இணைய இதழ்இணைய இதழ் 65தொடர்கள்

அகமும் புறமும் – கமலதேவி – பகுதி 14 

தொடர் | வாசகசாலை

நோம் என் நெஞ்சே 

கவிதை: 1

பொருத யானைப் புகர் முகம் கடுப்ப
மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன்
ஒண் செங்காந்தள் அவிழும் நாடன்
அறவன் ஆயினும் அல்லன் ஆயினும்
நம் ஏசுவரோ? தம் இலர் கொல்லோ?
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி
கொன் நிலைக் குரம்பையின் இழிதரும்
இன்னாறு இருந்த இச் சிறுகுடியோரே

பாடியவர்: மிளைவேல் தித்தன்
திணை: குறிஞ்சித்திணை
தோழிக்கூற்று.
அலரை அஞ்சிய தலைவியை நோக்கித் தோழி கூறியது.

கவிதை: 2

நோம் என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமை தீய்ப்புஅன்ன கண்ணீர் தாங்கி
அமைவதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே

குறுந்தொகை : 4
திணை: நெய்தல் திணை
பாடியவர்: காமஞ்சேர் குளத்தார்.
தலைவி கூற்றுப்பாடல்.
தோழிக்கு தலைவி உரைத்தது.

முதல்பாடலை எழுத எடுத்தபோது இயல்பாகவே இரண்டாம் பாடல் இதனுடன் இணைந்து கொண்டது. இந்தப் பாடல்களில் பெண் அகத்தின் இரு நிலைகள் உள்ளன. இவை இரண்டும் பெண்ணை காலகாலமாய் அலைக்கழிப்பவை. முதல்பாடலை நான் அகத்தின் புறம் என்றும், இரண்டாம் பாடலை அகத்தின் அகம் என்றும் சொல்வேன்.

தலைவியின் அகப்பாடல்களை கவனித்தால் பொதுவான ஒரு தன்மை புலப்படும். காதல் ஒரு மறைக்க முடியாத மலர் போல மணத்துடன், நிறத்துடன், ஔியுடன் பூக்கும் போது, தலைவி அதில் உள்ள மலர்ச்சியை சொல்லும் போதே ‘இந்த ஊர் என்ன சொல்லும்’ என்ற நினைப்புடன் உளம் சோர்கிறாள். யாரிடம் சொல்லி தன் காதலைச் சரியாக புரிய வைப்பது என்ற தலைவியின் தவிப்பு சங்கப்பாடல்கள் முழுவதுமே உண்டு.

தலைவனுக்கு அவளுடைய மாமை நிறமும், தொய்யில் எழுதிய மார்பும், துவளும் இடையும் தெரியும் போது தலைவிக்குத் தன் நெஞ்சே பெரிய தொல்லையாக இருக்கிறது. இது உயிரியல் இயல்பு. இதில் உயர்வு தாழ்வு பற்றிய விஷயங்களுக்கு இடம் இல்லை. தொடர்ந்து தலைவியை நெஞ்சமே தொல்லை செய்கிறது. காதலின் தொடக்கத்திலிருந்து இருந்து திருமணம் முடிந்து பரத்தையிடம் இருந்து மீண்டும் வரும் தலைவனை ஏற்பது வரை அவளுக்கு இந்தத் தொல்லை உண்டு.

நிலத்தை விடப் பெரிய, வானத்தை விட உயர்ந்த, கடலை விட ஆழமானது தன் அன்பு. அது உற்றவனுக்கும் அவ்வாறா? இல்லை என்றால் இதன் பொருள்தான் என்ன? என்ற கேள்வியால் அலைக்கழியாத பெண்கள் இல்லை. இந்த இடம் அகத்தின் அகம். அவன் மணம் புரியாமல் பொருள்தேடிச் சென்று விட்டான். ஊரார் என்ன சொல்வார்கள் என்ற பதட்டமாக வெளிப்படும் முதல் பாடலின் மறுமுனை இரண்டாம் பாடல். அவன் இணக்கமுடன் இல்லாமையால் நோகும் என் நெஞ்சே என்கிறாள். இந்தப்பாடலை வாசிக்கும் போது எப்போதும் புன்னகை எழும். இந்தப்பாடலை கல்லூரி நாட்களில் இருந்து கேட்கிறோம். நான்கு வரிப்பாடலில் மூன்று முறை ‘நோம் என் நெஞ்சே’ என்று தலைவி சொல்கிறாள். அகத்தின் அகம். இந்த ஒரு வரிதான் பெரும்பாலான அகப்பாடல்களில் தலைவியின் கூற்றாக வெவ்வேறு சொற்களில் வெளிப்படுகிறது என்று தோன்றுகிறது. நல்லவனோ அல்லாதவனோ, ஏய்ப்பவனோ, ஊரார் பழிப்பவனோ, எப்படியாயினும் நோகும் என் நெஞ்சே என்னும் தலைவியின் மனநிலையை பதட்டத்துடன் பார்க்க வேண்டியிருக்கிறது.

காதல் பிறரால் அறியப்படும் போது பெண்ணையே முதலில் புறம் பேசுகிறார்கள். நம் மனகட்டமைப்பு அப்படியானது. முதல் பாடலில் தலைவி சொல்வதுதான் வெவ்வேறு சொற்களில் இன்றும் சொல்லப்படுகிறது. 

‘அறவன் ஆயினும் அல்லன் ஆயினும்’ – தலைவன் அறவானாக இருந்தாலும், இல்லை என்றாலும் நம்மைத்தான் ஏசுவர் என்று தலைவி தோழியிடம் புலம்புகிறாள். இது அகத்தின் புறம். “அவன் நல்லவனோ கெட்டவனோ நீ எதுக்கு காதலிச்ச?” என்ற கேள்வியையே முதலில் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். அதே போல பெரியவர்கள் செய்து வைக்கும் திருமணங்களிலும், “நாங்களா பண்ணி வச்சா எதாச்சும் பிரச்சனைன்னா வந்து கேட்போம்.. இல்லைன்னா நீயே பாத்துக்க வேண்டியது தான்,” என்பார்கள். எப்படிச் செய்தாலும் பிரச்சனைகள் இல்லாத மணவாழ்வு யாருக்குமே இல்லை என்பது அனைவருமே அறிந்தது.

ஒரு பெண் தனக்குப் பிடித்த ஒருவனை கைக்காட்டுவதில், தேர்வு செய்வதில் இன்றும் இந்த சமூகத்திற்கு என்னதான் சிக்கல் என்று புரியவில்லை. ‘காலம் எங்கோ போயாச்சு’ என்று மேலோட்டமாக நினைக்க வேண்டாம். இன்றும் இந்தச் சிக்கல் ஆழமானதாகவே உள்ளது. 

பெண் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் சொல்லமுடியாமல், தன் நெஞ்சிற்கும் விட்டுக்கொடுக்க இயலாமல், தன் காதலை, காதலனை ஒரு அனலைப் பொத்தி வைக்கும் தவிப்புடனும், நேசத்துடனும்தான் கையாள்கிறாள்.

என்னுடைய தங்கைக்கு எட்டுஆண்டுகளுக்கு மேலாக மாப்பிள்ளை பார்த்தோம். என்னை விட இரண்டுஆண்டுகள் இளையவள் என்பதால் சிறுவயதில் இருந்தே என்னால் அவளை நன்கு புரிந்து கொள்ள முடியும். ஒரே ஒரு அத்தை மட்டும் ‘நம்மளா பாத்து கல்யாணம் பண்றோம்.. பிள்ளைக்கும் மனசுக்கு பிடிக்கனும்ல… ‘என்று சொன்னாள். ஆனால், பிடித்திருக்கிறது என்று தங்கை முழுமனதுடன் சொல்ல வேண்டும் என்று அம்மா உறுதியாக இருந்தார். ஏனெனில் அய்யாவை அம்மாதான் தேர்வுசெய்தார். அந்த ஆண்டுகளில் வீட்டில் பெண்பார்க்க வருதல் என்பது விருந்தினர் வருகை என்பது போல இயல்பாகி இருந்தது. இவர்களில் சிலர் என் கதைமாந்தர்களாக மாறியிருக்கிறார்கள். 

குமார் நிவேதாவை பெண்பார்க்க வந்த அன்று நான்தான் முதலில் பார்த்தேன். நிவேதாவிற்கு பிடிக்கும் என்று மனதிற்குள் தோன்றியது. குமாருக்கு கோயில் சிலை போன்ற நல்ல கருமை நிறம். நிமிர்வும் பணிவும் உள்ளவர். நிவேதாவும் அதே நிமிர்வு கொண்டவள். இந்த பெண்பார்க்கும் படலத்தில் தனியாகப் பேச ஐந்து நிமிடம் தருவார்கள். தங்கை ‘ட்ரிங் பண்றவர்ன்னா மறுபடி மேரேஜ் பத்தி பேசாதீங்க. கண்டிப்பா டைவர்ஸ்தான்’ என்ற கறாராகச் சொல்லக் கூடியவள். அன்று இதைச் சொன்னதற்காக சத்தமாகச் சிரித்தார். அந்த சிரிப்புதான் இந்த திருமணத்தையே முடித்து வைத்தது. 

நிவேதா தன் திருமணம் பற்றிச் சொன்னவை எல்லாம் ஒரு பெண்ணின் மன ஆழம். கண்டிப்பாக மீசை இருக்க வேண்டும் என்று சொல்வாள். நல்ல நண்பராக இருக்க வேண்டும். ஒத்த வயது,சமமான கல்வி என்று அவளின் அடிப்படையான எதிர்பார்ப்புகளை சுற்றியிருந்தவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நிறம் மற்றும் பணத்தை மட்டுமே வரையறையாக வைத்துள்ளவர்களிடம் இதையெல்லாம் புரிய வைக்க முடியாது. அவள் வழிவழியாக வந்த செல்வத்தை விட மாப்பிள்ளையாக வருகிறவர் சுயமாக என்ன செய்கிறார் என்பதில் கவனமாக இருந்தாள். 

இறுதியிலும் மாப்பிள்ளை அமையாமல்தான் இவரைத் திருமணம் செய்துகொண்டாள் என்றே சொன்னார்கள். ஆனால், திருமணம் நிச்சயமான பின் அவள் கறார் தன்மைகள் இல்லாத எளிய காதலியாக மாறினாள். இன்று வரை அவர்கள் ஊடலும் கூடலுமான அழகிய காதலர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் அன்பைப் பார்க்கும் உறவினர்களுக்கு, “இந்தப்பிள்ளைக்கு இந்தப் பயல்கிட்ட என்னத்தை பிடிச்சதுன்னு தெரியலியே,” என்ற கேள்வியும் வியப்பும் உண்டு. என்னிடம் தனியாகப் பேசும்போது அவள் “குமார்..அட்காசமான பர்சனாலிட்டில்ல,” என்பாள். நான் புன்னகைத்துக் கொள்வேன். ஏனெனில் அவரே, “மாப்பிள்ளை இவ்வளவு கருப்பான்னு எத்தனை பிள்ளைங்க சொன்னுச்சு. கடைசியில நீ ஏமாந்துட்ட பாப்பா,” என்று சொல்வார். மனைவியை சிறுபிள்ளையாக நினைக்கக்கூடிய, அதே சமயம் தோழியாக தனக்கு நிகராக நடத்தக்கூடிய ஒருவருக்காகவே ‘நோம் என் நெஞ்சே’ என்று ஒரு பெண் மறுபடி மறுபடி சொல்லக்கூடும்.

உடன்பிறந்தவர்களுக்குள் ஒரு அழகிய விஷயம் உண்டு. பெரியம்மாவும் அம்மாவும் பேசிக்கொள்ளும் போது பெரியம்மா, “நான் முதன்முதலா நம்ம மாமாவை பாக்கறப்ப உனக்கு மாப்பிள்ளையா வந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன்..அதே நடந்திருச்சு. நல்ல அழகன்ல,” என்பார். [இவர்கள் இருவரும் நம்ம மாமா என்று சொல்வது பரஸ்பரம் அடுத்தவர் மாமாவை] 

“இவ ஒரு கிறுக்கி”, என்று சிரித்தபடி பெரியய்யா தன் கணக்கு வழக்குகளுக்குள் சென்றுவிடுவார். “பின்ன..ஒரு ரசிப்புத்தன்ம இருக்கா உங்களுக்கு..என்னத்தை சமைச்சிப் போட்டாலும் ருசி தெரியாது..எந்தப் புடவைய கட்டினாலும் கலர் தெரியாது..எந்த நகை போட்டாலும் வித்தியாசம் தெரியாது..ஆனா, நம்ம மாமா அப்டியில்லம்மா..இந்தக் குழம்பு நல்லாயிருக்குன்னு சொல்லுவாரு.. சின்னதா எதாவது செஞ்சாலும் கவனிப்பாரு,”. “எனக்குக் கூட நம்ம மாமா மாதிரி இருந்தா பரவாயில்லன்னு நினைச்சேன்..அவரு சும்மா பொறுப்பில்லாத மனுசன்,” என்பார். [அய்யா ஒரு தலைமைப் பொறுப்பில் இருந்தவர்.]

மறுபடி பெரியய்யா தன் கணக்கு வழக்குகளில் இருந்து தலைதூக்கி, “ரெண்டுபேரும் கிறுக்கிங்க..இவளுங்க பேச்சைக் கேட்டா நானும் அவரும் பொழச்சி குடும்பத்தை கரையேத்தின மாதிரிதான்,” என்று எங்களைப் பார்த்துச் சிரிப்பார்.

மறுபடி பெரியம்மா பேச்சைத் தொடங்குவார். “அவ இவன்னு ஏக தேசத்துக்குப் பேசறாரு..நம்ம மாமா இப்பிடில்ல..” 

“நீ வேறக்கா..அவரு பள்ளிக்கூடத்து பிள்ளைக்கிட்ட பேசற மாதிரி பேசுவாரு. நான் சொல்ற வரைக்கும் வெளிய போய் நில்லுன்னு சொன்னாலும் சொல்லுவாரு,”. இப்படியே பேச்சு நீளும்.

இந்தக்கணக்கில் திருமணம் முடிவானதும் தங்கை என்னிடம் , “குமாரைப் பத்தி நீ என்ன நினைக்கிற?”, என்றாள். 

“எதையும் பேசிப் புரிய வைக்க முடியுன்னு தோணுது. உறவுகளுக்குள்ள இது இருந்தா போதும்,”என்றேன்.

திருமணமான இந்த நான்கு ஆண்டுகளில் ,”உனக்கு குமார் சராசரியான ஒருத்தர் தானே,” என்று அடிக்கடி கேட்பாள். நான் ஒவ்வொரு முறையும் புன்னகைத்து வைப்பேன். ஒரு பெண் தன் உடன்பிறந்தாள் முன் நிற்க வேண்டும் என்று நினைக்கும் இடம் இது. 

அண்மையில் அவள் குடும்பமாக திருச்சிக்கு ‘ஷாப்பிங்’ சென்றாள். இரவு கோபமாகத் திரும்பி வந்தாள்.

“இனிமே வேலை விஷயமா டி.இ.ஓ ஆஃபீஸ் போனுன்னா.. அதுக்கு மட்டும் போங்க..எங்களை அலைய விடாதீங்க,” என்று கறாராகக் கூறினாள். இந்த மாதிரி நேரங்களில் அவள் முன்னால் யாராலும் பேசமுடியாது. அம்மா பதட்டமானார்.

“திடீர்ன்னு கால் பண்ணி சொன்னாங்க..ஷாப்பிங் போறதுக்காக முக்கியமான வேலையை விட முடியுமா,”

“அதான் சொல்றேன்..வேலைன்னா வேலை விஷயமா போங்க. வேலையையும் குடும்பத்தையும் சரியா பிரிச்சுக்கத் தெரியனும்..நீங்க என்ன ஹெச்.எம்மா..” என்று அழுத்திக் கேட்டாள். இந்த கறார்த்தன்மை அவளின் பலமும் பலவீனமும்.

இரவு உணவிற்குப்பின் நான் எழுதும் அறையில் வந்து அமர்ந்தாள். கோபம் குறைந்திருக்கவில்லை. நான் எழுதிக்கொண்டிருந்தேன்.

“நீயெல்லாம் வாயே திறக்க மாட்டியா..இந்த வீட்ல நானேதான் கத்தனும்,” என்றாள்.

“எதுக்கு கத்தற…ரசிக்க வேண்டியதை ரசிக்கனும்,” என்றேன்.

அவள் புன்னகையுடன், “என்ன சொல்ற? புரியல,” என்றாள்.

“குமார்க்கு தன்னோட வேலையில ஒரு கிறுக்குத்தனம் இருக்கு…” என்று புன்னகைத்தேன்.

அவள் விழிகள் விரிய முகம் மலர, “அய்யா மாதிரி தேவையில்லாம கூட்டணி,செயலாளர்,போராட்டம்னு போயிட்டா,” என்றாள்.

“போகட்டும்..அதுக்கான வயசுதானே,”என்றேன். உடனே அவள் வியப்பு மாறாமல் பேசத்தொடங்கினாள்.

இறுதியாக நான், “உன்னோட ரூல்ஸ்ஸை எல்லாம் இந்த விஷயத்தில் காட்டாத..அவரை சுதந்திரமா விடு,” என்றேன். அவளும் சரிதான் என்று நினைக்கத் தொடங்கியிருக்கிறாள்.

‘ரூல்ஸ் வாழ்க்கை’ போர் அடிக்கும் என்ற தவறான எண்ணம் உண்டு. அதுவும் சுவாரஸ்யங்களும், ரசனையான விஷயங்களும் நிறைந்த ஒன்றுதான். நிவேதாவின் கறார் தன்மைக்கு முன்னால், பலமடங்கு பெருகும் குமாரின் கேலிகளால் ஆனது அவர்களின் அழகிய அன்றாடம். அவளை என்னால் புரிந்து கொள்ள முடியுமே தவிர நான் அவள் இல்லை. இதே போல அம்மாவின் அகம் வேறு. அக்காக்களின் அகங்கள் வேறு வேறு. எங்களின் ஒன்னரை வயதான குட்டி மகளிற்கு அது எப்படியோ? அதைவிட பாட்டிகள் மிகவும் சுவாரஸ்யமானவர்கள். இந்த விசித்திரம்தான் பெண் அகத்தை, காதலை காலகாலத்திற்கும் வியப்பானதாக்குகிறது.

கவிதை: 1

மலையில் இருந்து வெள்ளருவி வீழ்ந்து
சிறுகுடில்களுக்கருகே நகரும் 
இந்த ஊரார்…
உண்மையறிந்தவரோ
அறியாதவரோ!
போரிட்ட யானையாய்
மன்றின் பாறை மீது
செங்காந்தள் மலர்கள் பூத்திருக்கும்
நாடன் அவன்..
நல்லவனோ
அல்லாதவனோ,
அவனை விட்டு
நம்மை பழிப்பார்களோ?

கவிதை:2

வருந்தும்
என் நெஞ்சமே…
வருந்தும்
என் நெஞ்சமே…
இமைகளை எரிக்கும்
கண்ணீரை தடுக்கும் காதலராக
பொருந்தி இருந்தவர்,
இன்று பொருந்தாதவராகக்
தெரிவதைக் கண்டு…
வருந்தும் என் நெஞ்சமே.

(தொடரும்…)

kamaladevivanitha@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button