானது. இவற்றின் இனப்பெருக்க விகிதம் கொஞ்சம் குறைவு என்பதால் சேகரிப்பு அதிகமாகும்போது நிச்சயம் எண்ணிக்கை குறையும், எண்ணிக்கை குறைவதாலேயே விலை அதிகரிக்கும். அதனால் சேகரிப்பு இன்னும் அதிகரிக்கும். இதை நம்பி மீன்பிடித்தொழிலை விட்டுவிட்டு இதில் இறங்கும் மீனவர்கள் பெரும் கடன்பொறியில் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதே ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு. காலம் போகப் போக ஆழத்துக்குச் சென்றால் மட்டுமே கடல் அட்டைகள் கிடைக்கும் என்ற சூழல் வரும். அதற்கான உபகரணங்கள் வாங்குவதற்கான செலவு அதிகரிக்கும், சேகரிப்பில் ஆபத்துகளும் உருவாகும். கடல் அட்டைகளின் சூழலியல் கூறுகளை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், இவற்றுக்கான சந்தையை ஒரு நிலையான களமாக நாம் நிறுத்திக்கொள்ளவே சாத்தியமில்லை என்பதே அறிவியலாளர்களின் கருத்து. நமக்கு இன்னும் கடல் அட்டைகளின் இனப்பெருக்கம் பற்றிய எல்லா தகவல்களும் தெரியாது என்பதால், “கட்டுப்படுத்தப்பட்ட சேகரிப்பு” என்பதற்கான உச்சவரம்பு எப்படி முடிவு செய்யப்பட்டது என்றும் இவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இன்னொருபுறம் அவை அழிவதால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகளையும் பார்க்கவேண்டும். சந்தைப்படுத்தப்படும் பல கடல் அட்டை இனங்களின் எண்ணிக்கை ஏற்கனவே 25% முதல் 65% வரை குறைந்துவிட்டது. இது இப்படியே தொடர்ந்தால் கடுமையான சூழல் பாதிப்புகள் வரும். கடல் அட்டைகளைக் கடலின் மண்புழுக்கள் என்பார்கள். “கடலில் இருக்கும் ஒவ்வொரு மண் துகளும் ஒரு முறையாவது கடல் அட்டைக்குள் புகுந்து வெளியேறியிருக்கும்” என்று ஒரு சொலவடை உண்டு. மண்ணைத் தின்று செரித்து இவை உருவாக்கும் கழிவுகளால் கடலின் உயிர்ச்சத்துகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. கடல்நீரின் அமில-காரத்தன்மையை சமநிலையில் வைக்க இவை உதவுகின்றன. இவை ஒரு இடத்தில் போதுமான எண்ணிக்கையில் இருந்தால் மட்டுமே அங்கு வலுவான பவளப்பாறைகள் உருவாகும், பவளப்பாறைகள் இல்லாவிட்டால் உலகின் பெரும்பாலான மீன் இனங்களுக்கான நர்சரி கிடைக்காது, அவை எல்லாமே அப்படியே அழியும். ஆக, கடல் அட்டைகள் இல்லாத கடல் என்பது மண்புழு இல்லாத மண்ணைப் போன்றதுதான், அதிலிருந்து எதுவும் உயிர்ப்புடன் முளைத்துக் கிளம்ப முடியாது…. நம் உணவுதட்டில் வந்து விழும் மீன் உட்பட.

இந்தப் பிரச்சனைகளிலிருந்து எல்லாம் விடுபட்டு இவற்றைப் பண்ணைகளில் வளர்ப்பது என்ற யோசனையும் எழுந்திருக்கிறது. ஆங்காங்கே பண்ணை முறைகள் வெற்றியடைந்திருக்கின்றன என்றாலும் அது நெறிப்படுத்தப்படும்வரை பொறுத்திருந்து பார்த்தால்தான் இது சாதகமா பாதகமா என்பது தெரியும். 2020ல் லட்சத்தீவில் கடல் அட்டை பாதுகாப்புப் பகுதி ஒன்று அறிவிக்கப்பட்டது. இதுதான் உலகிலேயே முதல் கடல் அட்டைப் பாதுகாப்புப் பகுதி என்கிறார்கள். இதுபோன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பல நாடுகளில் வெற்றிகரமாக அந்தந்த உயிரினங்களைக் காப்பாற்றியிருக்கின்றன என்பதால் இந்த அறிவிப்பு ஒரு நம்பிக்கையைத் தருகிறது. இன்னொருபுறம் கடல் அட்டைகளின் முக்கிய மருத்துவக் கூறுகளை ஆராய்ந்து அவற்றை செயற்கை வேதிப்பொருட்கள் மூலம் உருவாக்குவது, கறுப்பு சந்தையை அழிப்பது, கடல் அட்டைகள் சேகரிக்கப்படும் கடலோர கிராமங்களில் மாற்று வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடு செய்வது என எல்லாமே நடக்கவேண்டும். நன்கு தெரிந்த மீன்பிடித் தொழிலை விடுத்து ஆபத்தும் சட்டவிரோதமும் நிறைந்த இந்தப் பாதைக்குச் செல்ல மீனவர்கள் ஏன் தயாராகிறார்கள் என்பது ஒரு முக்கியமான கேள்வி. மெக்சிகோவின் யுகடானில் அதற்கான பதில் “வறுமை” என்பதாக இருந்தது. இப்படி ஒவ்வொரு இடத்திலும் இந்தக் கேள்வியைக் கேட்டு அதற்கான பதிலைத் தேடிப் பயணப்படுவதே தீர்வுக்கான முதல் படி.

கடல்சார் மருத்துவப் பண்டம் ஒன்றின் வரலாறு இது. ஆனால், கடலையே சாராத தொழில்கள் கூட கடல் சூழலை பாதிக்கலாம். அது என்ன கதை? 

(தொடரும்…)

nans.mythila@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button